அரசாங்கத்திற்கும், அரசாங்கத்தை வழி நடத்தும் கட்சிக்கும் கண்டிப்பாக ஒரு இடைவெளி இருக்க வேண்டும். புதிதாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக முதலமைச்சர் நியமித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேலையில் அரசு இயந்திரத்தை திராவிட மாடல் ஆட்சிக்கான பிரச்சார பீரங்கியாக்குவதா..?
ஆளுகின்ற வாய்ப்பு பெற்ற கட்சி அரசாங்கத்தையையும், அதன் நிதியையும் கட்சி நலன்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலைமையில் தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர்களாக நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனமாம்!
ஐஏஎஸ் அதிகாரிகளை மலினப்படுத்த இதைவிட வேறு தேவையில்லை. இது போன்ற பணிகளை நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், கீழ்க்கண்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளாராம்!
அரசின் திட்டங்களை, செய்திகளை கொண்டு சேர்க்கத் தான் ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்புத் துறை என்ற ஒன்று இருக்கிறதே…!
அந்தத் துறைக்கென்று ஒரு அமைச்சர் மட்டுமின்றி, இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர். இதன்படி எம்.பி.சாமிநாதன் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக உள்ளார். வி.ராஜாராமன் மற்றும் ஆர்.வைத்தியநாதன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். மேலும் பி.ஆர்.ஒக்கள் அலுவலர்கள் என பெரிய பாட்டாளமே உள்ளது. இவர்களின் செயல்பாடுகளே கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதாவது அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை என்பதே ஆளும் கட்சியின் பிரச்சார துறையாக உள்ளது என்பது தான் திராவிடக் கட்சிகள் கால வரலாறாகும்.

அப்படி இருக்க இந்த கட்சி பிரச்சாரத்திற்கு வெவ்வேறு துறைகளில் பொறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளையும் போடுவது என்பது ஒட்டுமொத்த அரசாங்க பலத்தையும் கட்சி ஆதாயத்திற்காக பயன்படுத்தும் உள் நோக்கம் கொண்டது என்பதில் சந்தேகமில்லை. கீழ்காணும் இந்த நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் ஏற்கனவே சில குறிப்பிட்ட துறைகள் ஒதுகப்பட்டுள்ள நிலையில் கூடுதல் சுமையாக இந்த பிரச்சார வேலைகள் தருவது பொறுப்பற்ற அணுகுமுறையாகும்.
# டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம்.
# ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
# தீரஜ் குமார், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
# பெ. அமுதா, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
இந்த லிஸ்டில் முதலாமவராக இருக்கும் ராதாகிருஷ்ணன் ஒரு சுய விளம்பர மோகி. அவரை பொறுத்த வரை தினசரி ஒரு மிரஸ்மீட் வைத்து பேசச் சொன்னாலும் நாளொன்றுக்கு இரண்டு பிரஸ்மீட் வைத்து பேசச் சொன்னாலும் செய்வார். ஏனென்றால் பேசுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாத விளம்பர மாடலாக உள்ள ஒரே ஐஏஎஸ் இவர் தான்.
ஆனால், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், பெ.அமுதா ஆகியோர் அப்படியல்ல. இவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தினால், அடுத்து வரும் ஆட்சியாளர்கள் இவர்களை திமுக ஆதரவு ஐஏஎஸ்கள் என ஒதுக்கி வைக்கும் நிலையே ஏற்படும். அப்போது இவர்கள் முக்கியத்துவம் இல்லாத துறைக்கு தூக்கி அடிக்கப்படலாம். இது தேவையற்றது.
ஏற்கனவே கட்சியில் பலமான பிரச்சார அணிகள், ஐ.டி.விங்க் எல்லாம் இருக்கிறது. பல பத்திரிகையாளர்களை அதற்கு பயன்படுத்தி வருகிறது திமுக. அரசாங்க சார்பில் ஊடகங்களுக்கும் தாறுமாறாக விளம்பரங்கள் அள்ளி வழங்கப்படுகின்றன.
இப்படியாக விளம்பரங்கள் மூலமாக ஓயாமல் திராவிடமாடல் ஆட்சியின் புகழ் திக்கெட்டும் பரப்பப்பட்டுக் கொண்டு தான் உள்ளது. அப்படியிருக்க மேலும் கூடுதலாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அரசின் விளம்பர மோகத்திற்கு பலிகடா ஆக்காதீர்கள்.
சாவித்திரி கண்ணன்

















Leave a Reply