ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேர்முக வரிகள், மறைமுக வரிகள், எதற்கெடுத்தாலும் வரிகள்..என வரி கொடுத்தே வற்றிப் போகிறான் இந்தியக் குடிமகன். நிதிப் பகிர்வில் மாநிலங்கள் வஞ்சிக்கபடுகின்றன. கேரளாவை தமிழக அரசு முன்மாதிரியாக கொள்ள வேண்டும். பீட்டர் துரைராஜுவுக்கு பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் ஆத்ரேயா தந்த நேர்காணல்;
பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றுள்ள இவர் தமிழக வேளாண் வளர்ச்சி, தமிழகத்தில் பெண்கள் நிலை, கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட பரப்புகளில் பல கள ஆய்வுகளை நடத்தியுள்ளார். Literacy and Empowerment, State of Food Insecurity in Rural India, State of Insecurity in Urban India, Marxian Political Economy, உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு இன்றைக்கு பொருளாதாரத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உலகத்தின் எந்த நாடுகளிலும் மாநிலங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் இப்படிப்பட்ட மோசமான ஒரு சட்டம் இயற்றப்படவில்லை.
மாநிலங்கள், மொழிவழி தேசீய இனங்கள் என்ற அடிப்படையில் ஒன்று திரண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்த்து போராடின. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது. நமது அரசியல் சாசனம் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றிணைவு என தெளிவாக கூறியுள்ளது. புகையிலை, சாராயம், பெட்ரோல், டீசல் என்ற நான்கு பொருட்களைத் தவிர, மற்ற எல்லா பொருட்களுக்கும் வரி விதிக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சில் வசம் போய்விட்டது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு சவாலாகும்.
மக்கள் விரோத அதி தீவிர தாராளமய கொள்கைகளை தனது ஆட்சி காலம் முழுவதும் பாஜக பின்பற்றி வந்துள்ளது.
# ஒன்றிய அரசு 2016 நவம்பர் மாதம் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்தது.
# 2017ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி நள்ளிரவில், பெரிய சாதனை போல பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்றியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி சட்டமும் மோடி அரசின் மிக மோசமான பொருளாதார நடவடிக்கைகள் ஆகும். இதனால் சிறு, குறு தொழில்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை உள்ளிட்டு அனைத்து முறைசாரா துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒன்றிய அரசே ஆதிக்கம் செலுத்துகிறது.
ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் ஒரு சிறு பகுதி மாநிலங்களுடன் பகிரப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு உரிய தொகையும், நியாயமும் கிடைப்பதில்லை.
மேலும், பாஜக ஆட்சியின் கீழ் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு எதிராக நிதிப் பகிர்வில், இயற்கை பேரிடர் நிவாரணம் வழங்குவதில் எனப் பலவகைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

பொருளியலில் அரசு விதிக்கும் வரிகளை இரண்டாக வகைப்படுத்துவது வழக்கம். ஒன்று, நேர்முக வரிகள். இவை வரி செலுத்தும் நபரின் வருமானம் சார்ந்தவை. இந்தியாவில் ஒன்றிய அரசு கார்ப்பரேட் கம்பனிகள் மீது போடும் கார்ப்பரேட் வருமான வரி மற்றும் தனி நபர்களின் வருமானத்தினமீது விதிக்கப்படும் வரி இரண்டும் நேர்முக வரிகள்.
வருமான வரி போடும் உரிமை இந்தியாவில் மாநிலங்களுக்கு கிடையாது. தாராளமய காலத்தில் காரப்பரேட்டுகள் மீதான வரிவிகிதங்கள் தொடர்ந்து குறைக்கப்படுகின்றன. தனி நபர் வருமான வரி விகிதங்களிலும் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பொருட்கள், சரக்குகள் மீது போடப்படும் வரிகளை மறைமுக வரிகள் என்றழைக்கலாம். பொருள் மற்றும் சேவை வரிகள் இவற்றை விலைக்கு வாங்கும் அனைவர் மீதும் ஒரே விகிதத்தில் இருப்பதால் குறைந்த வருமானத்தில் உள்ளவர்களுக்கு பெரும் சுமையாக அமைகின்றன. இவை மக்களுக்கு விரோதமான வரிகள்.

