ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் தூய்மையான நகரங்களுக்கான மதீப்பீடுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து பின் தங்கியே உள்ளது. மற்ற சிலவற்றில் தமிழகம் முன்னேறி உள்ளது ஆனால், உள்ளாட்சி நிர்வாகத்தில் ஏன் இந்த பெரும் பின்னடைவு?
பொதுவாக இந்தியா என்றால், மக்கள் நெரிசல் மிகுந்தது. நாற்றமெடுக்கும் சாக்கடைகள், ஒழுங்கமைவற்ற சாலைகள், குப்பைகள் மிக்க தெருக்கள், கழிவு மேலாண்மையில் பின்னடைவு, ஆறுகளின் கரைகளில் பாலீதீன் பைகள் மற்றும் பிளாஷ்டிக்கின் குவியல், பிளாட்பாரங்களை ஆக்கிரமித்த வியாபாரங்கள், பொது வழியை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்..இவை தாம் நம் நினைவுக்கு வரும்.
உலகமயம், தாரளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாமும் நம் நகரங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் சுவச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையை கணக்கெடுக்கும் பணியை ஆண்டுதோறும் செய்கிறார்கள். தூய்மையை நோக்கிய இந்திய நகரங்களின் பயணம் என்ற வகையில் ஸ்வச் சர்வேக்சன் திட்டமாம்! மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தல், வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு, நீர் நிலைகளின் துாய்மை, குடியிருப்புப் பகுதிகளின் துாய்மை மற்றும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விழாவை டெல்லியில் நடத்தி விருதுகளை குடியரசு தலைவர் மூலம் விருதுகளை வழங்குகிறார்கள்.

இதில், இந்த ஆண்டும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 8வது முறையாக தொடர்ந்து முதல் இடம் பிடித்து இந்த பெருமையை தக்க வைத்து கொண்டது. 2வது இடம் சூரத்திற்கும், 3வது இடம் நவி மும்பைக்கும் கிடைத்துள்ளது. நான்காவது நகரமாக ஆஇந்திராவின் விசாகப்பட்டினம், ஐந்தாவதாக மத்தியப் பிரதேசத்தின் போபால், ஆறாவதாக ஆந்திராவின் விஜயவாடா, ஏழாவதாக புதுடெல்லி, எட்டாவதாக கர்நாடகாவின் மைசூர், ஒன்பதாவதாக யூனியன் பிரதேசமான சண்டிகர், பத்தாவதாக குஜராத்தின் அகமதாபாத் ஆகிவை வருகின்றன.
நாடு முழுக்க உள்ள 446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து இந்த ஸ்வச் சர்வேக்ஷன் முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளதின்படி முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டின் எந்த நகரமும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது..

இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாகும், ஏனெனில் இங்கு நன்கு திட்டமிடப்பட்ட கழிவுப் பிரிப்பு, மாற்றியமைத்தல் மற்றும் அகற்றல் ஆகியவை உள்ளன. கழிவுகளை பூஜ்ஜியமாக்குதல் , கார்பன் மேலாண்மை, கழிவுகளை பயன் படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றுதல் ஆகியவற்றுக்கு இது நன்கு அறியப்பட்டதாகும். விரிவான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திட்டமிட்ட கழிவுகளை அகற்றுதல், குப்பைகள் அள்ளுவது, மூடப்பட்ட சாக்கடைகள் போன்றவை சிறப்பாக இந்த நகரின் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. நகரத்தின் திறமையான கழிவு மேலாண்மை அமைப்பு என்பது மூலத்திலேயே கழிவுகள் பிரிக்கப்பட்டு பரவலாக பல ஆலைகளில் பதப்படுத்தப்படுகிறது!

குஜராத்தின் சூரத்; வைரம் மற்றும் ஜவுளித் தொழில்களுக்குப் பிரபலமான இந்த தொழில்துறை நகரம், வளர்ச்சியடைந்து இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்குதல், சுத்தமான காற்று செயல் திட்டங்கள், நீர் சுத்திகரிப்பு கூடுதலாக, இந்தியாவின் 2வது தூய்மையான நகரத்தில் தூய்மையைப் பாதுகாப்பது மாறும் மாற்றங்களின் ஒரு பகுதியாக இருப்பதை நகராட்சி நிறுவனம் உறுதி செய்தது.
நவி மும்பை; இது இந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் ஒன்றாகும். குறைந்தபட்ச கழிவுகள், மீண்டும் பயன் படுத்தக்கூடியவை மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் போன்ற நடைமுறைகள் நவி மும்பை மக்களிடையே இயல்பாகிவிட்டன. அதிக மக்கள் தொகை கொண்டிருந்தும் தூய்மை பட்டியலில் இடம் பெற முடிவது சிறப்பாகும்.

மொத்தம் 466 நகரங்களை கொண்ட இந்த லிஸ்டில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. அதே சமயம் அதிக மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்கள் மொத்தம் 45 எனக் கணக்கிடப்பட்டதில் 44 இடத்தில் சென்னையும், 45 வது இடத்தில் மதுரையும் வருகின்றன. தற்போது பெரு நகர பட்டியல் நாற்பது என மதிப்பிட்டதிலும் கடைசியாக மதுரை இடம் பிடித்துள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாடு பொருளாதாரத்தில், கல்வியில், தரமான மருத்துவமனைகள் என்பதில் எல்லாம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என நமது ஆட்சியாளர்கள் அடிக்கடி பெருமைபட்டுக் கொள்கின்றனர். இவை யாவும் தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சாதனையாகத் தான் கொள்ள முடியும். உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகத்தில் நாம் எவ்வளவு பின் தங்கு உள்ளோம் என்பதற்கு இந்தப் பட்டியலில் நாம் மிகவும் பினதங்கி இருப்பதே சாட்சியாகும்.

இந்தியாவிலேயே உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் முறைகேடுகளில் சாதனை படைக்கும் நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்குமானால் தமிழகத்தின் பல முக்கிய பெரு நகரங்கள் முதல் பத்து இடங்களை பிடித்திருப்பார்கள்.
பொதுக் கழிப்பிடங்களை பராமரிப்பதில் மிகவும் பின் தங்கி உள்ளோம். இதே போல நீர் நிலைகளை பராமரிப்பதில், குப்பைகளை தரம் பிரித்து உரமாக்குதல், மற்றும் மறு சூழற்சிக்கு பயன்படுத்துதலில், சாலைகளை, தெருக்களை பராமரிப்பதில் உள்ளாட்ச்சி அமைப்புகளும் பின் தங்கி உள்ளன. மக்களின் பங்களிப்போ மிகவும் மோசமாக உள்ளது. நாம் நம்மை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply