ஜுலை-9 பொது வேலை நிறுத்தம் ஏன்? எதற்காக?

-பீட்டர் துரைராஜ்

போராட்டமின்றி தீர்வில்லை..! அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்துள்ளன. ஒட்டு மொத்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். என்னென்ன பிரச்சினைகள், என்னென்ன கோரிக்கைகள் நோக்கம் என்ன என்பது குறித்த முன்னணி தொழிற் சங்கத் தலைவர்கள் கூறுவது என்ன?

# வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்,

# குறைந்த பட்ச சம்பளம் ரூ. 26,000 நிர்ணயிக்க வேண்டும்,

# குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்க வேண்டும்,

# பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும்,

# புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்,

# விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும்

என்பவை உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஜூலை 9  அன்று வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன.

இந்தியாவில் உள்ள பத்து மத்திய தொழிற்சங்கங்களும், வங்கி, காப்பீடு, நிலக்கரி, மின்சாரத் துறைகளில் இருக்கும் சுயேச்சையான சம்மேளனங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவார்கள். அரசாங்கம் அவர்களை   இதுவரை பேச்சுவார்தைக்கு அழைக்கவில்லை. பாஜக அரசாங்கம் தனது கொள்கைகளை மாற்றுமா? என்று தெரியவில்லை. ஆனால் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு அரசாங்கம் இருக்க முடியுமா !

தொ.மு.ச பொதுச் செயலாளர் மு.சண்முகம்

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினரான மு.சண்முகம் ; இவர் இந்த கோரிக்கை சாசனத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவர். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, “இந்திய தொழிலாளர் மாநாடு என்பது அரசாங்கம், தொழிலாளர்கள், வேலையளிப்பவர் ஆகிய மூவரும் பங்குபெறும் உயர்மட்ட முத்தரப்பு அமைப்பாகும். வருடம்தோறும் இந்தக்கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால்,  மோடி பிரதமரான பிறகு, 2015 ம் ஆண்டு மட்டுமே இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு இந்தக் கூட்டத்தை கூட்டவில்லை. இது பற்றி பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறேன்.எந்த பதிலும் இல்லை. நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை கைவிட வேண்டும், ஒப்பந்த முறை கூடாது, காலியான இடங்களை நிரப்ப வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது என 17 அம்ச கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளோம். இந்த வேலைநிறுத்தம் பற்றி இதுவரை அரசாங்கம் எங்களோடு பேசவில்லை.” என்றார் மு.சண்முகம். இவர் தொமுசவின் பொதுச் செயலாளராவார்.

“இந்த வேலைநிறுத்தம் பிரமாண்டமானதாக இருக்கும்’ என்கிறார் சிஐடியு தொழிற்சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளரான எஸ்.கண்ணன்;  இந்த வேலை நிறுத்தத்தை மே 20 அன்று நடத்த திட்டமிட்டிருந்தோம். அப்போது காஷ்மீரில் நடந்த தாக்குதல் காரணமாக, ஜூலை 9 க்கு தள்ளி வைத்துள்ளோம். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 15 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் ஒன்பதாவது பொது வேலைநிறுத்தம் ஆகும். இந்த அரசாங்கம் நவதாராளவாத கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கிறது.

சி.ஐ.டி.யுவின் எஸ்.கண்ணன்

இதன் வேகத்தை தடுக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட போராட்டங்கள் அவசியமாகும். விவசாயிகள் போராடிய பிறகு தான் மூன்று விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. விவசாயிகள் தீவிரமாக போராடியதன் காரணமாக பஞ்சாப், மேற்கு உத்திரப்பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தானில் ஒருசில இடங்களில்  – 2019 ஐ விட 2024 ல் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  குறைந்தது. எனவே  இந்த வேலை நிறுத்தம் அரசாங்கத்தின் செல்வாக்கை குறைக்கும். நீடித்து நடைபெறும் போராட்டம் கொள்கை மாற்றத்திற்கு வழி வகுக்கும் என நம்புகிறோம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், வகுப்புவாத சக்திகளும் இணைந்து தொழிலாளி வர்க்கத்தை பிரிக்க முயல்கின்றனர். எனவே அதற்கு அதற்கு பதிலடி தரும் வகையில் தொழிலாளர் ஒன்று திரண்டு போராடுகிறார்கள்” என்றார் எஸ். கண்ணன்.

