அதிகார ஆட்டத்தில் ‘அவுட்’டான ஜெகதீப் தன்கர்!

-சாவித்திரி கண்ணன்

குடியரசுத் தலைவரான திரெளபதி முர்முவே ரப்பர் ஸ்டாம்பாக நமக்கு கட்டுப்பட்டு இருக்கும் போது  தன்கர் ஏன் அடிக்கடி தகராறு பண்ணிக் கொண்டே இருக்கிறார்…? ‘இருப்பவர்களிலேயே நானே அறிவாளி’ என்று அடிக்கடி காட்டிக் கொள்கிறார். ‘இவர் ஒத்து வருவாரா? அல்லது ஒதுங்கி போவாரா? அவரே முடிவு செய்யட்டும்’ என அவரது ஈகோவை சீண்டிப் பார்த்தனர்;

தீவிரமான சனாதனவாதி! ‘பார்ப்பனியத்தின் நலனே பாரதத்தின் நலன்’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

உடல் மொழியில் அதிகாரத் திமிரும். உள்ளத்தில் ஆணவச் சிந்தனை போக்கும் ஒருங்கே அமைந்தவர். இவர் குடியரசு துணைத் தலைவரான போதே, ‘இந்திய ஜனநாயகத்திற்கு போதாத காலம்’ என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் போது இவர் அந்த மாநில அரசை அப்படி ஆட்டுவித்தார். மம்தா பானர்ஜியை அவ்வளவு மட்டமாக பாவித்தார். பொறுத்துப் பொறுத்து பார்த்த மம்தா ஒரு கணத்தில் பெண் புலியாய் மாறி சீறினார். தன்கர் கார் மேற்குவங்க சாலைகளில் சென்றாலே மக்கள் கருப்பு கொடியை தூக்கி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கும் அளவுக்கு அங்கு இவர் ஒரு கொந்தளிப்பை உருவாக்கினார்.

ஆகா, இத்தகைய அராஜகப் பேர் வழியல்லவா நமக்குத் தேவை என பாஜக இவரை குடியரசு துணைத் தலைவராக்கியது. வழக்கம் போல அங்கும் தன் அதிகார பலத்தையும், ஆணவப் போக்கையும் வெளிப்படுத்தினார் விளைவு,  ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் அளவுக்கு எதிர்கட்சிகள் கொந்தளிப்பு மனநிலைக்கு சென்றன.

அதோடு விட்டாரா? ”ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக் கெடு நிர்ணயிப்பதா?” என்று உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும் தன் உக்கிரத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது பாஜகவிற்குள் நடந்துள்ள அதிகார மோதலில், தான் தோற்கடிக்கப்பட்டதில் சமநிலை இழந்து ராஜினாமா செய்துள்ளார். அவரை ராஜினாமா செய்ய வைப்பதற்காகவே அவர் அவமானப்படுத்தப்பட்டாரா..? அல்லது ‘இனியும் இங்கே காலம் தள்ள முடியாது’ என தனக்குத் தானே கல்தா கொடுத்துக் கொண்டாரா?

தெரியாது. எப்படி இருப்பினும் மகிழ்ச்சியே. இப்படிப்பட்டவர்கள் வெளியேறுவது ஜனநாயகத்திற்கு நல்லது. இவரது ராஜினாமாவையடுத்து திமுக எம்.பி திருச்சி சிவா, தன் எக்ஸ் தளத்தில் ஜெகதீப் தன்கரை ‘ஆகா, ஒகோ’ என புகழ்ந்து தள்ளி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சந்தர்ப்பவாத சாகஸ்த்தில் தோய்ந்து எழுந்தவர் ஜெகதீப் தன்கர்.

உச்சகட்ட சுயநலவாதி. ‘தன் நலமே பிரதானம்’ என வாழ்ந்தவர்.

1989 -ல் காங்கிரஸ் கட்சியில் போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டை வைத்து வி.பிசிங் வெளியேறிய போது அவருக்கு ஆதரவாக ஒரு பேரலை நடெங்கிலும் உருவானது. அப்போது வி.பி.சிங்கின் கட்சியில் சேர்ந்து  நாடாளுமன்றத் தேர்தலில் ஜூன் ஜூலு  தொகுதியில் வெற்றி பெரும் வாய்ப்பு பெற்றார்.

இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் வி.பி.சிங் வீழ்த்தப்பட்ட போது, அவருக்கு துரோகம் செய்து சந்திரசேகரோடு சேர்ந்து அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார்.

