காவல் சித்திரவதைகளை தடுக்க சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் சபை பல வழிகாட்டல்களை தந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தி உள்ளது. எனினும் மீண்டும், மீண்டும் கஸ்டோடியல் டெத் நடக்க காரணம் என்ன?
சிவகங்கை மாவட்டம்மடப்புரம் அஜித் குமார் கொலை தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்கள் தமிழகக் காவலர்கள் என்பதே.
ஜூன் 28 ல் அவர் கொல்லப்பட்டாலும் ஜுன் -30 தான் இந்த செய்தி பரவலாக கவனம் பெறுகிறது. பிறகு நடந்த கொடூரங்களின் விளைவால், அஜித் குமாரின் படுகொலை பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியானது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 176 (I) காவலில் உள்ள ஒருவர் இறந்தால் விசாரணைக்கு உத்தரவிட நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 46, கைது செய்யும் யாரையும் விசாரணை செய்ய மட்டுமே அனுமதிக்கிறது. விசாரணையின் போது யாரையும் கொலை செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு சட்டம் வழங்கவில்லை.
மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் அவர்களின் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு இந்த மரணம் பற்றி விசாரித்து வருகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம், படுகொலையிலும் மோசமான படுகொலை என்று இதை கூறியது. உடம்பில் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் மொத்தம் 44 காயங்கள் இருந்ததாகக் கூறும் அந்த அறிக்கை பேரதிர்ச்சியை தந்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள், இந்த படுகொலையின் விவரங்களை வெளிக்கொணர்ந்த ஊடகங்களின் செயல்பாடுகள், பல மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடுகள் , பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இதில் தலையிட்டது என்ற பல நிர்பந்தங்களால் தான் தமிழ்நாடு அரசு இதில் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அஜித் குமார் கொலை செய்யப்பட்டார் என்று குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மானாமதுரை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ விசாரணை கேட்ட அ.தி.மு.க.வின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்று, குற்ற வழக்கின் புலன் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உள்ளது.
அஜித் குமார் மரணம் சம்பந்தமாக வெளிவந்த செய்திகளில் மிகவும் மனதை உலுக்கிய செய்தி கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் 25 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதுதான். இந்த காவல் நிலைய மரணங்கள் மட்டுமன்றி போலி மோதல் மூலமாக பலர் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இந்த காவல் நிலைய மரணங்கள் திமுக ஆட்சி காலத்தில் மட்டும் நிகழவில்லை. இதற்கு முன்னர் அதிமுக ஆட்சி காலத்திலும் இதே போல நிகழ்ந்தது. ஆட்சிகள் மாறினாலும் காவல் நிலைய மரணங்கள் என்ற காட்சிகள் மாறாமல் தொடர்கிறது.
நமக்கு எழும் முக்கிய கேள்வி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த 25 காவல் நிலைய மரணங்களில், அஜித்குமார் மரணம் தவிர்த்த மற்றவைகளில் சம்பந்தப்பட்ட காவலர்கள் எவர் பேரிலும் கொலை செய்ததாக குற்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதும் எந்த காவலரும் சிறை படுத்தப்படவில்லை என்பதும் தான்.
ஆட்சியாளர்கள் அனைவருமே காவல்துறையினரை தங்களுக்கு விசுவாசியாக வைத்துக் கொள்வதில் மட்டுமே பேரார்வமும், அக்கறையும் கொள்கின்றனரேயன்றி, அவர்களை மக்களின் சேவகர்களாக, மக்களின் பாதுகாவலர்களாக இயங்க அனுமதிப்பதில்லையோ… என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆட்சியாளர்களிடம் உள்ள இந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் தான், இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும்.
இதற்கு முன்னர் இருந்த அதிமுக ஆட்சி காலத்தில், சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் – ஜெயராஜ் மற்றும் பெலிக்ஸ் -காவல் நிலையத்தில் அடித்தே கொல்லப்பட்ட நிகழ்வு தவிர்த்து ,மற்ற காவல் நிலைய மரணங்கள் சம்பந்தமாக காவலர்கள் எவர் பேரிலும் கொலை செய்ததாக குற்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.
இது போன்ற காவல் நிலையம் மரணங்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்றி மற்ற அனைத்து மாநிலங்களிலும் நிகழ்வதை குறிப்பிட்டாக வேண்டும். மற்ற மாநிலங்களிலும் கூட காவல் நிலைய மரணங்களில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பேரில் குற்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதும் காவலர்கள் எவரும் சுலபத்தில் சிறைபடுத்தப்படுவதில்லை என்பதும் கவலையளிக்கிறது. இது ஒரு வகையில் அவர்கள் எதுவும் செய்வதற்கான அதிகாரம் கொண்டவர்கள் என்ற தோற்றத்தையே ஏற்படுத்தும். இது சட்ட ஆட்சிக்கு நல்லதல்ல..
ஓவ்வொரு ஆண்டும் இந்தியாவில் காவலில் இருக்கும் போது உயிர் பறிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது என்பது சுலபத்தில் கடந்து செல்லக் கூடிய ஒன்றல்ல.
