‘ஆன்மீக மையங்கள் எவ்வாறு அதிகார மையங்களாகத் திகழ்கின்றன?’ என்பதற்கு இந்த இடமே சாட்சி..! சட்டமோ, நீதியோ, காவல்துறையோ கூட இங்கே நெருங்க முடியாது. இந்த தர்மஸ்தலாவை சுற்றிலும் பாலியல் கொடுமை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் புதைக்கப்பட்டுள்ளனர், எரிக்கப்பட்டுள்ளனர்.. என்ற தகவல் பெரும் அதிர்வை தந்துள்ளது;
கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் மிகவும் பிரச்சித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். 800 ஆண்டு பழமையான இந்த வழிபாட்டுத் தளம் அடிப்படையில் சமணத்தவர்கள் கோவிலாக இருந்து காலப் போக்கில் சைவ , வைணவ பிராமண அர்ச்சகர்களின் நுழைவால் சிவன் கோவிலாக பிரபலமாகிவிட்டது. கோயிலுக்கு வெளியே உள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினம்தோறும் சுமார் பத்தாயிரம் பேர் அன்னதானத்தின் மூலம் சாப்பிடுகின்றனர்.
இக்கோயில் மூலவர்களாக தங்க சிவலிங்கமாக காட்சி தரும் மஞ்சுநாதரும், சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர். தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தை வீரமன்னா ஹெக்டே என்ற பார்ப்பன வழிவந்த குடும்பத்தினர் நிர்வகிக்கின்றனர். ஆனால் கோயில் பூஜைகளை மத்வரின் துவைத மரபை பின்பற்றும் வைண அந்தணர்கள் கோயில் பூஜைகள் செய்கின்றனர்.

மற்ற இடத்திற்கு இருக்காத ஒரு முக்கியத்துவம் என்னவெனில், இது ஒரு நீதிமன்றம் போலவும் இயங்குகிறது. மஞ்சுநாத சுவாமியின் பிரதிநிதியாக அவரது சன்னதிக்கு எதிரே உள்ள பீடத்தில் அமர்ந்திருக்கும் தற்போதைய ஹெக்டே வழக்குகளை விசாரிக்கிறார். இருதரப்பினரையும் அழைத்து பேசி சமரசப்படுத்தி அனுப்புகிறார் அல்லது தன் தீர்ப்பை வழங்குகிறார். வழக்காடுபவர்கள் அவரது தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொள்வது ஒரு மரபாக உள்ளது. அந்த வகையில் பிரபல அரசியல்வாதிகள் தொடங்கி பலரும் தீர்வு தேடி இங்கு வருவதால், இந்த இடமே பெரிய அதிகார மையமாகிவிட்டது.
இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த மனிதர் வீரேந்திர ஹெக்டே. கர்நாடக மாநிலத்தின் தர்மஸ்தாலவின் அதிபர். மாநில முதல்வருக்கோ இந்தியப் பிரதமருக்கோ இல்லாத அதிகாரம் இவருக்குள்ளது.77 வயதாகும் வீரேந்திரர் ஹெக்டே தனது 21 ஆவது வயதில் இங்கு பொறுப்புக்கு வந்தார். அது முதல் ஆயிரக்கணக்கான வழக்குகளை பைசல் செய்துள்ளார். அவர் சொல்வது தான் சட்டம், நீதி, தீர்ப்பு எல்லாம். இறைவனின் பிரதிநிதியாக இருந்து செயல்படுகிறார் என்ற தோற்றம் அவருக்கு பெரிய பாதுகாப்பை தந்துள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் நான் சொல்வது உண்மை தான் என தர்மஸ்தலாவில் வைத்து சத்தியம் செய்து காட்டுவேன். உங்களால் முடியுமா? என சவால் விடுகின்ற அளவுக்கு இந்த இடத்திற்கு ஒரு மவுசு ஏற்பட்டுள்ளது என்றால், அதன் அதிபர் கடவுளாக பார்க்கப்பட்டது அதிசயமல்ல.
வீரேந்திர ஹெக்டே ஒரு பசுத் தோல் போர்த்திய புலி. அவருக்கு இந்திய அரசின் மிக உயர்ந்த பத்ம விபூஷன் விருது தரப்பட்டுள்ளது. பிரதமர் மோடியே நேரில் வந்து அவருடன் உரையாடி செல்கிறார். அவர் தற்போது பாஜகவால் ராஜ்யசபா எம்.பியாகவும் ஆக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தின் கர்நாடக ரத்னா விருது மாநில அரசால் தரப்பட்டுள்ளது. ஸ்ரீபகவான் மகாவீரர் அமைதி விருது தரப்பட்டுள்ளது…இப்படியான விருதுகளின் பட்டியலே மிக நீளமாக உள்ளது.
ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் இவர் குடும்பத்திற்கு உள்ளன. அந்த ஊரில் உள்ள அனைத்து கடைகளிலும் இவரது புகைப்படம் பிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கும். சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் தங்கள் அறுவடையில் குறிப்பிட்ட பங்கை கோவில் அன்னதானத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாம்.

