எளியோரை வாழ வைத்து, எளியதொர் வாழ்வையே கைக்கொண்டு, காந்தியச் சுடரொளியை அணையாமல் அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனின் ஆளுமைத் திறனும், அரிய பண்பு நலன்களும் இன்றைய இளைய தலைமுறையினரை எவ்வாறெல்லாம் ஈர்க்கிறது என விவரிக்கிறார் க.பழனித்துரை;
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை தெரியாத காந்தியர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் ஜூன் 16ஆம் தேதி தன்னுடைய 100 அகவையில் அடி எடுத்து வைத்தார். அதைக் கொண்டாட பலர் காத்திருந்தனர், பலர் விழா எடுக்க முனைந்தனர். தான் ஒரு காந்திய செயல்பாட்டாளர், எனக்குத் தேவை ஒரு செயல். அதுவும் காந்தியின் செயலாக இருக்க வேண்டும். அப்படி என்றால் கடையனுக்கும் கடைத்தேற்றப் பணியாக இருக்க வேண்டும். எனவே, நான் செய்து வந்த நிலமற்றவருக்கு எதாவது நிலம் தந்தால் அதுதான் எனக்காக விழாவாக இருக்க முடியும். அதேபோல் குடியிருக்க வீடற்றவருக்கு வீடு தந்தால் அதுதான் எனக்கு மகிழ்வு தரும் செயல் என உறுதியாகக் கூறிவிட்டு தான் செயல்பட்டு வந்த கூத்தூருக்குச் சென்று 29 பேருக்கு நிலம் வழங்க 16ஆம் தேதி ஏற்பாடு செய்துவிட்டார். 16ஆம் தேதி காலை பத்திரப்பதிவு அலுலவகம் இருந்த திருக்குவளைக்குச் சென்று மாலை 7 மணிக்குத்தான் தான் இருந்த கூத்தூருக்குத் திரும்பினார்.
அவர் காந்தியவாதியாக அறியப்பட்டாலும் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்திருக்கின்றன. தன் வாழ்க்கையே போராட்டக் களத்தில் செலவழித்த ஒரு மகத்தான வீரமங்கை அவர். அவர் பலவிதங்களில் புதுமாதிரியாகச் செயல்படக்கூடியவர் என்பது எனக்குப் புரிந்தது. எனவே அவருடன் எனக்கு நல்ல தொடர்பு ஏற்பட்டு, அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து அவரையும், அவர் பணிகளையும் உன்னிப்பாகக் கவனித்து ஆய்ந்து வந்தேன்.
அவர் வாழ்வது எளிய பழைய ஓட்டுக் கட்டிடத்தில். மழை பெய்தால் தண்ணீர் உள்ளே விழும். ஆனால் அந்தக் கட்டிடம் ஒரு வரலாற்றை தாங்கி நிற்கிறது. அதன் பெயர் “ஊழியரகம்”. நிர்மாண ஊழியர்களை பயிற்சியின் மூலம் தயார் செய்யும் இடம் தான் அது. அது மட்டுமல்ல உலகிலுள்ள காந்தியர்கள் சங்கமிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. அங்கு வருவோர் தங்க இடமும் இருக்கிறது. எனவே காந்திய வாழ்க்கை வாழ்வோருக்கு அது ஒரு புனித இடம்தான்.
உலகெங்கும் உள்ள காந்தியர்களுக்கு அது ஒரு மெக்கா, மதினா என்று தான் கூற வேண்டும். இவருடைய கணவர் ஜெகந்நாதன் இறந்தபின் அவர் நினைவாக ஆண்டுதோறும் நடத்தும் சர்வோதய விழாவில் பல மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த காந்தியர்கள் கலந்து கொள்வது பலரை வியப்பில் ஆழ்த்தும். பல்கலைக் கழகங்கள் கூட அத்தனை மனிதர்களை ஈர்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருவரின் செயல்பாடுகளைக் காண ஆய்வு செய்ய வருவதுண்டு.
