”இன்னும் எங்கள் போராட்டம் தீவிரமடையும்” – அரசு ஊழியர்கள்!

-டி.எஸ்.எஸ்.மணி

‘பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவோம்’ எனக் கூறிய வாக்குறுதி என்னவானது? என கேட்கும் அரசு ஊழியர்களின் போராட்டம் உக்கிர நிலையை எட்டியுள்ளது. பல கட்டப் போராட்டங்களை மாவட்டம் தோறும் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் உச்சகட்டமாக மூன்று நாள் முற்றாக உணவை தவிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். முழு விவரம்;

வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்ட ஸ்டாலின்!

பொறுத்து, பொறுத்து பார்த்த அரசு ஊழியர்கள் பொங்கி எழுந்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி தந்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர் தம் குடும்பங்களின் ஓட்டை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் நான்காண்டுகளை கடத்தி விட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார் என்று கொந்தளிக்கிறார்கள், அரசு ஊழியர்கள். இதற்கு நீதி கேட்டு சேப்பாக்கம், எழிலகம் வளாகத்திற்குள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 72 மணி நேர பட்டினிப் போராட்டம் நடத்தி உள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.

மிகவும் உத்வேகத்துடன் நடந்த இந்த 72 உண்ணாநிலை அறப் போராட்டத்தை புதன்கிழமை காலை 10 மணியளவில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார், பி.பிரடெரிக் எங்கெல்ஸ், மாநில நிதி காப்பாளர் சி.ஜான் லியோ சகாயராஜ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி எழுச்சி உரை ஆற்றினர். பல்வேறு அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் திரளாக வந்து போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி உரக்க கோஷம் எழுப்பப்பட்டது.

CPS ஒழிப்பு இயக்கம் எனப் பதாகை இருந்தது. அதாவது ” புதிய ஒய்வூதிய ஒழிப்பு” என்று பொருள்.அதாவது ” பங்களிப்பு ஒய்வூதியம்” என்ற, Contributing Pension Scheme.

இன்று தமிழ் நாட்டில் நிலவி வரும் ” புதிய ஒய்வூதியத் திட்டம்” என்பது, ” பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம்( Contributed Pension Scheme)” என்ற வகையைச் சேர்ந்தது. இந்த வகை, ” கார்பொரேட் நிறுவனங்களுடன் போடும் ஒப்பந்தம்” என்கிறார் டில்லியிலிருந்து வந்துள்ள மஞ்சித்சிங் படேல் என்ற பழைய ஒய்வூதியத் திட்டத்திற்கான அகில இந்திய இயக்கத் தலைவர்.

அதில் வேடிக்கை என்னவென்றால், அதற்கான ஒப்பந்தமான, PFRDA என்ற ” ஒய்வூதிய நிதியை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சிக்கான அதிகாரம்” எனும் அமைப்புடன் இதுவரை தமிழ்நாடு அரசு “புரிந்துணர்வு ஒப்பந்தம்” கூடப் போடவில்லை. இந்த CPS என்பது, 10% அரசின் பங்களிப்பையும், 10% ஊழியர் அல்லது ஆசிரியர் தரப்பு பங்களிப்பையும் பெற்றுக் கொண்டு, ஊழியர்களின் நிதிச் சேர்ப்பை செய்யும்.

அதே சமயம் ஒன்றிய அரசு 2003 ல் அறிவித்த NPS என்ற ” தேசிய ஒய்வூதியத் திட்டம்” அரசு தரப்பில் 14% ம், ஊழியர் மூலம் 10% ம் பெறக்கூடியது. கடும் எதிர்ப்புகள் நாடெங்கிலும் கட்டமைக்கப்பட்ட பிறகு, ஒன்றிய அரசு சமீபத்தில், ” UPS என்ற ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தை” அறிவித்துள்ளது. அதில், 18.5% அரசும், 10% ஊழியரும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

‘இந்த மூன்றும் வேண்டாம். OPS என்ற பழைய ஒய்வூதியத் திட்டமே வேண்டும்’ என்பதே, ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை. இதற்காகத் தான் தமிழகம் தழுவி பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

3 புதிய ஒய்வூதிய திட்டங்களில், மிகவும் மோசமான ” ஊழியர், ஆசிரியர் எதிர்ப்பு அம்சங்களைக் கொண்டது, தமிழ் நாட்டில் நிலவும், CPS முறை. இந்த முறையை  தமிழ்நாட்டரசு கொண்டு வர ஒப்புக் கொண்டது 2003-ம் ஆண்டு நடந்த ஜெ ஆட்சி. ஊழியர்களின் எதிர்ப்பால்  அமுலாக்கப்படாமல் இருந்த இந்த திட்டம் திமுக ஆட்சியில், 2009 முதல் அமுலாக்கப்பட்டது.

இதை எதிர்த்து, எல்லா ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடியதால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது 2021 தேர்தல் பரப்புரையிலும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் 309 வது அம்சமாக, “புதிய ஒய்வூதியத் திட்டத்தை நீக்கி, பழைய ஒய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம்” என்றும் வாக்குறுதி அளித்தார்..

அதனால்தான், இந்த 72 மணி நேரப் பட்டினிப் போராட்டம் நடக்கிறது.. ”அதே நேரம், இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் CPM, CPI கட்சிகளும், அவர்கள் தலைமையிலுள்ள JACTO JIO அமைப்பும் தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து போராடத் தயங்குகின்றனவா?” என்பது CPS ஒழிப்பு இயக்கம் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

உடல் நிலை மோசமான ஜெயராஜேஸ்வரன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது..

இதற்கு இடையே, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த போது, இமாச்சல் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் “OPS என்ற பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமலாக்கி விட்டனர். மீண்டும் சட்டிஸ்கரில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. மீண்டும் NPS என்ற புதிய ஒய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்து விட்டார்கள். ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அங்கு, ” புதியதற்கும், பழையதற்கும் இடையில் ஊசலாடுகிறது” என்கிறார், டில்லியிலிருந்து வந்துள்ள தலைவர் மஞ்சித்சிங் படேல்.

இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரடெரிக் எங்கெல்ஸ், ‘’ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறியுள்ளன. எனவே, திமுக அரசும் அந்த மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை காட்டிலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் அரசுக்கு குறைந்த செலவே ஏற்படும். அரசு இதை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பரில் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம். அந்த நிலைக்கு அரசு ஊழியர்களை தள்ளக் கூடாது” என்றார்.

72 மணி நேரங்கள் அதாவது சரியாக மூன்று நாட்கள் தண்ணீர் மட்டுமே அருந்தி உண்ணாவிரதம் இருந்த 16 பேர் மூன்றாவது நாளான இன்று  சனிகிழமை அதிகாலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்று விட்டனர். இரவில் இரண்டு ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். கோவை மாவட்ட ஆசிரியர் சிவலிங்கம், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளருமான ஜெயராஜேஸ்வரன் ஆகியோர் உடல் நலன் குன்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்று காலை 10 மணியளவில் டில்லியிலிருந்து வந்துள்ள தலைவர் மஞ்சித்சிங் படேல் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த தோழர்களுக்கு பழச்சாறு தந்து உண்ணாவிரத்தை முடித்து வைத்தார்.

செய்தி மற்றும் கட்டுரையக்கம்; டி.எஸ்.எஸ்.மணி

அரசியல் விமர்சகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time