நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தி கைதாகியதைத் தொடர்ந்து பல நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மிகப் பெரிய அதிகாரிகள் வீட்டுப் பிள்ளைகள் அதிர்ந்து போயுள்ளனர். அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வியாபித்திருக்கும் போதை பொருள் விவகாரத்தில் மிகவும் அரிதாகவே பிரபலங்கள் கைதாகிறார்கள்;
இன்றைய தமிழகத்தை எடுத்துக் கொண்டல் போதைப் பொருகள் பயன்பாடு என்பது பள்ளி, கல்லூரிகள் அளவுக்கு வியாபித்துவிட்டது. கஞ்சா, அபின், பிரவுன் சுகர், குட்கா, போதை ஊசி போட்டுக் கொள்ளுதல்..இயல்பாக நடக்கின்றன. இவை தடை செய்யப்பட்ட தீமை விவகாரங்கள் என்றாலும் தங்கு தடையின்றி நடக்கின்றன. ஆங்காங்கே இருக்கும் செல்வாக்கான ஓரு சில அரசியல்வாதிகள், காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் இதில் சம்பந்தப்படுவதால் தான் இவை நடக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை.
தமிழ் திரைக் கலைஞர்கள் எவ்வாறெல்லாம் போதை கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கின்றனர் என்பதை சுசித்திரா என்ற பின்னணி பாடகி பகிரங்கப்படுத்தியது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும். சுசித்திரா பல நேர்காணல்களில் தமிழ் திரையுலகில் தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா, ஜெரோமியா, கமலஹாசன், அனிருத் போன்ற திரை உலக பிரபலங்கள் எந்த அளவுக்கு போதை கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கின்றனர் என்று அம்பலப்படுத்தியவை அதிர்ச்சி ரகமாகும்.
போதைப்பொருள் தடுப்பு சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது 1985ல்தான். சஞ்சய்தத் தான் இதில் முதன் முதல் கைதான நடிகர்! பாலிவுட் நடிகர்கள், டெக்னிஷியன்கள் பலருக்கும் போதை மருந்துகளை பயன்படுத்தும் பழக்கம் இருப்பது அடிக்கடி அரசல் புரசலாக ஊடகங்களில் வெளிவருகின்றன.! ஷாருக்கான் தன் வீட்டிலேயே சர்வசாதரணமாக டிரக் எடுப்பார். அர்ஜின் ராம்பால் அவரோடு சேர்ந்து கொள்வார். ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு உள்ள போதைப் பழக்கம் பாலிவுட்டில் மிகவும் பிரசித்தமாகும்!
ஒரு சொகுசு கப்பலில் பயணித்த நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 20 பேர் 2022 -ல் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கானுக்கு மருத்துவமனையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது கைது அறிக்கையில் போதை மருந்து உட்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது!
இந்த விவகாரத்தில் 21 நாட்களில் ஆர்யன் கானுக்கு பிணை கிடைத்தது. பிறகு ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததாக காரணம் காட்டி, அவர் விடுவிக்கப்பட்டார். பொதுவாக இது போன்ற ஒரு வழக்கில் பிணை கிடைக்காது. ஆனால், ஷாருக்கான் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ஒருவரின் மகனை தண்டிப்பது அரசியல் ரீதியாக தனக்கு பின்னடவைத் தரும் என மத்திய பாஜக அரசு கருதி இருக்க வாய்ப்புள்ளது.
இளம் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் எவ்வளவோ போதை பழக்கம் சம்பந்தமான உண்மைகள் அம்பலப்பட்டன! ஆனால், யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டனர்…? ஒருவருமில்லை. அதை கங்கனா ரனாவத்தைக் கொண்டு பாஜக அரசியல் செய்து திசை திருப்பியது தான் நடந்தது.
நடிகர் ஸ்ரீகாந்தை பொறுத்த வரை அவர் தற்போது மார்க்கெட் இல்லாத நடிகர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது அதிமுக சம்பந்தப்பட்ட பிரசாத் என்ற நபர் என்பதும் கவனிக்கத்தக்கது. இதனை ஆப்ரிக்க நாடான கயாவில் இருந்து ஜான் என்பவர் தருவித்து தந்துள்ளார். இது பெங்கள்ரில் இருந்து சென்னைக்கு வந்தடைந்துள்ளது.
