அடக்கத்தின் அடையாளமாக, பணிவின் சிகரமாக இருந்தன திமுகவின் கூட்டணிக் கட்சிகள்! இது வரை இப்படி தோற்றம் காட்டிய நிலையில் தற்போது சிபிஎம் சீறுகிறது. விசிக விசும்புகிறது. மதிமுக மருட்டுகிறது…அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்! இதன் பின்னணி என்ன..?
கூட்டணியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார் ஸ்டாலின்! அவரோட சாமார்த்தியம் யாருக்கும் வராது!
ஆட்சியில் என்ன நடந்தாலும் கூட்டணிக் கட்சிகள் எல்லோரும் ஆளும்கட்சிக்கு ஜால்ரா போடுவதைத் தவிர கடுமையான விமர்சனங்களை சொல்வதுமில்லை, இடித்துரைப்பதுமில்லை. இந்த சாமார்த்தியம் கலைஞரிடம் கூட பார்க்க முடியாது..என்றெல்லாம் தான் இது வரை ஸ்டாலின் குறித்து சொல்லப்பட்டது.
இது ஒரு வகையில் உண்மை தான். ஆனால், முழுமையான உண்மையல்ல.
அளவுக்கு மீறிய இயற்கை வளச் சுரண்டல்கள், அரசு அலுவலகங்களில் மட்டுமீறிய லஞ்ச லாவணியங்கள், குடும்பவாரிசு அரசியல், சட்டம், ஒழுங்கு சீர்குலைவால் அதிகரிக்கும் குற்றச் செயல்கள், கையாலாகாத காவல்துறை என்ற நிலைமை மாறி, சிறுவன் கடத்தலில் கையாளாகவே மாறிய காவல்துறை அதிகாரி..போன்ற எண்ணற்ற விஷயங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் ‘கப்சிப்’ ஆக இருந்து தங்கள் விசுவாசத்தைக் காட்டி வந்தார்கள்! இதற்கு பரிசாக ‘விட்டமின் பி’யும் அவர்களுக்கு மாமூலாகச் சென்றதாகவும் பலமாக மக்களிடையே பேச்சு நிலவியது.
எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என எல்லோரும் ஏகமனதாக நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் அதிகத் தொகுதிகள் கேட்டு லாவணிக் கச்சேரிகளை ஆரம்பித்து விட்டனர்.
அரை சதவிகிதம் மட்டுமே ஓட்டு வங்கி கொண்ட சி.பி.எம், ‘’ஆறு தொகுதிகள் எல்லாம் சாத்தியமே இல்லை. ஏதோ போனமுறை போனா போகுதுன்னு விட்டுக் கொடுத்தோம். ஆனால், இந்த முறை ஆறு தொகுதிக்கு ஒருபோதும் உடன்படமாட்டோம்’’ என குண்டை தூக்கிப் போட்டது.
இத்தனைக்கும் இந்தக் கட்சி திமுக தலைமை எள் என்றால், எண்ணெய்யாக களத்தில் இறங்கி தன் தொண்டர் பலத்தையெல்லாம் ஆட்சியாளர்களின் குரலாக ஒலிக்கச் செய்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு கூடுதல் தொகுதி ஒதுக்கினால், அதையே தனக்கும் வேண்டும் என அடம்பிடிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட்.
வி.சிகவும் அதிக தொகுதி கேட்டு அடம்பிடிக்கிறது. இந்தக் கட்சியும் கடந்த நான்காண்டுகளில் தன் சொந்த சாதி மக்கள் தமிழகம் முழுமையும் வேங்கை வயல், கள்ளக் குறிச்சி எனக் கடுமையாக வேட்டையாடப்பட்ட போதும், ஆளும் கட்சி மீதான விசுவாசம் மாறாமல் அமைதி காத்தது.
அடுத்தது மதிமுக அதாவது மகன் திமுக அல்லது மறைந்து கொண்டிருக்கும் திமுக. கட்சி அனேகமாக கரைந்து போய் காணாமல் கிடக்கிறது. அனுபவமில்லாத துரை வைகோ பதவிக்கு வந்த போதே அனுபவஸ்தர்கள் அத்தனை பேரும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிட்டார்கள். ஓரிருவர் மட்டுமே ஒவ்வொரு ஊரிலும் ஒட்டிக் கொண்டுள்ளனர். இந்தக் கட்சி கூட தனக்கு இரு மடங்கு சீட் வேண்டும் என்கிறது.
இப்படி இவர்கள் துவங்கி வைத்த பிறகு, காங்கிரஸ் மட்டும் சும்மாவா இருக்கும்.
கமலஹாசன் புதிதாக கூட்டணிக்குள் வந்திருக்கிறார். அரை சதவிகித கட்சியே 10 தொகுதிகள் கேட்டால் அவர் 20 தொகுதிகள் கேட்க மாட்டாரா?
எனில், திமுகவின் நிலை என்ன…?