அவர்கள் செலவில் இங்கு வரும்போது எளிய உணவும் இருப்பிடமும் இவர்களின் பொறுப்பு. அந்த இடத்தில் அனுபவித்துத் தங்குவார்கள். அதே அளவு எண்ணிக்கையில் அங்கு இளைஞர்கள் கூடியிருப்பார்கள். எப்படி இவரால் எண்ணிலடங்கா வெளிநாட்டவரையும், இளைஞர்களையும் ஈர்க்க முடிந்தது, எப்படி இவரால் காந்தியத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச முடிந்தது. இந் நாட்டில் காந்தியம் புறக்கணிப்புக்கு ஆளான நிலையில் இவரால் மட்டும் எப்படி காந்தியத்தை உயிர்பிக்க வைக்க முடிகிறது? இந்தக் கேள்விகளோடு இவருடன் பயணித்தேன். அத்தனைக்கும் எனக்கு விடை கிடைத்தது. அது எனக்கு பெரு நம்பிக்கையைக் கொடுத்தது.
பொதுவாக செயல்பாட்டாளர்கள் செயல்பாடுகளுக்காக நிறுவனங்களைக் கட்டுவார்கள், அவைகளை வலுப்படுத்துவார்கள். பெரும் கவனம் அதில் செலுத்துவார்கள். கடைசியில் நிறுவனத்திற்குள் புதைந்து விடுவார்கள். அப்படித்தான் பல செயல்பாடுகள் தோல்வியைத் தழுவின. ஆனால் இவர் தன் செயல்பாடுகளுக்காக நிறுவனங்களைக் கட்டி வளர்க்கவில்லை. மக்கள் பிரச்சினைகள் இருக்கும் இடம்தேடிச் சென்று மக்களுடன் வாழ்ந்து, மக்களை ஒருங்கிணைத்துப் போராடி வெற்றி பெறுவார். எனவே, இவர் தேங்கிப்போனது கிடையாது. ஓடும் நீர்போல தெளிந்த செயல்பாடுகளில் மட்டும் கரைந்திருந்தார். இவர் தேங்காத நீராக ஓடிக்கொண்டேயிருப்பது தான் இவரின் தனித் தன்மை என்பது பலருக்குப் புரிந்தது.

அடுத்து பெரும் சித்தாந்தங்களைப் பேசாமல் செயலில் தன்னைக் கரைத்துக் கொள்வது இவரது பண்பு. இன்றுள்ள அரசியல் சமூகச் சிக்கல்களையே பேசி வாழ இராமல், என்னென்ன வாய்ப்புக்கள் கிடைக்குமோ அவைகளையெல்லாம் பற்றிப்பிடித்து ஏழை எளிய மக்களுக்கு வழிகாட்டுதலில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டது பலரையும் கவர்ந்தது. தான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்தையே தியாக குடும்பமாக மாற்றி வாழ்வது தியாகத்தின் உச்சமாக இளைஞர்களால் பார்க்கப்படுகிறது.
தன்னுடைய இரண்டு குழந்தைகள் மருத்துவர் பூமிக்குமார் கம்போடியாவில் குழந்தைகள் மருத்துவராக செயல்பட்டு வருகிறார், அதேபோல் மருத்துவர் சத்யா மருத்துவக்கல்லூரி ஆசிரியர் பணி ஓய்வுக்குப்பின் காந்திகிராமத்தில் இயங்கும் செவிலியர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் இயக்குனராக இருக்கின்றார். அந்த இருவருமே தங்கள் பெற்றோர் வழியில் மானுடத்திற்காக தன்னை ஒப்புவித்துக் கொண்டவர்கள். இந்த மூவரும் மக்களுடன் கரைவதுதான் இவர்களின் சிறப்பு. இதுதான் இன்று படித்த இளைஞர்களை இவர்பால் ஈர்ப்புக்கொள்ள வைத்துள்ளது. இவ்வளவு இளைஞர்களையும் இந்த வயதான காந்தியர் வசீகரிப்பதற்குக் காரணம், இவருடைய செயல்பாடுகளை மேற்கத்தியர்கள் ஆய்வு செய்து புத்ததகமாக வெளியிட்டு இளைஞர்களிடம் கொண்டு சேர்த்ததுதான்.
இந்தியாவில் எத்தனையோ பல்கலைக்கழகங்கங்கள், எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடப்பதாக அறிவிக்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம். நம் அருகாமையில் இருக்கும் ஒரு சிறு அமைப்பு செய்யும் பணிகளின் சிறப்பறியாமல் இருக்கின்றன நம் ஆய்வுச்சாலைகள். இத்தாலியிலிருந்து வந்து ஆய்வு செய்து “The Colour of Freedom” என்ற நூல் இத்தாலி மொழியில் வெளிவந்த பிறகு தான் நம்மவர்களுக்கு தூக்கம் கலைகிறது. அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர் அதை உடனே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுகிறார், இவற்றைப் பார்த்த நம் எழுத்தாளர் சோலை “சுதந்திரத்தில் பூத்த மலர்கள்” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். லாரா கோப்பா எழுதிய புத்தகம் ஆங்கிலத்திற்குச் சென்று, அதிலிருந்து தமிழுக்கு வந்துள்ளது “சுதந்திரத்தின் நிறம்”என்ற தலைப்பில்.
