அன்வர்ராஜா அதிமுகவில் சந்தித்த அவமானங்கள்!

-சாவித்திரி கண்ணன்

அன்வர் ராஜாவின் விலகல் பின்னணி என்ன? திமுகவில் சேர்ந்தது ஏன்? அதிமுகவிற்குள் மன உளைச்சலில் இருக்கும் சிறுபான்மைத் தலைவர்களை அரவணைப்பதில் எடப்பாடிக்கு இருக்கும் இயலாமை இன்னும் பல சேதாரங்களை உருவாக்கலாம். அன்வர் ராஜாவின் விலகல் சொல்லும் செய்தி என்ன?

நீண்ட நெடிய திராவிட இயக்க பாரம்பரியமுள்ள ஒரு தலைவரான அன்வர் ராஜாவால் அதிமுகவில் தொடர முடியாமல் போகிறது என்றால், அதிமுக தன் இயல்பில் இருந்து தடம் மாறியதே காரணமாகும்.

எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார யாத்திரையில் அவர் பேசிக் கொண்டிருக்கும் பாதி விவகாரங்கள், ’பாஜகவின் ஸ்கிரிப்டோ’ என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

திமுகவை கேள்வி கேட்பதற்கான எத்தனையோ மக்கள் பிரச்சினைகளில் மெளனம் சாதித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியார், கவைக்குதவாத பாஜகவின் இந்துத்துவா அஜந்தாவின் குரலை ஒலிக்கத் தொடங்கிய பிறகு அன்வர்ராஜா போன்ற சிறுபான்மை தளபதிகள் எப்படி அங்கு தொடர முடியும்..?

இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே, அன்வர் ராஜாவின் இராமநாதபுரம்  நாடாளுமன்றத் தொகுதியில் ஒபிஎஸ் நின்று, பாஜக ஆதரவிலும், தன் முக்குலத்தோர் சாதியின் ஆதரவிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி அதிக ஓட்டை வாங்கி இருந்தார். அப்போது அதை தடுக்க முடியாதவராக செயல் இழந்து அன்வர் ராஜா இருந்தார் என்ற வருத்தம் அதிமுக தலைமைக்கு இருந்தது.

பிறகு, சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அன்வர்ராஜா வலியுறுத்திய போது, அதை தன் தலைமைக்கான அச்சுறுத்தலாக பழனிச்சாமி பார்த்துள்ளார்.

இதற்கு பிறகு அன்வர் ராஜாவிடம் முகம் கொடுத்து பேசுகின்ற மன நிலையைக் கூட எடப்பாடி பழனிச்சாமி இழந்துள்ளார். பல வகையில் தன் உறவை புதுப்பித்துக் கொள்ள அன்வர்ராஜா முயன்றும், அவரால் முடியவில்லை. இபிஎஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டில் அன்வர் ராஜா இருந்ததால் அவருக்கு 2021 தேர்தலிலும், 2024 மக்களவை தேர்தலிலும் அன்வர் ராஜாவுக்கு  போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, பாஜகவின் ஆதிக்கம் அதிமுகவில் கொடிகட்டிப் பறக்க தொடங்கியதையும் அவர் பதற்றத்துடனே பார்த்து வந்தார். எனினும், அவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றாளர் என்ற வகையில் வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல், தொடர்ந்து அதிமுகவிலேயே சமாளித்து வந்தார். இதனால்,  தன்னுடைய சிறுபான்மை சகோதர்களிடம் இருந்தே தான் அன்னியப்பட நேரிடும் என்ற அச்ச நிலைக்கு அவர் வந்தார்.

அப்போதும் கூட அவர் அதிமுக தலைவர் எடப்பாடி மீது நம்பிக்கை வைத்தே இருந்தார் என்பது சில நாட்களுக்கு முன்பு இந்து தமிழ் திசை நாளிதழில் சபிமுன்னாவிற்கு தந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியும், சொல்லப்பட்ட பதிலும் சாட்சியாகிறது;

“இபிஎஸ் தனது சுயநலத்திற்காக அதிமுக-வை பாஜக-விடம் அடமானம் வைத்து விட்டதாக வரும் விமர்சனங்களை கவனிக்கிறீர்களா?”

“இந்த விமர்சனத்தில் உண்மை இல்லை. அதிமுக-வை யாரும் யாரிடத்திலும் அடமானம் வைக்க முடியாது. இன்றுவரை அதிமுக-​வின் காப்பாளராகவே இபிஎஸ் விளங்கி வருகிறார்” என்று பதிலளித்திருந்தார் அன்வர் ராஜா.