ஒருங்கிணைந்த விவசாயிகள் முன்னணியின், தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைப்பாளரான கே.பாலகிருஷ்ணன்; மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு C2+50 பர்சண்டேஜ் என்ற முறையில் கொள்முதல் விலை நிர்ணயம் செய்வோம் என்று அரசாங்கம் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலியை நாளன்று ரூ 600 ஆக உயர்த்த வேண்டும்;

கே.பாலகிருஷ்ணன்

வேலை நாட்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் இதில் உள்ளன. எனவே எல்லா விவசாய அமைப்புகளும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தரும். அது மட்டுமன்றி கருத்துரிமை, மதச் சுதந்திரம், பன்முகக் கலாச்சாரம், கூட்டாட்சி மீதான தாக்குதலை எதிர்ப்பது என்ற கோரிக்கைகளும் இதில் உள்ளன. கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் பண்பாட்டு ரீதியாகவும் பாஜக தாக்குதலைத் தொடுக்கிறது. எனவே, இதற்கு ஆதரவாக, இந்திய ஒற்றுமை இயக்கம் போன்ற குடிமைச் சமூகங்களும் பரப்புரை செய்து வருகின்றன” என்றார் கே. பாலகிருஷ்ணன்.

ஏஐடியுசியின் தேசியச் செயலாளரான தி.. மூர்த்தியிடம், இப்படி வேலைநிறுத்தம் செய்வதால் மாற்றம் ஏற்படுமா என்று கேட்டதற்கு, “அரசாங்கம் மோசமான கொள்கைகளை அமலாக்கத் துடிக்கும் போது இத்தகைய போராட்டங்கள் ஒரு வேகத்தடையாக இருக்கும். 2019 ல் சம்பளப் பட்டுவாடா சட்டத்தையும், 2020 ல் தொழில் உறவு, சமூகப் பாதுகாப்பு, பணித்தள பாதுகாப்பு தொடர்பாக மூன்று சட்டங்களை இயற்றிவிட்டாலும், தொழிலாளர்கள் காட்டி வரும் எதிர்ப்பின் காரணமாக, இன்றுவரை அச்சட்டங்களை ஒன்றிய அரசால் அமலாக்க முடியவில்லை.

ஏ.ஐ.டி.யு.சியின் தி.ம. மூர்த்தி

1923 ல் வேலையாள் இழப்பீட்டுச் சட்டம் வந்ததது. 1926 ல் தொழிற்சங்க சட்டமும், 1936ல் சம்பள பட்டுவாடாச் சட்டமும் வந்தன. சுதந்திரம் வருவதற்கு முன்பாகவே தொழிலாளர்களுக்கு பி.எஃப், மருத்துவ வசதி போன்றவை கிடைத்தன. அதற்கான சட்டத்தை விடுதலை அடைந்த இந்தியா இயற்றியது.1965 ல் போனஸ் சட்டமும், 1972 ல் பணிக்கொடைச் சட்டமும் வந்தன. அதன் பிறகு தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள் இயற்றப்படவில்லை. இந்த சட்டத்தின்படி கிடைக்கும் பலன்களை பறிக்கும் விதத்தில் பல நிபந்தனைகள் காலப்போக்கில் (ஒப்பந்த முறை, சம்பள  உச்சவரம்பு போன்றவை) விதிக்கப்பட்டன. நமக்கு முந்தைய தலைமுறை போராடி சட்டங்களைப் பெற்றன; அடுத்த தலைமுறை சட்டங்களை தக்க வைத்தன; நம் காலத்தில் இத்தகைய பாதுகாப்பு சட்டங்களே இல்லாமல் ஆக்கப் பார்க்கிறார்கள். பாஜக அரசாங்கம் எந்த முத்தரப்பு குழுக்களையும் கூட்டுவதில்லை. இந்தப் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முதலாளிகள் கேட்கவில்லை.இது கார்பரேட் பெருநிறுவனங்களின் கோரிக்கையாகும். இந்த சட்டத்தை உருவாக்கியது Team lease என்ற முகமையாகும். அதனை தொழிலாளர்கள் மீது திணிக்கப்பார்க்கிறார்கள்” என்றார் தி.ம.மூர்த்தி.