அந்த சந்திரசேகர் அரசை காங்கிரஸ் கவிழ்த்தியவுடன் காங்கிரஸுக்கு தாவினார், தன்கர். காங்கிரசிலும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றார். நல்வினையாக தோல்வியைத் தழுவினார். அதே சமயம் அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்று எம்.எல்.ஏஆனார். இப்படி காங்கிரசிலும் நன்கு அனுபவித்தார்.

அதன் பிறகு வாஜ்பாய் தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, பாஜகவிற்கு போய் பசை போல ஒட்டிக் கொண்டார். இங்கும் ஆளுநர் பதவி , குடியரசுத் துணைத் தலைவர் பதவி என ஜமாய்த்தார்.

சமீபத்திய சூழலில் அவருக்கும், பாஜக தலைமைக்கும் சில முரண்பாடுகள் தோன்றியுள்ளன.  நேற்று, மதியம் 12:30 மணிக்கு ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இதில் ஜே.பி. நட்டா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு, கூட்டம் மீண்டும் மாலை 4:30 மணிக்கு கூடும் என்று முடிவு செய்யப்பட்டது.

மாலை 4:30 மணிக்கு, கூட்டம் ஜெகதீப் தன்கர் தலைமையில் மீண்டும் கூடிய போது அக் கூட்டத்தில் ஜே.பி நட்டா மற்றும் ரிஜிஜு ஆகியோர் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இரண்டு மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்ளாத நிலையில் கூட்டத்தை எப்படி நடத்துவது? இப்படி கலந்து கொள்ளாத போது ஜெகதீப் தன்கருக்கு தனிப்பட்ட முறையில் சம்பந்தட்டவர்கள் தாங்கள் வர இயலாத நிலை குறித்து தொலை பேசியில் தெரிவித்து விலக்கு கேட்பது என்பது நடைமுறை வழக்கம். ‘இந்த குறைந்தபட்ச மரியாதைக்கு கூட  நான் தகுதியற்றவனாகிவிட்டேனா..?’ என்ற கோபம் அவருக்கு இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து அவர் கூட்டத்தை அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு மாற்றி அறிவித்துச் சென்ற நிலையில், இரவில் அவரிடமிருந்து ராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மோடி, அமித்ஷா, ஜே.பி நட்டா, கிரண் ரிஜ்ஜு, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் என ஒரு அதிகாரமிக்க குழு ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இவர்களை முழுமையாக அனுசரித்தால் மட்டுமே எந்த அதிகாரத்திலும் ஒருவர் தொடர முடியும். ஜெகதீப் தன்கர் அடங்கி நடக்கும் குணாதிசியம் இல்லாதவர். அவர் தனித்துவிடப்பட்டவர்.  தங்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால், அவரால் எதையும் செய்ய முடியாது என்பதை அவ்வப்போது அந்தக் குழுவினர் உணர்த்தியே வந்துள்ளனர்.

எனவே, அடங்கா தன்மை கொண்ட அவரோடு தொடர்ந்து வேலை குறித்து மிகவும் தீவிரமான ஏதோ ஒரு சர்ச்சை நடந்திருக்கிறது. அதன் விளைவே அவர் உடல் நிலையைக் காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார். இதை எதிர்பார்த்து காத்து கிடந்ததை போலவே அவரை சமாதானப்படுத்தும் எந்த முயற்ச்சியும் இல்லாமல் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.

உடல் நிலை சரியில்லாமல் எத்தனை நாள் மருத்துவமனை படுக்கையில் சிகிச்சை பெற்றார், தன்கர்? அவர் சபையை நடத்திய போது எவ்வளவு எனர்ஜெட்டிக்காக வெளிப்பட்டார் என்பதை அனைத்து உறுப்பினர்கள் மாத்திரமல்ல, நேரலை வாயிலாக இந்த நாட்டு மக்களே அறிவார்களே!

10 நாட்களுக்கு முன்பு கூட, ”ஆகஸ்ட் 2027ல் தான் நான் ஓய்வு பெறுவேன்” என பகிரங்கமாக அவர் பேசி உள்ளாரே!

விவகாரம் என்னவென்றால், ஒருவர் ராஜினாமா செய்வது அவரது விருப்பம். ஆனால், ‘தான் என்ன காரணத்திற்காக அதிரடியாக ராஜினாமா செய்ய நேர்ந்தது என்பதைக் கூட வெளிப்படுத்த இயலாதவராக நாட்டின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் வைக்கப்பட்டுள்ளார்’ என்பது தான் நமது ஜனநாயகத்தின் இன்றைய துர் அதிர்ஷ்டமாகும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time