சுதந்திர வேள்விக்கு தன்னையே பலியிட்டுக் கொண்டவர் சுப்பிரமணிய சிவா! சிறை வாழ்கையால் தொழு நோய்க்காளான போதிலும், நாடெங்கும் அலைந்து விடுதலை வேட்கையை விதைத்தார். அவரது இளம் மனைவி வறுமையில் வாடி பெற்ற துன்பங்கள் சொல்லி மாளாது. இன்று அவரது நினைவு நூற்றாண்டு; அவரது தியாக வாழ்வை நினைவு கூறுவோம்;
இரக்தாக்சி வருடம் தை மாதம் இரண்டாம் தேதி இரவு பதினோரு மணி. கண்ணீர் தாரை தாரையாக கண்களில் வழிகிறது. சிறை வாழ்வு தந்த சீதனமான தொழுநோயின் வாதையால் வலி தாங்க முடியாமல் பித்து பிடித்தவர் போல அழுது அரற்றுகிறார் .
அல்லும் பகலும் அறுபது நாழியும் – இந்தக்
கொல்லும் வியாதி என்னைக் குத்திக் குடையுதே
பிச்சைக்காரனெனப் பிறர்பலர் சொல்லவோ – இக்
கொச்சை வார்த்தைகளை நான் சுகமெனக் கருதவோ
நாடிநரம்பெல்லாம் நமன் பற்றி ஈர்க்கிறான் – அடி
ஓடி வந்துன் பதத்தை உருகிப் பிடித்தேண்டி
குற்றமெது செய்தாலும் குணமுடையோய் நீதான்
பெற்ற தாயாரையோ பிழை பொறுக்க வேண்டாமோ?
நம்பினேன் நம்பினேன் நம்பினேன் நம்பினேன்
அம்பிகையே உனையேதான் அபயமென நம்பிவிட்டேன்.
கலங்காத இவரது உள்ளம் தனது உடலை நோய் தின்று கொண்டிருந்த காலத்தில் தேவியை சரணடைந்து உருகும் இந்த காவிய துயர வரிகளுக்குச் சொந்தக்காரர் கோடையிடி சுதந்திரப் போராட்ட வீரர் வத்தலக்குண்டு தியாகச் சீலர் சுப்பிரமணிய சிவா அவர்கள்.
சென்ற நூற்றாண்டில் இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் மும்மூர்த்திகளாகிய வ.உ.சிதம்பரனாரை கலகக்காரர் என்றும், பாரதியாரை பிழைக்கத் தெரியாத கவிஞனாகவும், சுப்பிரமணிய சிவாவை பைத்தியக்காரராகவும் பார்த்த சமூகம் இது. இந்த மூவருமே திலகர் அணியைச் சார்ந்தவர்கள்.

குறிப்பாக சுப்பிரமணிய சிவம், வ.உ.சி. மீது பெரும் பற்று கொண்டவர். 1907-08 களில் இரட்டைக் குழல் துப்பாக்கி தோட்டாக்களாக விளங்கி சுதந்திர சங்கநாதத்தை உச்சஸ்தாயில் எழுப்பி தூங்குமூஞ்சி மாகாணத்தை விழிப்புறச் செய்தவர்கள்.
இந்திய சுதந்திரச் சரித்திரத்தில் சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு நிரந்தரமான ஒரு இடம் உண்டு. மெரினா கடற்கரையில் பல பொதுக் கூட்டங்கள் நடத்தியவர். திலகர் கட்டம் என்று பெயரிட்டவர் இவரே. பாரதியார் திருநாளைக் கொண்டாட வழி வகுத்தவர். பாப்பரப்பட்டியில் தனது கனவு பாரதாசிரமத்தில் தனது நண்பர் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க ஆசைப்பட்டு நிறைவேறாமல் போனது. 1923 மே மாதம் முதல் நாளில் சிங்காரவேலர் கொடி ஏற்றிய நாளில் மேதினப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர் சிவா.
