அதிமுக ஆட்சி காலத்திலும், திமுக ஆட்சி காலத்திலும் தொடர்ந்து லஞ்சம், ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருகிறது அறப்போர் இயக்கம். அதன் போராட்ட வியூகங்கள் குறித்தும், காவல்துறை நெருக்கடிகள் குறித்தும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுடன் பத்திரிகையாளர் ம.வி.ராசதுரை நடத்திய நேர்காணல்;
லஞ்சம், ஊழலுக்கு எதிராக சமரசமில்லாமல் போராடி வரும் “அறப்போர் இயக்கம்” கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கப்பட்டது. அவர்களின் பத்தாண்டு கால சவால்மிக்க பயணத்தை இந்த உரையாடல் பதிவு செய்கிறது.
சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பெயரை கிறிஷ்டி சப்ளைஸ் கார்ப்பரேஷன் என்று மாற்றக் கோரும் பெயர்ப் பலகையைத் தயார் செய்து அந்நிறுவன மேலாண்மை இயக்குனரிடமே நேரில் கொடுக்கச் சென்றுள்ளீர்கள். இப்படிப்பட்ட செயல்பாட்டுக்கு நீங்கள் வரக் காரணம் என்ன?
கடந்த அதிமுக ஆட்சியின் போதே கிறிஸ்டி நிறுவனத்துடன் இணைந்து அப்போதைய ஆட்சியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதை பொது வெளிக்குக் கொண்டு வந்தோம். அந்த நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் வையுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியிலும் கிறிஷ்டி நிறுவனம் கோலோச்சி நிற்கிறது.இந்த மெகா ஊழல் எப்படி நடைபெறுகிறது என்பதை கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பாமர மக்களுக்கும் புரியும் வகையில் சொல்லி வருகிறோம்.

பொது விநியோகத்திற்காக தமிழ்நாடு 39 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த மூட்டைகளை உமி நீக்கும் ஆலைகள், கிடங்குகள் என்று மூன்று நான்கு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதைக் கொண்டு செல்லும் வாகனம் ஒன்றுக்கு எட்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூபாய் 288 என்று அரசு நிர்ணயம் செய்து, அந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டது.
இது மார்க்கெட் நிலவரத்தை ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவாகும். கடந்த 2023 ஆம் ஆண்டில், ரூபாய் 300 முதல் 330 வரை ரேட் நிர்ணயத்ததில் ஆங்காங்கு உள்ளூரைச் சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு இதற்கான உரிமம் வழங்கப்பட்டது.
அதை ரூபாய் 598 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு ஜூலை முதல் கிறிஸ்டி குமாரசாமி நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். கிறிஸ்டி பினாமி நிறுவனங்களான முருகா என்டர்பிரைசஸ், கார்த்திகேயா என்டர்பிரைசஸ் மற்றும் கந்தசாமி அண்ட் கோ ஆகியவை இப்பணியில் ஈடுபடுகின்றன.
இந்த மூன்று நிறுவனங்களுடைய முகவரிக்கும் நாங்கள் நேரில் சென்று விசாரித்து இவை கிறிஸ்டியின் பினாமிகள்,போலி நிறுவனங்கள் என்பதை உறுதி செய்தோம். கிறிஸ்டி நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கப்பட்டதன் மூலம் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூபாய் 310 என்ற அளவில் இரண்டு ஆண்டுக்கு சுமார் 992 கோடி இழப்பு ஏற்படுகிறது.

தமிழக அரசுடன் மத்திய அரசின் நிறுவனமான இந்திய உணவுக் கழகமும் இந்த விவகாரத்தில் இணைந்து செயல்படுகிறது.
டென்டர் தேர்வு குழுவில் இருதரப்பு அதிகாரிகளும் அங்கம் வகிக்கிறார்கள். எனவே, கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் மத்திய அரசுக்கும் பொறுப்புண்டு.
இந்த ஊழல் புகார் கொடுத்து நடவடிக்கை கோரி கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், லஞ்ச ஒழிப்புக் காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். கிறிஸ்டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் கூட வருங்காலத்தில் ஏற்படும் ரூபாய் 400 முதல் 500 கோடி இழப்பை தவிர்க்கலாம் என்று தெரிவித்தோம்.
கடந்த ஜுன் 30 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட செயல்பாட்டில் இறங்கினோம்.