இந்த நேர்காணலுக்கு பிறகாவது அன்வர் ராஜாவை இ.பி.எஸ் அழைத்து பேசி தங்கள் உறவை புதுப்பித்து இருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, அந்த பேட்டியில், பாஜக ஒரு போதும் தமிழ்நாட்டில் காலூன்றாது என்ற அவரது பகிரங்க பாஜக எதிர்ப்பை பழனிச்சாமி ரசிக்கவில்லை போலும்.

மற்றொரு பக்கம் பாஜகவிற்குள் அண்ணாமலை கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொன்னது சொன்னது தான். அதையே நானும் வலியுறுத்தி சொல்வேன் என்று அடாவடியாக பேச முடியும் போது அதிமுகவிற்குள் இருந்து ஒரு பாஜக அதிருப்தி குரலையும் அனுமதிப்பது தானே அரசியலில் சமநிலை பேண உதவும்.

அரசியலில் அன்வர்ராஜா இ.பி.எஸ்ச்சை விட மூத்தவர். திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்தவர். பாஜகவின் ஆதிக்கம் அதிமுகவிற்கு ஊடுறுவி வருவதை கவலையோடும், பதற்றத்துடனும் பார்ப்பவர். அப்படிப்பட்டவரை அரவணைத்து அரசியல் செய்வது தான் ஒரு நல்ல தலைமைக்கான தகுதியாகும். அந்த மன முதிர்ச்சி எடப்பாடி பழனிச்சாமிக்கு அறவே இல்லை என்பதே யதார்த்தம். இதன் விளைவாக அன்வர்ராஜாவை அதிமுக இழந்துள்ளது.

பாஜகவினால் இன்றைக்கு இந்தியாவில் இஸ்லாமியர்களின் இயல்பான இருப்புக்கே ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில், பாஜகவோடு கூடா கூட்டணி கண்ட அதிமுக தலைமை தன் கட்சியில் உள்ள – சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் – மிக மூத்த தலைவர் ஒருவரை சர்வ சாதாரணமாக புறக்கணித்து வெளியேற்றி இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இதை ஒரு தனி நபர் விவகாரம் என்று இ.பிஎஸ் கருதுவார் என்றால், அதை விட அறியாமை வேறில்லை. அதிமுகவில் சிறுபான்மையினர் இருப்பதற்கு வழிவகையற்ற நிலை உருவாகிவிட்டதோ என்ற தோற்றத்தை இது வலுப்படுத்தும் என்ற அடிப்படை அரசியல் புரிதல் கூட பழனிச்சாமிக்கு இல்லாமலிருப்பது அதிமுக என்ற திராவிட இயக்க வழி வந்த ஒரு அரசியல் இயக்கத்தின் அழிவுத் தான் வழி வகுக்கும்.

பாஜகவினால் எடப்பாடி பழனிச்சாமி தன்னை தொலைத்துக் கொண்டிருப்பதையே இன்னும் உணர்ந்த பாடில்லை எனும் போது, கட்சி தொலைந்து கொண்டிருப்பதை உணர, இன்னும் சில காலமாகும் அவருக்கு!

பாஜகவை எதிர்ப்பதற்கும், இஸ்லாமியர் பாதுகாப்பிற்கும் தமிழ்நாட்டில் திமுக ஒன்று மட்டுமே வாய்ப்பாக இருக்கிறது என்பதே யதார்த்தம். அகவே, அன்வர் ராஜாவுக்கு இது ஒன்று மட்டுமே வாய்ப்பாக இருந்துள்ளது.

இப்படி திமுக மட்டுமே  ஒற்றை வாய்ப்பாக இருப்பதுவும் நடைமுறையில் நல்லதில்லை. இது, சிறுபன்மையினருக்கு தங்களை விட்டால் வேறு கதியில்லை. என்ற மமதையை திமுகவிற்கு தந்துவிடும். கிட்டத்தட்ட தற்போதைய நிலையே கூட இப்படித்தான் இருக்கிறது. அரசியலில் சிறுபான்மையினரை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம், கேள்வி கேட்க நாதியில்லை என்ற மனநிலை திமுக போன்ற கட்சிகளுக்கு வலுப்படுவதும் நல்லதல்ல.

ஏற்கனவே  அதிமுக கூட்டணியில் இருந்த தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சியை தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டது, அதிமுக தலைமை. அதன் விளைவாக, அவரும் திமுக பக்கமே நகர்ந்துள்ளார் என்பது கவனத்திற்கு உரியதாகும்.

அதிமுக என்ற திராவிட வழி வந்த இயக்கத்திற்கு மத அடிப்படை வாத சித்தாந்ததில் உடன்பாடு இல்லை என்றாலும், அதன் பாஜக சகவாசம் அதை இஸ்லாமியர்களிடம் இருந்து முற்றிலும் அன்னியப்படுத்திவிடும். ஆகவே, பாஜக பிடியில் இருந்து விடுபடாத வரை அதிமுகவிற்கு விடிவு இல்லை.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time