எத்தகைய மண்டியிடாத மாவீரம்! எத்துணை நெஞ்சுரம்! வரலாற்றில் அமெரிக்காவையே அலறவிட்ட ஆண்மை ஈரானைத் தவிர வேறு யாருக்கு இருந்தது…? சுற்றிலும் பகை மேகங்கள் படர்ந்து வந்த போதிலும், சுட்டெரிக்கும் கதிரவனின் ஒளிவீச்சை போல சுழன்று களமாடி ஈரான் சாதித்துள்ள வெற்றியை அலசுகிறது இந்தக் கட்டுரை;
‘ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும்’ என அயதுல்லா அலி கமேனி (86) அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டதானது உலக அளவில் சுய மரியாதையை நேசிக்கிற, ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
‘ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது…’ என்ற ஊகத்தின் அடிப்படையில் ஈரான் மீது ஆபரேஷன் ‘ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என தாக்குதலை நியாயப்படுத்தியது.
ஆனால், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கிறதா? என்பதை மிகக் கூர்மையாக பல்வேறு புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கண் கொத்திப் பாம்பாக பார்த்து வருகின்றன. மின்சாரத் தயாரிப்பு உள்ளிட்ட பல உள் நாட்டுத் தேவைகளுக்காக ஈரான் அணு உலைகளை உருவாக்கி உள்ளது என்பதை அது மறுக்கவில்லை. இது எந்த நாடும் செய்யக் கூடியதே. அதே சமயம் இது வரை ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்த உளவு அமைப்பும் உறுதிபடுத்தவில்லை. எனினும் ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொன்னால் உண்மை தானோ என்ற தோற்றம் பெற்றுவிடும் அல்லவா? அந்த வகை யுக்தியை அமெரிக்காவும், இஸ்ரேலும் செய்தன.
இஸ்ரேலின் தாக்குதல் அசாதாரணமானது. அந்த தாக்குதல் ஈரானின் அணு உலைகள் மீது நடத்தப்பட்டது. ஈரானின் மிகவும் மதிப்பு வாய்ந்த அணு விஞ்ஞானிகள், முக்கிய நிர்வாகிகள் இதனால் கொன்றொழிக்கப்பட்டனர். உண்மையில் இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
ஈரானிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் தருணத்தில் இஸ்ரேல் இவ்விதம் நடப்பதையும், அதை அமெரிக்க கண்டிக்க மறுப்பதையும் எவ்விதம் புரிந்து கொள்வது?
ஆக, ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், இரு நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது ஒரு மாபெரும் துரோகமாகும். ஒரு நடு நிலையாளனைப் போல வேடமிட்டு பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு நடத்திய தொடக்க மதிப்பீட்டில் தாக்குதல்கள் தற்காலிக பாதிப்புகளையே ஏற்படுத்தியது. இதனால், ஈரான் ஒரு சில மாதங்களே அணு திட்டத்தில் ஈடுபட முடியாமல் போகும் என தெரிவித்து இருந்தது.

அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கபடவில்லை’ என்று சொல்லப்பட்டது.
வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, ”ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வெற்றி பெற்றுள்ளது” என கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து, ”அமெரிக்க விமானங்கள் வெற்றியுடன் தாக்குதலை நடத்தி முடித்து, திரும்பி விட்டன” என பீத்திக் கொண்டார். அதே சமயம், ”ஊடகங்கள் இதை குறைத்து மதிப்பிடுகின்றன…பொய் செய்தி போடுகின்றன..” எனக் கதறிய டிரம்ப், ”உண்மையில் இது வரலாற்று வெற்றியாக பார்க்க வேண்டிய தாக்குதல்” என பரிதாபமாகப் பேசினார்.
அவ்வளவு பெரிய வீரன் என்றால், ஈரானை போரை நிறுத்தும்படி கெஞ்சியது ஏன்? ”சகிப்புத் தன்மை, தைரியம், புத்திசாலித்தனத்தால் இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாழ்த்துகள். மத்திய கிழக்கு நாடுகள் ஒருபோதும் அழியாது…” அப்படிங்கிற டயலாக்கை உதிர்த்தது ஏன்?

