பேசாமல் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
அரசியல் தொடர்பில் முற்றிலும் அலட்சியப்படுத்த வேண்டிய ஒரு மனிதன் இந்த உலகில் ஒருவர் உண்டென்றால், அது ரஜினிகாந்த் தான்.
சுயம் உணராத சூனியம் அவர்!
சுயநலமே உருவான தற்குறி அவர்!
அவரது வெற்றியும்,தோல்வியும் அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது தான்!
தன்னை எப்படி வேண்டுமானாலும் தங்கள் நலன்களுக்காக பேச வைக்க முடியும்,இயங்க வைக்க முடியும் என ஆதிக்க வர்க்கத்திற்கு அனுசரணையாளராக இருப்பது தன்னுடைய சாமார்த்தியம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
’அது சாமார்த்தியமல்ல, சகிக்கமுடியாத அநீதி’ என மக்கள் அவருக்கு உணர்த்தப் போவது உறுதி!
நாளும்,பொழுதும் மக்கள் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் போராட்டம் இந்திய மக்கள் இதயங்களை உலுக்கிக் கொண்டுள்ளது.
இவை பற்றிய எந்தவித அக்கறையோ, ஆதங்கமோ இல்லாமல் அமைதி காத்துவரும் ஒரு மனிதர் திடீரென்று கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்கிறார்.
ஒரு ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைக்கிற விளையாட்டுவீரன் கூட, அதற்காக காலம், நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்தே பங்குபெற முடியும்!
மக்களை ஆட்சி செய்வதற்கும், அதற்கான நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான கட்சியை வழி நடத்துவதற்கும் ஆகச் சிறந்த பயிற்சியும், அனுபவமும் அதற்கு தலைமை தாங்குபவர்களுக்கு தேவை. அதில் தான் முற்றிலும் பூஜ்ஜியமாக இருக்கிறேன் என்பதை உணர்ந்தும் அவர் களம் காண்கிறார் என்றால், அது அவர் சார்ந்துள்ள ஆதிக்கவர்க்கம் அவருக்கு தந்துள்ள நெருக்குதல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரை வைத்து ஆதாயம் அடைய நினைப்பவர்களுக்கு அவர் பணிந்தேயாக வேண்டிய நிர்பந்தால் வந்துள்ளார்.
அவரால் தன் கட்சிக்கும்,ஆட்சிக்கும் யார் தேவை, தேவையில்லை என்பதை தீர்மானிக்கக் கூட முடியாதவராகவே அவர் உள்ளார். அதற்கு அவரது இரு பக்கங்களிலும் நின்றவர்களே சாட்சி!
தயாரிப்பாளர் சங்க தகிடுதத்ங்கள் கமல்,ரஜினி,விஜய் பங்களிப்பு என்ன?
பாஜகவின் அறிவுசார் தொழில் நுட்ப பிரிவின் தலைவராக ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை பதவி வகித்தவர் வந்து தான் ரஜினியின் புதிய கட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டிய நிலைமையில் உள்ளதென்றால்…அந்தோ பரிதாபம்!
அதுவும் அவர் முரசொலி மாறனுக்கே அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று கதைகட்டிவிட்டதன் பின்னணி என்னவோ..,அதற்கு அந்த ஆளும் இதுவரை, ’அப்படி எழுதாதீங்க,சொல்லாதீங்க’ என்று தடுக்காமல் கமுக்கமாக அமைதி காத்திருக்கார்னா பாருங்க…!
முரசொலிமாறன் மீது எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால்.அந்த மனிதர் ஒரு மிக மூத்த அரசியல்வாதி, அறிவாளி, நுட்பமான மனிதர் அவரைப் போன்ற ஒருவருக்கு தன்னை ஆலோசகர் என்று சொல்லப்பட்டத்தை எப்படி கூச்சம் இல்லாமல் அர்ஜீன்மூர்த்தி அமைதி காத்ததன் வழி ஆமோதித்தார்! இது தான் இந்த ஆளின் யோக்கியதை! இப்போது புதிதாக அரசியலுக்கு அறிமுகமாகியுள்ள எல்.முருகனுக்கும் கீழே இருந்த ஒருவர் தானே அர்ஜீன்மூர்த்தி!
தமிழாய்ந்த அறிஞரான தமிழருவி மணியனின் ’இமேஜ்’ தமிழ் உணர்ச்சியுள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையூட்ட பயன்படும் என பாஜக கருதுகிறது. திராவிட இயக்கங்களின் மீதான தமிழருவியாரின் கோபத்தை தனக்கு சாதகமான அரசியலுக்கு பயன்படுத்த பாஜக அவரை ரஜினிக்கு பக்கத்தில் நிறுத்தியுள்ளது. அங்கு நடக்கவுள்ள சூழ்ச்சிகளுக்கு அவர் நீண்டகாலம் தாக்குபிடிக்கமாட்டார்.இப்போதே தன்னை ரஜினியிடமிருந்து பிரிக்க சதி என்று கூறத் தொடங்கிவிட்டார்.
Also read
இனி ரஜினி பற்றியே ஊடகங்கள் சதா சர்வ காலமும் ஊளையிடும். மற்றவர்களையும் தேடிச் சென்று கருத்து கேட்டு நிர்பந்திக்கும். எப்படியோ ரஜினியைத் தவிர உலகில் பேசுவதற்கு ஏதும் இல்லை என்ற அளவுக்கு நிலைமைகள் தோன்றி பெரும் மூளைச் சலவை நடக்கலாம்!
ரஜினியின் வளர்ச்சி என்பது அதிமுகவின் அழிவில் மட்டுமே சாத்தியமாகும். சினிமா கவர்ச்சியை நம்பி தோன்றிய கட்சியை மற்றொரு சினிமா கவர்ச்சி கொண்டு வீழ்த்தும் சூட்சுமமாகவே ரஜினியை கொண்டு எம்.ஜி.ஆரை உசத்தி பேசவைக்கிறார்கள். அதிமுகவில் தங்களுக்கு மரியாதை இல்லை என மனம் புழுங்கி கொண்டிருக்கும் ஒ.பி.எஸ், சைதை துரைசாமி ஆகியோரை ஏற்கனவே பேசி வைத்திருக்கலாம். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போனவர்களை மீட்டு ரஜினி கட்சிக்கு இழுக்கலாம்..! அவர்கள் தங்களிடம் உள்ள கறுப்புபண கரன்சிகளை ரஜினிக்காக மன்னிக்கவும் மாற்று அரசியலுக்காக மூதலீடு செய்யலாம்…!திமுக,அதிமுகவிற்குள் இடம் கிடைக்காத இஸ்லாமிய, தலித், சாதிய அமைப்புகளுக்கு ரஜினியின் மாற்று அரசியலுக்குள் இடம் கிடைக்கலாம்!
ஓடமுடியாத மண் குதிரையை எப்படி ஓட்டிக் காண்பிக்கப் போகிறார்கள் என பார்ப்பதற்கு நானும் ஆவலாக உள்ளேன்! நீங்களும் தயாராகுங்கள்!
‘அறம்’ சாவித்திரி கண்ணன்
படித்துப் பாருங்கள். நன்றி