உள்ளாட்சிகளில் ஜனநாயகம் எப்படி ஊனப்பட்டுக் கிடக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாகும். ஒரு பள்ளிக் கட்டிடம் கேட்கிறது கிராம சபை. ‘கட்சிக்காரர்கள் வழியாக கேட்டால் மட்டுமே கிடைக்கும்’ என்கிறது வட்டார வளர்ச்சி அலுவலகம். நிதி ஒதுக்கீடு நடந்தும் கட்சிக்காரர்கள் கடைக்கண் பார்வை கிடைக்காததால் பரிதவிக்கும் மக்கள்;
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சுமார் 101 ஆண்டுகால பழமை வாய்ந்தது. சிதிலமடைந்து கிடக்கும் இந்தப் பள்ளியின் கட்டிடத்தில் தான் ஒரு ஆரம்பபள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்படுகின்றன. இங்கு வைத்து பள்ளிக் குழந்தைகளை பராமரிப்பதும், பாடம் நடத்துவதும் ஆபத்தானது. ஆகவே, விரைந்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். ஊர் மக்கள் தொடர்ந்து நான்கு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கிராம சபை தீர்மானங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக கொண்டு செல்லப்படுகிறது. எனினும், இந்த கிராமத்தின் கோரிக்கைகள் ஒரு சிறிதும் பொருட்படுத்தப்படாத நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஊர்மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ”இதுவரை கட்டிடம் கேட்டு எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லையே” என்று கூறவும் மக்கள் அதிர்ந்து விட்டனர்.
”நான்கு முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கிராம சபை கூட்டத் தீர்மானத்திற்கு மதிப்பளித்து செயலாற்ற வேண்டும் என்பது உங்கள் அடிப்படை கடமைகளில் ஒன்று. கிராம சபை தீர்மானங்களுக்கு இது தான் மதிப்பு என்றால், உள்ளாட்சிகளுக்கு என்ன மரியாதை. ஊர் மக்களின் ஒன்றுகூடி எடுக்கும் தீர்மானங்களுக்கு என்ன மரியாதை?” எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த அலுவலர், ”அந்த தீர்மானங்கள் எல்லாம் இருக்கட்டும். ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் இது பற்றி நேரடியாக சென்று மனு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படியானால், உள்ளாட்சி, கிராமசபை கூட்டம் என்பதெல்லாம் எதற்காக? கிராம சபை ஒன்றை நடத்தி, அதில் ஊர்மக்கள் கூடி கொண்டு வரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சொல்லியதெல்லாம் பொய்யா? சப் கலெக்டரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் தயவு செய்து இங்கு வந்து நிலைமைகளை பார்க்க வேண்டும்” என்றும் வேண்டினர்.

இவ்வாறு கேள்விகள் கேட்டு, கோரிக்கை வைக்கவும் சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள், ”சரி, சரி உடனடியாக கட்டிடம் கட்டி தருகிறோம்” என பொத்தாம் பொதுவாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கட்டிடம் கட்ட ஆரம்ப நடவடிக்கையாக பழைய ஓடுகளை அகற்றி எடுத்துச் சென்று விட்டனர்.
‘ஏதோ நல்லது நடந்தால் சரி தான்’ என மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டது நிலைக்கவில்லை.
இந்தச் சூழலில் திடீரென வாகனத்தில் தரைக் கொட்டகை அமைக்க ஹாஸ்பிடாஸ் சீட்டுகள் கொண்டு வந்து உள்ளனர். அதைக் கண்ட ஊர் மக்கள், ”சிதிலமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித் தருவதாக சொல்லி விட்டு ஹாஸ்பிடாஸ் சீட்டுகளை வைத்து ஒப்பேத்த நினைக்கிறீர்களே..” என அதனை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இரண்டு நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜுலை -21 முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டிடம் எழுப்புவது தொடர்பாக அலுவலகத்திற்கு வரும்படி ஊராட்சி செயலாளரை அழைத்துள்ளார். அவர் ஊர்மக்களுடன் சென்றுள்ளார். அப்போது திமுக கிளைச் செயலாளர் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளை போய் பார்த்து வாருங்கள் எனக் கூறியுள்ளார்.