” நீங்கள் மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களுக்காக வேலை பார்க்காமல் கிறிஸ்டி நிறுவனத்துக்காக வேலை பார்க்கிறீர்கள்”, என்பதை உணர்த்தும் வகையில், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர்ப் பலகையை வழங்குவதற்காக கோயம்பேட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநர் அலுவலகத்திற்கு அறப்போர் இயக்கத் தன்னார்வலர்கள் 11 பேர் கடந்த 10 ந் தேதி சென்றோம். அங்கு 50 முதல் 100 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
எங்களைக் கைது செய்து மாலையில் விடுவித்தனர். ஆனால், இது வரை இந்த ஊழல் விவகாரம் குறித்து தமிழக அரசிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
கடந்த அதிமுக ஆட்சியின் போது ஏராளமான ஊழல்களை வெளிக் கொண்டு வந்தீர்கள். அவற்றின் நிலை தற்போது எப்படி உள்ளது?
இருபதுக்கும் மேற்பட்ட ஊழல் புகார்களை ஆதாரத்துடன் தெரிவித்து உரிய நடவடிக்கை கோரினோம். அப்போது அமைச்சர்களாக இருந்த எஸ். பி. வேலுமணி, கே.சி. வீரமணி, வைத்திலிங்கம், காமராஜ் உள்ளிட்டோர் இவற்றில் சம்பந்தப்பட்டிருந்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லிக் கொள்ளும் அளவில் இப் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை. எனவே, உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பல்வேறு வழக்குகளில் எப் ஐ ஆர் போட வைத்தோம்.
2021 –ல் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நீங்கள் வெளிப்படுத்திய ஊழல் விவகாரங்கள் குறித்து..?
கிறிஸ்டியுடன் கூட்டு சேர்ந்து நடைபெறும் ஊழல் தவிர, மேலும் பல முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளோம்.
குறிப்பாக, செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது, டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் ரூபாய் 400 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பதை ஆதாரத்துடன் சுட்டி காட்டினோம். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதிமன்றத்தை நாடினோம்.
அமைச்சர் துரைமுருகன் கட்டுப்பாட்டில் கனிமவளத் துறை இருந்த போது, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 54 குவாரிகளில் நிர்ணயத்தை அளவை விட நான்கு மடங்கு கனிம வளங்களை சுரண்டித் தமிழக அரசுக்கு 700 கோடி இழப்பு ஏற்படுத்தியததை ஆதாரத்துடன் தெரிவித்தோம். 25 குவாரிகளில் ஆய்வு செய்த சப்- கலெக்டரே குவாரிகளின் உரிமையாளர்களுக்கு 250 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அவர்கள் மேல்முறையீட்டுக்கு முதல் கட்டமாக மாவட்டக் கலெக்டரிடம் போக வேண்டும். அங்கு போனால் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராது என்பதால், நேரடியாக கனிமவள ஆணையரிடம் முறையிட்டார்கள். அங்கு ,அபராதத் தொகை ரூபாய் 13.8 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
குவாரிகளில் கனிமவளக் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. உரிய விசாரணை கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம்.
பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழக இணைவு பெற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகள் உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை தங்கள் கல்லூரியில் நியமிக்காமல், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருப்பதாக போலியாக கணக்குக் காட்டி வந்தது தெரிய வந்தது. மாணவர்களை ஏமாற்றுவதற்காக நடைபெறும் இந்த மோசடியை அம்பலப்படுத்தி உரிய நடவடிக்கை கேட்டிருந்தோம். இவ்விவகாரம் தொடர்பாக அண்மையில் 140 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜி எஸ் டி ரோட்டில் 5 ஏக்கர் அரசு நிலத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன் நிறுவனத்தின் பெயரில் வளைத்து வைத்திருப்பதை லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆதாரத்துடன் தெரிவித்து உரிய நடவடிக்கைக் கோரி உள்ளோம்.
தண்டாரம் பட்டு அருகில் தொண்டாமாதூர்- அகரம் பள்ளி இடையில் தென்பெண்ணை ஆற்றின் மீது கட்டப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்த புதிய பாலம் மூன்றே மாதத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதற்கான கட்டுமான செலவு ரூபாய் 16 கோடி. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யுங்கள் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இந்தப் புதிய பாலம் அடித்துச் செல்லப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன? எங்கு குளறுபடி நடந்தது? டிசைன் செய்தது யார்? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடக்க வேண்டியது அவசியம்.
வருங்காலத்தில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க இந்த விசாரணை உதவும்.
அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறை மூலம் உங்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன். அவை எந்த நிலையில் உள்ளன?ஆளும் திமுக அரசின் அணுகுமுறை எப்படி உள்ளது*?