காவலர்களால் ஏற்படுத்தப்படும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை நடத்திய மாநாட்டில் 1997 ஆம் ஆண்டே இந்திய அரசு கையெழுத்திட்டது. ஆயினும், இந்தியா இன்னும் அதை அங்கீகரித்து நடைமுறைபடுத்தவில்லை.
போலி மோதல்கள் மற்றும் காவல் நிலைய மரணங்கள் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தெளிவான பல தீர்ப்புகளை அளித்துள்ளது.
# காவல் நிலைய மரணங்களின் போது, அது கொலை என்று குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
# குற்ற வழக்கின் அடிப்படையில் புலன் விசாரணை நடைபெற வேண்டும்.
# சம்பந்தப்பட்டவர்கள் காவலர்களாக இருப்பினும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவாக கூறுகிறது அந்த தீர்ப்புகள்.
இதே போன்ற வழிகாட்டுதல்களை தேசிய மனித உரிமை ஆணையமும் வழங்கியுள்ளது.
ஆனால், நடைமுறையில் இந்த மரணங்களை கொலை என்று பதிந்து குற்ற வழக்குகள் எந்த மாநிலங்களிலும் பதிவு செய்யப்படுவது இல்லை. எனவே, புலன் விசாரணையும் இருக்காது. இந்த மரணங்களை நிகழ்த்திய காவலர்கள் கைது செய்யப்படுவதும் மிக அரிதாகவுள்ளது. பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை.
இதற்கு என்னதான் தீர்வு?. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல இருந்தாலும், ஏன் இந்த அவல நிலை தொடர்கிறது.
இப்படி மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது நமது அரசமைப்புச் சட்டம் வழங்கும் உயிர் வாழும் உரிமைக்கு விரோதமானது. இப்படி தொடர்ந்து மனித உரிமைகள் மீறும் நிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்வது கேலிக் கூத்தானது.
மேற்கத்திய உலகத்தில் அதாவது ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவில் கனடாவில் இது போன்ற நிகழ்வுகள் நிகழ்வதில்லை. அப்படி ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் கூட, மிகப் பெரிய மக்கள் எழுச்சி பார்க்க முடியும். ஒரு கருப்பினத்தை சேர்ந்தவரை காவலர் ஒருவர் காலால் மிதித்து இறந்து போன நிகழ்வு நடந்த போது அமெரிக்கா முழுவதும் அதனை கண்டித்து மிகப்பெரிய எதிர்ப்பை தெரிவித்தது. அந்த நிகழ்வு உலகையே குலுக்கியது.
ஆனால், இதுபோன்று ஒரு மக்கள் எழுச்சி தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நிகழ்வதில்லை. அஜித் குமார் வழக்கு சாத்தான்குல வழக்கு என்று ஏதோ ஒரு சில வழக்குகளில் மட்டுமே நியாயம் கிடைக்கிறதே தவிர, மற்ற வழக்குகளில் நியாயம் கிடைப்பதில்லை.
இதற்கு முன்னர் இருந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அமைதியான மக்கள் கூட்டத்தை காவலர்கள் சுட்டனர். அதில் 14 பேர்கள் இறந்து போயினர். இந்த 14 பேர்களை சுட்டு கொலை செய்த எந்த காவலரும் சிறைக்குச் செல்லவில்லை.
இந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் கமிஷன் நியமிக்கப்பட்டது. பல சாட்சிகளை விசாரித்தும் பல ஆவணங்களை ஆய்வு செய்தும் , துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பேரில் குற்ற வழக்கு பதிவு செய்து புலனாய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை செய்தார்.ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த குற்றம் செய்த அந்த காவலர்களின் பேரில் குற்ற வழக்கு பதிவு செய்ய திமுக தவறியது ஏன்?. திமுக அரசு அந்த பரிந்துரையை ஏன் நிராகரித்தது…? இதற்கு இன்று வரை முதல்வரிடம் இருந்து பதில் இல்லை.
Also read
காவல்துறையினர் குற்றம் புரிந்தால் அவர்களை தண்டிக்க எந்த அரசும் தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகவுள்ளது. ஒருவகையில் இதை ஆட்சியாளர்களின் கோழைத்தனமாகவே மக்கள் மன்றம் பார்க்கிறது.
எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் காவல்துறையினர் செய்யும் குற்ற செயல்களின் மீது மட்டும் குற்ற வழக்குகள் நடைபெறாமல் போவது ஏன்? என்று நமது சிவில் சமூகம் உரக்க கேள்வி கேட்க வேண்டும்.
சிவில் சமூகம் எந்த அளவு விழிப்புடன் இருக்கிறதோ, அந்த அளவே காவல் துறையினர் செய்யும் குற்ற செயல்களின் மேல் நடவடிக்கை பாயும். அதற்கான உதாரணங்களே திமுக ஆட்சியில் நடந்த மடப்புரம் அஜித்குமார் கொலை மற்றும் அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் -பெலிக்ஸ் கொலைகள் உணர்த்தும் செய்திகள்.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
ஓய்வு பெற்ற நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்
Leave a Reply