தனிப் பெரும் ஆற்றலாளர்- எனினும், தன்னைத் தானே சிதைத்துக் கொள்வதில் தன்நிகரற்றவர்!இது தான் வைகோவை பற்றிய தமிழக மக்களின் மதிப்பீடு. காலத்திற்கு காலம் எடுத்த தவறான முடிவுகள், தன்னை நம்பி வந்த பல தளபதிகளை தவறவிட்ட சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் வைத்து பார்க்கையில் அவரது தற்கொலை முயற்சிகள் தடையின்றி தொடர்வதை உணரலாம்;
1993ல் திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது உருவான மாபெரும் எழுச்சியை தற்போது நினைத்தாலும் திகைப்பாக உள்ளது.
ஒட்டுமொத்த திமுக தொண்டர்களும் வைகோவின் வெளியேற்றத்தை வருத்தமுடன் பார்த்தனர். எட்டு மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இருந்து விலகி வைகோவுடன் வந்தனர். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெறியேற்றப்பட்ட போது ஒரு மாவட்டச் செயலாளர் கூட எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வரவில்லை என்பது கவனத்திற்கு உரியது.
கட்சியில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டதால் தீக்குளித்து சில இளைஞர்கள் உயிர் மாய்த்துக் கொண்டனர்.
தனக்கு நியாயம் கேட்டு வைகோ பேசிய கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர். ”தலைவரே உங்களை உயிருக்கு உயிராய் நேசித்தேனே என்னை கொலை செய்யத் துணிந்தேன் என்றீர்களே.. இது நியாயமா?” என்று நா தழுதழுக்க வைகோ மேடையில் பேசிய போது தொண்டர் கூட்டமும் சேர்ந்து அழுதது. வைக்கோவுக்கான ஆதரவையும், அனுதாபத்தையும் பார்த்து, ”திமுக இனி தேறாது. வைகோ தான் உண்மையான திமுக” என்ற பேச்சுகளும் எழுந்தன.
இவ்வளவு எழுச்சி கொண்ட தலைவராக பார்க்கப்பட்ட வைகோ, அந்த எழுச்சியை தக்க வைத்துக் கொள்ளவில்லை. தன்னை நம்பி வந்த தளபதிகளை தக்க வைத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய நடத்தைகளால் அவர் இழந்தவர்கள் மிக அதிகம்.
பறிகொடுத்த தளபதிகள்;
இந்தப் பட்டியல் அதிர்ச்சி தரக் கூடியது. ஆயினும் உண்மை. செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், எல்.கணேசன், திருப்பூர் துரைசாமி, முத்துரத்தினம், திருச்சி செல்வராஜ், மதுரை பொன்முத்துராமலிங்கம், ராமச்சந்திரன், அழகு சுந்தரம், புலவர் செவந்தியப்பன், தஞ்சை மீனாட்சி சுந்தரம், நாஞ்சில் சம்பத், கே.எஸ்ராதாகிருஷ்ணன், கோவை ஈஸ்வரன், தேவதாஸ், பஷீர் .. எனப் பல தளபதிகளை பலி கொடுத்தார்.
கடைசியாக கணேசமூர்த்திக்கு கிடைக்க வேண்டிய நாடாளுமன்ற வாய்ப்பை தட்டிப் பறித்து தனது தனயனுக்கு தந்த காரணத்தால் அவரை தற்கொலை முடிவுக்கு தள்ளினார்.
தற்போது 32 ஆண்டுகளாக ”யார் விலகினாலும் நான் விலகேன் தலைவா” என்று அவரது காலடியை சுற்றி வந்த மல்லை சத்யாவை ‘துரோகி’ பட்டம் சுமத்தி துடிக்க வைத்துள்ளார்.
மல்லை சத்யா என்பவர் ஒரு ஆற்றல் மிக்க தளபதி. நல்ல களப் பணிகள், சேவைகள் மூலம் வட தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்றவர். கட்சியைக் கடந்து பல தளங்களிலும் ஏராளமான நட்புகளை பெற்றவர். தலை ஆட்டிகள் ஆயிரம் பேர் கிடைப்பர். ஆனால், இவரைப் போன்ற தளபதிகள் கிடைப்பது அபூர்வம்.
வைகோ அவர்கள் எந்த தவறை சுட்டிக்காட்டி கட்சி ஆரம்பித்தாரோ, அதே தவறை, தானே தற்போது செய்து கொண்டுள்ளார். அதிலும், மிக மூர்க்கமாக செய்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு அரசியல் இயக்கமானாலும் அது தனி நபரின் சொத்தாக முடியாது. தனி ஒருவரால் மட்டுமே எந்த ஒரு இயக்கமும் கட்டமைக்கப்படவில்லை. பல பேருடைய எதிர்பார்ப்பில்லாத அர்ப்பணிப்புகள், தியாகங்கள், அபரிமிதமான உழைப்பு, அந்தந்த பகுதி மக்களுக்கு அவரவர் செய்த சேவைகள் ஆகியவையே ஒரு இயக்கத்தை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்கிறது.
திமுகவை விட்டு வெளியேறிய கால கட்டத்தில் தன் சொத்துக் கணக்கை பகிரங்கமாக பொது வெளியில் சொன்னவர் தான் வைகோ. இன்று அதனை வைகோவால் நினைத்து கூட பார்க்க முடியாது.
