அமெரிக்கா வாழ்வதற்காகவும், தன் அதிகாரத்தை நிலை நாட்டவும் டிரம்ப் மற்ற நாடுகளுக்கு கண்டிஷன் போடுகிறார். சுயாதீனமுள்ள இந்தியாவை ஆட்டிப் படைக்க துடிக்கிறார். இஸ்ரேல், ஈரான், ரஷ்யா விவகாரத்தில் நமது தனித்துவத்தை பேணாமல் அமெரிக்க சார்பை வெளிப்படுத்திய மோடி, தற்போது தன்மானத்தை தொலைத்து எப்படியெல்லாமோ தவிக்கிறார்;
இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக கச்சா எண்ணெயை நீண்ட காலமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. நமது தேவையான கச்சா எண்ணெய்யில் 87.7% அளவு நாம் இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறோம்.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் – கச்சா எண்ணெய் உட்பட- அளவை அதிகரிக்க இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அதோடன்றி, மற்ற நாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை குறைக்க நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறார்.
பொதுவாக இந்தியா மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், சவுதி அரேபியா மற்றும் யு ஏ இநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறாம். ஆனால், டிரம்ப்பின் அழுத்தத்தால் இந்தியா ஈரான் நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை 2017 முதல் குறைத்து விட்டது . அதே சமயம் டிரம்ப்பின் வற்புறுத்தலின் பேரில், அமெரிக்காவிடமிருந்து
இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு (2025ல் மட்டும்) கடந்த நான்கு மாதங்களில் 270% கூடியிருக்கிறது. 1.69 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இறக்குமதி யின் அளவு இப்பொழுது 6.3 மி.மெ.டன்னாக கூடியுள்ளது. மோடியை விசுவாமித்திரன் என்றும் , அவர் வழிகாட்டுதலில் இந்தியா “விக்சித் பாரதமாக” மாறுகிறது என்றும் ‘புருடா’ விடும் ஜால்ராக்கள், டிரம்பிடம் மோடி மண்டியிடுவதை மறைத்து கதை கட்டுகின்றனர்.

அமெரிக்க இந்தியா இடையே வரி ஒப்பந்தங்கள் இன்னும் இழுபறியாகவே உள்ள நிலைமையில், வர்த்தக உறவுகள் ஊசாலாடும் இந்த வேளையில் மீண்டும் டிரம்ப் ரஷ்யா நாட்டின் மீது இரண்டாம் நிலை பொருளாதார தடைகளை (secondary sanctions) விதிக்க 50 நாட்கள் கெடுவிதித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகியவற்றின் மீதும் 100% வரி விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளார் டிரம்ப்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கிடைக்காவிடில் இந்தியா – கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் . உலகளாவிய விலைகள் ஏற்கனவே நிலையற்றதாக இருக்கும் நேரத்தில், இந்த நடவடிக்கை எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்து செலவுகளை அதிகரிக்கக் கூடும்.
அமெரிக்க மிரட்டலை கண்டு சீனா அஞ்சப்போவதில்லை என்பது உலகறிந்த உண்மை!
ஏனைய பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றான பிரேசிலோ, டிரம்ப்பின் மிரட்டலை கடுமையாக கண்டித்துள்ளது. பிரேசில் அதிபர் லூலு , “ டிரம்ப் அமெரிக்காவுக்குதான் அதிபரே ஒழிய , அகில உலகிற்குமான சக்கரவர்த்தி அல்ல, எனவே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்.?” என கடுமையாக சாடியுள்ளார்.

“ ஒரு கிரிங்கோ “ கூறுவதை பிரேசில் நாடு ஒருபோதும் ஏற்காது என்று லூலு பதிலடி கொடுத்துள்ளார். ( வெள்ளையர்களை நாம் பாரதியின் மொழியில் பரங்கியர்கள் பரங்கித்தலையர்கள் என்று ஏளனம் செய்வதை போன்று அமெரிக்கர்களை ஏனைய தென் அமெரிக்க நாட்டுமக்கள் ‘கிரிங்கோ’ என்ற அடைமொழியிட்டு அழைப்பர்)
ஆனால், இந்தியா இந்த அக்கிரமத்தை , அப்பட்டமான மிரட்டலை எதிர்த்து குரல் கொடுத்துள்ளதா?