ஊர் ஊராகச் சென்று தமிழக காங்கிரசுக்காக தீராநோயோடு தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளையில் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்ல ரயில்வே டிக்கெட் எடுத்து ரயிலில் உட்கார்ந்திருந்த வேலையில் ரயில் புறப்படுவதற்கு முன்பாக போலீசார்கள் வந்து ரயிலில் இருந்து இறக்கி விட்டனர் இவரது நோயைக் காரணம் காட்டி 1923 வாக்கில் ரயில்வே சட்டம் 176 வது பிரிவின்படி நோயால் பீடிக்கப்பட்டிருப்பதால் ரயிலில் பயணம் செய்யக் கூடாது என்று தடை விதித்தனர். வியாதியை சாக்காக்கி, சூழ்ச்சி செய்து இவரது பிரச்சாரத்தை தடை செய்ய முயற்சி செய்த போதும் வெறுமனே கால்நடையாகவும், கட்டை வண்டியிலும் ஊர் ஊராகச் சென்று முன்னை விட தீவிரமாக பயணித்து சொற்பொழிவாற்றியவர்.

வ.உ.சி.க்கு வாய்த்த மீனாட்சி அம்மாள், பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் ஆகியவர்களுக்கு கிடைத்த இல்லற வாழ்வின் சிறு சுகம் கூட சுப்பிரமணிய சிவாவினுடைய மனைவி மீனாட்சி அம்மாவுக்குக்கு இறுதி வரை கிடைக்கவில்லை.
வ.உ.சி, பாரதி, சிவா தியாகங்களுக்கு பின்னால் இவர்களின் மனைவிமார்களின் துயரங்களை நாம் இது வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. உண்மையை அறிந்தால் உள்ளம் பதறும்.
சுப்பிரமணிய சிவா மனதளவில் வேதாந்தத்தில் லயித்து, இகலோக இன்பங்களை வெறுத்து சாதுக்களுடனும், சந்நியாசிகளுடனும் வாசம் செய்து கொண்டு, இல்லற வாழ்வில் இருந்து விலகிய மனநிலையில் இருப்பதை அவரது ராமகிருஷ்ணர் பரமஹம்சர் பற்றி அவர் எழுதிய வரிகளினூடாக தெரிய வருகிறது.
விவாக முயற்சி பலமாக நடக்கிறது. விவாகம் செய்து கொள்ள மாட்டேனென்றால், தாயின் மனம் நோகும். சகோதரர்களுக்கு வருத்தம் உண்டாகும். விவாகம் செய்து கொண்டு விட்டால் மனிதனுடைய புத்தி, சக்தி வெளிப்பட்டு பிரகாசிப்பதற்கு தருணம் ஏற்படாமல் போய்விடுகிறது. இந்த மனப்போக்கில்தான் சிவாவின் உள்ளமும் இருந்திருக்கிறது.
சுப்பிரமணிய சிவா தன்னுடைய பதினைந்தாவது வயதில், பதினோறு வயதுடைய மீனாட்சி என்பவரை மணம் செய்கிறார். மனைவியுடன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இல்லற வாழ்க்கை நடத்துகிறார்.
1908 ம் ஆண்டு சுப்பிரமணிய சிவா, வ.உ.சி.யின் கைக் கருவியாக விளங்கினார் என்று ஆங்கிலேய நீதிபதி பின்ஹேவால் குற்றம் சாட்டப்பட்டார். திருநெல்வேலியில் அரசு நிந்தனை பேச்சுக்காக இருபது வருடமும், சிவாவிற்கு உணவும், இடமும் அளித்து பேச உதவியதற்கு இருபது வருடமும் மொத்தம் 40 வருடங்கள் வ.உ.சி.க்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
முதல் குற்றவாளியான சிவாவிற்கு பத்தாண்டுகள் தீவாந்தர தண்டனை அளிக்கப்பட்டது. சிவாவினுடைய சிறை வாழ்க்கை காலங்களில் மனைவி மீனாட்சி அம்மாள் தனது இளமையை தொலைத்து விட்டு சிறைக்கும் வீட்டுக்குமாக அலைந்துள்ளார். கடுமையான ஏழ்மை நிலைக்கு மீனாட்சி அம்மாள் தள்ளப்பட்டு வாழ்க்கை ஜீவனம் கழிக்கவே போராடியுள்ளார்.

