கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் நவம்பர்-1 முதல் பழைய வாகனங்களுக்கு தடை விதித்துள்ளது டெல்லி அரசு. காற்று மாசுபாட்டில் இருந்து டில்லியை காப்பாற்ற 10 முதல் 15 ஆண்டுகள் பயன்பட்ட பழைய வாகனங்களை கயலான் கடைக்கு போடச் சொல்வது தீர்வாகுமா? இதற்கு மாற்று என்ன? இதில் காந்திய அணுகுமுறை சொல்லும் தீர்வு என்ன?
முதலில் ஜுலை-1 முதல் பழைய வாகனங்களுக்கான தடை அமலாகி இரண்டே நாட்களில் நூற்றுக்கணக்கான பழைய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தலா 10,000 அபராதம் விதித்தனர். மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால், பின்னர் நவ., 1 ம் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான தடையை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டில்லி – என்.சி.ஆர் எனப்படும் டில்லி, குருகிராம், பரிதாபாத், நொய்டா, காஜியாபாத், சோனிபட் ஆகிய நகரங்களில் இது அமல்படுத்தப்படவுள்ளது.
முன்னதாக இப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடிகள் தரப்பட்ட போது அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆனால், தற்போதைய டெல்லி பாஜக அரசின் முதல்வர் ரேகா குப்தா இதை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துவிட்டார்.
அரசின் ஆணை காரணமாக டெல்லிவாசிகள் தங்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் சோகங்களையும், இதனால் டெல்லிக்கு வெளியே உள்ளவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க நேர்ந்த அவலங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்திய தலைநகரான டில்லி, உலகிலேயே மிக மாசடைந்த காற்று கொண்டதாக இருக்கிறது. 7,000 உலக நகர்களை ஆராய்ந்த ஒரு அமெரிக்க நிறுவனம் 2022 இல் மாசுபாடான பெரு நகரங்களில் நம்பர் ஒன் என்ற “பெருமையை”, டில்லிக்கு வழங்கியுள்ளது.. (Air pollution index 418) இன்றைக்கும் டில்லி இன்னும் மோசமானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. இன்று உலகில் கடுமையாக மாசடைந்த முதல் நான்கு நகரங்களாவன: புது டில்லி, கிரேட்டர் நோயிடா, நோயிடா, நான்கு காசியாபாத். இவை அனைத்தும் டில்லியைச் சுற்றியிருக்கின்றன. நம் தலை நகரின் சுற்றுச் சூழல் எப்படியிருக்கும் என்பதற்கு இதுவே சான்று பகரும்.

மாசடைந்த காற்று, உடல்நலப் பிரச்சினைக்கான காரணியாகிறது. உலகின் 10% இறப்புக்கு அதுவே காரணம். உடலின் ஒவ்வொரு உறுப்புக்களையும் காற்று மாசுபாடு பாதிக்கிறது. இதனால், டில்லியில் வாழும் ஒருவரின் ஆயுள் மூன்றிலிருந்து நான்காண்டுகள் குறைகிறது.
சுற்றுச் சூழியலாளர்கள், மருத்துவர்களின் கவலைகளையடுத்து நீதி மன்றங்களும் மாசைக் குறைப்பதற்கு அரசுக்கு பலவிதமான கட்டளைகளை, வழங்கியிருக்கின்றன. டில்லியில் காற்றின் மாசின் அளவு மானுட வாழ்வுக்கு நிலைக்கு ஏற்பில்லாமல், அபாய கட்டத்தைத் தாண்டிச் செல்கின்ற போது, டில்லி மாநில அரசு ஒரு கட்டுப்பாட்டைக் கொணர்ந்தது. உற்பத்தியாகி, பதினைந்து வருடம் ஆன பெட்ரோல் வாகனங்களுக்கும், பத்து வருடத்திற்கு மேலான டீசல் வாகனங்களுக்கும் பெட்ரோலோ, டீசலோ வழங்கப்பட மாட்டாது என்ற விநோதமான உத்தரவை அறிவித்தது. நிரப்பும் பெட்ரோல் பங்குகளில் வண்டிகளின் ஆயுளைப் பார்த்தே எரிபொருள் வழங்கப்படுமாம்.
இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு வயது பார்த்து எரிபொருள் வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பது நியாயமாகுமா? பெரும்பாலான இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது சாமான்ய மனிதர்கள் என்பதே எதார்த்தம்.
