இந்தியாவிற்கு ஆபத்து காலங்களில் உற்றதுணையாகத் திகழ்ந்தது, வர்த்தக ரீதியாக இந்தியாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் அழித்தொழிக்கும் போது, மோடி காட்டிய மெளனம் ஆபத்தானது. இஸ்ரேல், அமெரிக்க பாசம் இந்தியாவிற்கு விரும்பத்தாகாத விளைவுகளைத் தரலாம்;
ஈரான் மீது ஜூன் 13 அன்று தாக்குதல் தொடுத்த இஸ்ரேலை வெள்ளையர்கள் ஆளும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் கண்டித்தன. குளோபல் சௌத் எனப்படும் ஆசிய ஆப்ரிக்க நாடுகளும் இதை கண்டித்தன. இதற்கு ஒரே விதிவிலக்காக இந்தியா (மோடி அரசு) இருந்தது.
சர்வதேச நீதிமன்றம் தேடும் குற்றவாளியான நெத்தன்யாகுவின் திடீர் தாக்குதலையும், ஈரான் படை தளபதிகளையும், விஞ்ஞானிகளையும் வீடு புகுந்து படுகொலை செய்ததையும் இந்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். ஆனால் தர்ம நியாயங்களையும், நமது நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தையும் காற்றில் பறக்கவிட்ட மோடி, இஸ்ரேலை கண்டனம் செய்யாமல் மோதலை விரிவாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்திய நாட்டின் மாண்புகளையும், இந்திய அரசின் வெளியுறவு கொள்கையின் வரலாறையும் அறிந்தவர்கள், மோடியின் மௌனத்தை கண்டு பதறினர் , ஆச்சரியமடைந்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி , “ இத்தகைய மௌனம் இந்தியாவிற்கு குரல் இல்லை என்பதை மட்டும் காட்டவில்லை, இந்தியா தனது உயரிய பண்புகளையும் அடகு வைத்துவிட்டதை காட்டுகிறது” என்று மோடி அரசின் மோசடி கொள்கையை சாடினார்.
ஈரானின் அணு உற்பத்தி கூடங்களான நட்டான்ஸ், ஃபர்தோ, இஸ்வஹான் ஆகியவற்றின் மீது அமெரிக்கா சர்வதேச விதிகளை மீறி, சர்வதேச அணுசக்தி கழகத்தின் நெறிகளை மீறி குண்டுவீசி தாக்கியதையும் இந்தியா கண்டிக்கவில்லை .
நேற்றுவரை மோடி தன்னை விஸ்வகுரு என்றும், உலகத்தாருக்கெல்லாம் உயரிய ஆலோசனைகளை வழங்குபவர் என்றும் தம்பட்டமடித்து கொண்டிருந்தவர் தன் கண்முன்னே நடக்கும் அக்கிரமத்தை கண்டு ஓடி ஒளிவதேன்?
அமெரிக்காவை கண்டு அச்சமா? இந்தியா பாக்கித்தான் போரை நான் தான் நிறுத்தி வைத்தேன் என்று கூறிய டிரம்பை மறுத்து பேச முடியாத மோடி , ஈரானை தாக்கிய டிரம்பை எப்படி விமர்சிப்பார்? தனது குடுமியும் தனது நண்பர் அதானியின் குடுமியும், டிரம்பின் வசம் இருப்பதால், இந்திய நாட்டின் மாண்பையும், நேர்மையையும் காவு கொடுக்க மோடி துணிந்து விட்டார் என்றே தோன்றுகிறது.
இஸ்ரேலின் அடாவடியை கண்டிக்க மறந்தது மோடியின் கூட்டாளி நெத்தன்யாகு என்பதாலா? அல்லது இரு தலைவர்களுக்கும் பொதுவாக இருக்கும் ‘இஸ்லாமிய வெறுப்பு உணர்வின்’ வெளிப்பாடா?