நல்லது. இது வரை ‘அமெரிக்கா ஒரு கட்டளை இட்டால் அதற்கு அடிபணிவதைத் தவிர, வேறு வழியில்லை’ என்ற ஒரு சூழலை ஈரான் தகர்த்துள்ளது. ‘அமெரிக்காவை யாரும் எதிர்ப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அப்படியே எதிர்க்க துணிந்தால், அவர்களை அமெரிக்கா வாழவிடாது’ என்ற நம்பிக்கையையும் ஈரான் சுக்கு நூறாக்கி உள்ளது. அதைவிட, ‘அமெரிக்கா தாக்கினால், அதைவிட பலமாக திருப்பித் தாக்க முடியும்’ என்பதையும் பிரத்தியட்சமாக ஈரான் நிருபித்துள்ளது.
இனி, ‘இந்த உலகத்திற்கே நான் தான் தாதா. நான் வைத்ததே சட்டம்’ என்று அமெரிக்கா அலட்டிக் கொள்ள முடியாது.
ஈரானின் உறுதிப்பாடும், வெற்றியும் ஈடு இணையற்றது.
ஒரு பக்கம் மரண வியாபாரியான நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நிகழ்த்துகிறது. மறுபக்கம் உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவும் தாக்குகிறது. இதற்கிடையே செளதி அரேபியா, ஈராக், ஜோர்டான் ஆகிய அரபு நாடுகள் அமெரிக்காவின் கட்டளைகளுக்கு ஏற்ப இந்தப் போரில் ஈரானுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கின்றன. அந்த வகையில் தங்கள் நாட்டின் வான் பகுதிகளின் வழியே இஸ்ரேலை நோக்கிப் பாயும் ஈரான் ஏவுகணைகளை தடுத்து இஸ்ரேலுக்கு அரணாக நிற்கின்றன. போதாக்குறைக்கு அமெரிக்காவே இந்த நாடுகள் சிலவற்றில் தன் இராணுவத்தை நிறுத்தி, ஈரான் ஏவுகணைகளை இடை மறித்து செயல் இழக்கச் செய்கின்றன. இத்தனையையும் மீறித் தான் ஈரான் தன்னந்தனியாக இஸ்ரேலை அடித்து நொறுக்கியது. ”காசாவை சுடுகாடாக்கினாயே.., இதோ இப்போது உன் நாட்டை சுடுகாடாக்கிக் காட்டுகிறேன்..’’என ஓங்கி, ஓங்கி அடித்தது.
இஸ்ரேலின் ராணுவ அத்துமீறல்கள் ஏற்படுத்திய எதிர்வினையை அந்த நாட்டு மக்கள் தான் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஈரான் தாக்குதல்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளிலும், நிலத்தடிக்குள் இருக்கும் அறைகளிலும் பதுங்கி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் இஸ்ரேல் மக்களே தங்கள் அரசை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடினார்கள்.
Also read
அதே போல அமெரிக்க மக்களும் வீதிகளில் இறங்கி ஈரானுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலை கண்டித்தார்கள். அமெரிக்க அதிபர்கள் வரலாற்றிலேயே வெறும் வாய்ஜால உல்டா பேச்சுக்களால் காமெடி பீஸாகவும், ஜோக்கராகவும் பார்க்கப்படுகின்ற ஒரு அதிபராக டொனால்ட் டிரம்ப் முத்திரை பதித்துவிட்டார்.
சாவித்திரி கண்ணன்
மதக் கோட்பாடுகள் கடந்து,மிக்க இக்கட்டான சூழ்நிலையில் ஒரு நாட்டின் தலைவர் எப்படி உறுதியாக நிற்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் திரு.கமேனி.போரின் போது ஈரான் தலைவர்கள்,அரசு அதிகாரிகள் பேச்சு மிக்க கவனமானதாக,கண்ணியம் மிக்கதாக இருந்தது.
புரியவைத்தல்!
“அடித்து வளைக்கவேண்டிய இரும்பை அடித்து வழிக்கு கொண்டுவருதல் விவேகம்”
“கோல்எடுத்து குரங்கை ஆட்டுவித்தல் போன்று ஆளுக்கு தகுந்தமொழியில் ஆர்ப்பரி”