டில்லி மாநில அரசின் இந்த நடவடிக்கை நம்மிடம் சில கேள்விகளை எழுப்புகின்றன.
ஆலைகளின் கழிவுகள், புகைகள், மருத்துவ மனைகளின் கழிவுகள் இவை ஏற்படுத்தும் மாசைவிட, வயல்வெளிகளில் அடிக்கட்டை வைக்கோலை எறிப்பதால் ஏற்படும் புகையைவிட , பழைய வாகனங்கள் ஏற்படுத்தும் மாசு கூடுதல் என்று கண்டறிந்திருக்கிறார்களா?

பழைய வாகனங்களை பொதுவாக வைத்திருப்பவர்கள் ஏழைகளும் சாமான்ய மக்களும்தான். இந்த கட்டுப்பாட்டின் மூலம் அதிகம் பாதிக்கப்படப் போகின்றவர்கள் அவர்கள் தான் என்பது அரசுக்குத் தெரியாதா?
வாகனத்தின் வயதிற்கும் அது கக்கும் புகைக்கும் பொதுவாக அதிகத் தொடர்பில்லை. வாகனத்தின் இயந்திரம் உயர் தொழில் நுணுக்கம் பெற்றிருக்கிறதா, அது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து அது வெளியிடும் மாசின் அளவு இருக்கும். ஒரு வாகனத்தின் மாசை அளவிடுவதற்கான நவீன கருவி இன்றுள்ளது. அதன்படி அதை எல்லா வாகனங்களும் கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து மாசு வெளியேற்றத்தை மட்டுபடுத்தியிருக்கலாம். அதை ஏன் அரசு முயன்று பார்க்கவில்லை?
புது வாகனங்களின் விற்பனை உற்சாகம் தரும் வகையில் இல்லை என்பதே வாகன உற்பத்தி நிறுவனங்களின் முனகலாக இருக்கிறது. ஆகவே, அவர்களைத் திருப்திப் படுத்த, புது வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க, அவர்களின் அழுத்தம் காரணமாக அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறதா? என்ற கேள்வியிலும் ஒரு வித நியாயம் இருப்பதாகவே படுகிறது.
டில்லி அரசு உண்மையிலே மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற திடமான எண்ணம் கொண்டதாயிருக்கிறதா? ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காய் இத்தகைய ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றே தோன்றுகின்றது. இதை எப்படி செயல்படுத்த முடியும்? நிச்சயமாக அமல்படுத்த முடியாது, மக்களிடம் கடும் எதிர்வினை வரும் என்று ஒரு அரசு இயந்திரத்துக்குத் தெரியாதா?
காற்றுமாசுபாட்டிற்கு காரணங்கள் என்னென்ன?
கட்டுப்பாடற்ற தொழில் மயமும், அதி தீவிர முறையற்ற நகர் மயமாக்கலும், மக்களின் பொறுப்பற்ற வாழ்க்கை முறையும், நாகரிகம் என்ற பெயரில் பணக்கார மனிதர்களின் வாழ்க்கையும், சடங்குகளில் தூய்மை தவிர, மாசை உற்பத்தி செய்யும் மக்களின் தன்மையும், எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களின் கட்டுப்பாட்டற்றப் பெருக்கமும், விவசாயக் கழிவுகளை அகற்றுவதில் பொறுப்பின்மையும், மக்கள் தொகை குவியும் நகர வாழ்க்கையும், அதீத நுகர்வும், இயற்கையோடு மனிதர் ஏற்படுத்தும் முரணும் சுற்றுச் சூழல் மாசடைவதற்கான காரணங்களெனச் சொல்லலாம்.

டில்லியில் நிலமை இவ்வளவு மோசமாக இருப்பதற்கு டில்லியின் அருகில் இருக்கும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் மிகப் பழைய ஆட்டோவை டில்லிக்கு கொணர்ந்து அங்கு ஓட்டிப் பிழைப்பதும் ஒரு காரணமாக சொல்லபடுகிறது. வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பை நகரங்களிலும், கிராமங்களிலும் இன்று வழங்குவது ஆட்டோ தான். இந்த அரசு ஆணையிலிருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது போலவே தெரிகிறது.