வீரேந்திர பாட்டிலுக்கு ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அத்துடன் காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்களோடும் நெருக்கம் உண்டு. அவர் என்ன செய்தாலும் அவரை யாருமே பகைத்துக் கொள்ள துணிவின்றி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இவர் விவகாரத்தில் நீதி கேட்டு போராடி உள்ளது.
இங்கு வரும் பெண்கள் காணாமல் மாயமாவது பல்லாண்டுகளாக பேசுபடு பொருளாக உள்ளது. இங்கு மனநிலை சரியில்லாதவர்கள், பில்லி, சூனியம் போன்றவற்றில் சிக்கி தவிப்பவர்கள். பேய், பிசாசு பிடித்தவர்கள் இந்த கோவிலில் ஒரு வாரம் தங்கியிருந்து வழிபட்டு சென்றால், அவர்களின் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்பது போன்ற நம்பிக்கை சார்ந்து வந்து தங்குபவர்களும் தீடீரென மாயமாகிவிடுவார்கள்.
வீடற்றவர்களாக பிச்சைக்காரகளாக இங்கு அலைபவர்களும் தீடீரென்று மாயமாவார்களாம். 2003 முதல் 2013 காலகட்டம் வரையில் 462 அசாதாரண சாவுகளை இந்த இடம் சந்தித்துள்ளது! எனினும், இது வரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது தான் ஆச்சரியம்.

அங்கே வேலை பார்த்த முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர் தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்து தான் தான் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் சடலங்களை புதைத்தவன், எரித்தவன். ..எனச் சொல்லி மண்டை ஓடுகளோடு கோர்ட்டில் ஆஜராகி, தான் இந்த உண்மையை சொல்லியதால், தான் கொல்லப்படலாம் என்பதால் பாதுகாப்பும் கேட்டுள்ளார். இவருக்கு உதவியாக சில வழக்கறிஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் களத்தில் இறங்கி, முழு உண்மைகளையும் வெளிக் கொணர பாடுபட்டு வருகின்றனர்.

தனது குடும்பத்தின் இளம் பெண் ஒருவரையே இந்த ஆன்மீக மையத்தினர் பாலியல் அத்துமீறல் நிகழ்த்திக் கொன்றதையடுத்து அதிர்ந்து அடுத்து தானே கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் இந்த ஊழியர் வேறு மாநிலத்தில் பத்தாண்டுகள் தலைமறைவாக இருந்தார். தற்போது இரு இளம் வழக்கறிஞர்களான சச்சின் தேஷ் பாண்டே, ஓஜஸ்வி கெளடா ஆகியோர் கொடுத்த தைரியத்தால் இவர் உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
முன்னாள் ஊழியர் தான் சடலங்களை புதைத்த இடங்களில் எலும்புக் கூடுகளை தோண்டி எடுத்த பிறகு, நம்பகத் தன்மையை நிலை நாட்டுவதற்காக புகைப்படங்களை தனது ஆதார் அட்டை மற்றும் பழைய ஊழியர் ஐடியுடன் காவல்துறையிடம் சமர்ப்பித்ததாகக் கூறினார்.
2003 ஆம் ஆண்டு கல்லூரி டூரின் போது இங்கு வந்த எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு கல்லூரி மாணவி அனன்யா மாயமானது பெரும் பேசு பொருளானது. அனன்யாவின் அம்மா சுஜாதா கொல்கத்தாவில் சி.பி.ஐ அலுவலகத்தில் வேலை செயபவர். அவர் தீவிரமாக களம் இறங்கிய போது கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் மூன்று மாத சிகிச்சை பெற்றார். காவல்துறை எந்த விசாரணையும் செய்யவில்லை. தற்போது 60 வயதாகும் சுஜாதா தன் மகளுக்கு நீதி கேட்டு பெங்களுருக்கு மீண்டும் வந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு சௌஜன்யா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில் இருண்ட உண்மை முன்னதாகவே வெளிவந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளியின் சமீபத்திய வெளிப்பாடுகள் முழுமையான விசாரணைக்கான அவசர கோரிக்கைகளை மீண்டும் தூண்டிவிட்டன.

