பிரம்மாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடந்துள்ளது.கோடிக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் முருகனின் திருவிழாக்களில் பங்கு பெற்று வருகிறார்கள். இந்த திருவிழாக்களுக்கும், மதுரையில் இந்து முன்னணி நடத்திய விழாவிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு தெட்டென வெளிப்பட்டது;
தமிழ் மக்களிடம் ஏகோபித்த செல்வாக்குள்ள முருகனுக்கு ஆண்டு முழுக்க தைபூசம், விசாகம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி திருவிழா, பங்குனி உத்திர விழா என பல விழாக்கள் தமிழகம் முழுக்க நடந்த வண்ணம் உள்ளன.
கோவில் விழாக்களில் பங்குபெறும் உண்மையான பக்தர்கள் யாருமே, ”முருக கடவுளுக்கு ஆபத்து வந்துள்ளது..” என்ற வார்த்தையை தப்பித் தவறி கூட உச்சரித்ததில்லை. மாறாக, தங்களை ஆபத்தில் இருந்து காக்கவல்ல சக்தியாகத் தான் முருகக் கடவுளை வழிபடுகின்றனர்.
ஆனால், மதுரையில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற பெயரில் இந்து முன்னணி நடத்திய மாநாடோ, ”ஐயோ முருகனுக்கு ஆபத்து. நாமெல்லாம் சேர்ந்து முருகனை காப்பாற்ற வேண்டும். சீறி வா, சிங்கமென வா..” என்றெல்லாம் அறைகூவல் விடுத்து முருகனையே பலவீனப்படுத்துகிறது.
பிரமிக்க வைத்த பிரமாண்டங்கள்:
8 லட்சம் சதுர அடி பரப்பு மைதானத்தில் நடத்தப்பட்ட மாநாடு. அறு அடி உயரம் மற்றும் பத்தடி உயரம் என பெரிய அகலமான மேடைகள். பின்னணியில் அறுபடை வீடு மற்றும் கையில் வேல் ஏந்திய முருகனின் கட் அவுட்கள்!
ஆறு படை வீடுகளின் கோபுரங்கள் மாத்திரமல்ல, முருகன் சிலைகளையும் வைத்து வழிபட்ட விதம், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள் போன்றோர் வந்தது, அரங்குகள் 50 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் ஒவ்வொரு பகுதியிலும் 2 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்ட திட்டமிடல்கள், பார்க்கிங் வசதிகள், திரும்பும் இடமெல்லாம் எல்.டி.இ திரைகள்..என அசத்தி இருந்தார்கள்!
ஆவேச உரைகள்;
மாநாட்டில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ”முருகனைப்பற்றி இழிவாக யாரேனும் பேசினால், உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா, பதற வேண்டாமா, துடிக்க வேண்டாமா..?” என்று காட்டுக் கத்தல் கத்தினார். உண்மையில் தற்போது முருகக் கடவுளுக்கு என்ன பிரச்சினை வந்திருக்கிறது? எனத் தெரியாமல் சாதாரண பக்தன் திகைத்தான்.
”14- ம் நூற்றாண்டு தொடக்கத்தில் மதுரையில் மாலிக்காபூர் படையெடுப்பு நடந்தது. அதன்பின் 60 ஆண்டுகள் மீனாட்சி அம்மன் கோயில் அடைக்கப்பட்டது. அது மதுரையின் இருண்ட காலம். அதற்கு பிறகு ஒளி பிறந்தது. ஒளி ஏற்றியவர் விஜயநகர அரசர்…” என்ற பேச்சின் மூலம் பவன் கல்யாண் முஸ்லீம்கள் மீது வெறுப்பை தூண்டியதோடு, தெலுங்கு மன்னரான விஜயநகர பேரரசர் குறித்த தனது இன பாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டார்.