சுற்றுச் சூழல் சிக்கலகள் மானுட நெறிப் பிறழ்வால் தான் உண்டாகுகின்றன., இதைத் தெளிவாகச் சொல்லுவது என்றால் மானுடர் அறத்தோடு முரண்படும்போது சுற்றுச் சூழல் மாசடைகிறது. இயற்கையைக் காயப்படுத்திவிட்டுச் சென்றால் தப்பிவிடலாம் என்று நினைப்பது அறிவீனம். டில்லி போன்ற நகரங்களின் சுற்றுச் சூழல் அழிவுக்கு மானுட அறமீறல் முக்கியமான காரணம்.
அறுவடைக்குப் பின், மைய இந்தியாவில் அடி வைக்கோலை எரிப்பதைத் தவிர்த்து அதை வயலுக்கு, பயிருக்கு ஏற்ற உரமாக மாற்றும் நம் மரபான வழிமுறையை நாம் மீட்டெடுக்க வேண்டும். ஆகவே, விவசாய கழிவுகளை நிலத்திற்கு உணவாகத் தராமல் நெருப்பு வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுகின்றார். அது ஏற்படுத்தும் புகை, டில்லி போன்ற மைய இந்தியாவினை இன்னும் மாசு கொண்டதாக ஆக்குகிறது.

இன்றைக்கு விலையுயர்ந்த, ஆடம்பரமான, பெரிய, அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை வைத்திருப்பது சமூக அந்தஸ்த்தின் அடையளமாகப் பார்க்கப்படுகிறது. அதுவே செல்வத்தின் அடையாளம். இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இன்றைய சமூக அந்தஸ்தின் அடையாளங்கள். வீட்டில் நிறுத்த இடம் இல்லாமல் பொது தெருக்களை வாகனங்கள் அடைத்து நிற்கின்றன. சைக்கிள்களை முற்றிலும் இரு சக்கர வாகனங்கள் ஒழித்து விட்டன.
சுதந்திரம் பெற்ற உடன் ஐந்தாண்டு திட்டங்கள் விவசாயத்தில் டிராக்டர்களின் பயன்பாட்டை அதிகமாக்க வேண்டும் என்று திட்டக்கமிசன் விரும்பியது. அதன் உறுப்பினராயிருந்த ஜே. சி. குமராப்பா ஒரு கேள்வியைக் கேட்டார். “டிராக்டர் சாணி போடுமா?” என்று . ஆம், இயந்திரங்கள் , வாகனங்கள் காளை போல சாணம் போட்டு நிலத்தை வளமாக்காது, அதன் புகை மாசைத் தான் தரும் என்பதே இதன் அடிப்படை.
நகரங்களின் காற்று மாசுபாட்டிற்கு வாகனங்களின் அபரிமிதமான புகையும், மருத்துவ மனைகளின் கழிவுகளின் எரிப்பும், தொழிற்சாலைகளின் புகையும் முக்கிய காரணம்.
மாசினைக் குறைப்பதற்கு என்ன வழி?
பெரிய தொழிற்சாலைகளில் இருந்து வரும் மாசைக் குறைக்க மாற்று வழிமுறைகளும் தொழில் நுணுக்கங்களும் தற்போது வந்துவிட்டன. அவற்றை கண்டிப்பாக பெரு நிறுவனங்கள் கடைபிடிக்க அரசு நிர்ந்திக்க வேண்டும். சரியான நோக்கமும், முனைப்பும் இருந்தால் சுற்றுச் சூழலைக் காக்க முடியும். இவ்வாறு டில்லி அரசு முனைந்து செயல்படுமா? என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.
டில்லி பகுதியில் நிலவும் காற்றின் மாசைக் குறைக்க வாகனங்களின் வயதுக்கு தக்கபடி அதை முடக்குவது என்பது சரியான வழிமுறைதானா?

என் நண்பர் ஒருவர் சொன்னார், “காந்தி இப்போது இருந்திருந்தால் அவர் என்ன முடிவெடுந்திருப்பார் என்ற கேள்வியைக் கேட்டு அதன் பதிலை உங்களுக்குள் தேடிப் பாருங்கள், ஒருவேளை உங்களுக்கு விடை கிடைக்கலாம்” என்றார்.