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரூட் அவரது பங்கிற்கு இந்தியா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகளை ரஷ்யாவுடன் வணிகம் செய்யாதீர்கள் என எச்சரித்துள்ளார். மீறி இறக்குமதி செய்தால் உங்கள் நாட்டு பொருட்களின் மீது கடுமையான நூறு சதவிகித வரி விதிக்கப்படும் என்று பரமசிவன் கழுத்து பாம்பு போல சீறுகிறார். மோடியின் இந்தியா இதை எதிர்த்து முணுமுணுக்க கூட முயலவில்லை.
ஒரு வேளை 2022-ல் ரஷ்யாவின் மீது பைடனின் அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் விதித்த தடையை சமாளித்தது போல் இப்பொழுதும் சமாளித்து விடலாம் என்ற எண்ணமா?
ரஷ்யா ஏற்றுமதி செய்யும் முக்கிய பொருட்களில் ஒன்றான கச்சா எண்ணெய்யை சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் இறக்குமதி செய்து வந்தன. இந்தியா 2022க்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு ஏறத்தாழ 1% மாகவே இருந்தது. தடைகளுக்கு பிறகு ரஷ்யா அளித்த விலைச் சலுகையினால் இந்தியா கச்சா எண்ணெய்யை (நமது தேவையில் 44% வரை ) பெருமளவு இறக்குமதி செய்தது.
இதை எதிர்த்த மேலை நாடுகளின் கண்டனங்களையோ, விமர்சனங்களையோ இந்தியா பொருட்படுத்தவில்லை, எங்களது நாட்டின் தேவைகளுக்காக நாங்கள் இறக்குமதி செய்வதில் அரசியல் கண்ணோட்டமில்லை என்று கூறியது.
உலகச் சந்தையின் விலையில் பாதி விலைக்கு கிடைத்த ரஷ்யாவின் கச்சா எண்ணெயினால் கிடைத்த (ஆதாயத்தை) பயனை, சீன மக்களுக்கு வழங்கியது சீன அரசு.
ஆனால், மோடியின் இந்தியா செய்த காரியம் என்ன?.
ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இந்திய பொதுத்துறை நிறுவனங்களான , ONGC , IOCL,BPCL, HPCL மற்றும் GAIL போன்ற நிறுவனங்களுக்கு மோடி அரசு வழங்கவில்லை.
அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு இந்த அனுமதியை மோடி வழங்கியது. குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த அம்பானி தனது ஜாம்நகர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் (Jamnagar Refinery ,Gujarat) அவற்றை சுத்திகரித்து டீசலாகவும், பெட்ரோலாகவும், விமானங்களுக்கான எரிபொருளாகவும் மாற்றி அமெரிக்க நாட்டிற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொள்ளை விலையில் விற்று (ஏற்றுமதி செய்து) லாபமீட்டினார் . அவ்வாறு அம்பானி ஈட்டிய ஒரு ஆண்டின் லாபம் மட்டும் 6,890 கோடிகள் என்று அமெரிக்க நிறுவனமான CREA (Centre for Research on Energy and clean Air) கூறியுள்ளது.
இந்த கொள்ளை மூன்று ஆண்டுகளாக தொடருகிறது.
இந்திய மக்களாகிய நாம் , பெட்ரோல் மற்றும் டீசலை அதிக விலை கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம் .
உலகில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியால் குருட்டுதனமாக ஒரு நற்பயன் விளைந்தால் கூட, அந்தப் பலனை மக்களுக்கு அளிக்காமல் அம்பானியின் பாக்கெட்டுகளில் நிறைத்த மகிமை மோடியை மட்டுமே சேரும்.
அம்பானி ஆயிலில் (கச்சா எண்ணெய்) கொள்ளையடித்தால் அதானி நிலக்கரியில் தனது கொள்ளையை நடத்த மோடி அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.
உக்ரைன் யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால், ஃபாசில் ப்யூயல் (Fossil fuels) என்று அது வரை புறக்கணிக்கப்பட்ட நிலக்கரியின் தேவை பன்மடங்காக பெருகியது. அதன் உற்பத்தியும் பயன்பாடும் நிலக்கரிக்கு அபரிமிதமான லாபத்தை (முப்பது விழுக்காடு உயர்வு) கட்டியங்கூறியது.