இப்படி கடந்த கால கசப்பு சம்பவங்களைப் பேசி, வெறுப்பு அரசியலை வளர்ப்பது என்றால், தெலுங்கு நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தமிழ் நிலத்தில் நடந்த அழித்தொழிப்புகள், இருக்கமடைந்த சாதிய கட்டமைப்புகள், கலப்பு மணம் புரிந்தவர்கள் சாதி விலக்கம் செய்யப்பட்டு கொடுந் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டது, தெலுங்கர்களால் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டது… என்பதையும் சிலர் பேச ஆரம்பித்தால் என்னாகும்? என்று அவர் சற்று சிந்தித்திருக்க வேண்டும்.
மேலும் அவர், ‘’ஒரு இந்து இந்துவாக இருந்தாலே பிரச்சினை. இந்துவாக இருந்தால் அவன் மதவாதி. என் நம்பிக்கையை கொண்டாட எங்களுக்கு உரிமை உள்ளது. அதை கேள்வி கேட்க நீங்கள் யார்? என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை, அதை அவமரியாதை செய்யாதீர்கள். முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதத்தை கேள்வி கேட்க முடியுமா? சீண்டி பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது…” என்றெல்லாம் தேவையில்லாமல் சவடாலாகப் பேசுகிறார். ”நான் இங்கிருந்து அறைகூவல் விடுக்கிறேன். அநீதியை தட்டிக்கேட்க எழுவோம். அநீதியை தட்டிக்கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்கிறார்.
அதாவது, இல்லாத ஒரு கற்பனை எதிரியை முதலில் சிருஷ்டித்துக் கொண்டு, நிஜமான எதிரியை உருவாக்கிவிட வேண்டும் என்ற கெடு நோக்கம் தான் இந்தப் பேச்சில் உள்ளது.
அண்ணாமலையின் ஆவேசம்;
இதே பாணியை பின்பற்றித் தான் அண்ணாமலையும் பேசினார்! ”இந்து மதம் இருக்கக் கூடாது என்பதற்காக பகல்காமில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்து மக்களிடம் ஒற்றுமை இல்லாததால் இந்து வாக்குகளை அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்டு மதத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு முருக பக்தர்கள் மாநாடு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. முருகன் கோவில்களில் வழிபாட்டு விவகாரத்தில் தலையிட்டால் சூரசம்காரம் செய்து விடுவோம் என மாநாட்டு செய்தியாக சொல்கிறோம்…” என்று சவடால் விடுகிறார்.
ஆக, இந்து மதவெறியை உருவாக்கி அரசியல் ஆதாயம் பார்க்கவே இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது! இவையாவுமே இது முருகனுக்கான மாநாடு இல்லை. மூர்க்கத்தனமான அரசியலுக்கான முன்னெடுப்பாக நடத்தப்பட்டுள்ள மாநாடு என்பதை உணர்த்துகிறது.
முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்தும் அரசியலையே பேசுகின்றன.
திருப்பரங்குன்றத்தை வைத்து மதத் தீயை பற்ற வைக்கும் நோக்கத்தில் தீர்மானங்கள் உள்ளன.
அறநிலையத் துறையை அரசாங்கத்தின் கையில் இருந்து பிடுங்கி அளப்பரிய கொள்ளைகளை அரங்கேற்றத் துடிக்கிறது ஒரு தீர்மானம்!
முருகனின் அறுபடை வீடுகளிலும் மத அரசியல் சர்சைகளை செய்யத் திட்டமிடும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது ஒரு தீர்மானம்!
Also read
வருகின்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைப்பது பற்றி ஒரு தீர்மானம் முழங்குகிறது.
இப்படியாக மனித நேயத்தை மறக்கடித்து, மதவெறியை மனதினில் திணிக்கும் உள் நோக்கம் மாநாட்டின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவதை துல்லியமாக அவதானிக்க முடிகிறது.
‘இறைவன் மனிதனை காக்கிறான்’ என்ற நம்பிக்கையிலேயே இடியை இறக்கி, ‘இந்த மனிதர்களிடம் இருந்து நம் இறைவனை காப்பாற்றுவது எப்படி?’ என நம்மை தீவிரமாக சிந்திக்க வைக்கிறது இந்த மாநாடு!