2019 ஆம் ஆண்டில், அப்போது அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி ஸ்மார்ட் சிட்டி ஊழல் உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார். அவருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அன்றைய சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்தோம். அவரோ அனுமதி தராமல், அமைச்சர் வேலுமணியை சந்தித்துப் பேசும்படி எங்களிடம் கூறினார்.
“போராட்டமே அவருக்கு எதிராகத் தானே ?அவரை ஏன் சந்திக்க வேண்டும்? “என்று எங்கள் வியப்பை வெளிப்படுத்திவிட்டு, நீதி மன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்று போராட்டம் நடத்தினோம்.
அதன் பிறகு எங்களுக்கு காவல்துறை மூலம் தொடர்ந்து கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது.
வழக்கமாக நாங்கள் “ஹால் மீட்டிங்” நடத்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படி பயன்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடுவோம்.

இது போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தச் சென்றபோது கூட தடுத்து நிறுத்தப்பட்டோம்.
எங்கள் மீது மொத்தம் 21 மான நஷ்ட வழக்குகள் போடப்பட்டன. 13 எப் ஐ ஆர்கள் பதிவு செய்யப்பட்டன.
அவற்றுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டோம்.
அவற்றில் பெரும்பாலானவை ரத்து செய்யப்பட்டு விட்டன. அந்த விசாரணைகளின் போது நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு அதிமுக அரசு ஆளானது.
இந்த ஆட்சியிலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி ஆகியோர் மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக எங்களுக்கு
நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவற்றிற்கு நாங்கள் உரிய ஆதாரங்களுடன் பதில் அனுப்பி வைத்திருக்கிறோம்.
துரைப்பாக்கம் கல்லுக்குட்டை நீர் நிலையைப் பார்வையிடச் சென்ற அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் மீது எப் ஐ ஆர் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. அந்த நடவடிக்கைக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டீர்கள். அந்த விவகாரம் எந்த நிலையில் உள்ளது?
காவல்துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டில் தான் இந்த சம்பவமும் நடந்தது. சம்பவ இடத்துக்கு நான் செல்லவில்லை. ஆனாலும் எப் ஐ ஆர் -ல் முதலாவதாக என் பெயரை சேர்த்தார்கள். அதில் இடம்பெற்ற 11 பேரும் மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டோம்.
மனித உரிமை ஆணையம் இருதரப்பினரையும் அழைத்து விரிவான விசாரணை நடத்தியது.
“நீங்கள் செய்தது தவறு” என்று காவல்துறையைக் கண்டித்து, 11 பேருக்கும் ஆளுக்கு ஒரு ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
நஷ்ட ஈடு கேட்டு நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டதற்குக் காரணம், உள்ளூர் அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கட்டளைப்படி கண்மூடித்தனமாக செயல்படக் கூடாது என்பதை உணர்த்துவதற்குத்தான்.!
நிலக்கரி இறக்குமதி செய்தது தொடர்பாக தமிழக அரசுக்கு 6 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக அதானி நிறுவனம் மீது குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினீர்கள்.அந்த விவகாரம் என்ன ஆயிற்று?
கடந்த 2018 ஆம் ஆண்டில், தரம் குறைந்த நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்து, சந்தை விலையை விட தமிழக அரசுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததில், அரசுக்கு ஆறாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதை ஆதாரத்துடன் வெளியிட்டோம். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் என்று சென்னையில் போராட்டம் நடத்தினோம். இது தொடர்பான விசாரணைக்கு கடந்த ஆண்டு ஜூலை -1ஆம் தேதி தமிழக அரசு அனுமதி வழங்கியது.அடுத்த சில தினங்களில் ஒரு தனி விமானத்தில் அதானி சென்னை வந்து இறங்கினார். அவர் யாரை சந்தித்தார் எனத் தெரியவில்லை. ( அதானி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு இருந்தது)

எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்குத் தேவையான ஆதாரங்களைக் கொடுத்திருந்தோம். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் மோசமான கலாச்சாரம் தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதைத் தடுக்க நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன?
இது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இது போல இல்லை. உலகின் வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் கூட தேர்தலின் போது பணப்பட்டுவாடா கலாச்சாரம் இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் இந்தப் பேரவலம் உக்கிரமாக நடக்கிறது. ஆளும் வர்க்கமே இதில் நேரடியாக ஈடுபடுவதால், அவர்கள் வசம் உள்ள காவல்துறை அமைப்புகள் இதைத் தடுக்க முற்படுவதில்லை.
