தேர்தல் ஆணையமா? தில்லுமுல்லு ஆணையமா?

ச.அருணாசலம்

வாக்காளர்கள் சரிபார்ப்பு, திருத்தம் என்பதாக சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்களை தகுதியற்றவர்களாக்குவது, சிறுபான்மையினரை, ”நீ இந்தியக் குடிமகனே கிடையாது” என அகதியாக்குவது என்ற நோக்கங்களுடன் இந்திய தேர்தல் ஆணையமே செயல்பட முடியுமா..? 

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான பீகாரில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு அக்டோபரில் நடக்க இருக்கிறது. நாட்டு நடப்பை நன்கு உணர்ந்தவர்கள் இந்த தேர்தல் நிதிஷ் குமார் தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணிக்கு – பாஜ க கூட்டணிக்கு- சிம்ம சொப்பனமாக இருந்து வருவது தெரியும்.

ஹரியானாவிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாஜ க அணி “வெற்றி வாகை “ சூடியதற்கு தேர்தல் தில்லு முல்லுகளே காரணம் என்பதை மக்கள் உணர்ந்துள்ள போதும், அதை எதிர்த்து பேச சட்டத்தில் இடமில்லை என்ற காரணத்தினால் மக்கள் காட்டும் பொறுமையை பாஜகவினர் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டனர் போலும்.

இந்த சூழலில் ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தங்கள் (Special Intensive Revision) மேற்கொள்ள ஆணை பிறப்பித்து இவ்வாணை ஜூன் 25 (மறுநாள் முதல்) நடைமுறை படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி-1, 2003 க்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்ட வாக்காளர்கள் தாங்கள் உண்மையான இந்திய குடிகளே என்றும், உண்மையான வாக்காளர்களே என்றும்

தேர்தல் ஆணையம் “குறிப்பிட்டுள்ள” ஆவணங்களை ( indicative documents) சமர்ப்பித்து

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை நியாயப்படுத்த வேண்டும்!

தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் குறிப்பிட்ட ஆவணங்கள் பட்டியலில் ஆதார் அட்டையோ, ரேஷன் கார்டோ , படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையோ இல்லை என்பது இங்கு கவனிக்க தக்கது.

வாக்காளர்கள் தங்களது பிறப்பு சான்றிதழை மட்டுமின்றி அத்துடன் அல்லது பிறந்த இடத்தையும் (date of birth and/or place of birth) குறிப்பிடும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் தங்களது பெற்றோரின் சான்றிதழையும் தனியே சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயரை இணைக்க விரும்பினால் அவர் படிவம் 6 மூலமாக தன்னை பற்றிய தகவல்களை (முகவரி) தெரிவிக்க வேண்டும், பெற்றோரின்

முகவரி மற்றும் பிற தகவல்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை. படிவம் 6 ல், பெற்றோரின் விவரங்கள் கேட்கப்படவுமில்லை, அதற்கான பகுதிகளும் (column) அதில் இடம் பெறவில்லை.

ஆனால் ஜூன் 24 ல் அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறை , புதிய ஆவணங்களையும், பெற்றோர் பற்றிய புதிய தகவல்களையும் சமர்ப்பிக்க வற்புறுத்துகிறது.

இப்படியான திருத்தங்களை மேற்கொள்ள பீகாரில் உள்ள எட்டு கோடி வாக்காளர்களை சந்தித்து அவர்களிடம் படிவங்களை கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் அவற்றை சமர்ப்பிப்தை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பூத் லெவல் அதிகாரிகளை ஈடுபடுத்தி உள்ளது.

இவர்கள் இந்த படிவங்களை இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து, அவற்றை இரு படிவங்கள் எடுத்து, மொழி மாற்றம் செய்து வாக்காளர்களிடம் முதலில் கொடுக்க வேண்டும். பிறகு ஆவணங்களை சரிபார்த்து அவற்றை அங்கீகரித்து மீண்டும் இணையத்தில் ஏற்ற வேண்டும் . இவை யாவும் ஜூலை 25க்குள் செய்துமுடிக்க வேண்டும் .

