75 ஆண்டுகளாக எழுந்திரிக்க முடியாமல் சீன ஆதிக்கத்தில் உழலும் தீபெத்தியர்களின் துயரங்கள் சொல்லில் அடங்காதவை; சீன கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவத்தை கொண்ட திபெத்திய கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவை தற்போது எப்படி அணுவணுவாக அழிக்கப்பட்டு வருகிறது எனப் பார்க்கலாம்;
1950 ஆம் ஆண்டு சீன படையெடுப்பிற்கு முன்பு, திபெத் புத்த மதத்தில் புதைந்திருந்த ஒரு நாடாக இருந்தது. மத நடைமுறை திபெத்திய மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சமாகி, அவர்களின் அமைதியான சமூகக் கட்டமைப்பை உருவாக்கியதோடு, அவர்களை பேராசைகள் அற்றவர்களாகவும் – இருப்பதில் திருப்தி கொண்டவர்களாகவும் – வைத்திருந்தது.
1951 ஆம் ஆண்டு திபெத்தை ஆக்கிரமித்த கம்யூனிஸ்ட் சீனா, அதை “திபெத்தின் விடுதலை” என்று சாமார்த்தியமாக குறிப்பிட்டது.
திபெத்தை இணைத்ததிலிருந்து, சீன அரசாங்கம் திபெத்திய மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் பிரதான சீன கலாச்சாரத்தில் இணைத்து, திபெத்திய மத மற்றும் உள்ளூர் அடையாளத்தை அழிக்க பல்வேறு செயல் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
பன்முகத் தன்மையை பஞ்சராக்கும் மிகவும் மோசமான கலாச்சார மேலாதிக்கத்துடன் திபெத்தை சீன மயமாக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது, சீன அரசு. உள்நாட்டில் சர்வாதிகாரமாக கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவிய மமதையில், அதை திபெத்திலும் சாதிக்க துணிந்துள்ளது சீனா!