சுப்பிரமணிய சிவாவும் நான் சன்யாசி. வேதாந்த விசாரணை செய்து வருபவன் என்று கூறிக் கொண்டு தேச பக்தர்களுடனும், சன்யாசிகளுடனும் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தவர். தனது மனைவியை அனேக இடங்களில் அனேக தடவை ஏமாற்றி நழுவி விட மீனாட்சி அம்மையாரும் தொடர்ந்து கணவனை விடாமல் தேடி பட்ட கஷ்டங்கள் நம் கண்களை கண்ணீர் குளமாக்குகிறது.
1908 முதல் 1912வரை திருச்சியில் சிறைவாசம். அச்சமயத்தில் ”சச்சிதானந்த சிவம்” என்ற நூலினை எழுதினார். அந்தப் புத்தகத்தினை தனது மனைவிக்கு சமர்ப்பணம் செய்து, எல்லோரும் இந்த புத்தகத்தை வாங்கும்படியும், இதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானம் எனது மனைவியின் வறுமையை போக்கும் என்றும் கீழ்க் கண்டவாறு பதிவு செய்கிறார்.
“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சீடர் பீட்டர் என்பவர் ஒரு சர்ச் வாயிலில் …… காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கண்களுமில்லாத ஒரு பிறவி நொண்டி பிச்சை கேட்க, அவர் “வெள்ளியும் தங்கமும் தர என்னிடம் ஏதும் இல்லை. ஆனால், என்னையே உனக்குத் தருகின்றேன் என்று கூறி, அவனை கைபிடித்து தூக்கி விட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பது போல் அவன் பரம சந்தோசமடைந்து குதித்துக் கொண்டு சென்றான் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே மாதிரியாக எனது மனைவி சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில் தான் தினமும் ஏழ்மைத்தனத்தால் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனது வறியநிலைமைக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள நானும், “என்னிடம் வெள்ளி தங்கம் இல்லை” என்று கூறி, எனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன் என்பதாக
தான் எழுதிய நூல் எனது மனைவியின் வறுமையை போக்கும் என்று கசிந்துருகி பரிவு காட்டி சமர்ப்பணம் செய்துள்ளார். இந்த செயல் ஒன்றே சிவாவின் மனைவிக்கு பெரும் ஆறுதலாக இருந்திருக்கக் கூடும்.
சுப்பிரமணிய சிவா தேச பக்தியின் மேலீட்டால் சிறை வாசம் செய்ய நேர்ந்த காலத்தில் மீனாட்சி அம்மையார் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாது. பதினாறு ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளே இல்லற வாழ்வை நடத்தி தமது 27 ம் அகவையில் மீனாட்சி அம்மாள் ஆறு மாதங்களுக்கு மேலாக பெரும் நோயால் அவதிப்பட்டு இறந்து போகிறார்.
சுப்பிரமணிய சிவா தனது மனைவி மறைந்த வேளையில் “காலஞ்சென்ற ஸ்ரீமதி மீனாட்சியம்மாள்’’ என்ற தலைப்பிலான கட்டுரை தனது ‘ஞானபானு’ இதழில் பதிவிட்டுள்ளார். இந்த ஞானபானு இதழ் ஆரம்பிக்கும் வேலையில் ராஜாங்கத்தாரால் சந்தேகிக்கப்படும் நபராக சிவம் விளங்கியதால் அனுமதி கிடைக்காது என்ற காரணத்தால் தந்து மனைவி மீனாட்சிஅம்மாள் பெயரில் பத்திரிக்கை நடத்த அனுமதி வாங்கி நடத்தியுள்ளார்.