மல்லை சத்யாவை வெளியேற்ற வைகோ பேசியவை அனைத்தும் அவர் கண்ணியத்தை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது. தன்னுடைய நம்பகத் தன்மையை அவரே வலிந்து தகர்த்துக் கொண்டது போல அவரது குற்றச்சாட்டு அமைந்தது. சூழல் நிர்பந்தத்தால் ஒருவரிடமிருந்து விலக நேர்ந்தாலும், அதை கண்ணியமாக கையாண்டு இருக்கலாம்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோவிற்கு அன்று தமிழகம் தந்த வரவேற்பு அபாரமானது, ஆச்சரியகரமானது. ஒரு போராளியாக முல்லை பெரியாறு அணை பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, ஈழ ஆதரவு ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பை ஆற்றிய போதிலும்,தேர்தல் அரசியலில் தனது தொடர்ச்சியான தவறுகளால் தனக்குத் தானே குழி வெட்டிக் கொண்ட வைகோவின் வரலாற்றை ஒரு பார்வை பார்ப்போம்.
இவ்வளவு பெரிய வரவேற்பைக் கண்டு 1996 தேர்தலில் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக வைத்து அணி திரட்டினார் வைகோ. பாமகவும், வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரசும் வைகோவின் தன்னிச்சையான போக்குகளைக் கண்டு அந்த அணியில் இருந்து வெளியேறின. இவர்களை தக்க வைத்துக் கொள்ளாமல் ஜனதா தளம், சி.பி.எம் ஆகியவற்றை இணைத்துக் கொண்டு 177 தொகுதிகளில் களம் கண்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை தழுவியது மதிமுக.
1998-ல் அன்றைக்கே அதிமுக- பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தவர் தான் வைகோ. பிறகு ஆறே ஆண்டுகளில் தனது பரம வைரியான திமுகவுடன் கை கோர்த்து பாஜக கூட்டணியில் இரு மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றார் வைகோ.
2001 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தாலும், தனித்து களம் கண்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் போனது மதிமுக.
2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தவர்,
2006-ல் அதிமுக கூட்டணிக்கு அதிரடியாக வந்து 35 தொகுதிகள் வாங்கி, வெறும் ஆறு தொகுதிகள் மாத்திரமே வென்றார்.
2009 தேர்தலில் வைகோ திமுகவை தாக்கி மூலைமுடுக்கெல்லாம் பயணப்பட்டு பீரங்கி முழக்கமிட்டார். திமுக, கலைஞர், ஸ்டாலின் ஆகியோரை வைகோ திட்டிய அளவுக்கு வரலாற்றில் யாரும் திட்டி இருக்க முடியுமா? தெரியாது. அவ்வளவு வீரிய தாக்குதலுக்கு எந்தப் பலனுமில்லை.
2011 தேர்தலில் ஜெயலலிதாவை மலை போல நம்பினார். ஆனால், ஜெயலலிதா கடைசி நேரத்தில் கழுத்தறுத்தார். இதனால் தேர்தல் புறக்கணிப்பு செய்தார் வைகோ. தேர்தல் புறக்கணிப்பு என்ற தற்கொலை முயற்சிக்கு பிறகு 2014 ல் பிரதமர் வேட்பாளராக முதன் முதல் மோடியை நிர்பந்தமின்றி ஆதரித்து பேசிய தமிழகத் தலைவர் வைகோ தான்.
2016-ல் மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியாக மக்கள் நலக் கூட்டணி அமைத்து விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று பிரச்சாரம் செய்தார் வைகோ. படுதோல்வி.
தற்போதும், ‘திமுக வெறுப்பு, பாஜகவை நோக்கிய நகர்வு’ என்ற சூழல் அவரது கட்சியில் தென்படுகிறது. ஆக, அடுத்த தற்கொலை முடிவுக்கு தயாராகிவிட்டது மதிமுக.
சாவித்திரி கண்ணன்














நூறு விழுக்காடு உண்மை….
தமிழில் விடுதலைப் போராட்டத்திற்கு விடுதலைப் புலிகளுக்கு இவர் செய்த உதவி போல் தமிழகத்தில் எந்த ஒரு தலைவரும் செய்யவில்லை.
தனி மனித ஒழுக்கம் மிக்கவர் உணர்ச்சிவசப்படக் கூடியவர் எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாதவர்
எல்லாம் உண்மை ஆனால் கூட்டணி சேர்ந்து சேர்ந்து தன்னைத்தானே சிதைத்துக்கொண்டார்.
ஜெயலலிதா சித்திரை ஒன்னு தான் தமிழ் புத்தாண்டு என்ற பொழுது ஜெயலலிதா மனம் ஓடக்கூடாது என்பதற்காக இவரும் கை உள்ள தான் தமிழ் தமிழ் புத்தாண்டு என்பதை மறந்து மறைத்து சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்றார்.
அண்ணா திமுகவுடன் கூட்டி சேர்ந்தவுடன் ஜெயலலிதா கைது செய்து தூக்கிப் போட வேண்டும் என்று கூறிய போது அது அவர்கள் கொள்கை என்றார் அங்கு தான் பெரும் சறுக்கல் ஏற்பட்டது.
அந்த செருக்கல் தொடர்ந்து தன் பேத்தியின் திருமணத்தை பார்ப்பார்கள் வைத்து நடத்தியதும் அந்த அழைப்பிதழில் அண்ணா படம் கூட இல்லாமல் சமஸ்கிருத சொற்களை வைத்துக் கொண்டு அழைப்பிதழ் அச்சடித்ததும் இவர் அண்ணா அவர்களின் கொள்கை குழி தோண்டி புதைத்து விட்டார்.
இவர் செய்த தவறுகள் தான் இன்றைக்கு சீமான் என்கின்ற விஷச் செடி மரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
காலத்தின் கோலம் இவர் கலைஞர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களையே இன்று இவர் மீது மல்லை சத்தியா கூறுகிறார். இதுதான் வரலாறு திரும்புகிறது என்பதோ !