ஆன்மீகம், பக்தி என்பவை மனிதனை கனிய வைக்கும் அன்பை விதைப்பவை, சகிப்புத் தன்மையையும், சமரசத்தையும் வளர்ப்பவை என்பதே ஒரு சராசரி இந்துவின் புரிதலாக உள்ளது. மாறாக வெறுப்பையும், வன்மத்தையும் வளர்த்தெடுக்க இங்கு மதமும், கடவுளும் கருவியாக்கப்படுவதை எந்த உண்மையான பக்தனும் ஏற்கமாட்டான். தன் பெயரை வைத்து கலவரத்திற்கு வித்திடுவதை எந்தக் கடவுளும் அனுமதிக்கமாட்டார். சமூக அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு இந்த மாநாடு ஒரு எச்சரிக்கை மணியாகும். விழித்துக் கொண்டால் மட்டுமே வெறுப்பு அரசியலை வேரறுக்கலாம்.
சாவித்திரி கண்ணன்
ஐயா சாவித்திரி கண்ணன் அவர்களே
முருகனுக்கு ஆபத்து என்று கூறவில்லை, கோவிலுக்கு ஆபத்து என எச்சரிக்கிறோம். 44000 ஏக்கர் நிலங்கள் ஏப்பம் விட்டுள்ளதை கண்டு பிடிக்க வேண்டும் என ஏன் உங்களை போன்றவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இந்துக்களுக்கு எதிராக கொடி பிடிக்கும் திமுக அரசு ஏன் முருக மாநாடு பழனியில் நடத்த வேண்டும். கேள்வியை எழுப்பியிருப்பீர்களா? உங்களை போன்ற இடதுசாரி சக்திகளுக்கு இந்து என்றால் வேப்பங்காய், அமைச்சர் கூறுகிறார் சென்னையில் பவன் கல்யாணம் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா என பல கட்சி மாறியவர் கூறுகிறார். இவர்கள் ஆந்திராவில் போட்டியிட முடியுமா என்ற கேள்வியை எழுப்பினால் எழுப்பியவனை கைது செய்வார்கள்.
அன்புள்ள தோழர் சாவித்திரி கண்ணன் அவர்களே வணக்கம்.
சிறப்பான கட்டுரையை படைத்துள்ளீர்கள்.
முருகனுக்காக நடைபெறுகின்ற பல திருவிழாக்களை சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள். வகுப்புவாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக தூண்டி விடுவதற்கான முயற்சிகள் தமிழ்நாட்டிலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட மாநிலங்களில் ராமனின் பெயரால் கலவரங்களை நடத்திய சங் பரிவார் கும்பல் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்காக ‘முருகனை’ கையில் எடுத்துள்ளார்கள்.
முருகன் கோவில் நிலங்கள் மட்டுமல்ல மடச் சாமியார்கள் பலரும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது சிலருடைய கண்களுக்கு தெரியவில்லை.
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் நில உச்சவரம்பு என்ற போதும்
கலைஞர் கருணாநிதி காலத்தில் 15 ஸ்டாண்டர்ட் நில உச்சவரம்பு என்ற போதும் உழக்கூடிய உழவர்களிடம் விவசாயம் போய் சேரவில்லை..
இன்றும் அடவோலைப் போடுகின்ற முறை நீடிக்கின்றது.
கண்ணுக்குத் தெரியாத மடச்சாமியர்களும், நிலப் பிரபுக்களும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள் ..உழு பவனுக்கு நிலம் கிடைக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை ..
முறையான நிலச் சீர் திருத்தம் செய்து ஆண்டவனுக்கு தேவையான நேரத்தில் தேவையான பொருட்களை கொடுத்து வணங்கினால் போதும் ..
ராமர் பெயரில் தொடங்கிய அயோக்கியத்தனம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் பரவி நிற்கின்றது. மதுராவில் கிருஷ்ணனின் பேரால் இஸ்லாமியருக்கு எதிரான தாக்குதலை தொடங்கி விட்டார்கள்.
