இயற்கை கால்நடை மருத்துவ பேராசிரியர் புண்ணியமூர்த்தி நல்ல ஆய்வறிஞர். இவரது ஆய்வுகள் தமிழகம் தாண்டி இந்தியாவின் 30 மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் விதந்தோதப்படுவதோடு கடைபிடிக்கப்படுகின்றன. பல லட்சம் மாடுகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய இவரது சாதனைகள் குறித்த அலசல்;
வாய்பேசத் தெரியாத ஜீவன்களான கால் நடைகளுக்கு என்னென்ன நோய்கள் எல்லாம் வருகின்றனவோ, அவற்றை எல்லாம் இயற்கை சார்ந்த அணுகுமுறையில் மிக எளிதாக, அதிக செலவில்லாமல் தீர்க்கக் கூடிய வழிமுறைகளை இவர் முறையாக ஆய்வு செய்து அறிமுகப்படுத்தி வருகிறார்.
இவர் தஞ்சையில் உள்ள தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் (TANUVAS) மரபுசார் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றதாக சொல்லப்பட்டாலும், ஓய்வின்றி கால் நடைச் செல்வங்களை பாதுகாப்பது குறித்து உலகெங்கும் சுற்றிச் சுழன்று செயல்பட்டு வருகிறார்.
குஜராத்தில் உள்ள தேசிய பால் பண்ணை வளர்ச்சி ஆணையம் ( National Dairy Development Board NDDB) பேராசிரியர் புண்ணியமூர்த்தியின் ஆய்வை உள்வாங்கி பாரம்பரிய இயற்கை மருத்துவ மூலிகைகளைக் கொண்டு அனைத்து நோய்களையும் தீர்ப்பதற்கான மருத்துவ முறையை பத்து லட்சத்திற்கும் மேலான கால்நடைகளுக்கு பயன்படுத்தி 85 விழுக்காடு வெற்றி கண்டுள்ளது.
அத்துடன் இந்த ஆய்வின் முடிவுகளைத் தற்போது பாங்காக்கில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் வெளியிட்டுள்ளது, தேசிய பால் பண்ணை வளர்ச்சி ஆணையம். தஞ்சை பேராசிரியர் புண்ணியமூர்த்தி அவர்களின் மருத்துவ முறைகளை இந்தி, குஜராத்தி, தெலுங்கு..உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து NDDB வெளியிட்டு உள்ளது. இவர் கண்டறிந்துள்ள தமிழரின் மரபு மருத்துவ முறைகளை இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பால் பண்ணைகள் சிறப்பாக பயன்படுத்தி மக்களுக்கு தரமான பாலினை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஆவின் நிறுவனம் இன்னும் போதுமான அக்கறை செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
1997 ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் அமெரிக்கா, கனடா முதலிய நாட்டில் கால் நடை வளர்ப்பு மருத்துவமுறை பற்றி அறிந்து கொண்டு அதை நம் மண்ணிற்கு ஏற்ப பயன்படுத்தாலாம் என சுற்றி அலைந்ததில் ஒரே ஒரு சிறப்பான விஷயம் கூட கண்ணுக்கு தட்டுப்படவில்லை. கருத்தை ஈர்க்கவில்லை. அவர்கள் மாடுகளுக்கு நோய் வந்தால் கொன்று கசாப்பு கடைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
பெரும்பாலான மாடுகளுக்கு வரும் நோய், மடி நோய் தான். அந்த மடி நோய் வந்தால், மருந்து ஊசி போட்டு ஓரளவு குணப்படுத்திவிடுவார்கள் என்றாலும், அதன் பின் பால் சுரப்பு பாதியளவுக்கு குறைந்து விடும். இது விவசாயிகளை தாங்க முடியாத நட்டத்தில் தள்ளிவிடும். ஆகவே, அவர்கள் அதனை அடிமாட்டுக்கு விற்று விடுவார்கள். அதும் மாட்டு பண்ணையில் பல மாடுகளுக்கு இது ஒரே நேரத்தில் வரும் போது அந்தப் பண்ணைகளே அழிந்து போன வரலாறுகள் ஏராளம். மாடு வளர்ப்பவர்களின் இந்த சோகம் சொல்லி மாளாது. இதற்கு இந்த மண்ணில் நம் முன்னோர்கள் என்ன மாதிரி மருத்துவத்தை கையாண்டார்கள் என புண்ணியமூர்த்தி தேடி ஆராய்ந்தார். அதில் எட்டுவிதமான மருத்துவம் சொல்லப்பட்டு இருந்தது. அவற்றை சோதித்து அவற்றில் ஒன்றை மிகச் சிறந்தது என அறிந்தார்.