ஈரான் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இருக்கும் நீண்ட கால உறவுகளை கருத்தில் கொள்ளாமல் – இரு நாட்டு நலன்களும் பின்னி பிணைந்துள்ளதை கணக்கிலெடுக்காமல் – இந்தியா இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் தனிமைப்படும் போதெல்லாம், இந்தியாவிற்கு ஆதரவு கொடுத்த ஈரான் நாட்டை மோடி கைவிட்டது மன்னிக்க முடியாத செயல். இதை ஈரான் மறக்கப் போவதுமில்லை!
பி.வி. நரசிம்மராவ் இந்திய பிரதராக இருந்த பொழுது, பாக்கித்தான் இந்தியாவிற்கெதிராக கொணர்ந்த தீர்மானத்தை ஐ.நா வில் எதிர்க்க ஒரு குழுவை ஜெனீவாவிற்கு அனுப்பினார். வழக்கத்திற்கு மாறாக எதிர்கட்சி தலைவரான வாஜ்பேயியை இந்திய அரசின் சார்பாக பேசுமாறு பணித்தார். அந்த நிகழ்வின் போது வாக்கெடுப்பில் இந்தியாவிற்கு ஆதரவாக ஏனைய இஸ்லாமிய நாடுகளை திருப்பியது ஈரானின் கைவண்ணம் தான் என்பதை உலகம் அறியும், வாஜ்பாயும் அறிவார்.
அதே போன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியாவின் மதசார்பின்மை உலக அரங்கில் கேள்வி கேட்க பட்ட போதும் ஈரான் நாடு தான் இந்திய நாட்டிற்கு உறுதுணையாக இருந்து இந்திய நாட்டின் அயலுறவுகளை காப்பாற்றியது. இவையெல்லாம் இன்றிருக்கும் ‘அரைகுறை அறிவுள்ள’ சங்கிகளுக்கு நினைவிருக்காது!
இந்தியா உபயோகிக்கும் குரூடாயிலில் 40% ஈரானிலிருந்தே தருவிக்கப்படுகிறது. இந்திய ரான் வர்த்தகம் இன்று 30 பில்லியன்டாலரை தொட்டுள்ள நிலையில், ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியா வெகுவாக முதலீடு செய்துள்ள நிலையில், ஈரானின் சப்பார் துறைமுக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் முதலீடும் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதார நலன்களை முன்னீட்டாவது ஈரான் தாக்கப்படுவதை இந்தியா கண்டித்திருக்க வேண்டும்.
எதனடிப்படையில் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் தீர்மானிக்கப் படுகின்றன?
சித்தாந்தங்களையும், கோஷம் போடுவதையும் ஒதுக்கிவிட்டு இந்தியாவின் நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு, அயலுறவு கொள்கை இருக்க வேண்டும் என்று கதறும் “மேதாவிகளும்” ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை – இந்திய நலன்களுக்கெதிரான தாக்குதலை- ஏன் கண்டிக்கவில்லை?
ஈரான் மீது நடத்தும் தாக்குதலை கண்டிக்காத மோடி , காசாவில் அப்பாவி பாலத்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை யை கண்டிப்பார்கள் என எதிர்பார்ப்பது நமது மடமை. ஆனால் அக்கிரமும், அநியாயமும் நம் கண்முன்னே நடக்கும் பொழுது அதைக்கண்டு பொங்கி எழாவிட்டாலும் கண்டனக்குரல் எழுப்புவது இந்தியாவின் தார்மீக கோட்பாடு இல்லையா? இந்த அறநெறியை இந்தியா கைவிட்டு போர் நிறுத்த தீர்மானங்களில் வாக்களிக்காமல் ஒதுங்கி இருப்பது கோழைத்தனம் மட்டுமல்ல, அநியாயமும் ஆகாதா?
இது ஏன் விஸ்குருவிற்கு புரியவில்லை? அவரது பக்த கோடிகளுக்கும் தெரியவில்லை?
