கூட்டணி ஆட்சியாம்…! வேற வினையே வேண்டாம். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற அதிமுக அடித்தளம் போட்டுத் தருகிறது என்ற பிரச்சாரம் ஒன்றே போதும் அதிமுகவை ஒழித்துக் கட்ட! கூடா நட்பு கேடாய் முடியும். பாலூட்டி வளர்த்தாலும் நச்சுப் பாம்பு கொத்தவே செய்யும்…! என்ன செய்யப் போகிறது அதிமுக?
கூட்டணி என்ற வகையில் தமிழகத்தில் பாஜக அதிகாரத்திற்கு வந்துவிடுமே என்று அச்சப்படுவோரே தமிழகத்தில் அதிகம் உள்ளனர். இப்படிப்பட்டவர்களின் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை வீரியப்படுத்தி ஒருங்கிணைத்து அமித்ஷா திமுக காலடியில் சமர்பிக்க விரும்புகிறார். இதன் மூலம் திமுக – vs – பாஜக என்பதான களத்தை கட்டமைப்பதே பாஜகவின் நோக்கமாகும்.
”இல்லையில்லை. நாங்கள் தனித்து தான் ஆட்சி அமைப்போம்” என அதிமுக இனி என்ன சொன்னாலும் அது எடுபடாது. ஏனென்றால், அதிமுகவை பணிய வைப்பதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். அவனிடம் இருந்து விலகி நின்றால் ஒழிய தமிழக மக்கள் அதிமுகவை நம்பப் போவதில்லை.
அதாவது, பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது ஏதோ தேர்தலோடு முடிகிற விஷயமல்ல. தேர்தலுக்கு பிறகான ஆட்சித் தேரிலேயே அவன் தான் உட்கார்ந்து வலம் வரப் போகிறான் என்பதை தமிழக மக்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
இங்கு சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்ற வைப்பான். மதவெறி போக்குகளுக்கு ஆதரவளிப்பான். திருபரங்குன்றம் மலையைக் கொண்டு பிரச்சினை செய்தது போல, முருகனின் அறுபடை வீடுகளிலும் பிரச்சினையை உருவாக்குவான். தமிழகத்தில் இருக்கிற பிரச்சினைகள் போதாது என்று மதக் கலவரங்களை நாம் நாள்தோறும் பார்க்க வேண்டுமா?
அது மட்டுமா? கூட்டணி ஆட்சியில் அவனும் இருந்தால் தமிழக நிலப்பரப்பில் பாதியை அதானிக்கும், அம்பானிக்கும் பட்டா போட்டு கொடுத்து விடு என்பான். தமிழ்நாட்டை வட இந்திய தொழில் அதிபர்களின் வேட்டைக் காடாக்கிவிடுவான். காஷ்மீரில் இது தான் இப்போது நடந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் மக்களுக்கு அரசு தந்து கொண்டுள்ள அத்தனை சலுகைகளையும் நிறுத்தச் சொல்வான்.
இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடிப்பது தான் அவனது பரம்பரை பழக்கம்.
அமித்ஷா அண்ணா திமுக தலைமையை எவ்வளவு துச்சமாக நினைத்திருந்தால், தானடித்த மூப்பாக, ”கூட்டணி ஆட்சி தான் தமிழ்நாட்டில்” என அறிவிப்பார்.
முதலில் அதிமுக தலைமை கூட்டணிக்கே விரும்பவில்லை. நிர்பந்தம் கொடுத்து தான் கூட்டணி கண்டீர்கள். அந்த அவப் பெயரில் இருந்து விடுபடுவதற்கே அவர்கள் இன்று வரை படாதபாடு பட்டு வருகிறார்கள். அப்படி இருக்க எந்தவித கலந்துரையாடலுமின்றி, கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுகவின் ஒப்புதலின்றி அமித்ஷா அதிரடியாக, ”கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழ் நாட்டில்” எனக் கூறுகிறார் என்றால், இந்த அறிவிப்பு அதிமுகவை மிகவும் பலவீனப்படுத்திவிடும்.
கூட்டணி வைப்பதே கூட்டணிக் கட்சியின் செல்வாக்கை அட்டை போல ஒட்டி உறிஞ்சி எடுத்து ஓட்டாண்டி ஆக்குவதே!
கதவைச் சாத்தினாலும் வந்து நிற்கிறான். காரித் துப்பினாலும் துடைத்துக் கொண்டு வருகிறான்! எடப்பாடி பழனிச்சாமியின் கூட இருப்பவர்களை விலை பேசி உள்ளுக்குள் பகையை மூட்டுவான். பிறகு அவனே வந்து பஞ்சாயத்தும் செய்வான்.
‘ஐயோ, கட்சியின் சக தளபதிகள் சரியில்லையே முதுகில் குத்துவார்களே..’ என்று எடப்பாடி பழனிச்சாமி அஞ்ச வேண்டாம். அரபு நாடுகள் பல அமெரிக்காவின் கொத்தடிமை ஆனாலும், ஏவுகணைகள் பலவற்றை இடைமறித்து இஸ்ரேலைக் காப்பாற்றினாலும், ஈரான் முன்னெடுத்த காலை பின்வாங்கவில்லை. மரண பயத்தை காட்டியே ஓய்ந்தது. அது போல பாஜக என்ற பாசிஸ பகைவர்களை எதிர்க்கத் துணிந்தால் ஒழிய, அதிமுகவிற்கு விமோசனமில்லை.
பாஜக ஒன்றும் எதிர்க்க முடியாத கட்சியல்ல. அதன் தலைவர் யாரும் இரும்பு மனிதருமல்ல, உண்மையில் துரும்புக்கும் பயனற்ற வெறும் பேச்சு வீணர்கள்…!
நச்சுப் பாம்பை நண்பனாகக் கொண்டால், கொத்தாமல் விடாது! திருடனிடம் சாவியைக் கொடுத்தால் வீட்டு உரிமையாளர்களை வெளியேற்றத் தான் செய்வான்.
ஆனாப்பட்ட அமெரிக்காவையும், இஸ்ரேலையும் எதிர்த்து உதைக்கத் துணிந்த அந்த கிழட்டுத் தலைவன் கொமெனியை நினைத்துப் பாருங்கள்! அநீதிகளை எதிர்க்க முடிந்தவர்களுக்கு மட்டுமே இருக்கிறது, எதிர்காலம்! அநீதியாளர்களோடு அனுசரித்து போவோருக்கு இல்லை, எதிர்காலம். நிச்சயமாம் ஏமாற்றம்.
எதிர்க்க முடியாவிட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, பாஜகவை விட்டு விலகி, விஜய்யின் த.வெ.கவோடு கூட்டணி காணலாம். பாஜகவை தமிழகத்தில் தனிமைப்படுத்துவது ஒன்றே அந்தக் கட்சிக்கான தண்டனையாகும்.
சாவித்திரி கண்ணன்.
மடியில் கனம் இல்லாதவர் தான் பாஜகவை எதிர்க்க முடியும்? ?
செக்கு,லர் கட்சிகள் ஜாதீய மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
மிக சரியான கருத்து
விரைவில் அதிமுக் தலமையில் பாஜக அல்லாத மெகா கூட்டணி அமையும்.
அப்போது அமித்ஷா & கோ அலருவதை நாம் காண்போம்
த வெ க வோடு கூட்டனியா அவரின் எஜமான் மோடி விடுவாரா?