மேய்ச்சல் நிலங்களை பாய்ச்சலோடு ஆக்கிரமித்து அழித்து வருகிறது நமது நவீன வாழ்க்கை முறை. மேய்ச்சல் நிலங்கள் அழிந்தால் சுற்றுச் சூழலுக்கே காய்ச்சல் ஏற்படும். கால்நடைகளே செல்வங்கள். ஆடு, மாடு மேய்ப்பது இழிவல்ல. தற்சார்பு வாழ்க்கைக்கு தவிர்க்க முடியாதவை கால்நடைகளே.. கால்நடைகளின்றி மானுட வாழ்க்கையில்லை; ஒரு அலசல்;
மேய்ச்சல் நிலங்கள் மேன்மையானவை. புறம்போக்கு நிலங்கள் புனிதமானவை.
கால்நடைகள் நமக்கு பால் தருகின்றன…என்பது மட்டுமின்றி, நம் நிலத்திற்கு வளமான உரம் தருகின்றன. உழவுக்கும் பயன்படுகின்றன. அவை தருகின்ற சாணம், மூத்திரம் போன்ற இயற்கை உரத்தால் தான் பயிர்கள் செழித்து, வளர்ந்தோங்கி நமக்கு நல் உணவைத் தருகின்றன. இத்தகைய கால் நடைகள் நமக்கு கண் போன்றவை; இவற்றை போஷித்து வளர்ப்பதற்காகத் தான் நம் பாரம்பரியத்தில் ஒவ்வொரு ஊரிலும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் அல்லது மேய்ச்சல் நிலம் என்ற பெரும் நிலப்பரப்பு ஒதுக்கி பாதுகாக்கப்பட்டது.
மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் நிலம் யாருடைய பராமரிப்புமின்றி இயற்கையாக பேணப்படும். அந்த வகையில் மழைக்காலங்களில் செழிப்பாகவும், கோடைக்காலங்களில் வாட்டமாகவும் காணப்படும் இந்தப் புல்வெளிகள் கால்நடைகளுக்கான செலவில்லாத உணவைத் தருகின்றன. நம் மரபில் முல்லைத் திணையில் வாழ்ந்த சம்சாரிகள் மேய்ச்சல் புறம்போக்கின் முக்கியத்துவத்தை நன்கு உணர்வார்கள். மேய்ச்சல் நிலத்தை மையப்படுத்தி பெருகும் பல்லுயிர் சூழல் அழகாக இயங்கி கொண்டிருக்கிறது. நமது சித்த மருத்துவர்கள் இந்த மேய்ச்சல் புறம்போக்கில் உள்ள அரிய மூலிகைகளை தேடிச் சேகரிப்பது அன்றிலிருந்து தொன்று தொட்டு இன்றும் உள்ள வழக்கம் தான்.

50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் மேய்ச்சல் நிலம், மந்தைவெளி நிலம் என்று இரண்டு வகையான நிலங்கள் இருந்தன. இவை இல்லாத கிராமங்களை அன்று பார்க்கவே முடியாது. அத்துடன் கால் நடைகள் நீர் அருந்த குளங்களும் கண்டிப்பாக பராமரிக்கப்பட்டன. இந்த நிலத்தில் ஆடு, மாடுகளின் கழிவுகளைச் சேர்த்து, பின் அதை வயல்களில் செலவில்லாத உரமாகப் பயன்படுத்துவர். ஆக இந்த வகையில் மேய்ச்சல் நிலங்களே கால்நடைகளுக்கு மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் இயற்கை உரம் தரும் ஆதாரமாகத் திகழ்ந்தன.
ஆனால், துர் அதிர்ஷ்டவசமாக இவை ஆண்டுக்காண்டு அருகி வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் மட்டுமே கோடிக்கணகான ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் பறிபோயுள்ளன. 2005 தொடங்கி 2015 வரையிலான பத்தாண்டுகளில் மட்டுமே இந்தியாவில் ஒரு கோடியே 39 லட்சம் ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் பறிபோயுள்ளன. இதனால் இவற்றை நம்பி வாழ்ந்த வகைபடுத்தவியலாத கால்நடைகள் காலப்போக்கில் அருகி முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டன.
ஒரு குடும்பத்திற்கு ஒன்றிரண்டு மாடுகள், நான்கைந்து ஆடுகள், கொஞ்சம் கோழிகள் இருந்தால் போதும். நிலத்திற்கான உரம் வாங்கச் செலவில்லை. தற்சார்பு வாழ்க்கைக்கு தவிர்க்க முடியாத ஆதாரமாகத் திகழ்பவை கால் நடைகளே.
கால்நடைகளை செல்வங்களாக கருதியது நமது சமூகம்!
கால்நடைகளை தெய்வமாக வணங்கியது நமது மரபு.
காந்தியப் பொருளாதாரமே கால்நடை செல்வத்தை ஆதாரமாகக் கொண்டது தான்.
கால்நடை இருந்தால் போதும் கவலையற்ற வாழ்க்கை உத்திரவாதம் எனக் கோடானுகோடி மக்களை நிம்மதி கொள்ள வைப்பவை கால்நடைகளே.
அத்தகையை கால்நடைகள் என்பவை நவீன விவசாயத்தால் அலட்சியப்படுத்தப்பட்டன. சிறு, சிறு விவசாயிகளைக் கூட டிராக்டர் வாங்க வைத்து பெட்ரோல், டீசல் செலவு வைத்தார்கள்! கால் நடைகளுக்கு தீவீனச் செலவு என்பதே விவசாயிகள் அரியாததாகும். உழவுக்கும் மாடு தேவை. உழவு முடிந்து அறுவடை ஆனபிறகு பயிர்களின் நுனி வீட்டுக்கு சென்றது உணவாக! மனிதர்களுக்கு தேவைப்படாத நடுப்பகுதி மாட்டுக்கு சென்றது உணவாக! அடிப் பகுதியோ விளைந்த நிலத்திற்கே உணவானது.
இன்று கால் நடைகள் இல்லாமல் போனதால் அறுவடைக்கு பிறகான கழிவுகளை எரித்து சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுத்துகிறார்கள் வட இந்தியாவின் விவசாயிகள்.