கோவில்களைச் சுற்றி நில ஆக்கிரமிப்பு சர்வசாதாரணமாக நடைபெறுவதை எதிர்த்து இவர்கள் போராட தயாரா ?
பிள்ளையார் கையில் ஏகே-47 யும் கத்தியையும் கொடுத்து மூன்று நாட்களுக்கு எல்லா விதமான வணக்கங்களை நடத்தி தண்ணீரிலும் கடலிலும் கலக்கின்றோம் என்று சொல்லி கலவரங்களை நடத்துவதற்கான திட்டங்களை தானே சங்பரிவார் கும்பல் தீட்டுகிறது.
இவர்களுக்கு கடவுள்கள் எல்லாம் இந்துத்துவாவை பரப்புவதற்கான ஆயுதங்களே ..
இந்து மதம் என்பது வேறு..
அது நம்பிக்கை சார்ந்தது
இந்துத்துவா என்பது அரசியல் வெறியை கிளப்பி விட்டு மனிதனை மனிதன் பகைவர்களாக மாற்றி கொலையை செய்யக்கூடியது.
அயோத்தியில் இருந்து
கோத்ரா வரை எத்தனை
கலவரங்கள்..மதுரை மாநாட்டில் வைக்கப்பட்ட அறுபடை வீடு இன்னும் சில நாட்களில் என்னவாகும் ?
திரைப்படக் காட்சிகளை எடுப்பதற்கு செட் போட்டது போல
பெரும் முதலாளிகளிடம் பெறப்பட்ட பணம் தண்ணீராய் ஓடுகிறது ..
இடதுசாரிகள் எப்பொழுதும் மக்களுக்காக நிற்பவர்கள் என்பதை சாவித்திரி கண்ணனின் கட்டுரை பலமுறை நிரூபித்திருக்கிறது..
நல்ல கட்டுரையை எழுதிய தோழர் சாவித்திரி கண்ணனுக்கு வாழ்த்துக்கள்..
அயோத்தி அல்ல தமிழ்நாடு என்பதை நாம் மீண்டும் நிரூபிப்போம்! திருப்பரங்குன்றத்தில் மூக்குடை பெற்றவர்கள் பட்ட பாட்டை அறிய முடியாத சங்கிகளின் கூட்டம் முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயன்றால் அதை முறியடிப்பது அவசியம்.
தமிழ்நாட்டு மக்கள் இதனை நன்கு அறிந்தவர்கள் என்பதை நிச்சயமாக மத வெறி பிடித்த, கார்ப்பரேட் ஆதரவு சங் பரிவார் கும்பலுக்கும் அவர்களின் ஒன்றிய அரசாங்கத்திற்குமம் நிரூபிப்போம்!
மதவெறி பிடித்த கார்ப்பரேட் ஆதரவு அரசாங்கத்தை ஜனநாயக முறையில் தூக்கி எறிவோம் ..
வாழ்த்துக்கள்!
நண்பர் சாவித்திரி கண்ணனுக்கு வணக்கம்.
கோவில்களுக்கு திராவிட ஆட்சியால் ஆபத்து வந்துள்ளது.புனிதமான திருப்பரங்குன்றம் மலையில் பலி கொடுக்க முயல்வது சரிதானா?
ஆக்கிரமிப்பு நடந்துள்ளது எனத் தெரிந்தும் அங்கே எங்கள் உணர்வுக்கு எதிராக நடக்க முயல்வது சரிதானா?நடுநிலையாளர்கள் ஏன் இதைப்பற்றி பேசவில்லை?
சரியான பார்வை.முருகனுக்கு ஆபத்தில்லை! பக்தி வெறி கிளப்பவில்லையானால் பா.ஜ.கட்சிக்கு தான் வாக்குவங்கிஆபத்து!! கூட்டணிக் கட்சியான அண்ணா தி.மு.க.வை நம்பத் தயாரில்லை. சொந்த பலத்தை” இப்படித்தான்” பெருக்கிக் கொள்ள விரும்புகிறார்கள்.