”நமது ஞானபாநு’ வின் பதிப்பாசிரியையும், சொந்தகாரியுமான ஸ்ரீமதி மீனாட்சியம்மாள் சென்ற வைகாசி மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மகா சக்தியில் இரண்டறக் கலந்து கொண்டாளென்ற விசனகரமான சம்பவத்தை நமது வாசகர்களுக்கு தெரிவிக்கின்றோம். இறக்கும் பொழுது வயது 27.
சுப்பிரமணிய சிவா தனது மனைவியின் வாழ்வாதரத்திற்காக சிறையில் இருந்த வேலையில் தனக்கு ஏற்ப்பட்ட வேதாந்த விசாரணையை நூலாக தொகுத்து “சச்சிதானந்த சிவம்’’ என்ற நூலினை படித்து யாவரும் அறிந்து வாங்க வேண்டுமாய் தனக்குத் தெரிந்த பி. ஆர். ராமய்யர் அவர்களிக்கு எழுதிய இந்த ஒரிஜினல் கடிதம் வாசிப்போரின் இதயத்தை கனக்க வைக்கிறது. இந்த கடித நகல் கீழ் படம் இணைக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் ஸ்ரீ சத்திதுணை செக்டெம்பர்24
மகாநஜ ஸ்ரீரி மகாகனம் பொருந்திய சீமான் அவர்களுக்கு அனேகநமஸ்காரம். திருநெல்வேலி கேஸில் தெண்டிக்கப்பட்ட சுப்ரமண்ய சிவா என்ற எனது பர்த்தாவானவர் இப்பொழுது நான் அனுபவிக்கும் கஷ்ட நிவாரணத்தின் பொருட்டு இன்ஸ்பெக்டர் ஜெயில் சூப்ரெண்டு துரை அவர்கள் உத்தரவ்வின் பேரில் சேலம் ஜெயிலில் இருந்து ஓர் புஸ்தகம் எழுதினார். நான் அதை இவ்வூர் பி ஆர் ராமய்யர் கம்பெனியில் அச்சிட்டு வெளிப்படுத்தி இருக்குறேன். நான் அனாதையாய் என்னை வைத்து சம்ரெட்ச்னை செய்ய தகப்பனார் சகோதரர் மற்றுமுள்ள சுற்ற்த்தார் யாருமில்லாமல், எனது பர்த்தா சிறைவாசம் செய்வதால், எனக்கு ரொம்பவும் கஷ்டம் வந்ததின் பேரில் எனது பர்த்தாவாகிற பரிந்த புஸ்தகம் அச்சிட்டாவது ஜீவனம் செய்யலாமென்று இப்புஸ்தகத்தை அச்சிட்டு இருக்குறேன். சச்சிதானந்த சிவம் என்று இந்த புஸ்தகத்தில் தாங்களுக்கு ஒன்று அனுப்பி இருக்குறேன். அதை பார்த்து தயவு செய்து தாங்கள் என் புஸ்தகத்தை எல்லாரும் வாங்கும்படியான உதவி செய்ய வேணுமாய் நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன்.
