முறையாக வழக்கு பதியாமல், சம்பந்தப்பட்டவரை கைதும் செய்யாமல் அடியாள் வேலை செய்யத் துணிந்துள்ளனர் தமிழக காவலர்கள். ‘ஒருவன் குற்றவாளியா? அப்பாவியா?’ என்பதை அறிய குறைந்தபட்ச அறிவைக் கூட உபயோகிக்காமல் கொலைக்கு துணிவதா…? ஆட்சித் தலைமை செய்யத் தவறியது என்ன?
திருபுவனத்தில் நடந்துள்ள சம்பவம் திகைக்க வைக்கிறது…!
என்னே கொடுமை! நெஞ்சு பதைக்கிறது. நிம்மதி இழந்து மனம் வெறுமை அடைகிறது. அடுத்தடுத்து என்பதாக தொடர்ந்து வரக் கூடிய காவல்துறை அநீதிகள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே நம்மை கொண்டு செல்கின்றன.
கோவில் விழாவிற்கு வந்த போது காரை உரிய இடத்திற்கு சென்று நிறுத்தாமல், அந்த பொறுப்பை அங்கிருந்த காவலர் அஜித்குமாரிடம் செய்யச் சொல்லி உதவி கேட்ட பெண்கள், உதவிய காவலருக்கே எமனாகிவிட்டார்கள். பெரும் கூட்டம் கூடும் திருவிழாவிற்கு வந்த பெண்கள் நகையோடு வருவானேன்? அதை காரிலேயே விடுவானேன்? அப்படி காரில் நகை இருக்க, அதன் சாவியை அறிமுகம் இல்லாதவரிடம் தருவானேன்? இதற்கெல்லாம் விடை தேவைப்படுகிறது.
பொறுப்பற்றவர்களின் சந்தேகத்திற்கு ஒரு அப்பாவியின் உயிர் துடிதுடிக்க எடுக்கப்பட்டிருக்கிறது. புகார் தந்தவர்களிடம் உரிய முறையில் விசாரிக்காமல் முன் முடிவெடுத்து காவல்துறை மூர்க்கமாக நடந்துள்ளது.
சாதாரண ஒரு மனிதர் கூட காவல்துறைக்கு போனால் மிருகத்தனம் மிக்கவராக ஆகிவிடுவாரோ…! அந்த மாதிரியான ஒரு பணிச் சூழல் தான் அங்கு நிலவுகிறதோ…? அப்பாவிகளுக்கு எல்லாம் அரணாக இருக்க வேண்டியது அரசாங்கம் அல்லவா?
காவல்துறைக்கு அமைச்சர் என்பது மிக,மிக பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியாகும். மிக விழிப்புணர்வோடு காவல்துறை நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்களை உரிய முறையில் வழி நடத்தினால், காவல்துறையால் ஆட்சியாளர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்!
நாம் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு காவல்துறையை கண்காணித்து வழி நடத்துவதற்குரிய அளவுக்கு நேரம் இருக்காது. அதற்கான நபரும் அவர் இல்லை. ஆனால், அதற்கான திறமைசாலிகளுக்கு திமுகவில் பற்றாகுறை இல்லை.
அன்றைக்கு பெருந்தலைவர் காமராஜருக்கு காவல்துறை பொறுப்பை கவனிக்க கண்ணியமான கக்கன் கிடைத்தார்.
ஆனால், சமீப காலமாக முதலமைச்சராக இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் தான் காவல்துறை இருக்க வேண்டும் என பிடிவாதமாக அந்த பொறுப்பை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நிர்வகிக்க தெரியாமல் கோட்டைவிடுகிறார்கள். ஜல்லிக் கட்டுக்கு எதிராக மெரினா எழுச்சியை இறுதியில் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்க காவல்துறைக்கு துணை போனார், அன்றைஅ முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்! தொலைகாட்சியை பார்த்து தான் தூத்துகுடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் துப்பாக்கி சூட்டை அறிந்து கொண்டேன் என்றார், அன்றைய முதல்வர் எடப்பாடி.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண்விடல்.
என்ற குறளுக்கேற்ப தன் சகாக்களில் இதற்கான பொறுப்பான நபரிடம் காவல்துறையை ஒப்படைத்திருந்தால், இந்த அளவுக்கு 24 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்திருக்காது.
