குவாரிக் கொள்ளைகள்; முப்பெரும் கூட்டுச் சதியா?

தமிழகத்தில் அரசு அதிகாரிகள், சுரங்க மாஃபியாக்கள், காவல் துறை  என்ற வலுவான முத்தரப்பின் கூட்டிணைவு சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு தீவிர ஆதரவளிக்கிறதா? இது போன்ற கனிமவள சுரண்டல்கள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் மேற்கொள்ளப்படுகிறதா?” என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்;

தமிழ்நாட்டின் தெற்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆற்று மணல், கடற்கரை மணல், சரளை மற்றும் சிவப்பு மண் போன்ற இயற்கை வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு எதிராக,  உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும், பிற நீதி மன்றங்களிலும் தொடரப்பட்ட தொடர்ச்சியான பொதுநல வழக்குகள் மாநில அதிகார மையம் சுரங்க மாஃபியாவுடன் எவ்வாறு நெருக்கமாக தொடர்புடையது என்பதை  அம்பலப்படுத்தியுள்ளன.

சட்டவிரோத சுரங்கத் செயற்பாடுகளை கட்டுப்படுத்தத் தவறியதற்காக நீதித்துறையானது மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் சுரங்க அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளது. கலெக்டர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். மேலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பட்சத்தில் தவறு செய்த அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது மாற்றப்பட்டனர். சட்டவிரோத சுரங்கத்தைத் தடுக்க இயலாமைக்கு விளக்கமளிக்க அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாததற்கு பொறுப்பேற்க கலெக்டர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. ‘அவர்களின் நிர்வாக அலட்சியத்திற்கு கடுமையான விளைவுகள் எதிர்கொள்ள நேரும்’ என அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது.

மனுதாரர்களான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் வேண்டுகோள்களின் அடிப்படையில், அந்தந்த மாவட்டங்களில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர, விழிப்புடன் இருக்கும் உயர் நீதித்துறை, அதற்கான சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதது தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த தீவிரமான விஷயத்தில் நீதிமன்றமே பலமுறை தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கிராம மக்களின் எதிர்ப்பு;

திருப்பூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில் ஜூலை 11 அன்று ஐந்து புதிய கரடுமுரடான கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நடந்த பொது விசாரணையில், அங்கன்வாடி கட்டிடம், தண்ணீர் தொட்டிகள் மற்றும் பல வீடுகள் போன்ற பொது உள்கட்டமைப்பு சேதமடையும் என்று கூறி, கிராமவாசிகள், ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் அதை கடுமையாக எதிர்த்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளரும், குவாரி எதிர்ப்பு ஆர்வலருமான முகிலன் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.

‘அப்பகுதியில் உள்ள குவாரிகளுக்கான குத்தகையை நீட்டிப்பது’ என்பதை மட்டுமே என்று அதிகாரிகள் கலந்து கொண்டவர்களிடம் தெரிவித்தனர். இருப்பினும், கிராமவாசிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் கூட்டத்தை ரத்து செய்தனர். நீதிமன்றத்தால் மூட உத்தரவிடப்பட்ட சட்டவிரோத ஆற்று மணல் குவாரிகள், குவாரிகளின் பிரதான மற்றும் பக்கவாட்டு நுழைவு வாயில்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த போதிலும், பின் வாயில் வழியாக செயல்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.

சுரங்கத் தொழிலாளர்கள் ரகசியமாக மணலை எடுத்து பின்புற நுழைவுப் வாயில் வழியாக கொண்டு செல்வதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவித்து இருந்தார் மேலும் அவரது மனுவில் “திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆற்று மணல் மற்றும் சரளை சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது” என்று கூறப்பட்டது.