‘பொருளாதாரத்துக்கும், அறத்திற்கும் ( Econamics & Ethics) இடையில் எந்தவித வேறுபாடோ, வரப்போ இருக்கக் கூடாது; தனிமனிதரின், நாட்டின் ஒழுக்கத்தை காயப்படுத்தியதான பொருளதாரம் அதர்மமானது. (immoral) ; மனிதரின் மகிழ்வே பொருளாதாரத்தின் லட்சியம்;
பெரும் உற்பத்தியே உலகப் பொருளாதாரப் பிரச்சினைக்குக் காரணம்; தேவைக்கு அதிகமான இயந்திரங்கள் உலகை அலைக்கழிக்கின்றன; நமக்காக இயந்திரங்கள் என்ற நிலை மாறி இயந்திரங்களுக்காக நாம் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது; வெகு உற்பத்தி ( mass production) மக்களின் உண்மையான தேவையைக் கருதி ஏற்பட்டதில்லை; கருவிகள் மானுட படைப்பூக்கத்தின் வெளிப்பாடு, ஆயினும் அவை அதீத நுகர்வுக்கு இட்டுச் செல்லுகின்றன. ”நான் இயந்திரங்களை வெறுக்கவில்லை, இயந்திரங்கள் மேலுள்ள மோகத்திற்கு நான் எதிரி” என்றார் காந்தி. எல்லா உற்பத்திக்கும் அடிநிலை நோக்கம் என்பது மனிதன்” இவை தான் பொருளாதாரம், மற்றும் இயந்திரம் பற்றிய காந்தியடிகளின் கருத்துக்கள்.
காந்தியின் தீர்வு என்னதாக இருக்கும்?
ஆகவே, காந்தி ஒருபோதும் நிலவும் மாசுச் சூழலை ஏற்றுக் கொண்டு வாழ அனுமதித்திருக்க மாட்டார். அரசின் நடவடிக்கைகள் என்பதை விட, மக்களின் பங்களிப்பு என்ன?, அவர்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும்? புகை நீங்கிய தொழில்நுட்பத்தை வாகனங்களில் பொருத்த இயலுமா? என்றெல்லாம் அவர் முயன்றிருப்பார். பத்து அல்லது பதினைந்து வருடங்களான வாகனங்களை அழிப்பதற்கு அவர் ஒரு போதும் உடன்பட்டிருக்க மாட்டார். உற்பத்திக் கருவிகளை
மீண்டும் பயன்படுத்து ( Recycle & Re-use) என்பதே அவரின் அணுகுமுறை. எரிபொருளை வழங்க மறுத்து, பழைய வாகனங்களை முடக்கவோ, சுற்றுச் சூழலை பாழ்படுத்துவதாய்க் கருதும் அவற்றை டில்லியை விட்டு கிராமப் புறங்களுக்கு அனுப்பி வைத்து அங்கு மாசைக் கூட்டும் நடவடிக்கைக்கு அவர் ஒருபோதும் ஒத்திருக்க மாட்டார்.
எரிபொருளும், வாகனங்களும் தான் பிரச்சினைக்கு காரணம் என்பதால், அவற்றைத் தவிர்த்த சைக்கிளை அவர் கண்டிப்பாக வற்புறுத்தியிருப்பார். சைக்கிளுக்கு தனி வழி ஏற்படுத்திக் கொடுத்து , பெரும்பான்மையான மக்கள் சைக்கிள் வாகனத்தைப் பயன்படுத்தச் சொல்லியிருப்பார்.
ஒருவர் மட்டும் செளகரியமாகப் பயணம் செய்ய உபயோகிக்கும் பெரிய நாலு சக்கர வாகனங்களுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். எல்லா இடங்களுக்கும் செல்வதற்கான பொது போக்குவரத்துக்கான அரசு வாகனங்களை அதிகப்படுத்தினால் தனி நபர்களுக்கான வாகனத் தேவை தானாகவே குறையும் எனக் கூறி இருப்பார். முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருப்பதை தவிர்க்கச் சொல்லியிருப்பார். வாகனங்களில் மாசைக் கட்டுப்படுத்தும் புதிய கருவியை இணைக்க அரசிடம் சொல்லியிருப்பார். மாசு இல்லாத மின்சார வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்க முயன்றிருப்பார். அவையே காந்தியத் தீர்வாக இருந்திருக்கலாம்.
கட்டுரையாளர்; கன்யூட்ராஜ்
எழுத்தாளர்
















Leave a Reply