பிறப்பு சான்றிதழ் இல்லாதவர் வாக்காளராக முடியாதாம். இந்தியக் குடிமகனாகவும் இருக்க முடியாதாம்! ஆளும் கட்சியின் அடியாளாக களம் இறங்கி, சட்டபூர்வமான தேர்தல் ஆணையம், செய்துள்ள சட்ட விரோத செயல்கள் பிரமிப்பை தருகின்றன. வாக்காளர் பட்டியலில் 52,30,000 பேர் அப்புறப்படுத்தப்பட்ட பின்னணி என்ன?
பாராளுமன்றம் நான்கு நாட்களாக கொந்தளிப்பில் உள்ளது. பீகாரில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் சில தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருவது தான் இதெற்கெல்லாம் காரணம். பீகார் எதிர்கட்சித் தலைவர் தேசஸ்வி யாதவ் இண்டியா கூட்டணி தேர்தலை புறக்கணிப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பீகாரில் மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நடைபெற்று வரும் செயல்பாடுகள் பெரும் அதிர்வுகளை உருவாக்கி உள்ளது.
நவம்பர் மாதம் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடக்க வேண்டும். வாக்காளர்கள் பட்டியல் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி மாற்றம், இறந்தவர் பெயர் நீக்கம் அவ்வப்போது முகாம்கள் நடந்துள்ளது.
இந்தச் சூழலில் சென்ற மாதம் ஜுன் 24 தொடங்கி இந்த மாதம் ஜூலை 25க்குள்ளாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்று சொல்லி களம் கண்டது தேர்தல் ஆணையம். இதன் பணி வீடுவீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களிடம் படிவங்களை கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து மீண்டும் அவற்றை சமர்ப்பிப்தை உறுதி செய்வதாகும்.
அதன்படி இந்த படிவங்களை இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து, அவற்றை இரு படிவங்கள் எடுத்து, மொழி மாற்றம் செய்து வாக்காளர்களிடம் முதலில் கொடுக்க வேண்டும். பிறகு ஆவணங்களை சரிபார்த்து அவற்றை அங்கீகரித்து மீண்டும் இணையத்தில் ஏற்ற வேண்டும்.
பீகாரில் உள்ள 7,89,69,844 வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் வீடுதேடிச் சென்று நேரில் சந்தித்து ஒரே மாதத்தில் இந்தக் காரியத்தை முடிப்பது என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்றாகும். இதற்கு சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை நியமித்தாலுமே கூட முடியாது என்ற பட்சத்தில் சில ஆயிரம் பேரைக் கொண்டு நாங்கள் எல்லாவற்றையும் முடித்து விட்டோம். அதன்படி, 52,30,000 பேரை நீக்கியுள்ளோம். ..’’ என்கிறார்கள்.

பெரும்பாலான பகுதிகளுக்கு தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வரவே இல்லை. மக்கள் அவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, எல்லாம் முடிந்துவிட்டது என அறிவித்திருப்பதே தற்போதைய கொந்தளிப்புகளுக்கு காரணமாகும்.
சுண்டைக்காயை, வெண்டைக்காயை சோத்துக்குள்ள மறைக்கிற கில்லாடிகளைத் தான் இது வரை நாம் பார்த்துள்ளோம்.
ஆனால், முழு பூசணியையே மறைக்க முயற்சிக்கிறார்கள்!
ஆனால், அது முடியாது என தெரிய வந்தும் கூட மூர்க்கமாக செயல்படுகிறார்கள்!
’’இவர்கள் பீகாரின் பூர்வ குடிகளாயிற்றே. ஏன் இந்த நீக்கம்?”’ என்று கேட்டால்,
எங்க தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வீடுவீடாக வந்து செய்த கள ஆய்வில் பீகாரில் வங்க தேசத்தினர், மியான்மர் நாட்டினர், நேபாளக்காரர்கள் அதிக அளவில் இருப்பதை கண்டு பிடித்துள்ளோம்’’ என்கிறார்கள்.
ஆனால், நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு எந்த ஊழியரும் செல்லவில்லை, விசாரிக்கவில்லை, ஆய்வு நடத்தவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால், தேர்தல் கமிஷன், ஊழியர்களையோ அதிகாரிகளையோ பெரும்பாலான பீகார் மக்கள் தங்கள் கண்ணால் கூட காண முடிவதில்லை.
தேர்தல் கமிஷனின் மிகப் பெரிய அறையில் உட்கார்ந்து கொண்டு வாக்காளர் லிஸ்ட்டை கையில் வைத்துக் கொண்டு, வசிக்கும் இடம், பெயர்.. ஆகிய அடையாளங்களை வைத்தே, இது இஸ்லாமியப் பெயர் , இது கிறிஸ்துவப் பெயர், இது தாழ்த்தப்பட்டவர்கள் பெயர்…எல்லாத்தையும் தூக்கு, தூக்கிக் கடாசு’’ என்ற ரீதியில் இயங்கி உள்ளனர்.