ஒரு மக்கள் நல அரசு, தனது வரி வருமானத்தை பெரும்பகுதி நேர்முக வரியாக பெற வேண்டும். ஆனால் இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரி வருவாயில் 65 சதம் மறைமுகவரி மூலமாகத் தான் அரசுக்கு கிடைக்கிறது. இதன் பொருள் சாதாரண மக்கள்தான் அதிகமாக வரி செலுத்துகிறார்கள் என்பது தான். இந்த நிலமைக்கு முக்கியமான பொறுப்பு ஒன்றிய அரசைச் சாரும்.
2019 ல் தொழில் மந்தம் என்று சொல்லி, 30 சதமாக இருந்த கார்ப்பரேட் வருமான வரி விகிதத்தை 22 சதமாக மோடி அரசு குறைத்தது. இதனால் அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.1,45,000 கோடி இழப்பு ஏற்படும் என அச்சமயம் நிதி அமைச்சரே கூறினார். உண்மையில் இச்சலுகையால் மாநில அரசுகளுக்கும் நிதி இழப்பு ஏற்படும். காரணம், மாநிலங்களுடன் பகிரப்படவேண்டிய வரி வருமானத்தை இது குறைக்கும்.
ஒன்றிய அரசு நியாயமான நிதிப்பகிர்வை தமிழ்நாட்டிற்கு தருவதில்லை. இந்நிலையில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் ?
ஒன்றிய அரசு முழுக்க, முழுக்க இந்திய, அந்நிய பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளையே அமலாக்குகிறது. ‘நாடு முழுவதும் சீரான வரி வேண்டும், ஒட்டுமொத்த தேசமும் ஒரே சந்தையாக இருக்க வேண்டும்’ என்று பெருமுதலாளிகள் விரும்புகிறார்கள். அதனை ஜிஎஸ்டி மூலம் அமலாக்குகிறது ஒன்றிய அரசு. இது மட்டுமின்றி, மாநில அரசுகளின் நிதி மற்றும் இதர அதிகாரங்களை பறிப்பதில் முனைப்புடன் உள்ளது ஒன்றிய அரசு.
நியாயமான நிதிப்பகிர்வு கொள்கை கோரி வலிமையான இயக்கங்கள் நடைபெற வேண்டும். தற்போது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே பகிரப்படும் மொத்த வரி வருமான தொகையில் 41 % தான் மாநிலங்களுக்குத் தரப்படுகிறது. இதனை குறைந்தபட்சம் 50% ஆக அதிகரிக்க வேண்டும். கல்வி, ஆரோக்கியம் போன்றவைகள் மாநில அரசின் வசம் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு அமலாக்கிவரும் தேசீய கல்வி கொள்கை நீட் போன்றவை தேவையற்றவை.

அதே சமயம், இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக போராடிக்கொண்டே மாநில அரசும் தனது வருமானத்தை அதிகரிக்க சில வழிகளை பின்பற்றலாம்.
நிலம், நீர், மின்சாரம், கனிம வளங்கள் போன்றவை மாநில அரசின் வசம் உள்ளன. ஏலம் விடும்போது, லீசுக்கு விடும்போது, வாடகைக்கு விடும் போது மற்ற அழுத்தங்களுக்கோ, ஊழல் முறைகேடுகளுக்கோ இடம் தராமல் மாநில அரசு தனது வருவாயை பெருக்க வேண்டும். மாநில அரசு மட்டத்திலும் முதலாளிகள் மற்றும் இதர பணக்கார சக்திகளின் செல்வாக்கு உள்ளது. சட்ட மன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும், அதிகார அமைப்பில் உள்ள குடிமைப்பணி அதிகாரிகளும் இந்த ஆதிக்க சக்திகளின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டு இல்லை. அண்மையில் தொழிற்சங்க போராட்டங்களை மாநில அரசு எதிர்கொள்வதில் இதனைக் காண முடிந்தது. ஒன்றிய, மாநில அரசு இரண்டும் பின்பற்றும் நவ தாராளமய கொள்கைகளால் கல்வியும், மருத்துவமும் இலாபம் கொழிக்கும் தொழில்களாக உள்ளன. இதனை எதிர்த்தும் வேலையின்மையை எதிர்த்தும் ஜனநாயக இயக்கங்கள் மேலும் வலுப்பெற வேண்டும்.
திராவிட மாடல் அரசு‘ குறித்த உங்கள் பார்வை என்ன?
பல நலத்திட்டங்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. ரேஷன் கடைகள் ஒப்பீட்டளவில் நன்றாக செயல்படுகின்றன. திராவிட மாடல் என்ற சொல்லாடல் அண்மையில் பிரபலமாகியுள்ளது. இதன் இலக்கணம், வரையறை பற்றி பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அடிப்படையில் பொருளாதாரக்கொள்கைகள் என்று வரும் பொழுது நவ தாராளவாதக் கொள்கைகளும், நலத்திட்டங்களும் இணைந்தது தான் திராவிட மாடல். திமுகவும், அதிமுகவும் காங்கிரஸ், பாஜக தலைமை தாங்கிய ஒன்றிய அரசுகளில் பங்கு வகித்து நவதாரளவாத கொள்கைகளை அமலாக்கியவை தான். அந்தக் கொள்கைகளை மாநிலத்திலும் கடைபிடிக்கிறார்கள்.
1967 வரை தமிழ்நாட்டை காங்கிரசு ஆட்சி செய்து வந்தது. அது பெருமுதலாளிகள் நில பிரபுக்கள் கட்சி. 1967ல் தி மு க ஆட்சிக்கு வந்தது. நிலச்சீர்திருத்தம் செய்வோம் என்று அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், கேரளாவைப் போல பரந்த அளவில் நிலச்சீர்திருத்தம் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. கீழத் தஞ்சை, நெல்லை, தேனி, புதுக்கோட்டை சமஸ்தானம் போன்ற பகுதிகளில் விவசாய சங்கங்கள், கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்கள் காரணமாக நிலச்சீர்திருத்தம் ஓரளவு நடைபெற்றது. முதலில் திமுக நகர்ப்புற கட்சியாக இருந்தது. பிறகுதான் அது கிராமங்களிலும் வளர்ந்தது.
தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன ?