தாங்களுடய அபிப்பிராயத்தை ஜனங்கள் தெரிந்தால் என் புஸ்தகம் விலைபடு மென்று நம்புகுறேன். தாங்கள் தர்மப் பிரபுவென்று தாங்களுக்கு எழுதினால் எனது கஷ்ட நிவர்த்தி செய்வது மன்னியில் எனக்கு மாங்கிலிய பிச்சையையும் குடுப்பீர்கள் என்று எழுதி இருக்குறேன். நான் தாங்களுக்கு எழுதுவதர்க்கு தகுதி அற்றவளாய் இருந்து எழுதி இருப்பதை தாங்கள் மூன்று குமாரத்தியுடன் என்னை நான்காவது குமாரத்தியாக பாவித்து தாயில்லாத குழந்தைகளை தகப்பனார் காப்பாற்றுவது போல், ஆறுமற்ற அனாதையாய் பார்த்தாவும் சிறைவாசம் செய்வதால் தர்மப்பிரபுவான தாங்கள் என்னையும் ஒர் குழந்தையாக பாவித்து எனது காரியத்தில் தங்களது கருணை பிறக்குமாறு அனேகம் தடவை பிரர்த்தித்துக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
Meenakshiammal
ஒவ்வொரு தியாகிகளின் வாழ்க்கையில் மனைவியர்கள் பட்ட துயரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும். தயவு செய்து இக் கால எந்த அரசியல் தியாகிகளுடன் ஒப்பிட்டு விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். சுப்பிரமணிய சிவாவை இந்த நாள் வரை உரிய அளவில் பொதுப் புத்தியில் நாம் கொண்டு செல்லவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also read
வ.உ.சி. ஆய்வு வட்டம் முதன் முதலாக பொதுமக்களிடத்தில் தொகை வசூலித்து காந்திகிராம் பல்கலையில் 2025 ஜூலை முதல் வாரத்தில் சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தையும், பன்முகத்தன்மையை வெளியே கொணருவதற்காக வ.உ.சி – சுப்பிரமணிய சிவா பெயரில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நல்கை நிதியாக மூன்று இலட்சம் அளித்திருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டுகிறோம்.
கட்டுரையாளர்; ரெங்கையா முருகன்
வரலாற்று ஆய்வாளர்



















அந்த காலகட்டத்தில் எண்ணற்ற சில நல்ல பணக்காரர்கள் இருந்தார்கள் ஏன் இவர் போன்றவர்களுக்கு உதவ முன்வரவில்லை?
படிக்கும்போதே கண்கள் குளமாகிறது.
இந்த காலகட்டத்தில் பெரியார் எனும் E.V ராமசாமியும் பெரும் செல்வந்தர், G.D.நாயுடு & சௌந்திரபாண்டியன் போன்றவர்களுக்கும் தெரியாமல் போனதா இவரின் வறுமை?
சுப்பிரமணிய சிவா!
சிவாவின் பேச்சைக் கேட்டால் செத்த சவம் கூட எழுந்து நிற்கும் .. உணர்ச்சி மிகுந்த முதல் தலைமுறை விடுதலைப் போராட்ட தியாகி ..
அவரைப் பற்றிய தோழர் ரெக்கையா முருகன் எழுதியுள்ள கட்டுரை மிக அற்புதமான கட்டுரை ..
சிவாவின் உடைய வாழ்க்கை முழுமையாக பதியப்பட வேண்டும். வத்தலகுண்டில் பிறந்து திருவனந்தபுரத்தில் வளர்ந்து உடலினை உறுதி செய்து கொண்டு மல்யுத்தம் பயின்று வீரனாக வளர்ந்தவர். அங்கிருந்து கால்நடையாகவே சுயராஜ்ய பிரச்சாரம் மேற்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் விடுதலை வேள்வியை வளர்த்தவர் . கடையநல்லூரில் திருநெல்வேலியில் சுதேசி கடை வைத்திருந்த சங்கரநாராயணனனால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு உடைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டு திருநெல்வேலிக்கு அழைப்பு வரப்பட்டவர். 1908-ம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி பெரியவர் வ உ சி யை சந்திக்கின்றார்.
இருவரும் இணைந்து சுதேசிய பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள்.
எழுச்சி பொங்கி எழுகின்றது . தூத்துக்குடி, திருநெல்வேலி எங்கும் இவர்களுடைய அனல் கக்கும் பேச்சு மக்கள் இணைந்த போராட்டமாக சுதந்திரப் போராட்டமாக ஒளி வீசுகிறது. வந்தே மாதரம் முழக்கம் எங்கும் ஒலிக்கிறது.