புதிய வரைவு பட்டியல் (Publication of Draft list) ஆகஸ்டு 2025 ல் வெளியிடப்படும் என்றும்,

திருத்தங்களுக்கு பிறகு இறுதி பட்டியல் (Final List) செப்படம்பர் 2025 ல் வெளியிடப்படும் என்றும், இதனடிப்படையில் தேர்தல் பீகாரில் அக்டோபரில் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகாரின் மொத்த மக்கள் தொகையில் 3% மக்களே பிறப்பு இறப்புகளை பதிவு செய்கின்றனர் என்ற நிலையில் இத்தகைய உத்தரவின் நோக்கமென்ன என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது!

வாக்காளர் பட்டியலை அவ்வப்போது திருத்துவதும் நெறிப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் முக்கியமான பணிகளில் ஒன்று என்றாலும் அதற்கென ஒரு வழிமுறை, சட்ட நெறி, மற்றும் சட்ட அடிப்படை தேவை என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

ஆனால் 2004க்கு பிறகு 21 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தங்களை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் எந்த பதிலும் இல்லை.

தேர்தல் நடத்த ஓரிரு மாதங்களே இருக்கின்ற இந்த சூழலில் இத்தகைய மாபெரும் திருத்தங்களை, புதிய நிபந்தனைகள் பற்றும் தகுதிகளை அறிமுகப்படுத்தி ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களையும் நிர்பந்தத்திற்குள்ளாக்குவது ஏன் எனற கேள்வி எழுகிறது.

இம்முயற்சியை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பை சார்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இத்தகைய முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி பீகார் ராஷ்டிரிய லோக்தள் கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா அவர்களும், திரிணாமுல் காங்கிரசை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா அவர்களும் தனித்தனியே உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளனர்.

ஜனநாயக நாட்டில் தேர்தலின் அடிப்படை நாயகர்களான வாக்காளர்களையும், தேர்தலில் பங்கு பெறும் அரசியல் கட்சிகளையும் கலந்து பேசாமல் வாக்காளராக ஒருவரது பெயரை இணைக்க புதிய நிபந்தனைகளை புகுத்துவதும், அதற்கான உரிய கால அவகாசங்களை வழங்காமல் துரிதப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை எடுத்து காட்டவில்லை, மாறாக எதேச்சதிகார போக்கை தோலுரித்து காட்டுகிறது.

வாக்காளர் பட்டியலை திருத்துவதை, வாக்காளர்கள் பெயரை நீக்குவதை தேர்தல் விதிமுறைகள் 1960 சட்டம் எடுத்தியம்புகிறது. இச்சட்டத்தின் பிரிவு 21A ன்படி ஒருவரை தேர்தல் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. இதன்படி ஒருவரது பெயரை நீக்குமுன் அந்த நபருக்கு அவ்வாறு செய்வதற்கான காரணங்களை விளக்க வேண்டும். அதற்கு பதில் கூற அவருக்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும், இறுதியில் தீவிர விசாரணைக்கு பின்னரே ஒரு அதிகாரி, ஒருவரை நீக்குவதற்கான காரணங்களில் நியாயம் இருப்பின் ஒருவரது பெயரை நீக்க அதிகாரம் வழங்கபட்டுள்ளது. ஆனால், இன்று எந்த விசாரணையுமின்றி ,எந்தக் கால அவகாசமும் இன்றி, தான்தோன்றி தனமான நிபந்தனைகளை புகுத்தி தேர்தல் ஆணையமே மக்களை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்குகிறது!

எழுதப் படிக்க தெரியாத மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள பீகார் மாநிலத்தில், அவர்களில் பெரும்பாலோர் வாழ்வாதாரங்களை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்கின்ற நிலையில் , அம்மக்கள ஒரு மாத கால அவகாசத்தில் “இல்லாத ஆவணங்களை” கொடுத்து வாக்காளராக தங்களை நிலைநிறுத்தி கொள்ள கூறுவது ஜனநாயகத்தின் அடித்தளத்தை பேணுகின்ற வழியல்ல.

மாறாக ஜனநாயக அடிப்படையான அனைவருக்கும் வாக்குரிமை (universal suffrage) என்பதை சிதைக்கும் செயலாகும் . இதை தான் மோடி அரசு நியமித்த தலைமை தேர்தல் ஆணையரான கியானேஷ் குமார் உள்ளிட்ட மூவர் கூட்டணி கண்ணும் கருத்துமாக செய்கிறது.