இத்தகையை புறம்போக்கு நிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தால் மயமாகி வருகின்றன. நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது இந்தியாவின் மக்கள் தொகை வெறும் 27 கோடிகள் தாம். ஆனால், இன்றோ 145 கோடிகள் ஆகிவிட்டன. ஆகவே, புறம்போக்கு நிலங்களை மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிக் கொண்டு அரசிடம் பட்டா கேட்டு நிர்பந்திக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் மக்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டின் வலிமை அரசியல்வாதிகள் அறியாதது அல்ல. ஆகவே புறம்போக்கு நிலங்களில் கணிசமானவை குடியிருப்புகளாகிவிட்டன.
இன்றைய கோடம்பாக்கம் ஒரு காலத்தில் மேய்ச்சல் நிலமாக இருந்தது தான். மயிலாப்பூர் அருகில் உள்ள மந்தைவெளி என்ற பெயரிலேயே அது மந்தைகளின் மேய்ச்சல்வெளியாக இருந்ததை நாம் உணரலாம். சிறுவயதில் தண்டையார் பேட்டையில் வசித்த போது நான் பார்த்த மேய்ச்சல் நிலங்கள் தற்போது கான்கிரீட் கோட்டைகளாக காட்சி தருகின்றன.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தன்னை தக்க வைத்துக் கொள்ள மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு பட்டா தருவதாக வாக்குறுதி தருகின்றன. அதுமட்டுமின்றி பொது நோக்கங்களுக்காகவும் ஏராளமான புறம் போக்கு நிலங்கள் காலியாகி உள்ளன.

தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக் கூடம், சமூகக் கூடம், சிப்காட், ஐடி மற்றும் தொழில் பூங்கா, விளையாட்டுத் திடல், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் போன்ற அரசின் 97 பொது நோக்கங்களுக்காக இந்த மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றங்களே தீர்ப்பளித்துள்ளன.
தற்போதைய ஆட்சியிலுமே கூட தமிழகத்தில் ஆட்சேபம் இல்லாத மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, நான்கு ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு மேல் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதுவும் போதாது என்று வரும் நிதியாண்டில், ஐந்து லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என, சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த வகையில் நீண்ட காலமாக வசிக்கும் தங்களுக்கு பட்டா கேட்டு காத்திருப்போருக்கு நம்பிக்கையுடன் தந்துள்ளது தமிழக அரசு. இதற்கிடையே, ‘2 சென்ட் நிலத்திற்கு மட்டுமே பட்டா வழங்கப்படும்; அதற்கு மேல் ஆக்கிரமித்து வைத்திருந்தால், வழிகாட்டு மதிப்பு அடிப்படையில் பணம் செலுத்தி பதிவு செய்யலாம் என சலுகையும் தரப்பட்டுள்ளது.
‘கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட, அரசு புறம்போக்கு நிலங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு, உச்ச வரம்புகளை காரணம் காட்டி, நிலங்களுக்கு பட்டா வழங்க மறுக்க முடியாது’ என்றும், சென்னை உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
ஆக, நவீன வாழ்க்கை நெருக்கடிகள் நிர்பந்தங்கள் மேய்ச்சல் நிலங்கள் குறித்தும், அதன் தேவைகள் குறித்துமான அறியாமையில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை `மேய்ச்சல் நிலம் மற்றும் மேய்ப்பவர்களுக்கான சர்வதேச ஆண்டு’ (International Year of Rangelands & Pastoralists) என 2026-ம் ஆண்டை அறிவித்துள்ளதானது கவனத்திற்குரியதாகும்.