இருக்கும் இடம் மொத்தம் 234 தான். இவர்கள் விரும்பியபடி எல்லாம் சீட் தர வேண்டும் என்றால், தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அல்லது திமுக சென்ற முறை தான் நின்ற தொகுதிகளில் பாதியை விட்டுத்தர வேண்டும்.
திமுக தான் போட்டியிடக் கூடிய தொகுதிகளைக் குறைத்துக் கொண்டால் மட்டுமே தங்களுக்கு கூடுதல் தொகுதியை தர முடியும் என்ற யதார்த்தம் கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியாதா? ஏன் தெரியாது. நன்றாகவே தெரியும்.
அப்படி எனில், ஆளும் கட்சியாக கோலோச்சி மக்களுக்கு ஏகப்பட்ட இலவசங்களை, மானியங்களை அள்ளிக் கொடுத்த ஒரு கட்சி தனக்கான தொகுதிகளை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்…?
ஆம், நீ குறைத்துக் கொண்டு எங்களுக்கு கூடுதலாகத் தந்தே ஆக வேண்டும்..என அழுத்தமாக கூட்டணிக் கட்சிகள் கேட்பதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.
Also read
ஓன்று, ஆளும் ஆட்சி மீதான அதிருப்தி மக்களிடம் மிக அதிகமாக இருக்கிறது என்ற யதார்த்ததை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவே கூட்டணிக் கட்சிகள் இந்த டிமாண்டை வைக்கிறார்கள். அடுத்தது ஆட்சியாளர்கள் ஆயிரம் தவறுகள் செய்தாலும், அதை மூடிமறைத்து ஆட்சியாளர்களுக்கு ஒரு புனித பிம்பத்தை நாங்கள் தொடர்ந்து கட்டி எழுப்பி வந்துள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு எங்கள் மீது மக்களுக்கு உருவாகும் கோபத்தை பொருட்படுத்தாமல் நாங்கள் காட்டிய விசுவாசத்திற்கும், சேவைக்கும் எங்களுக்கு கைம்மாறு செய்’’ என்கிறார்கள்!
அதாவது ஆட்சியில் இருப்பவர்கள் ஆடிய அதிகார ஆட்டத்தை கூட்டணியில் இருப்பவர்கள் தான் அருகில் இருந்து பார்த்துள்ளனர். ஆட்சியாளர்களுக்கு செல்வாக்கு சரிந்துள்ளதை நன்கு அறிந்தே இவர்கள் கேட்கின்றனர்.
திமுக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
திமுக என்ன செய்யப் போகிறது?என்று தன் கட்டுரையை முடித்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் கண்ணன்.அது ஒன்றுமே செய்யப் போவதில்லை, செய்யமுடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. தங்கள் கூற்றுப்படி அரை சதவிகிதமே உள்ள கம்யூனிஸ்ட் முதல் அரைவேக்காடு வாரிசுகள் உள்ள கட்சிகள் வரை கூடுதலான தொகுதிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு மறைமுகமாகவும் மிரட்டத் தொடங்கி விட்டனர்.
சாப்பிடும் போது கூடுதலாக ஒருவர் வந்துவிட்டால் அதனை பகிர்ந்து கொடுக்கலாம். அப்போது கடைசியாக வந்தவருக்கு அதிக பங்கு கிடைக்கும். தேவைப்பட்டால் சமைத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு அப்படியா?234 தொகுதிகள். கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது! இதில் திமுக கடந்த முறை போட்டியிட்டதை விட குறைத்துக் கொண்டால் பலவீனமான கட்சியாக கருதப்படும். அல்லது கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகள் கண்டிப்பாக தரப்படும். தோல்வி பெற்ற தொகுதிகள் வேறு கட்சிக்கு தரப்படும் என்று சொன்னால் ஒருவர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இன்று வரை ஆட்சியாளர்களின் அத்தனை குறைகளையும் வேடிக்கை பார்த்தவர்கள். திமுக கூட்டணி கட்சிகள் கேட்டபடி தொகுதிகளை கொடுத்தால் உலகத்திலேயே சிறந்த தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தேர்தல் களத்தில் பாராட்டி பேசுவார்கள். இல்லையென்றால் எதிரணிக்கு (நி)சென்று இது போன்ற ஆட்சியை கண்டதில்லை என்று நையாண்டி செய்து பேசுவார்கள். ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடுவார்கள் அது மோசமான ஆட்சியில் அவர்களுக்கும் பங்கு இருந்தது என்று.
மறதி அவர்களுக்கு மட்டுமா? ஓட்டு போடும் மக்களுக்கும் சொந்தமானது!
கூடுதல் தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு திமுக தராது வைட்டமின் ப பிளஸ் மட்டும் தரும்
தமிழ்நாட்டில் அட்டூழியம் செய்யும் திமுகவும், அதற்குத் துணை போன கூட்டணிக் கட்சிகளும் அழிந்துபோக வேண்டும். அது வரும் தேர்தலிலே நடக்கும்.
அதிக சீட் என்பது அதிக பணம் பெறும் தேர்தல் ஆப்பரேஷன் .