இந்த நூல்களைப் படிக்கும் போது தியாகத்தின் உச்சம் என்ன என்பதை அறிய முடியும். போராட்ட வாழ்க்கையில் ஒரு இன்பம் இருக்கத் தான் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் இவரின் பணி என்பது இன்றைய பணி அல்ல. அது அவர் தன் இளமைக் காலத்தில் துவக்கிய பணியின் எச்சம் என்று தான் கூற வேண்டும். எப்படி காந்தி, அரவிந்தர், விவேகாநந்தர், பாரதி தன் இளம் வயதிலேயே சமுதாயத்திற்காகக் கரைந்தார்களோ, அதே அளவில் தங்களைக் கரைத்துக் கொண்டவர்களில் ஜெகந்நாதனும், கிருஷ்ணம்மாளும் குறிப்பிடத்தக்கவர்கள். காரணம், இன்னும் களத்தில இருக்கிறார், கிருஷ்ணம்மாள் இளைஞர்களுடன். அடுத்து தன்னைப்போன்றே இளைஞர்களையும் எளிய வாழ்க்கைக்குப் பழக்கி, புதிய காந்தியர்களையும், வினோபாக்களையும் உருவாக்கி வருகிறார் என்றால் அது மிகையாகாது.
இந்தப் புத்தகங்களில் நடந்த சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
# நிலத்திற்காகப் போராடியது,
# வீடு கட்டித்தர செயல்பட்டது,
# இறால் பண்ணைக்கு எதிராகப் போராடியது,
# தர்மபுரியில் அப்பாவி மக்களை நக்சல்பாரி எனச் சுட்டபோது வெகுண்டெழுந்து போராடி அரசின் போக்கை மாற்றியது.
Also read
போன்ற அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அத்தனை செயல்பாடுகளிலும் மறைந்து கிடக்கக் கூடிய பல்வேறு போராட்ட அம்சங்கள் எதிர்கால இளைஞர்களுக்கு வழிகாட்ட உதவும் கருத்துக்கள் கிடக்கின்றன. அவைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டியவைகள்.
இன்று அவர் தங்கியுள்ள குடிலுக்கு அவரைப் பார்க்க பலர் வந்த வண்ணம் இருக்கின்றனர். அவர் பிறந்த நாளன்று மும்பையிலிருந்து ஆவணப்படக்காரர்கள் பேட்டி கண்டார்கள். அதுபோல் பலர் அவருடன் உரையாட வருகிறார்கள். இன்று தேவைப்படுவது அவர் செய்த பணிகளில் உள்ள பரிநாமங்களை ஆய்வு செய்து இளைஞர்களுக்கு வழிகாட்டுவது. அதுதான் இன்று தேவைப்படுவது. அதுதான் இவருக்குச் செய்யும் முதல் மரியாதையாக இருக்கும்.
க.பழனித்துரை
காந்தியச் செயற்பாட்டாளர், எழுத்தாளர்
நூற்றாண்டு காணும் வாழும் காந்தியர் அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களைப் பற்றிய இந்த கட்டுரைக்காக ஐயா பழனித் துரை மற்றும் அதனை பிரசுரித்த அறம் இணைய இதழிற்கும் மனமார்ந்த நன்றிகள்
அம்மாவும் அய்யாவும் லாப்டி (land for landless tillers)என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி நிலம் இல்லாதவருக்கு நிலம் வாங்கி கொடுத்தார் கள்
இந்த 40 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கான பணத்தை இவர்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்குமானால் தமிழ்நாட்டில் எந்த ஒரு கூலி விவசாயியும் இல்லாமல் அனைவருக்கும் நிலம் வாங்கி கொடுத்திருப்பார்கள் இதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உணர வேண்டும்.
வாய்ச்சொல் வீரர்கள் அரசியலில் ஏமாற்றி வரும் காலத்தில் செயலால் ஏழை மக்களுக்கு நிலம் கிடைக்க ஏற்பாடு செய்த கிருஷ்ணம்மாள் வாழ்க