ஈரோடு கிழக்கு தேர்தலின் போது நாங்கள் நேரில் சென்றிருந்தோம். எங்கள் கண் எதிரிலேயே பணப்பட்டுவாடா நடைபெற்றது.
நாங்கள் தேர்தல் அதிகாரிக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் அனுப்பினோம். ” அப்படி எதுவும் நடக்கவில்லை. நீங்கள் தான் தவறான தகவலை பரப்புகிறீர்கள்”என்று அவரிடம் இருந்து பதில் வந்தது. பணப்பட்டுவாடாவை ஒரு பிரச்சினையாகவே அவர்கள் பார்க்கவில்லை.
வாக்காளர்களின் சுயமரியாதையை பறிக்கும் இந்த அராஜகத்தைத் தடுத்து நிறுத்த, பொது மக்களால் மட்டுமே முடியும் என்பதால் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
“என் ஓட்டு விற்பனைக்கு அல்ல”
என்ற கோஷத்துடன், இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற முற்பட்டு வருகிறோம்.

வாக்காளர்களை சந்தித்து அவர்களிடம் கீழ்க்கண்ட ஐந்து கேள்விகளை முன் வைக்கிறோம்:
# ஒருவர் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு போடுகிறார், ஒருவர் வாங்காமல் தன் வாக்கை செலுத்துகிறார். இதில் யார் உயர்ந்தவர்?
# உங்கள் வீடு புகுந்து ஒருவர் 1 லட்சத்தை திருடிக் கொண்டு உங்கள் கையில் செலவுக்கு ரூபாய் 2000 தருகிறார் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
# அரசியல்வாதி, தான் சொந்தமாக சம்பாதித்தப் பணத்தைத் தருகிறாரா? அல்லது திருட்டுப் பணத்தை உங்களிடம் தருகிறாரா?
# அரசியல்வாதி கொடுக்கும் திருட்டுப் பணத்தை வாங்கும் போது உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறதா? இல்லையா?
# ஓட்டுக்குப் பணம் வாங்கும் பெற்றோர், பணம்வாங்காத பெற்றார், இவர்களில் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரி யார் ?
இப்படி 5 கேள்விகளையும் வாக்காளர்களிடம் கேட்டு இதுவரை பெற்ற பதில் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. பத்தில் ஒன்பது பேர் ஓட்டுக்கு பணம் பெறுவது தவறு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான களப்பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். பணப்பட்டுவாடாவுக்கு அரசியல்வாதிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?
அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் ஒரு முறை பேசும்போது டாஸ்மாக் மதுபானங்களில் ஏறத்தாழ 50 சதவீதம் வரி விதிப்புக்குள் வருவதில்லை” என்று குறிப்பிட்டார். அது போன்ற முறைகேடான வழியிலும் ஊழல் செய்தும் குவியும் பணத்தைப் பதுக்கி வைத்தும் தேர்தலின் போது வெளியில் எடுக்கிறார்கள்.
தமிழக முழுவதும் களப்பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?
அறப்போர் இயக்கத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்து கொண்டு தமிழக முழுவதும் 27 ஆயிரம் பேர் களப்பணி ஆற்றி வருகிறார்கள்.
இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று தங்கள் வேலை நேரம் போக சம்பளம் எதிர்பார்க்காமல் ஏராளமானோர் பணியாற்றுகிறார்கள். சென்னையில் உள்ள அறப்போர் இயக்க அலுவலகத்தில் மட்டும் 9 பேர் பணிபுரிகிறார்கள்.
தன்னார்வலர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, நீர்நிலை பாதுகாப்புக் குழு, தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பயிற்சி அளித்தல் குழு என்று பல்வேறு குழுக்களாகப் பிரிந்து செயல்படுகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட்ட வந்ததற்கு தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு மனோபாவமும், கடின உழைப்பும்தான் காரணம்.
அறப்போர் இயக்க செயல்பாடுகளை ஆதரிக்கும் பொதுமக்கள் அனுப்பும் நன்கொடைகளையும் பணிகளுக்கு ஆகும் செலவையும் எங்கள் இணையதளத்தில் வெளியிட்டு, அனைவரின் பார்வைக்கும் வைக்கிறோம்.
Also read
சென்னையில் உள்ள அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகிறது. அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றவும் மற்ற விவரங்களை அறியவும்
7200020099 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.”
இவ்வாறு, ஜெயராம் வெங்கடேசன் கூறினார்.
நேர்காணல்: ம.வி.ராசதுரை
மூத்த பத்திரிகையாளர்.
















Leave a Reply