திபெத்தை மாத்திரமல்ல, தன்னை சுற்றியுள்ள மற்ற நாடுகளான கிழக்கு துர்கிஸ்தான், தெற்கு மங்கோலியா, மஞ்சூரியா ஆகியவற்றையும் சீனா ஆக்கிரமித்து உள்ளது. சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பு இந்தியாவிற்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், திபெத்தை ஒட்டியுள்ள இந்தியாவின் அருணாசலப் பிரதேசம், லடாக் போன்றவற்றை அபகரிக்கத் துடிக்கிறது சீனா. இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அடிக்கடி இந்த பகுதிகளில் ராணுவ ரீதியிலான சிறுசிறு மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
தீபெத்தியர்களின் மத நம்பிக்கை சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு சினத்தை ஏற்படுத்தியது. இதனால், 6,000 க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள், மடாலயங்கள் உள்ளிட்ட புனித இடங்கள் சீனர்களால் அழிக்கப்பட்டன. இருந்த போதிலும், இந்த அரசியல் அழுத்தங்களையும் மீறி, திபெத்தியர்கள் தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற போராடுகின்றனர். இன்று திபெத்தில் மதச் செயல்பாடுகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பேரெழில் மிக்க திபெத்தின் இயற்கை வளங்களை சூறையாடித் திளைக்கிறது சீனா. திபெத்தில் உள்ள காடுகள் பரப்பளவில் பெரியவை. மரங்களை அழிப்பது, மரக்கட்டைகளை வெட்டுவது, கனிமங்களை எடுப்பது போன்றவை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய ஆறுகளை திபெத் தன்னகத்தே கொண்டுள்ள நிலையில், சீன அரசின் பரவலான காடழிப்பு என்பது வெள்ளப் பெருக்கு சமவெளிகளில் வசிக்கும் பழங்குடி திபெத்தியர்களின் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. திபெத்தின் விலங்குகளான அரிய ராட்சத பாண்டா, தங்க குரங்கு மற்றும் தனித்துவமான 5,000 க்கும் மேற்பட்ட தாவர இனங்களின் வாழ்விடத்தையும் இந்தக் காடாளிப்பு அச்சுறுத்துகிறது.
திபெத்தின் ஆறுகளில் ஏராளமான நீர்மின் அணைகளைக் கட்டி, அதிலிருந்து வரும் மின்சாரத்தை செங்டு, ஜினிங், லான்சோ மற்றும் ஜியான் போன்ற சீன நகரங்களுக்கு கொண்டு செல்ல சீனா மும்முரமாக திட்டமிட்டு வருகிறது.
திபெத்திற்குள் சீனர்களின் ஊடுருவல் அதி பயங்கரமாக அதிகரித்துள்ளது. இதனால், திபெத்தில் இருந்து வெளியேறி உலகெங்கும் பரவியுள்ள திபெத்தியர்கள் சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக தாங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பிரச்சாரம் செய்து போராடி வருகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாங்கம்;
1980 ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹு யாவ் பாங், திபெத்துக்கு விஜயம் செய்தார்! படையெடுப்பிற்குப் பிறகு அவ்வாறு செய்த முதல் தலைவரான அவர் கண்ணால் கண்ட பேரழிவின் அளவைக் கண்டு மனம் கசிந்து சில சீர்திருத்தங்களுக்கும் “மீட்பு” கொள்கைக்கும் அழைப்பு விடுத்தார். இதன் விளைவாக 1987 இல் அவர் கட்சிப் பதவியில் இருந்து கட்டாயமாக ராஜினாமா செய்விக்கப்பட்டார். திபெத் குறித்த அவரது கருத்துக்களின் விளைவை அவர் இவ்வாறு எதிர்கொண்டார்.
திபெத்தானது சீன கம்யூனிஸ்ட் கட்சியால் – சர்வாதிகாரமாக இராணுவத்தின் தீவிர ஒடுக்கு முறைகளைக் கொண்டு – நிர்வகிக்கப்படுகிறது, ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள கிளை அலுவலகங்கள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி திபெத்தை ஆட்சி செய்கிறது. அரசாங்கம் கட்சிக்குக் கீழ்ப்படிந்ததாகும்.
சீனாவில் இருப்பது போலவே, திபெத்தை நிர்வகிக்க கட்சி மற்றும் அரசாங்க அலுவலகங்களின் கட்டமைப்பை சீனா நிறுவியுள்ளது. லாசாவில் மட்டும், 60 க்கும் மேற்பட்ட துறைகள் மற்றும் குழுக்கள் உள்ளன, அவை அனைத்தும் பெய்ஜிங்கில் உள்ள தேசிய அலுவலகங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில், திபெத் பகுதி சீன மாகாணங்களை விட குறைவான சுயாட்சியைக் கொண்டுள்ளது. TAR இன் உயர் பதவியான கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் பொறுப்பு, ஒரு திபெத்தியரால் ஒருபோதும் வகிக்கப்பட்டதில்லை.
திபெத்தில் குறைந்தது இரண்டரை லட்சம் பேர் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்தை சீனா பராமரிக்கிறது. லாசாவிலும் பிற இடங்களிலும் இராணுவமும், காவல்துறையும் பெருமளவில் உள்ளன. மேலும், லாசாவில் சீருடையில் இல்லாத ரகசிய போலீசாரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. மேலும், திபெத்தை நிர்வகிக்கும் இராணுவ நிர்வாகத்தின் தலைமையில் எந்த திபெத்தியனும் பணியாற்ற அனுமதியில்லை.

திபெத்தில் மனித உரிமைகள் நிலைமை;
திபெத்தில் மனித உரிமை நிலைமைகள் படு மோசமாகவே உள்ளன. சீன ஆக்கிரமிப்பின் கீழ், திபெத்திய மக்களுக்கு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதில் சுயநிர்ணய உரிமை, பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், கருத்து வெளிப்பாடு மற்றும் பயண உரிமைகள், தபால் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆகியவை அடங்கும்.
சீன ஆக்கிரமிப்பால் திபெத்தின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு, அதன் மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். சீன அரசின் அடக்குமுறையால் இதுவரை 12 லட்சம் திபெத்தியர்கள் இறந்துள்ளதாக சொல்லப் படுகிறது; இன்னும் பலர் சிறைகளிலும், முகாம்களிலும் வாடி வதங்கி சிதைந்தனர்; மேலும் 6,000 க்கும் மேற்பட்ட மடங்கள், கோயில்கள் மற்றும் பிற கலாச்சார மற்றும் வரலாற்று கட்டிடங்கள் அழிக்கப்பட்டு அவற்றின் உள்ளடக்கங்கள் சூறையாடப்பட்டதை மறக்க இயலாது.
அரசியல் கைதிகள்;

மக்களின் எதிர்ப்பை அடக்க சீனா மேன்மேலும் தொடர்ந்து அதிகப்படியான இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதால், தன்னிச்சையான கைதுகள், சிறைத் தண்டனை, சித்திரவதை மற்றும் மரணதண்டனை உள்ளிட்ட உட்பட பரவலான மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. அமைதியான முறையில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் கூட, கடுமையாக அடக்கப்படுகின்றன. இதில் கணிசமானோர் இறந்துள்ளதாக மனித உரிமைகள் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன.
திபெத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய திபெத்திய அரசியல் கைதிகள் சிறைபட்டுள்ளதை மனித உரிமைகள் குழுக்கள் பெயர் குறிப்பிடாமல் உறுதிப்படுத்தியுள்ளன. நிர்வாக விதிமுறைகள் மூலம் பலர் பல்லாண்டுகள் விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக அமைதியின்மை நகர்ப்புறங்களிலிருந்து, கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளது.
திபெத்தில் அரசியல் கைதிகள் தவறாக நடத்தப்படுவது மற்றும் சித்திரவதை செய்யப்படுவது பற்றிய நம்பகமான அறிக்கைகள் உள்ளன. அவற்றில் கொடூரமாக அடித்தல், மின்சார தடிகளால் தாக்குதல், தூக்கம் அல்லது உணவு இல்லாமை, கடும் குளிருக்கு ஆளாக்குதல் மற்றும் பிற மிருகத்தனமான அணுகுமுறைகள் போன்றவை அடங்கும். மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை சார்ந்த அமைப்புகளுக்கு திபெத்தில் சிறைச் சாலைகள், தடுப்பு மையங்களுக்குள் செல்ல அனுமதி கிடையாது.
கல்வியும், மொழியும் களவாடப்பட்டன;

திபெத்திற்கான தனித்துவங்களை ஒவ்வொன்றாக சிததைத்த திபெத்தில் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களை சீன மொழியான மாண்டரினில் மொழி பெயர்க்க திபெத் மதகுருக்களுக்கு சீனா நெருக்கடி கொடுத்துள்ளது.
திபெத் பள்ளிகளில் பாடங்கள் இரு மொழிக் கொள்கையில் இயங்கி வந்த நிலை மாறி, இனி சீன மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும் என, சீனா உத்தரவிட்டதை எதிர்த்துப் போராடிய திபெத் மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந் நிலையில், திபெத்தை சீன மயமாக்கும் திட்டமாக திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 முதல் 6 வயதுக்குட்பட்ட சுமார் 1 லட்சம் பிஞ்சு குழந்தைகளும் அடங்குவர். ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த இந்தக் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அழைத்து வந்து சீன மொழியையும், சீன கலாச்சாரத்தையும் திணிக்கின்றனர். மற்றுமுள்ள 9 லட்சம் பேர் 6 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் திபெத்திய கலாச்சாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு கல்வி பயிற்றுவிக்கப் படுகின்றனர். இது மாணவர்களிடம் அடிமை சிந்தனையை விதைக்கும் முயற்சியாகும்.

தலையாட்டி தலாய்லாமாவை உருவாக்கத் துடிக்கும் சீனா;
நடந்த அநீதிகள் போதாது என்று, திபெத்தின் புத்த துறவிகளும், பிக்குணிகளும் சீன மொழியில் தான் வழிபாடுகள் நடத்த வேண்டும் என்றும் திபெத் மதகுருக்கள் மதநூல்களை மாண்டரினில் தான் மொழி பெயர்க்க வேண்டும் எனவும் சீனா உத்தரவிட்டுள்ளது.
Also read
1950-ல் சுதந்திரமாகத் திகழ்ந்த திபெத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதையடுத்து, திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமாவும், அவருடன் வந்த சுமார் ஒரு லட்சம் திபெத்தியர்களும் இந்தியாவில் வசித்து வருகின்றனர். இதனிடையே, ”அடுத்த தலாய் லாமாவை நாங்கள் தேர்வு செய்வோம்” என சீனா கூறி உள்ளது. இதற்கு, ”அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் தங்களுடைய காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என தலாய் லாமா உறுதிபடத் தெரிவித்துள்ளார். தலாய்லாமாவுக்கு உலகம் தழுவிய அளவில் பெரிய மரியாதை உள்ளது.
4,700 ஆண்டுகள் பழமையான திபெத் கலாச்சாரத்தை அழிக்க, சகல முஸ்தீபுகளுடன் வல்லரசான சீனா வன்மத்துடன் செயல்படுகிறது.
இதை உலகம் தடுத்து காப்பாற்ற வழியின்றி, கையறு நிலையில் வேடிக்கை பார்க்கிறது. திபெத்தியர்களுக்காக குரல் கொடுக்கவும், லாபி செய்யவும் ஜனநாயக சக்திகள் அணி திரள்வது சாத்தியமற்று உள்ளது.
சாவித்திரி கண்ணன்
















Leave a Reply