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தனிமை பட்டு நின்றதின் காரணத்தை, உட்கருத்தை புரியாத கும்பல், இந்தியா தனக்கு கிட்டிய அறிவுரைகளை இப்போது மற்ற நாடுகளுக்கு கூறுகிறது என்கின்றனர். இஸ்ரேல் மட்டும் தான் இந்தியாவிற்கு ஆபரேஷன் சிந்தூரின் போது ஆதரவு கொடுத்தது என்று விளக்கம் வேறு தருகின்றனர்.
அப்படியானால் ஈரான் நாட்டிலும், சப்பார் துறைமுக திட்டத்திலும் இந்தியா ஏராளமாக முதலீடு செய்துள்ளதே, இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளதே அவை காப்பாற்ற பட வேண்டாமா? என்ற கேள்விக்கு இந்த அறிவாளிகளிடமிருந்து பதிலில்லை!
ஈரான் மற்றும் இஸ்ரேலின் இடையே டிரம்ப்பின் நிர்பந்தத்தால் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ உலகில் பிரச்சினைகளை தீர்க்க, மோதல்களை தவிர்க்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜ தந்திரத்தை விட்டால் வேறு வழி கிடையாது (there is no alternative to dialogue and diplomacy in order to address and resolve conflicts) என்று கூறியுள்ளது.
இதை, இந்திய – பாக் மோதலுக்கும் ஏன் இந்திய அரசு பொறுத்தி பார்க்க மறுக்கிறது என்ற கேள்விக்கு சங்கிகள் தான் பதில் கூற வேண்டும்.
இஸ்ரேல் நாட்டை போற்றுவதும் அவர்களது அடாவடிதனத்தை, வீரதீரச்செயல்களாக வருணிப்பதும் இஸ்ரேல் அரசின் இனப் படுகொலையை கண்டுகொள்ளாமல் கடந்து போவதும் சங்கிகளின் அரசியல் நிலைப்பாடாக இருப்பதன் அடிப்படை காரணம் இஸலாமிய வெறுப்பு என்ற ஒற்றை புள்ளி தான்.
இன்று மோடி ஆட்சியில் இருப்பதால், குஜராத் கலவரம் தொடங்கி இன்று வரை இந்தியாவில் முஸ்லீம் மக்களை கருவறுப்பது என்பதே இந்திய அரசின் நிலைப்பாடாக கொள்கையாக உள்ளது. அது இந்திய பாக்கித்தான் உறவுகளில் தெரிகிறது, காஷ்மீரில் தெரிகிறது. இறுதியாக அரசின் வெளியுறவு கொள்கையிலும் (இஸ்ரேல் குறித்து) வெளிப்படுகிறது. இதை சங்கிகளே மறுக்காத போது இத்தகைய அணுகுமுறையில் உடன்படாதவர்கள் (பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள், வல்லுனர்கள், அரசியல் கட்சிகள் ) அதனை தோலுரித்து காட்டாமல் பசப்புவது ஏன் என்று நமக்கு விளங்கவில்லை.
மோடி அரசின் மோசமான வெளியுறவு கொள்கையை நியாயப்படுத்த சில அபத்தமான வாதங்களை சிலர் முன் வைக்கின்றனர் . அவற்றில் ஒன்று , இந்தியா மத்திய கிழக்கு பொருளாத்தார தாழ்வாரம் – India Middle East Economic Corridor IMEC என்ற திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளாராம், இதன் மூலம் இந்தியா மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் வாணிபத்தை பெருக்குமாம், இதனால் ஈரானுக்கும் சீனத்திற்கும் பாதிப்பு வருமாம் அதனால் ஈரான் ஹமாஸை தூண்டி இஸ்ரேலை தாக்கியதாம். இஸ்ரேல் ஹமாசை அழித்து, ஈரானையும் தாக்குவது இந்தியாவிற்கு நல்லது என சங்கிகள் பிரச்சாரங்களை நடத்துவதை கண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை!