இது, அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தில் குறிப்பிடத்தக்க குறைவுக்கு வழிவகுத்ததாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். “மேலும், அரசாங்க அனுமதியின்றி சட்டவிரோத மணல் அள்ளுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மணல் அள்ளும் குவாரிகளும் சட்டவிரோதமானவை” என்று சுட்டிக்காட்டிய மனுதாரர், “அத்தகைய சட்டவிரோத மணல் அள்ளப்படும் இடங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும், இதனால் சட்டவிரோத மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட, அனைவர் மீதும் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கோரினார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மணல் குவாரிகளையும் மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியா கிளீட் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, சட்டவிரோத குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குவாரிகளை நடத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

“கனிம வளங்கள் நமது நாட்டின் சொத்து, அவை ஒருபோதும் திருட அனுமதிக்கப்படக்கூடாது, அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருக்கக்கூடாது” என்று இரு நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது. கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, “சம்பந்தப்பட்ட குவாரிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இயக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அரசாங்கம் கூறியது.

இருப்பினும், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தில் அதிகாரிகளின் அறிக்கையை பொய் என்று கூறி, நீதிமன்ற உத்தரவுகளை மீறி அனைத்து சட்டவிரோத குவாரிகளும் பின்புற நுழைவு வாயில்கள் வழியாக இன்னும் செயல்பட்டு வருவதாகக் கூறினார். அவர் தனது கூற்றுகளை நிரூபிக்க அத்தாட்சிகளையும் வழங்கினார். அதிர்ச்சியடைந்த உயர்நீதிமன்றம், மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

“இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் மேற்கொள்ளப்படுகிறதா? அல்லது வேறுவிதமாக நடக்கிறதா?” என்று நீதிபதிகள் கேட்டனர். அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்று அவர்கள் உத்தரவிட்டனர். இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், மாவட்ட ஆட்சியர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் உண்மைகளை விளக்க வேண்டும்.

நீதித்துறையின் பங்குமாநிலத்திற்குள் சுரங்கத்தில் ஏற்படும் கடுமையான மீறல்கள் தொடர்பான விஷயங்களில் நீதித்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டுகளை ஆராய பல சிறப்பு புலனாய்வுக் குழுக்களை நிறுவி, தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்தில் செங்கல் சூளை நடத்துபவர்களால் தனியார் மற்றும் அரசு நிலங்களில் இருந்து பரவலாக சிவப்பு மண் சட்டவிரோதமாக வெட்டியெடுப்பதை விசாரிக்கவும் இதுபோன்ற ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது.இது தொடர்பான விவரங்களைச் சேகரித்து சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நீதித்துறை தலையீடு சில மாவட்டங்களில் மாநில அதிகார மையத்தை உலுக்கி எடுத்து செயல்படுத்துகிறது. பொதுமக்கள் புகார்களின் பேரில், வருவாய்த் துறையின் சிறப்புப் படை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் உள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரியைக் கண்டு பிடித்தது. வருவாய்ப் பிரிவு அதிகாரி அதை ஆய்வு செய்து, சட்ட விரோதமாகச் சுரங்கம் கட்டுபவர்களுக்கு எதிராக ரூ.10.2 கோடி அபராதம் விதித்தார். இதேபோன்ற நடவடிக்கைகள், அவ்வப்போது, மற்ற வருவாய்த் தொகுதிகளிலும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், முரண்பாடு என்னவென்றால், சுரங்க செயல்பாட்டாளர்கள்  மீது இதுவரை எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இந்த நடவடிக்கை அபராதம் விதிப்பதுடன் மட்டுமே இருக்கும். இது சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக ஒருபோதும் வலுவான தடையாக இருக்காது என்று ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் சட்டவிரோத கல் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் ஆர்வலர்களை மிகவும் உறுத்தும் விவகாரம் என்னவெனில், சுரங்கச் சட்டத்தில் சில விதிகளைத் திருத்தும் சமீபத்திய அரசாங்க உத்தரவு. “குவாரிகளின் குத்தகைக் காலங்களை நீட்டிக்கும் இந்த திருத்தங்கள் சிக்கலை மேலும் மோசமாக்கும்” என்று முகிலன் கூறினார்.  தமிழ்நாடு அரசின் இயற்கை வளத் துறை, ஏப்ரல் 22 ஆம் தேதி (GO) புவியியல் மற்றும் சுரங்க ஆணையரின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 (மத்திய சட்டம் 67) இன் பிரிவு 15 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ், தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 இல் சில முக்கியமான திருத்தங்களைச் செய்துள்ளது, இது சட்டவிரோத கல் சுரங்கத்தை மேலும் பரவலாக்குகிறது என்று முகிலன் போன்ற ஆர்வலர்கள் கூறினர்.

மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் கே. பனிந்திர ரெட்டியின் அரசாணை, புதிய குவாரி தளங்களுக்கான குத்தகைக் காலத்தை திருத்தி நீட்டித்துள்ளது. ஐந்து ஹெக்டேர் வரையிலான பரப்பளவிற்கு, குத்தகை காலம் அதிகபட்சம் 15 ஆண்டுகள் என்றும், ஐந்து ஹெக்டேருக்கு மேல் ஆனால் 10 ஹெக்டேருக்குக் குறைவான பகுதிகளுக்கு, இது 20 ஆண்டு குத்தகையாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 10 ஹெக்டேருக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு, குத்தகை காலம் 30 ஆண்டுகள் என்றும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.

ஏற்கனவே உள்ள தளங்களுக்கான குத்தகை காலம் ஐந்து ஹெக்டேர் வரையிலான பகுதிகளுக்கு 10 ஆண்டுகள், ஐந்து ஹெக்டேருக்கு மேல் 15 ஆண்டுகள் மற்றும் 10 ஹெக்டேர் மற்றும் அதற்கு மேற்பட்ட பகுதிகளுக்கு 25 ஆண்டுகள் என்றும் இருக்கிறது. இது குத்தகைதாரர் வைத்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அருகிலுள்ள குத்தகைகளை இணைக்கவும் அனுமதித்து கால நீட்டிப்பு பெறவும் வழி சமைக்கிறது என்பது தான் வேதனையானது.

திருத்தப்பட்ட குத்தகை காலங்கள் குறித்த இந்த உத்தரவு சுரங்க உரிமையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை இஷ்டப்படி தாறுமாக செய்யவே உதவும் என்று குவாரி எதிர்ப்பு ஆர்வலர்கள் ஃப்ரண்ட்லைனிடம் தெரிவித்தனர். இரண்டு திருத்தங்களும் – குத்தகை காலங்களை நீட்டித்தல் மற்றும் அருகிலுள்ள குவாரிகளை இணைப்பது – மாநிலம் முழுவதும் சட்டவிரோத குவாரி காரணமாக ஏற்கனவே பெரும் அழுத்தத்தில் இருந்த உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் வாழ்வாதாரங்களை கடுமையாக சேதப்படுத்தும்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் முகிலன் அளித்த மனுவில், கல் குவாரிகளுக்கான நீட்டிக்கப்பட்ட குத்தகை காலம் சட்டவிரோத குவாரியை மட்டுமே ஊக்குவிக்கும் என்று சுட்டிக்காட்டினார். சுரங்க மாஃபியா, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் வலுவான முத்தரப்பு இணைப்பு மாநிலத்தில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தீவிரமாக ஆதரவளிப்பதாக அவர் ஃப்ரண்ட்லைனிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து ஃபிரண்ட்லைன் (மே 15) ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்ட பிறகு சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. முதலமைச்சர் மூத்த அமைச்சர் துரை முருகனை சுரங்கம் மற்றும் கனிமங்கள் இலாகாவிலிருந்து நீக்கி, அதை மற்றொரு அமைச்சரவை சகாவான ரெகுபதிக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து சுரங்கம் மற்றும் கனிமங்கள் ஆணையர் ஏ. சரவணவேல் ராஜை அவர் துறையிலிருந்து மாற்றினார். ( ஆனால், நிலைமைகளில் மாற்றமில்லை)

நன்றி; ‘பிரண்ட் லைன்’

இளங்கோவன் ராஜசேகரன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time