தமிழ்நாடு கல்வியில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. சுகாதாரக் குறியீடுகள், நலக் குறியீடுகள், கேரளா அளவிற்கு இல்லாவிட்டாலும், ஓரளவு சிறப்பாகவே உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஓரளவு பரவலாக இருந்தாலும் சீராக இல்லை. ஆனால் நவ தாராளமய கொள்கைகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் அமலாக்கிவருவதால் தமிழகமும் தொழில் துறையில் சவால்களை சந்தித்து வருகிறது. சிறு, குறு தொழில்கள் ஒப்பீட்டளவில் இங்கு நன்றாக உள்ளன. வேலை வாய்ப்பைத் தருகின்றன; பரவலாக உள்ளன. ஆனால், அவை தொழிலாளர்களுக்கான உரிமைகளை சரிவர பராமரிப்பதில்லை. இதுகுறித்து மாநில அரசும் கவனம் செலுத்த வேண்டும்.
கிராமப்புற ஏழ்மையை ஒழிக்க திட்டமிட வேண்டும். பல நகர்ப்புற மக்களுக்கு வீடு இல்லை. இதனை தீர்க்க முனைப்பு காட்ட வேண்டும். பொதுவாக தமிழக அரசுப்பணிகளில் குறைந்த ஊதியம், அதிக வேலைப்பளு என்ற தன்மையில் தான் பெண்களின் பணிகள் அமைந்துள்ளன. இதிலும் முற்போக்கான மாற்றங்கள் அவசியம். தமிழக அரசு அதன் அத்தியாவசிய பணிகளை கூட ஒப்பந்த முறையில் பெறும் பாதையில் பயணிக்கக் கூடாது.
தொழில் முனைவோர்களை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகள் உருவாகிறது என்று சொல்லி சத்தமின்றி இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்படுகின்றன. ஆனால், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பதும் சீர்திருத்தம் என்பதும் இன்றைய அரசியல் களத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. நிலவுடமை உறவுகளில் முற்போக்கான மாற்றங்கள் தேவை.
கேரளா வளர்ச்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
கேரளாவில் சாகுபடி நிலம் குறைவு. ஆனால், அங்கு ஒரு ஏக்கருக்கு தமிழ்நாட்டை விட விளைச்சல் அதிகம். அங்கு இயற்கை வளப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமை பாதுகாப்பு என்பதை உறுதி செய்து தான் தொழில்களுக்கு அனுமதி வழங்குவது என்ற கொள்கையை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு பின்பற்றி வருகிறது. கேரளா, இணைய வசதி என்பதை மாநிலம் முழுவதும் அனைவருக்கும் கொண்டு செல்லும் பணியில் முன்னிலை வகிக்கும் மாநிலமாகும். குடும்ப ஸ்திரீ திட்டத்தில் பெண்களை ஆற்றல் மிக்கவர்களாக ஆக்குவதுடன் தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டங்கள் நன்கு செயல்படுகின்றன. கேரளாவில் மாநில திட்டக்குழு ஒரு முக்கிய அரசு அமைப்பாக உள்ளது. அதற்கு உரிய அதிகாரங்கள் உள்ளன, கேரளாவின் ஒரு சிறப்பு உள்ளாட்சி ஜனநாயகமும், மக்கள் பங்கேற்புமே. அது போலத் தமிழ்நாட்டில் அதிகாரப் பரவலை கொண்டுவர வேண்டும்.
Also read
மக்கள் இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?
வேலையின்மையை போக்குவதற்காக என்று சொல்லி பெருமுதலாளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவது என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இது ஒரு மோசடியான திட்டமாகும். அதே சமயம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒரு ஆண்டிற்கு, ஒரு குடும்பத்திற்கு நூறு நாள் வேலை தர வேண்டும். ஒன்றிய அரசின் செயல்பாட்டால் தற்போது ஆண்டிற்கு 45 நாள் தான் வேலை கிடைக்கிறது. போராடி பெறப்பட்ட உரிமையை ஒன்றிய அரசு அழிக்கிறது. மக்கள் இயக்கங்கள் இத்தகைய பிரச்சினைகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். அரசுகளுக்கு நிர்ப்பந்தம் தரவேண்டும்.
ஒன்றிய அரசு நெருக்கடி தருகிறது; தாராளமயக் கொள்கைகளை கடைபிடிக்கச் சொல்லி அழுத்தம் தருகிறது என்பது உண்மை தான். ஆனாலும் மாநில அரசு தங்கள் அளவில் செய்ய வேண்டியவை உள்ளன.
எடுத்துக்காட்டாக, கேரளாவில் உள்ளாட்சிகளுக்கு 50 சத நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு தருகிறது. பல வேலைகளை உள்ளாட்சி அமைப்புகள் தான் உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்ப நிறைவேற்றுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு 10 % தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்களும். நிதியும் கோரி வலுவான மக்கள் இயக்கங்கள் தேவை.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்















Leave a Reply