வேலை நிறுத்தத்தில் கட்டட வேலை, ஆட்டோ, மூட்டை தூக்குதல், ஓட்டல் வேலை போன்றவைகளைச் செய்யும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் கலந்து கொள்வார்களா? என்று கேட்டதற்கு “1982 ல் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு எம்ஜியார் காலத்தில் சட்டம் வந்து விட்டது. அதன் பிறகு கட்டட தொழிலாளர் நல வாரியம் தமிழ்நாட்டில் வந்தது. 1996 ல் தான் மத்திய அரசு சட்டம் வந்தது.

தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புச்சாரா தொழிலாளர் வாரியங்களில் பெருமளவு நிதி சேர்ந்துள்ளது. மாத ஓய்வூதியம் ரூ.1,200  என்பது போன்ற 14 விதமான நல உதவிகள் தமிழ்நாட்டில் தருகிறார்கள். ஆனால், மத்திய சட்டம் 7 விதமான நல உதவிகளைத் தான் தருகிறது. தரப்படும் நிதி உதவியும் குறைவு. புதிய சட்டம் அமலானால், இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாடு அரசு வாரியங்களில் சேர்த்து வைத்திருக்கும் நிதி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு போய் விடும்.  எனவே புதிய சட்டம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பையும் தரப்போவதில்லை. அன்றைய தினம் அவர்களும் வேலைநிறுத்தம் செய்து, ஆங்காங்கே உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் செய்வார்கள்” என்றார் தி.ம.மூர்த்தி. அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, வருங்கால வைப்புநிதி போன்ற  சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9,000 தர வேண்டும் என்பது வேலைநிறுத்தக் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

பொதுக்காப்பீட்டுக் கழக தொழிலாளர் சங்கத்தின் தேசிய செயலாளரான எஸ்.சவரிமுத்து அவர்களிடம் பேசிய போது, ‘’வங்கி, காப்பீடு, பெட்ரோலியம், நிலக்கரி, எஃகு ஆலை போன்ற அரசுக்கு இலாபம் தருகின்ற நிறுவனங்களையும் தனியாருக்குத் தருவதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன. “1971 ல் காப்பீட்டு நிறுவனங்களை இந்திரா காந்தி தேச உடமையாக்கினார். இதனால் சாதாரண விவசாயிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தும் காப்பீடுகளை பொதுத்துறை நிறுவனங்கள்தான் தருகின்றன. மக்களும் நம்பிக்கையோடு அணுகுகிறார்கள்; இழப்பீடுகளும்   உடனுக்குடன் தரப்படுகின்றன. இப்போது தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதித்து வருகிறார்கள். தனியார் நிறுவனங்கள் நகரங்களில் இருந்து செயல்படும். அவை  எளிய மக்கள் அணுக முடியாதவாறு இருக்கும். மக்கள் அதிகத் தொகையை பிரிமியமாக செலுத்த நேரிடும் ” என்கிறார்.

நிறுவன வரியை உயர்த்த வேண்டும்; நலவரி, பரம்பரை சொத்து வரியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு வருவாய் வரும் கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கோரிக்கைகளை அனைத்து சங்கங்களும் கடந்த மார்ச்சு மாதம் 18 ம் நாள் ஒன்றுகூடி தீர்மானித்து, கருத்தரங்கம், தெருமுனைக் கூட்டம், செய்தியாளர் சந்திப்பு என பல்வேறு பரப்புரைகளுக்குப் பிறகு இந்த வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளனர்.  பாஜகவின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கப் போவதும் இல்லை என்று கூறியுள்ளது. எப்படி இருந்ததாலும், இவை ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகள். மக்களாட்சி நடத்தும் ஒரு அரசு, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும், தமது  கொள்கைகளை அதற்கேற்றபடி  மாற்றுவதும் தவறல்ல. என்ன செய்யப்போகிறது பாஜக அரசு எனப் பார்ப்போம்.

பேட்டி மற்றும் தொகுப்பு; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time