இந்தச் சூழலில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக அதன் தலைவர் சீமான் ஆடு, மாடுகளுக்கான மாநாடு என்ற பெயரில் மேய்ச்சல் நிலத்தின் முக்கியத்துவத்திற்காக எடுத்த முன்னெடுப்புகள் அவசியமானவை.
Also read
இதற்காக மதுரையில் ஆடு, மாடுகளை கொண்டு மாநாடு நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சீமான். மாடுகளை வைத்து நடைபெறும் பால் பொருள் வர்த்தகம் ரூ.13.5 லட்சம் கோடி என்றும், அதில் தமிழகத்தின் பங்கு ரூ.1.38 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ள சீமான், மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். காடு மற்றும் மலைப்பகுதிகளில் மாடுகள் மேய்வதை தடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் மொத்தமுள்ள 1.7 கோடி ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்களில் தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டேர் உள்ளன. ஆனால், அவை அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் , பள்ளி, கல்லூரிகள், வீட்டு மனைகள்,, சாலை உருவாக்கம், விமான நிலையங்கள் உருவாக்கம் ..போன்றவற்றுக்காக எடுக்கப்பட்டு விட்டதால் மாடுகள் மேய்ச்சல் நிலம் இன்றி தவிக்கின்றன..என கவனப்படுத்தினார்.
சரியாகச் சொல்வதென்றால், அனைத்து கட்சிகளுமே இதன் முக்கியத்துவம் உணர்ந்து குரல் தர வேண்டும்.
சாவித்திரி கண்ணன்

















சிறப்பு .என் மகள் நியுசிலாந்தில் வெல்லிங்டனில் வசிக்கிறார் .இரண்டு முறை சென்றேன் .பல மாதங்கள் இருந்தேன் .
Taupo ,Hamilton போன்ற நகரங்களுக்கு மகிழூந்தில் சென்றோம்
நியூசிலாந்து நாடு 50 லட்சம் மக்கள்.ஆனால் 10 கோடி கால் நடைகள் இருக்கும் . வழி நெடுக மேய்ச்சல் நிலம்தான் .புல்லை வளர்க்கிறார்கள் தீவனத்திற்காக . நியூசிலாந்தின் பொருளாதார கட்டமைப்பு அடிப்படை விவசாயத்தையும் கால் நடைகளை நம்பியும் உள்ளது . Bio Security is very strict .எந்த ஒரு காய் பழம் இவைகள் உள்ளே வர முடியாது .அங்குள்ள காய்கறிகள் மட்டும்தான்விற்க முடியும் .
வாரம் ஞாயிற்றுக்கிழமை உழவர் சந்தை கூடும் .
உள்ளுர் விலையும் காய்கறிகள் மட்டும் விற்கும்
வெளிநாட்டில் இருந்து காய்கறிகள் Screen செய்து Freez ஆகி இறக்குமதி செய்யப்படும் .இயற்கை
விவசாயம் நடக்கிறது
உள்ளூரில் எந்த வித மாசு ஏற்படும் தொழிற்சாலை இல்லை
Steel ,iron ,Petrol ,Cement , Car வெளிநாட்டிலிருந்து இறக்குமதி . இப்போது மின்சார கார்கள் .
ஆடு மாடு குசுவும் ஏப்பம் விட்டால் வரி கட்ட வேண்டும் .Fart & Burb tax
வேடிக்கையாக இல்லை ?
ஏன் என்றால் அவைகளின் வாயு சுற்று சூழ்நிலையை பாதிக்கிறதாம் !!!
சீமானின் இந்த மாநாட்டை வியப்புடன் நோக்கினேன் உண்மை நிலவரத்தை உங்கள் கட்டுரை வழியாகவும் எனது நியசிலாந் பயணத்தின் வழியாகவும் உணர்ந்தேன் .இங்கே இவைகளை மறைத்து மற்றவர்கள் ஏளனம் செய்கின்றனர் .