ஆபரேஷன் கருடா;
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்டர்போல், போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மாநில போலீஸார் உதவியுடன் சிபிஐ அமைப்பு ஆபரேஷன் கருடா என்ற 2022 செப்டம்பரில் சோதனையை நடத்தியது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேகத்திற்குரிய 6,600 பேரின் நடவடிக்கைகளை ஆராயும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது. ஆபரேஷன் கருடா என்ற இந்த நடவடிக்கை பஞ்சாப், இமாச்சலபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, மணிப்பூர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹெராயின், கஞ்சா, ஓப்பியம் உள்ளிட்ட போதைப் பொருட்களும் பல்வேறு வகை போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுமார் 175 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), இன்டர்போல், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (என்சிபி) மற்றும் காவல் படைகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது… இதில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் 5.13 கிலோ ஹெராயின், 105.997 கிலோ டிராமடோல், 33.94 கிலோ கஞ்சா, 3.29 கிலோ சரஸ், 1.30 கிலோவுக்கு மேல் மெபெட்ரோன், ஏராளமான புப்ரெனோர்பைன் மாத்திரைகள் மற்றும் பிற போதைப்பொருட்கள் அடங்கும். ஆக, இவை எல்லாம் பல்லாயிரம் கோடி வணிகம் சம்பந்தப்பட்டதாகும்.
இதெல்லாம் அந்தந்த நேரத்து பரபரப்பு செய்தியாக்கப்பட்டு அப்படியே விட்டுவிட்டனர்.
இதே போல திமுகவின் முக்கிய புள்ளியான ஜாபர் சாதிக் என்ற தொழில் அதிபரும் ,சினிமா தயாரிப்பாளருமானவரிடம் ரூபாய் 2,000 கோடிகள் மதிப்புள்ள 50 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டு அவர் கைதானார். ஆனால், அவர் யார்,யாருக்கு சப்ளை செய்தார்…? யாரெல்லாம் அவரிடம் பயன் பெற்றனர் என்ற செய்திகள் வரவில்லை. இந்த வழக்கு காலப்போக்கில் நீர்த்துவிட்டது.
மலையாளப் பட உலகில் ஹேமா கமிட்டியின் அறிக்கையில் அங்குள்ள பிரபல நடிகர், நடிகைகளிடம் உள்ள போதைப் பழக்கங்கள் அம்பலமாயிற்று. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
அதானிக்கு சொந்தமான குஜராத் துறைமுகத்தில் ஒரு சமயம் காவல்துறையினர் மிகப் பெரிய அளவில் போதை பொருள்களை கைப்பற்றினர். இது பெரும் பரபரப்பானது. இதில் எந்த பிரபலங்களும் தண்டிக்கப்பட்டதாக செய்திகள் இல்லை. இதே போல ஆந்திராவின் விசாக பட்டிணத்திலும் போதைப் பொருட்கள் பெரிய அளவில் கைப்பற்றப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் தான் இதை தடுக்கும் பொறுப்புள்ளது. அதன் அமைச்சர் அமித்ஷா இதற்கெல்லாம் வருத்தப்படுவராகத் தெரியவில்லை. அதே போல மாநிலங்களை ஆளும் ஆட்சியாளர்களும் போதை தடுப்பில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. இவை பல்லாயிரம் கோடிகள் புழங்கும் ஒரு திருட்டு வணிகமாகவே இருட்டில் நடந்து கொண்டுள்ளது.
கொகைன், ஹெராயின் போன்றவை நரம்புகளை தீவிரமாகத் தூண்டிவிடுவதால் நாளடைவில் இதை உட்கொள்பவர்கள் நரம்புத் தளர்ச்சி, மூளை பாதிப்புக்கு ஆளாகி சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பயனற்றவர்களாக போய்விடுகிறார்கள். அதே போல டாஸ்மாக் மதுவை தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகள் உட்கொள்பவர்கள் கணையம், கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகி உணவைக் கூட சாப்பிட முடியாதவர்களாக கைகால் செயல் இழந்து போய் குடும்பத்திற்கு பாரமாகிவிடுகிறார்கள்.
Also read
ஒவ்வொரு ஆண்டும் ஜூன்- 26 ஆம் தேதியை உலக அளவில் போதை பொருள் தடுப்பு நாளாக அறிவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது 1987 ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக நடத்தப்பட்ட மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவாகும். அதன்படி பல கோடி ரூபாய் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு செலவு செய்வது ஒரு சம்பிரதாயமாக நடந்து வருகிறது, அவ்வளவே.
ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ள தகவல்களின்படி தற்போது உலக அளவில் சுமார் 20 கோடிப் பேர் போதை பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் மிக பிரம்மாண்ட பணப் புகக்கம் சர்வதேச அளவில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இதன் மூலம் மக்களில் கணிசமனோர் ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகள், அத்துமீறல்கள், அராஜகங்கள், போலி பிரச்சாரங்கள் ஆகியவற்றை தட்டிக் கேட்கும் தார்மீக உரிமையற்றவர்களாகிவிடுகிறார்கள்.
என்று தணியும் இந்த போதையின் தாகம்!
என்று மடியும் எங்கள் ஆட்சியாளர்களின் பணமோகம்!
சாவித்திரி கண்ணன்
Leave a Reply