பாஜகவின் கைபாவை தேர்தல் ஆணையம்! இரட்டை இலையில் இழுபறி!

மிக நீண்ட இழுபறியாக உள்ளது, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் இரட்டை இலை யாருக்குரியது என்ற தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு. தேர்தல் ஆணையத்தின் இழுபறிக்கு பின் பாஜகவின் அரசியல் குயுக்தி பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கிட்டத்தட்ட அம்பலபடுத்திவிட்டது உயர்நிதிமன்றம்;

இரட்டை இலையை தனக்குத் தான் என கேட்ட ஒ.பி.எஸ் கிட்டத்தட்ட ஒற்றை மரமாகி நிற்கிறார். 66 எம்.எல்.ஏக்களில் 62 பேர் இபிஎஸ் வசம் இருக்கிறார்கள். நிர்வாகிகளில் சுமார் 95 சதமானோர் இபிஎஸ் வசம் தான் உள்ளனர். இது சின்னஞ்சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் இரட்டை இலை யாருக்கு என்ற கேள்விக்கோ, விசாரணைக்கோ கூட அவசியமில்லை.

சிவசேனா பிளந்த போது, மன்னிக்கவும், – பாஜகவால் பிளக்கப்பட்ட போது –  ”பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே வசம் தான் உள்ளனர். ஆகவே, அவருக்குத் தான் கட்சி சின்னம் உள்ளிட்ட அனைத்தும் உரியது” என தீர்ப்பளிக்க ஓரிரு மாதங்களைத் தான் எடுத்துக் கொண்டது தேர்தல் ஆணையம். ஆனால், அதிமுக விவகாரத்தில் அதைவிட துல்லியமாக உள்ளங்கை நெல்லிக்கனி போல உண்மை வெளிப்படும் நிலையிலும், தீர்ப்பு தராமல் நம்ப முடியாத  காலதாமம் செய்கிறது தேர்தல் ஆணையம்.

இதில் விரைந்து ஒரு முடிவெடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தை அணுகிய பிறகும், தேர்தல் ஆணையம் தன் தவறை திருத்திக் கொள்ளாமல் நீதிமன்றத்திலேயே ஏனோ, தானோவென்று பதில் கூறுகிறது, அலட்சியமாக.

இத்தனைக்கும் ஏப்ரல் மாதமே முழு விசாரணையையும் முடித்து விட்டது, தேர்தல் ஆணையம். ஆனால், முடிவை சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது, இரண்டரை மாதங்களாய்!

இன்னும் எட்டு மாதத்தில் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழகத்தின் ஒரு பிரதான எதிர்கட்சியை – தமிழகத்தை சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு கட்சியை – சின்னமில்லாத கட்சியாக – அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது, தேர்தல் ஆணையம்.

இந்த விவகாரம் கடந்த வெள்ளியன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் வந்த போது தேர்தல் ஆணையத்தை ‘நறுக்கு தெறித்தாற் போல’ கேள்வி கேட்டனர் நீதிபதிகள்.

”தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உத்திரவு பிறப்பிக்காவிட்டால், இந்திய அரசமைப்பு சட்டப்படி தாங்கள் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறிவிட்டனர் என்று தானே அர்த்தம்?

ஒரு காலவரம்பு இல்லாமல் எவ்வளவு நாட்கள் தான் இழுத்தடிப்பீர்கள்? உங்களுக்கு ஏதோ தயக்கம் இருப்பது நன்றாகவே தெரிகிறது.

சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு காலவரம்பை நிர்ணயித்து உள்ளது. தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரை விட உயர்ந்ததா?”

என நீதிபதிகள் காட்டமாக கேட்ட பிறகும், தேர்தல் ஆணையம் வெறுமே வாய்ஜாலம் செய்கிறது என்றால், ‘எந்த அளவுக்கு அதன் மீது அரசியல் அழுத்தம் இருக்கிறது’ என்பதை நாம் உணரலாம்.

பாஜகவின் செல்லப்பிள்ளையான ஒ.பி.எஸ் பக்கம் பலம் இருந்திருக்குமானால், தேர்தல் ஆணையத்திற்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. எப்போதோ தீர்ப்பை சொல்லி இருப்பார்கள். இ.பி.எஸ்சை பொறுத்த வரை பாஜகவுடன் கூட்டணி சேருவதற்கு மிக நீண்ட தயக்கம் காட்டினார். பிறகு நிர்பந்தம் காரணமாக தற்போது பாஜகவுடன் கூட்டணி கண்டுள்ளார். ‘கூட்டணி ஆட்சி’ என இப்போதே பாஜக தலைவர் அமித்ஷா தன்னிச்சையாக பேசி வருவது, திராவிட முன்னோடிகளான பெரியார், அண்ணா ஆகியோரை இழிவாக பேசுவது ஆகியவற்றால் அதிமுக தர்மசங்கடத்திற்கு ஆளாகிறது. பாஜகவை கழட்டிவிட்டு, விஜயின் த.வெ.கவுடன் கூட்டணி சேரலாம் என்ற சிந்தனை போக்கும் அந்தக் கட்சிக்குள் இருக்கிறது.

இந்த நிலையில் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது என்பது தான் இந்த விவகாரத்தில் மக்களின் புரிதலாக உள்ளது. தன்னாட்சி அதிகாரத்துடன் நேர்மையாக செயல்பட வேண்டிய ஒரு தேர்தல் ஆணையம், பாஜகவின் அடியாளாக மாறி நிற்கிறது என்பது பச்சையாகத் தெரிகிறது. இதற்கு நீதிமன்றம் வைத்தே குட்டே அத்தாட்சியாகிறது.

பாஜகவின் கூட்டணியை அதிமுக உதறித் தள்ளினால், தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்க வாய்ப்புள்ளது. அப்படி முடக்கினால், அதிமுக இந்த அநீதியை சொல்லியே மக்களிடம் அனுதாபத்தை அள்ள முடியும். ஆனால், அதற்கு ஒரு அறச் சீற்றம் வேண்டுமே. இரட்டை இலையை இழப்பதை விட, இன்றைக்கு அறச் சீற்றத்தை அதிமுக தொலைத்துவிட்டிருப்பது தான் பரிதாபகரமானது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time