முதலில் இது மோடியின் திட்டமல்ல, அமெரிக்க அதிபர் பைடனின் திட்டம் , மோடியின் வாயால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு யார் எவ்வளவு முதலீடு செய்வது என்பதில் தெளிவோ , முடிவோ இன்னும் எட்டப்படவில்லை
வர்த்தகம் செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள் எளிதான சூயஸ் கால்வாய் வழியாக உள்ள கடல்பாதையை விட்டு அதிகம் செலவாகும் இந்த பாதையை ஏன் தேர்ந்து எடுக்க வேண்டும்? சுமார் 3,035 கி மீ நீளத்திற்கு இருப்பு பாதைகள் அமைத்தால் தான் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் , கிறீஸ் மற்றும் இத்தாலியில் உள்ள துறைமுகங்களில் இணைப்பு (landing alignment) ஏற்படுத்துவதற்கு 8பில்லியன் டாலர் தேவை.
இந்தியாவில் இத்திட்டம் துவங்குவது குஜராத்திலுள்ள அதானியின் முந்திரா மற்றும் காண்லா துறைமுகங்களில் இருந்து தான், அடுத்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகம் அதானின் மேலாண்மையில் இருக்கிறது . அதானியின் மேம்பாட்டிற்காக மோடி கொடி பிடித்து இத்திட்டத்தை இந்தியாவின் கனவு திட்டம் என கதைக்கிறார்.
ஆனால் அவரது ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷணவ் கூற்றிலிருந்து உண்மை நிலையை ஒருவர் அறிந்து கொள்ளலாம். “இத்திட்டம் ஒரு சிக்கலான திட்டம், எல்லாவற்றையும் ஒரே ஒழுங்கில் கொண்டு வர வேண்டியிருக்கிறது. உதாரணமாக அனைத்து நாடுகளிலும் ரயில்கள் ஒரே காஜில் (gauge)இருக்க வேண்டியிருக்கிறது,அனைத்து எஞ்சின்களும் ஒரே தொழில்நுட்பத்தை சார்ந்த இருக்க வேண்டும், கண்டெய்னர்கள் ஒரே அளவினதாக இருக்க வேண்டியிருக்கிறது. எனவே நடைமுறைகளில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன “
Also read
இவற்றையடுத்து இத்திட்டத்திற்கு இந்தியா இஸ்ரேலை தவிர ஏனையநாடுகள் இன்னும் சிறு முயற்சியை கூட எடுக்கவில்லை. இத்திட்டம் சீனாவின் பெல்ட் அண் ரோடு திட்டத்திற்கு சவாலும் அல்ல. அதோடு ( பி ஆர் ஐ திட்டத்தோடு ) இத்திட்டத்தை ஒப்பீடு கூட செய்ய முடியாது.
ஏனெனில், அத்திட்டம் மிக பிரம்மாண்டமானது. அது 140 நாடுகளை இணைத்துள்ளது. இதை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது. மோடி வேண்டுமானால் 3,000 கி.மீ ரயில் பாதை அமைக்க சீனாவின் உதவியை நாடாலாம். ஏனெனில் சீனா தற்பொழுது பாக்கித்தான் துறைமுகம் க்வாடர் நகரையும் சீனாவிலுள்ள கஷகர் நகரையும் இணைக்கும் 3028 கி.மீ நீளமுள்ள ரயில்பாதையை 58பி. டாலர் பொருட்செலவில் நிர்மாணித்து கொண்டிருக்கிறது.
இவற்றை புரிந்து கொள்ளாமல் தடித்தனம் மிக்க சங்கிகள் தங்களது அறிவு சூன்யத்தையும், இஸலாமிய வெறுப்பையும் வெளிப்படுத்தி வருவது நகைப்புக் கிடமாக உள்ளது.
இத்தகையவர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மோடி கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மாண்பையும், மரியாதையும் உலக அரங்கில் சிதைத்து விட்டார் என்பது கண்கூடு.
ச. அருணாசலம்
அறம் இணைய இதழ்
Leave a Reply