பல பேர், என்னடா நம்ம ஊருக்கு வரவேயில்லையே நாமே நேரில் சென்று பேரை பதிவு செய்யலாம் எனப் போனால், அங்க கண்ட காட்சிகள் அதிர வைத்துள்ளன.
ஒவ்வொரு அதிகாரியும் ஆயிரக்கணக்கானவங்க கையெழுத்தை தானே போட்டு, வேட்பாளர் லிஸ்டை தயார் செய்து கொண்டுள்ளார். இதை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் விஷுவலாகவே படம் பிடித்து அம்பலப்படுத்தியும் விட்டார்.
ஒரு ராணுவ அதிகாரி இந்த வாக்காளர் பட்டியலில் தன் பெயரை சேர்ப்பதற்கு விடுமுறை போட்டு வந்து மூன்று முறை தானே தேர்தல் கமிஷன் அலுவலகம் சென்றுள்ளார். ஆனால் மூன்று முறையும் அவரை சந்திக்க மறுத்துள்ளனர். பின்னர் தன்னுடைய ஏரியாவுக்கான அதிகாரியின் வீட்டை தேடிச் சென்று தன் விண்ணப்ப படிவத்தை தந்துள்ளார் அவர்.
அதற்கு அந்த அதிகாரி, ”உங்க பெயரை வாக்காளர் லிஸ்டில் ஏற்கனவே சேர்த்து விட்டோம். விண்ணப்ப மனு அவசியமில்லை…!” என்கிறார்.
”அதெப்படி? புதிதாக விண்ணப்பித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியும் எனக் கூறப்பட்டு உள்ளதே?”
”இல்லை. உங்க விண்ணப்பத்தை நானே பூர்த்தி செய்து தயார் செய்துவிட்டேன்”
”நான் கையெழுத்து போடவில்லையே”
”ஆமாம். அதை நானே போட்டுவிட்டேன்” எனக் கூறவும்,
”இது மிகவும் அக்கிரமம். என்ன செய்கிறிர்கள் நீங்கள்?” என கோபபட்டதும், சமாதானம் செய்யப்பட்டுள்ளார்.
ஆக, இந்த லட்சணத்தில் தான் இவர்கள் செயல்பட்டுள்ளனர். அதாவது, இந்திந்த இடங்களில் நமக்கு ஓட்டு வராது, இவங்களெல்லாம் இந்துக்கள் இல்லை.. என்பதாக வாக்காளர்கள் லிஸ்டில் இருந்து பேர் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கு. சேர்க்கப்பட்டும் இருக்கிறது.
இந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்காளர்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற தேர்தல் ஆணையத்திற்கு ஆதார் அட்டையோ, ரேஷன் கார்டோ, வாக்காளர் அடையாள அட்டையோ போதுமானதில்லையாம். வாக்காளர் தன்னுடைய பிறப்பு சான்றிதழை தர வேண்டுமாம்.

இது மட்டுமின்றி.இத்துடன் தங்களது பெற்றோரின் சான்றிதழையும் தனியே சமர்ப்பிக்க வேண்டுமாம். இப்படி பிறப்பு சான்றிதழை தர முடியாவிட்டால்,
”நீங்க வங்க தேசத்தவரா? நேபாளமா? அல்லது மியான்மரா?” என்று கேட்டு சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்குகிறார்கள்.
”விரைவில் உங்களுக்கு அகதிகள் முகாம் தயாராகிறது” என்றும் கூறுகிறார்கள். நாற்பது, ஐம்பது வருடத்திற்கு முன்பு பிறந்துள்ள பெரும்பாலான மக்களால் பிறப்பு சான்றிதழை காட்ட முடியாது என நன்கு தெரிந்தே இந்த நடைமுறையை செய்கிறார்கள்.
இதனால் தான் பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் இந்த அக்கிரமத்தை எதிர்த்து கொந்தளித்துள்ளனர்.

முன்னதாக தேர்தல் கமிஷனின் இந்த முறைகேடான செயல்பாடுகளை தடுக்க கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம், சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர சிங் யாதவ், மனோஜ் ஜா, மஹிவா மொய்த்ரா, பிரசாந்த் பூஷன், கபில் சிபல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால், தேர்தல் ஆணையம் எதற்கும் சளைக்காமல் – மனசாட்சியில்லாமல் – பதில் தந்துள்ளது.
Also read
”எதிர்கட்சிகளின் போராட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் பயந்து விடாது. சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அரசியலமைப்பிற்கு எதிராக பீகாரில் இறந்த வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இரண்டு இடங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள், போலி வாக்காளர்கள், வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற பெயரில் மோசடி வாக்களிப்புக்கு வழிவகுக்க வேண்டுமா? ” என்று தாங்கள் ஏதோ நியாயஸ்தர்கள் போலக் கேட்டுள்ளனர்.
ஆக, இனிமே, ‘தேர்தல் மூலமாக பாஜகவை தோற்கடிக்க முடியும்’ என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலையை உருவாக்கி வருகிறார்கள்.
‘இதை நாம் எப்படி எதிர்கொள்வது?’ எனத் தெரியவில்லை. ஜனநாயகத்தை மீட்க மிக அர்ப்பணிப்புள்ள மக்கள் போராட்டம் காலத்தின் கட்டாயமாகிறது.
சாவித்திரி கண்ணன்














Leave a Reply