மக்களுக்கு என்னவென்றே தெரியவில்லை. எதற்கு நாங்க கட்சி ஆபீஸுக்கு எல்லாம் போக மாட்டோம். ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரம் இது. ஆகவே அரசாங்கம் நல்லபடியாக பள்ளிக் கூடம் கட்டித் தாங்க எனச் சொல்லிச் சென்று விட்டனர்.
ஊர் மக்கள் யாரும் கட்சி அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மாலையில் கட்சிக்காரர்கள் வந்தனர்.
”அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை கட்டித் தருகிறோம். ஆஸ்பெஸ்டாஷ் சீட்டுக்ம் பணம் சேங்ஷன் ஆகிவிட்டது. ஆகையால், நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்” என்றுள்ளனர்.
”சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தில் மேற்கூரை அமைப்பது பயனில்லை. கட்டிடம் எப்போதும் நொறுங்கி விழக்கூடும். ஆகவே அங்கே குழந்தைகளை அனுப்ப முடியாது. ஆஸ்பெஸ்டாஷ் சீட்டு வேண்டாம். அதன் கீழ் அமர்வது வெப்பமாக தகிக்கும். குழந்தைகள் தாங்கமாட்டார்கள்” என மக்கள் கூறி உள்ளனர்.
”அப்படி என்றால், அங்கன்வாடியும் வராது. பள்ளிக் கட்டிடமும் வராது” என்று திமுகவினர் கூறியுள்ளனர்.
மக்களுக்கு கோபம் வந்து விட்டது. ”வருஷக்கணக்காக நாங்க கோரிக்கை வைத்து போராடி, அரசு கவனத்திற்கு எடுத்துச் சென்று போராடும் போது உதவ முன்வராத கட்சி நிர்வாகிகள், அரசாங்கம் மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஒரு காரியம் செய்யும் போது, உங்க சொந்த ஆதாயத்திற்காக ஜனங்களை ஆட்டிப் படைக்கலாமா? எங்களோடு சேர்ந்து நின்று நிறைவேற்றித் தராமல், நிர்பந்திப்பதா?” எனக் கேட்டுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த திமுக நிர்வாகிகள் எட்டு பேர் சேர்ந்து, ”எங்கள் ஊருக்கு எந்தப் பள்ளிக் கூடமும் தேவையில்லை’’ என வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடிதம் தந்து உள்ளார்களாம். எனவே, தற்போது மக்கள் பள்ளி கட்டிடத்திற்கு கோரிக்கை வைத்தால், ”கட்சிக்காரர்களை சமாதானப்படுத்தி வாருங்கள்” என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
”இந்த ஊரில் இந்தப் பள்ளிக் கட்டிடம் தேவையில்லை” என கடிதம் எழுதி தடுத்தவர்களின் பிள்ளைகள் யாரும் இந்த பள்ளியில் படிக்கவில்லை. அவர்கள் வசதியானவர்கள். தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புபவர்கள். எனவே, அவர்களை காரணம் காட்டி பள்ளிக் கட்டிடத்தை மறுப்பது ஏற்பில்லை’’ எனக் கூறி, மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
Also read
‘சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி தடுத்து விடுவார்’ என்ற கதையாக மக்கள் போராடி ஊருக்கு பள்ளிக் கூடம் கேட்டால், அதைக் கட்டித் தர தேவையில்லை என திமுக நிர்வாகிகள் அதிகாரம் காட்டுவது அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். ஆட்சியாளர்களோ, ”இது சமூக நீதிக்கான ஆட்சி” என்கிறார்கள். ஆட்சிக்கு உரிமை கொண்டாடும் கட்சிக்காரர்களோ, சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பிக் கொண்டுள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் ஐ.பெரியசாமியோ அல்லது நேர்மையான அதிகாரிகள் யாரேனுமோ இந்த விவகாரத்தில் எளிய மக்களுக்கு உதவினால் கோடி புண்ணியம்!
அஜிதகேச கம்பளன்

















Leave a Reply