இந்த ஆட்சியின் தொடக்க ஆண்டிலேயே ஆறு லாக்கப் மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. சென்னை விக்னேஷ், தஞ்சை சத்தியவான், ராமநாதபுரம் மணிகண்டன், சேலம் பிரபாகரன், திருவண்ணாமலை தங்கமணி..என அதிர வைத்தது. முதல் ‘லாக்கப்’ மரணம் நடந்த போதே சுதாரித்து முறையான வழிகாட்டல்கள் தந்து, ‘இனியும் லாக்கப் மரணம் நிகழ்ந்தால், இந்த அரசு அதை பொறுத்துக் கொள்ளாது. கண்டிப்பாக மிகத் தீவிரமாக அதை கையாளுவோம்’ என புரிய வைத்திருக்க வேண்டும்.
துர்அதிர்ஷ்டவசமாக முதல்வர் ஸ்டாலின் இப்படி சொல்லக் கூடியவராக இல்லை. இப்படிச் சொல்வதற்கே ஒரு ஆளுமைத் திறன் வேண்டும். அது ஸ்டாலின் அவர்களிடம் இல்லை. தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும் முடியாதவராக தற்போது ஆட்சியை நிறைவு செய்யக் கூடிய ஐந்தாம் ஆண்டிலும் அவர் உள்ளார் என்பதே வேதனை.
எதிர்கட்சியாக இருக்கும் போது என்னென்ன விஷ்யங்களை கண்டித்தோமோ அது நம் ஆட்சியிலும் தொடரக் கூடாது என்ற குறைந்தபட்ச உறுதிப்பாடாவது இருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டாலின் அவர்களோ, முன்னவர்களைக் காட்டிலும் மோசமாக சரித்திரம் படைத்துக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் கமிட்டி அறிக்கை தந்த போதும் ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு பீப்பிள்ஸ் வாட்ச் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய போதும், அசராமல் அவர்களை பாதுகாத்து பதவி உயர்வு தந்தார்.
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்சை அடித்துக் கொலை செய்த எஸ்.ஐயின் மகனுக்கு வேலை போட்டு கொடுத்து அழகு பார்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
லாக்கப் மரணங்கள் மட்டுமில்லை, மிக அநீதியாக என்கெளண்டர்கள் செய்யும் காவலர்களும் இந்த ஆட்சியில் தண்டிக்கப்படுவதில்லை. இதே போல இந்த ஆட்சியில் காவல்துறை தவறுகள் இழைக்கும் போதெல்லாம் கமுக்கமாக கண்டு கொள்ளாமலே முதலமைச்சரான ஸ்டாலின் இருக்கும் போது, இதையே காவலர்கள் அட்வாண்டேஜ் ஆக எடுத்துக் கொண்டனர்.
நிர்வாகத் தலைமையில் இருப்பவர் நீதியை நிலை நாட்டுவதில் சமரசமற்றவர் என்றால், அடித் தளத்தில் உள்ள அத்தனை பேரும் அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வழிக்கு வந்துவிடுவார்கள்.
2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களை நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், கட்டிங் பிளேயர் கொண்டு பல்லை பிடுங்கியும், ஜல்லிக் கற்களை வாயில் போட்டு கடிக்க நிர்பந்தித்தும் கொடூரமாக சித்திரவதை செய்ததாகப் புகார்கள் வெளிவந்த போதும், இதே தயக்கம் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு. ஆனால், அன்றைய தலைமை செயலாளர் தான் துணிந்து நடவடிக்கை எடுத்தார். பிறகு சிறிது காலம் மட்டுமே பல்வீர் சிங் இடை நீக்கம் செய்ய்யப்பட்டு மீண்டும் பொறுப்புக்கு வந்துவிட்டார். அவர் சம்பந்தப்பட்ட வழக்கை இன்னும் இழுத்தடித்துக் கொண்டே தான் செல்கிறது தமிழக அரசு.