மகராஷ்டிர மாநில தேர்தலில் 42 லட்சம் வாக்காளர்கள் திடீரென்று முளைத்ததை,

வாக்களித்த மக்களின் எண்ணிக்கை மாநிலத்தின் மக்கள் தொகையை காட்டிலும் அதிகமாக இருக்கும் அதிசயத்தை,

வாக்கு தினத்தன்று மாலை 5 -6 மணிக்கு வாக்களித்தோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்த அநியாயத்தை,

மாலை 6 மணிவரை வாக்களித்தோரின் விழுக்காட்டை (எண்ணிக்கையை அல்ல) இரவு 11 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிசயத்தை, அது காட்டிய ஆறு சதவிகித அதிகரிப்பின் மர்மத்தை,

விளக்க வேண்டுமென்றும், தேர்தல் ஆணையம் , வாக்காளர் பட்டியல்களை- நாடாளுமன்ற தேர்தல் பட்டியல், சட்டமன்ற தேர்தல் பட்டியல் இரண்டு பட்டியல்களையும்- வெளியிட வேண்டுமென்றும்,

வாக்குசாவடியின் ஒளிப்பதிவு தரவுகளை வெளியிட வற்புறுத்தியும் ராகுல் காந்தி எழுப்பிய பொதுக் கேள்விக்கு- இன்று வரை பதிலளிக்காத தேர்தல் ஆணையம் – பட்டியல்களையும், ஒளிப்பதிவு தரவுகளையும் வெளியிட முன்வராத தேர்தல் ஆணையம் – இன்று ஆவணங்களை கொடுக்க பீகார் மக்களை வற்புறுத்துவது வேடிக்கை தான்.

தேர்தல் ஆணையத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள்

தேர்தல் ஆணையம், ‘வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தங்களை கொண்டு வருகிறோம்’ என்ற கோதாவில் ஏழை எளிய மக்களான சிறு பான்மையினரை, தலித்துகளை, புலம் பெயரும் தொழிலாளர்களை, விவசாய கூலிகளாக பஞ்சாப் வரை செல்லும் பாமர மக்களை தேர்தலில் பங்கெடுக்க விடாமல் தடுக்கிறது.

இத்துடன் இந்திய குடிமகனாக இல்லாதவரையும் தேர்தல் ஆணையம் இந்த சரிபார்த்தல் மூலம் கண்டுபிடித்து அவர்களை அந்நியர்களுக்கான தீர்ப்பாயத்தின் முன் (Foreigners Tribunal) நிறுத்துமாம் . இந்த பணியை தேர்தல் ஆணையத்திற்கு எந்த சட்டம் வழங்குகிறது என்பது நமக்கு புரியவில்லை.

மொத்தத்தில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை நோட் பந்தி (பணமதிப்பிழப்பு) போன்று வோட் பந்தி (வாக்காளர்களை செல்லாதவர்களாக்குவது) ஆகும் என பீகார் மார்கசிஸ்ட்- லெனினிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா கூறுவது முற்றிலும் உண்மையாகும்.

இந்த மோசடியை எதிர்த்து அனைத்து (பா ஜ க தவிர்த்த) கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்பி உள்ளன. ஆனாலும், தேர்தல் ஆணையம் இந் நடவடிக்கையை திரும்ப பெறவில்லை, சந்தித்த எதிர்கட்சி தலைவர்களின் கருத்தையும், ஆலோசனைகளையும் புறந்தள்ளியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மீதும், அதன் நடவடிக்கைகளின் மீதும், உச்ச தீதி மன்றத்தின் பார்வை தீர்க்கமாக செலுத்தப்படவில்லை என்ற பொதுவான பார்வை ஒருபுறமிருக்க, இது ஜனநாயக அடிப்படையையே ஆட்டுவிக்கும் செயல் என்பதை அறிந்து அதை தடுக்க உச்சநீதிமன்றம் முன்வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பொறுப்பையும், அதன் அடிப்படை கடமையையும் அதன் செயல்பாட்டில் இருக்க வேண்டிய வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையை நிலை நாட்ட வேண்டிய தருணம் இது!

அனைவரின் கண்களும் எதிர்நோக்குவது உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தான்!

ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time