கோரல் மில் தொழிலாளர்கள் பொங்கி எழுகின்றார்கள். அவலமான வேலை முறையை மாற்றுவதற்கான போராட்டத்தை 27 2 1908 ஆம் ஆண்டு உரிமைகளுக்கான போராட்டத்தை தொழிலாளர்கள் வேலை நிறுத்தமாக நடத்துகிறார்கள். ஆலை வாயில் கூட்டத்தை முதலில் நடத்திய பெருமை வ உ சிக்கும் சிவாவிற்கும் சாரும். 1905 மற்றும் 1907 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஷ்ய புரட்சியை உதாரணம் காட்டி பேசிய ஆற்றல் சிவாவிற்கு உண்டு. தொழிலாளர்கள் உரிமைகளைப் பெற இரண்டு வழிகள் உண்டு. ஒன்று ஆலை இயந்திரங்களை உடைப்பது. இரண்டு வேலை நிறுத்தம் செய்வது .. தொழிலாளர்கள் இரண்டாவது வழியை இப்பொழுது தேர்வு செய்ய வேண்டும் என்று சிவா உரையில் குறிப்பிட்டார். பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கியது. வ உ சி பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின்னர் கூலி உயர்வு கிடைத்தது. வார விடுமுறை கிடைத்தது. சிலர் சலுகைகளை தொழிலாளர்கள் பெற்றார்கள்.
1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து ஆலைத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினார்கள்.
மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி வ உ சி யும், சிவாவும் திருநெல்வேலி தாமிரபரணி ஆறு ஓடும் தைப்பூச மண்டபத்தில் ஏறி நின்று உரையிற்றினார்கள் . மக்கள் எழுச்சி பொங்கியது. 12000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கே திரண்டு நின்றனர்.
கலெக்டர் விஞ்சின் நீதிமன்றம் முன்பு இருவரும் ஆஜர் படுத்தப்பட்டார்கள். மார்ச் மாதம் 12ஆம் தேதி வ உ சி யும் சிவாவும் கைது செய்யப்பட்டார்கள். 13ம் தேதி நெல்லையும்,
தூத்துக்குடிம் பொங்கி எழுந்தது. காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வீட்டி மற்றும் உதவிக் கலெக்டர் ஆஷ் மக்களின் மீது அடக்கு முறையை ஏவிவிட்டார்கள். நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1908 மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் நெல்லை எழுச்சி எனப்படுகிறது .
அது 13-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் உச்சகட்டமாக கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கினர். ஒரு வாரம் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு பின் பெற்ற உரிமைகளை இழந்து மீண்டும் வேலைக்கு திரும்பினர்.
வ. உ. சி, சிவா இருவருடைய கைதை கண்டித்து நடைபெற்ற முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான்.
சிறையில் இருந்து திரும்பிய பின்னரும் சிவா சிறை தந்த பரிசான தொழு நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தன்னுடைய போராட்ட வேள்வியை நிறுத்தவே இல்லை.
தொடர்ந்து தொடர்ந்து போராடினார்.
பாரதி வழியிலே பொதுவுடமை இந்த மண்ணிலே சித்தாந்தம் கொண்டுவர ஊர் ஊராய் பிரச்சாரம் செய்து நடந்தார். தோழர் சிங்காரவேலருடன் இணைந்து இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் முழுமையாக அர்ப்பணித்து ஈடுபட்டார். பாரதி மறைவுக்குப் பிறகு தன்னுடைய உயிரென கம்யூனிஸ ஆவணங்களை சேகரித்து வைத்திருந்தார்.
அவர் மறைந்த பிறகு கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிங்காரவேலரின் தலைமையில் அமைப்பு நிலை மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டிற்கும் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தோடு இருந்த சுப்பிரமணிய சிவாவை அவருடைய 41 வது வயதில் காலம் பறித்துக் கொண்டது.
சுதந்திர பயிரை கருக விடாமல் பாதுகாக்க வேண்டும்! சர்வ மதத்தையும் ஏற்றுக்கொண்டு சிவா தனது உரையில் எப்பொழுதும் மத நல்லிணக்கத்தை குறிப்பிட்டு விட்டு தான் உரையை தொடங்குவார்.
சிவாவின் மறைவு நூற்றாண்டின் நிறைவு நாளில் வாழ்த்துக்கள் !