தர்மஸ்தலா கூட்டு அத்துமீறல்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது தீவிரமடைந்துள்ளன! நியாயமான, சுயாதீன விசாரணைக்கான முறையீட்டில் இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் பாலன், துவாகநாத் ஆகியோர் முறையாக இணைந்துள்ளனர். இவர்கள் நீதிபதி கோபால் மற்றும் சமூக ஆர்வலர் நரசிம்மன் ஆகியோர் இணைந்து பெங்களுருவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி உள்ளனர்.
Also read
அரசாங்கம் தலையிட்டு சிறப்பு புனலாய்வு குழு அமைத்து நேர்மையான விசாரணை கேட்டுள்ளனர்.இதில் சம்பந்தப்பட்ட நரசிம்ம மூர்த்தியிடம் பேசிய போது, ’’நாங்கள் முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து அனைத்தையும் விளக்கினோம். எனினும் அவருக்கு ஏதோ ஒரு தயக்கம் இருப்பது எங்களுக்கு தர்மசங்கடத்தை தந்தது” என்றார்.
மக்களை பக்தி மயக்கத்தில் ஆழ்த்தி, புனிதப் போர்வையில் பொல்லாச் செயல்களை செய்யும் கொடுரமானவர்களை அரசாங்கம் தண்டிக்காதா? என்ற கேள்விக்கு சமீபத்தில் கர்நாடக துணை முதல்வரான சிவகுமார், ’’அந்த கடவுளைத் தான் நாம் வணங்கி நீதி கேட்க வேண்டும்’’ என்றார். காங்கிரஸ் தலைவர்களே இந்த லட்சணத்தில் தான் உள்ளனர். மக்களிடம் விழிப்புணர்வும், அறச் சீற்றமும் ஏற்படாமல் தீர்வில்லை.
சாவித்திரி கண்ணன்















கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை. ஆனால் பக்தியின் பேரில் வேடம் கட்டி ஆடுவதும் பக்தியின் பெயரில் மூட நம்பிக்கையால் பீடாதிபதிகளுக்கு பலி ஆவதும் உளவியலால் பாதிக்கப்பட்டு மூழ்கி போய் கோயில் நிர்வாகத்துக்கும் அடிமையாவதும் கொலைக்கு நீங்கள் ஆளாவது கடவுளை ஆட்டிப் படைக்கும் நிர்வாகத்துக்கு பலி ஆவது இயல்பே.
இத்தகைய போலி கடவுள் பக்தியின் பேராலேயே இங்கு அரசு செயல்படுவது உங்கள் பலகீனத்தின் அடையாளமே.
இதுதான் இந்திய தேசத்தின் த. ஓ.வி.
. 800 ஆண்டு பழமையான இந்த வழிபாட்டுத் தளம் அடிப்படையில் சமணத்தவர்கள் கோவிலாக இருந்து காலப் போக்கில் சைவ , வைணவ பிராமண அர்ச்சகர்களின் நுழைவால் சிவன் கோவிலாக பிரபலமாகிவிட்டது. // Hiding and distorting the whole history of violent destroyal of jainism and buddhism…