‘விட்டு விடுதலையாகி நிற்பாய், இந்த சிட்டுக் குருவியைப் போலே’
என்பான் பாரதி. இந்தப் படம் நமக்குள் கடத்திச் செல்லும் செய்தி இது தான்! வழக்கமான சினிமா மசாலாத்தனங்களில் இருந்து விலகி வாழ்க்கையை அதன் வலிகளுடனும், வசந்தமான சந்தோஷங்களுடனும் இந்தப் படம் பேசுகிறது;
நுகர்வு கலாச்சார ஆசையில் நுகத்தடி பூட்டிய மாடு போல பொருளாதாரத் தேடலை நோக்கி பயணப்பட்டே தனக்கான நிம்மதியான வாழ்க்கையை தொலைத்து விடுகிற இன்றைய நடுத்தர வர்க்க தம்பதியர் வாழ்க்கை குறித்த அற்புதமான பதிவு தான் இந்தப் படம்.
தங்கள் மகனை அதிக பணம் கட்டி பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைப்பது. அவனுக்கு விலை உயர்ந்த செருப்பு, சட்டை கோர்ட்.. போன்றவற்றை வாங்கித் தருவதற்காக கணவனும், மனைவியும் ஒன்றாகக் கூட சேர்ந்து வாழ முடியாமல் அவரவர் தளத்தில் ஓடி,ஓடி உழைக்கிறார்கள்!
‘வாழ்க்கையில் உண்மையான நிம்மதியும், சந்தோசமும் எது?’ என்பதைக் கண்டடையும் பயணமே படமாக்கப்பட்டுள்ளது.
மெர்சி சிவா மிக இயல்பான, மிகைப்படுத்தாத நடிப்பில் சிறுவனுக்கு தந்தையாக தன் நடிப்பை சிறப்பாக நல்கியுள்ளார். சிறுவனின் அம்மாவாக வரும் கிரேஷ் அந்தோணி பிள்ளையையும், கணவனையும் பிரிந்து வாழும் வாழ்க்கையில் அவ்வப்போது இருவரிடமும் அக்கறையோடு பேசுவதாகட்டும், தங்கை பாசத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சியிலாகட்டும், உடன் பணியாற்றும் பெண்ணின் தவறை மன்னித்து உருகுவதாகட்டும் கச்சிதமான நடிப்பை தந்துள்ளார்.
கொஞ்ச நேரமே வந்து போனாலும் அஞ்சலியின் நடிப்பு அசத்தல் ரகம். சுயம் இழக்காத துணிவுக்கு எடுத்துக்காட்டான கதாபாத்திரம். தன் பால்யகால நண்பனிடம் அதே உரிமை எடுத்து பேசுவதிலாகட்டும், தன் மகனுக்காக சிவா பறித்து வந்த மலரை தனக்காகத் தான் என்று கருதி அதை பட்டென்று பிடுங்கி, ”பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது கேட்டேன். இப்ப எடுத்துட்டு வந்து தர்றீயா..?’’ என கணவின் முன்னேயே நண்பனிடம் உறவு பாராட்டுவதாகட்டும்.. கெத்தான கேரக்டர் தான்!
அஞ்சலியின் கணவராக வரும் அஜு வர்கிஸ் வெள்ளந்தியான கிராமத்து மனிதனை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். தன் சிறிய உணவுக் கடை வியாபாரம் குறித்த அவரது நிறைவான மனநிலை அசல் கிராமத்தானின் அடையாளமாகும்.
குட்டிப் பையனாக, சுட்டிப் பையனாக, புத்தி கூர்மையும், பிடிவாதமும், வைராக்கியமும் கொண்டவனாக சித்தரிக்கப்பட்டுள்ள சிறுவன் கதாபாத்திரத்தை மிதுல்ரயன் அவனது இயல்புபடி வாழ்ந்து காட்டியுள்ளான். குழந்தை நட்சத்திரங்களுக்கான நடிப்பு விருதை தரலாம். படத்தின் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ இவன் தான்!
அப்பாவி தந்தையாக வரும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மகனின் ஆடம்பர வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டு அங்கலாய்க்கும் காட்சியில் நம்ம வீட்டுப் பெரியவராக மனதில் நிற்கிறார்.
நகர்புற வாழ்க்கை நெருக்கடிகளையும், கிராமத்தின் இயற்கை அழகையும் மிக குளிர்ச்சியாக, ரம்பியமாக படம் பிடித்துள்ளார் சினிமோட்டோகிராபர் என்.கே.ஏகம்பரம்.
தந்தை – மகன் உறவு சென்ற தலைமுறையில் இருந்ததைப் போல இன்றில்லை. கணவன் – மனைவி உறவும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல இன்றில்லை. தந்தை தவறுகளை தட்டிக் கேட்க தயங்காத தலைமுறை இன்று உருவாகிவிட்டது.
பிள்ளைகள் பெரியவர்களின் வாழ்க்கையையே தங்களுக்கு முன்மாதிரியாக கொள்கிறார்கள். நம் பேச்சுக்களை விட செயல்களில் இருந்தே நம்மை மதிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையை ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தப் படம் தருகிறது!
வாழ்க்கையின் சுமைகளை, துன்பங்களை மனைவியின் தலையில் மட்டுமே கட்டிவிட்டு, ஏகாந்தமாக வாழ்ந்த கணவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எதையும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்வதில் இருந்து கணவன் தப்பித்துச் செல்வதை இன்றைய பெண்கள் அனுமதிப்பதில்லை…போன்ற பல புரிதல்களை இந்தப் படம் தருகிறது.
சுயநலத்தை, பொருளாசையை துறக்க முடிந்தால் பறக்கவும் முடியும்.
‘பறந்து போ’ அக விடுதலை குறித்த அழகான புரிதலைத் தரும் படம்.
-சாவித்திரி கண்ணன்
Leave a Reply