மோடியின் நண்பர்களான அதானியும், அம்பானியும் எரிசக்தி, புதுப்பிக்கும் ஆற்றல் மற்றும் புதைந்து கிடக்கும் எரிபொருள் உற்பத்தி ஆகிய துறைகளில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு உதவும் வகையில் மோடி அரசின் கொள்கை சலுகைகளும், வங்கி கடன்களும், ஏல உதவிகளும் , வரி விலக்குகளும் அமைந்து உள்ளன என்றால் மிகையல்ல.
அம்பானிக்கு கச்சா எண்ணெய் மலிவு விலையில் கிடைக்க உதவுகின்ற மோடி, அதானிக்கு உலகம் முழுவதும் நிலக்கரி சுரங்கங்களை அமைக்கவும், அவற்றில் உற்பத்தி செய்து வினியோகிக்க தேவையான அரசு தலையீடும்,
முதலீட்டிற்கு வசதியான கடன்களும் ( SBI Loan for Carmichael Mine Plant , Australia) துறைமுக வசதிகளையும் தாரை வார்த்து கொடுத்து உற்ற நண்பனாக தன்னை நிலைநாட்டி வருகிறார்.
உக்ரைன் யுத்தத்தின் விளைவாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய மற்றும் எரிவாயுவையும் (natural gas) தவிர்த்து வருவதால், அதற்கு மாற்றாக நிலக்கரி இருப்பதால் அதன் தேவை இப்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது. ரஷ்ய எண்ணெய்யை நேரடியாக வாங்காமல் மேலை நாடுகள் , அதே எண்ணெய்யை அம்பானி சுத்திகரித்து கொடுப்பதை அதிக விலை கொடுத்து வாங்கும் “அறிவாளிகளாக” இருப்பதால், அம்பானியும், அதானியும் (நிலக்கரி) கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர்.

உக்ரைன் யுத்தத்தினால் அம்பானியின் சொத்து மதிப்பு முன்பிருந்ததை விட 8 பில்லியன் டாலர் (1பி.டாலர்= 8600 கோடி ரூ) உயர்ந்து 92.4 பி. டாலராக உயர்ந்துள்ளது என்றும், அதானியின் மதிப்போ 25 பி.டாலர் உயர்ந்து 106 பி. டாலர்களாக உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் பத்திரிக்கை கூறுகிறது.
இவ்விரு குஜராத்திய முதலாளிகளுக்கு அரசு அனுமதிகளும், சலுகைகளும்,வங்கி மற்றும் எல் ஐ சி கடன்களும் , அளித்து பாதுகாப்பு அரணும் கொடுத்து வளர்ப்பது குஜராத்தை சேர்ந்த
மோடி -அமித்ஷா அரசின் கொள்கைகளாக இருப்பது தற்செயலான நிகழ்வா? அல்லது திட்டமிட்ட நகர்வுகளா?
இந்தியாவின் பொதுத் துறைகளை, பொது சொத்துக்களை பேணுவதை, அவற்றை வளர்த்தெடுப்பதை நிராகரித்து, அவற்றை முடக்குவது அல்லது அடிமாட்டு விலைக்கு இந்த முதலாளிகளுக்கு விற்பது மோடி அரசின் கொள்கையாக இருக்கிறது.
Also read
சுற்றுப்புற சூழல் விதிகளை தளர்த்தி, கனிம வளச் சுரங்கங்களை தாரை வார்த்து இந்த முதலாளிகளை ஊக்குவிப்பதும், விமானத் தளங்கள், துறைமுகங்களை இம்முதலாளிகள் கைப்பற்ற உதவுவதும் மோடி அரசின் கொள்கையாக உள்ளது.
நிலக்கரி வாங்குவதிலும், மின் உற்பத்தியிலும் அதன் வினியோகத்திலும் அதானி கொள்ளையடிக்க அனுமதிப்பதும் , அவர்தம் மோசடிகளை நீதிமன்றங்கள் தண்டிக்காத வகையில் பாதுகாப்பு கொடுப்பதும் மோடி அரசின் எழுதப்படாத கொள்கையாகவும் இருக்கிறது.
போரின் விளைவாக குறைவான விலையில் கிடைக்கும் எண்ணெயின் பயனை மக்களுக்கு அளிக்காமல் அம்பானி கொள்ளையடிக்க அனுமதித்ததும் மோடி அரசு தான்.
இனி வரப் போகும் பொருளாதார தடையும் இந்த குஜராத்தி கும்பலுக்கு புதிய வழிகளை திறக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் கவனிக்க வேண்டும்.
ச. அருணாசலம்



















Leave a Reply