அண்ணா நகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை பாதுகாக்க தமிழக காவல்துறை பகிரத பிரயத்தனம் செய்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் குட்டுபட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு பிறகேனும் சுதாரித்தாரா? என்றால், இல்லை.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தொழில்முறை குற்றவாளியான ஞானசேகரனை சுதந்திரமாக குற்றச் செயல்களை செய்யவிட்டு தொடர்ந்து கையூட்டு வாங்கி பலனடைந்த காவலர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
சமீபத்தில் நடந்த சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி ரேஞ்சில் உள்ள ஜெயராமன் தன் காரையும் தந்து காவல்துறை டிரைவரையும் அனுப்பி கடத்தல் சம்பவத்திற்கு தந்து மூளையாக செயல்பட்டார். இந்த அளவுக்கு ஒரு ஏடிஜிபி நடந்து கொள்ள துணிகிறார் என்றால், ‘நான் என்ன செய்தாலும், இந்த ஆட்சித் தலைமை என்னை தண்டிக்கத் துணியாது’ என அவர் உறுதியாக நம்பியது தான். அந்தப்படியே முதல்வர், ‘ஏடிஜிபி மீது நடவடிக்கை வேண்டாம்’ என்றே தடுத்துள்ளார். ஆனால், டிஜிபி சங்கர் ஜிவால் அவர்களின் உறுதிப்பாடு தான் ஏடிஜிபி ஜெயராமன் கைதாகக் காரணமானது. எனினும், ஜெயராமன் மீது எப்.ஐ.ஆர் போடாதது, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் தமிழக அரசின் சார்பாக அழுத்தமான வாதங்களை வைக்காதது என சொதப்பி அவர் விடுதலைக்கு துணை போய்விட்டது ஸ்டாலின் நிர்வாகம்.

சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் தரச் சென்ற கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களை தலைமை காவலர் பலமாக தாக்கினார்.
மிகச் சமீபத்தில் நுங்கம்பாக்கம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு எட்டு வயது சின்னஞ்சிறு சிறுமியை ஒரு உதவிக் ஆய்வாளர் தூக்கிச் சென்று தன் வீட்டில் வைத்து மோசமான முறையில் பாலியல் துன்புறுத்தல் தந்துள்ளார். அவர் மீது இப்போது வரை நடவடிக்கை இல்லை.
இப்படி டஜன் கணக்கான உதாரணங்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.
இப்படிப்பட்டவர்கள் காவல்துறையில் செயல்பட்டால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு? ‘அயோக்கியர்களும், கொடூர குற்றவாளிகளும் காவல் துறைக்குள் வந்து பதவி பெற்று, தங்கள் கைவரிசையை காட்ட முடியும்’ என்பதை ஒரு மக்கள் நல அரசு நிச்சயம் முறியடிக்க வேண்டும்.
‘நாம் என்ன அநீதி செய்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம்’ என்ற நம்பிக்கையை காவல் துறையினர் மனதில் விதைத்தவர்கள் ஆட்சியாளர்கள் தானே..? முதலில் காவல் துறையை தன் அடியாளாக கருதும் மனநிலையில் இருந்து ஆட்சியாளர்கள் விடுபட்டால் தான் அவர்களுக்கும் விமோசனம். மக்களுக்கும் விமோசனம்.
காவல்துறையில் எவ்வளவோ நேர்மையாளர்கள், நல்லவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நல்லவர்களை, திறமையாளர்களை, நேர்மையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறை மறைத்து, ஒட்டுமொத்த காவல் துறையும் அந்தக் களங்கத்தை சுமக்க வேண்டுமா..? குற்றம் இழைக்கக் கூடியவர்களை தனிமைப்படுத்தி தண்டிக்க வேண்டும்.
குற்றம் இழைக்கும் காவல் அதிகாரிகளை ஒருபோதும் காப்பாற்றாதீர்கள். நல்ல அதிகாரிக்கு சோதனை வந்தால் ஒருபோதும் கைவிடாதீர். இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளன. உடனே காவல் துறை பொறுப்பை முதல்வர் கைகழுவி, உரிய திறமைசாலியை கண்டடைந்து ஒப்படைப்பதே சாலச் சிறந்தது.
சாவித்திரி கண்ணன்
ஒரு குற்றத்தை காவலர்கள் செய்யும் போது இருதிராவிடக்கட்சிகளும் நீ இவ்வளவு செய்தாய், நான் இவ்வளவுதான் செய்தேன் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விவாதிப்பது எப்படி இருக்கிறது என்றால், அவள் தட்டு நிறைய மலம் தின்றான் நான் சிறு கிண்ணமே தின்றேன் என்பது போல் இருக்கிறது. காவலர்களுக்கு குற்றவாளிகளை விசாரிக்கும் போது இந்தந்த குற்றத்துக்கு இந்த வழியில் விசாரிக்க வேண்டும் என்ற சட்ட நெறிமுறையை வகுத்தல் வேண்டும். இதனை ஆளும் அரசும் நிர்வாகமும். காவலர்களும் கவனிக்கத்தகும். மேலும் பொருக்கிவர்க்க பிரதிநிதிகளை ஆய்ந்து தேர்ந்தெடுத்தால் இத்தகையப் போக்குகள் நிகழாது.