அதன்படி 250 கிராம் சோற்றுக் கற்றாளை, மஞ்சள் தூள் 50 கிராம், சுண்ணாம்பு 15 கிராம் மூன்றையும் அரைத்து மாட்டின் பால் சுரக்கும் காம்பில் தடவினால் மூன்று நாட்கள் தடவி வந்தால், மடி நோய்க்கு விடிவாகும். பால் சுரப்பும் பழைய நிலையில் அப்படியே தொடரும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் இது சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான மாடுகளுக்கு தந்து பயன் கிடைத்தயடுத்து கழிசல் நோய்க்கும், கோமாரி நோய்க்கும், கால் புண்ணுக்கும் இதே போன்ற இயற்கை மருத்துவத்தை கண்டறிந்து பரிசோதித்து இவற்றிலும் வெற்றி பெற்றார்.
இவருக்கு சவாலாக இருந்த ஒன்று என்றால், அது கதண்டு வண்டுக் கடியாகும். இந்த கதண்டு வண்டு கடித்துவிட்டால், அது மாடோ, மனிதனோ மரணிப்பதை தவிர வேறு வழியில்லை என்பது தான் யதார்த்தமாக உள்ளது. இது குறித்த புண்ணியமூர்த்தியின் தேடலில் ஒரு சித்தர் பாடல் இவரை ஈர்த்தது.
‘மண்ணின் வேந்தன், மலையின் வேந்தன், கடலின் வேந்தன் மூன்றனையும் கசக்கி பிழிந்து, கண்ணில், மூக்கில் காதில்விட கடுகி வந்த காலனும் காத தூரம் ஓடிடுவானே..’ என எழுதி இருக்கிறார்.
‘மண்ணின் வேந்தன்’ என்றால், வெத்தலை, ‘மலையின் வேந்தன்’ என்றால், மிளகு, ‘கடலின் வேந்தன்’ என்றால், உப்பு. இவை மூன்றையும் ( 10 வெற்றிலை மற்ற இரண்டும் தலா 10 கிராம்) அரைத்து அந்தச் சாற்றை காதில், மூக்கில், கண்ணில் ஊற்றும் போது மரணத்தை நோக்கி செல்லும் மனிதனோ, விலங்கோ சில நிமிஷங்களில் மீண்டு விடுகிறார்கள். இந்த வகையிலும் ஏராளமான விலங்கினங்களையும், மனிதர்களையும் உயிர் பிழைக்க வைத்துள்ளார் புண்ணியமூர்த்தி.
இதே போல கோமாரி நோய்க்கும், கால் புண்ணுக்கும் இவரது எளிய மருத்துவத்தை இன்று இந்தியா மட்டுமல்ல, உலகத்தின் பல நாடுகள் பின்பற்றுகின்றன.
இவரது இந்த ஆய்வை இவர் மிக நுணுக்கமாக ஆய்வுக்கு உட்படுத்த தமிழக அரசும், இந்திய அரசும் ஆய்வு செய்ய நிதி ஒதுக்கி தந்தன. அன்றைய திட்ட கமிஷன் துணைத் தலைவர் சாந்த ஷீலா நாயர் 13.7 கோடி ரூபாய் ஒதுக்கினார். இதன் மூலம் 2016 ல் ஒரத்த நாட்டில் மரபு சார் மூலிகை மருத்துவ ஆய்வு மையம் (Ethnoveterinary Herbal Product Research and Development Centre) அமைத்து ஆய்வுகளை நடத்தினார்.
ஆய்வுக் கூடத்தோடு நின்றுவிடும் நபராக இல்லாமல் களத்தில் இறங்கி இவர் பல மாடுகளுக்கு தந்து பார்த்ததில் அபார வெற்றியைக் கண் கூடாக கண்டார்.
Also read
இவரது இந்த ஆய்வையும், இது போன்ற வேறு சிலவற்றையும் பெங்களுரில் உள்ள Indian Institute of science நிறுவனமும் ஆய்வுக்கு உட்படுத்தி, இவரது செய்முறையை உறுதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு துறைகள் அழைத்து கால் நடை மருத்துவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும் வழங்கும்படி கேட்டது. சர்வதேச் அளவில் WHO FAO போன்ற ஐக்கிய நாடுகள் அமைப்பும் இவரது சேவையை கேட்டது.
இந்த வகையில் நமது தஞ்சை புண்ணியமூர்த்தி நெதர்லாந்து, ஸ்வீடன்,டென்மார்க், ஸ்பெயின், துருக்கி, உகாண்டா ,தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன், எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு அவர்களின் அழைப்பிலேயே சென்று அங்கு கால் நடை மருத்துவர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடி பயிற்சி தந்து வருகிறார். இவரை இது வரை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனியாவது நன்கு பயன்படுத்த வேண்டும்.
நாட்டின் அல்லது உலகின் எந்த மூலையில் இருந்து புண்ணியமூர்த்தி அவர்களை அவரது தொலைபேசி எண்ணில் அழைத்தாலும் கட்டணமில்லாமல், கைமாறு கருதாமல் ஆலோசனைகள் தந்து ஆபத்பாந்தனாக உள்ளார். அவரது தொலைபேசி எண்; 9842455833.
சாவித்திரி கண்ணன்
அற்புதமான மனிதர்