சம நிலை இழந்துள்ளார், நீதிபதி சுவாமிநாதன்!

-சாவித்திரி கண்ணன்

சனாதனப் புகழ் சுவாமிநாதன் தன் சமநிலை இழுந்துள்ளார். தன்னைத் தானே சிதைத்துக் கொள்வதில் தன்னிகரற்றவரான நீதிபதி  சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை வாட்டி வதைக்கத் துடித்து, தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டிருக்கிறார். அடங்கா ஆத்திரம், இரட்டை நாக்கு பேச்சு.. என முற்றிலும் அம்பலப்பட்டுள்ளார்;

இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளின் வளாகங்களிலும் வழக்கறிஞர்கள் போராடியுள்ளனர். அந்தப் போராட்டம் ஒரு நீதிபதியின் தவறான நடவடிக்கைகள் சம்பந்தமானது. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் எந்த  ஒரு நீதிபதியும் இவ்வளவு கடுமையான விமர்சனங்களை மக்களிடம் எதிர் கொண்டதில்லை.

நீதிபதி சுவாமிநாதனின் பெரும்பாலான தீர்ப்புகளில் அவரது சனாதன சார்பு பார்வையும், இந்துத்துவ சார்பு மனநிலையும் வெளிப்பட்ட வண்ணம் உள்ளது. இந்துத்துவ அரசியல்வாதிகளை ஆதரிக்கவும், பார்ப்பன கருத்தியலை வலுப்படுத்தவும் ஒரு நீதிபதி தன் பதவியின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவார் என்றால், அவர் எப்படி மக்களின் அன்பை, மரியாதையை பெற முடியும்?

தற்போது நாட்டின் அத்தனை வழக்கறிஞர்களும் ஒன்றுபட்டு களத்தில் இறங்கி போராடுகிறார்கள் என்றால், அது ஏதோ வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்ற தனிநபருக்காக அல்ல.

நீதிமன்றத்தில் நீதிபதி ஆசனத்தில் அமர்ந்தபடியே “நான் ஸ்மார்த்த பிராமணன்” என்று தன் சாதியை பெருமை பொங்க பகிரங்கப்படுத்திக் கொள்ளும் அவர் எப்படி பொது நலன்களுக்கானவராக கருதப்படுவார்?

சட்டம் படித்து, வழக்கறிஞராக செயல்பட்டு இந்த அறிவு, அனுபவத்தில் அடிப்படையில் நீதிபதியான ஒருவர் சதா சர்வகாலமும் சனாதனம், மனுசாஸ்திரம், வேதம் என்ற கண்ணோட்டத்தில் இயங்கும் போது மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

”தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் சங்கராச்சாரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை” என்றதும்,

”பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலைகளில் உருள்வது அவரவர் தனிப்பட்ட ஆன்மிக நம்பிக்கை சார்ந்தது” என்று நியாயப்படுத்தியதும்,

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் வழக்கில், ஆகமம் படித்த பிராமணர் அல்லாதவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ததும்,

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்றத்தை கற்பித்து வதந்தி பரப்பபட்ட போது, உண்மை நிலை அறிவதற்கு முன்பே அந்த வதந்திக்கு ஆதரவு நிலை எடுத்தார். வதந்தி பரப்பியவர்களை ஆதரித்தார்.  சம்பந்தப்பட்ட  ஊருக்கு மைக்கேல் பட்டி என்ற பெயர் எப்படி வந்ததென விசாரிக்க வேண்டும்’ என்றதும்.

பொய்யும், புரட்டும், பாஜக சார்பு அரசியலையும் முன்னெடுக்கும் யூ டுயூபர் மாரிதாஸை புகழ்ந்து அவருக்கு  சட்ட பாதுகாப்பு தந்ததும்..,

இன்னும் பல விவகாரங்களில் அவரது நடவடிக்கைகளை பட்டியலிடலாம். இப்படியெல்லாம் செயல்படும் ஒருவர் நீதிபதியாக தொடர்வது நாட்டுக்கும், மக்களுக்கும் கேடல்லவா?

அதைத் தானே ஆதாரபூர்வமாக பட்டியலிட்டு உச்சநீதிமன்றத் தலைமைக்கு அனுப்பினார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்?

அப்படி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பபட்ட புகார் எப்படி ஒரு பாஜக வழக்கறிஞர் நடத்தும் வாட்ஸ் அப் குழுவில் வெளியானது…? எனில், உச்சநீதிமன்றத்தில் இருந்து அதை ‘லீக்’ செய்த கருப்பு ஆடு யார்? அந்த கருப்பு ஆடுக்கும், நீதிபதி சுவாமிநாதனுக்கும் என்ன சம்பந்தம்?

தன்னைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அவ்வளவு கசக்கிறதோ, நீதிபதி சுவாமிநாதனுக்கு? அதன் வெளிப்பாடு தான் சம்பந்தமில்லாத வழக்கிற்கு வாஞ்சிநாதனுக்கு அழைப்பாணை அனுப்பி, கோர்ட்டில் வைத்து ஆத்திரமாக கேள்வி கேட்க தூண்டியுள்ளது. இந்த இடத்தில் நீதிபதி  சுவாமிநாதன் தன் சமநிலையை இழந்துள்ளார். கோர்ட் அரங்கை குழாயடி சண்டை இடமாக்க முயற்சித்துள்ளார். நல்ல வேளையாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அதற்கு இடம் தராமல், ”எழுத்து பூர்வமாக கேளுங்கள், அதற்கு பதில் தருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

கண்ணியமாக பதில் தந்த வாஞ்சி நாதனைப் பார்த்து ”கோழை” என்கிறார். ”நீயெல்லாம் போராளியா?  காமெடி பீஸ்” என்கிறார்.  ”அடடா? சுவாமிநாதன் தன்னை போலவே பிறரையும் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டாரே, சபாஷ்!” என்று வாழ்த்துவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தூத்துக்குடியில் ஏழை.எளிய மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு போராடிய போது அதை ஆதரித்து அங்கே சென்று அந்த மக்களுடன் தங்கி போராடியவர் வாஞ்சி நாதன். அந்த வாஞ்சி நாதனுக்கு பிணை வழங்க மறுத்ததும், அவர் தூத்துகுடி செல்வதற்கே நிரந்தர தடை போட்டதும் சுவாமிநாதன் அவர்கள் தானே?

திருப்பரங்குன்றத்தில் மத ஆதிக்க சக்திகள் மத மோதலை உருவாக்க செயல்பட்டதை களம் இறங்கி தடுத்து உண்மைகளை வெளிப்படுத்தி சமய நல்லிணக்கத்தை உருவாக்கியவர் வாஞ்சிநாதன்.

சுவாமிநாதனின் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கறிஞர் வாஞ்சி நாதனை பழி வாங்கத் துடிப்பது அம்பலப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற எட்டு நீதிபதிகள் களத்திற்கு வந்தனர்.

மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது பாரபட்சமானது. ஆகவே, அதை கைவிட வேண்டும் என உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, டி.ஹரிபரந்தாமன், சி.டி.செல்வம், அக்பர் அலி, பி.கலையரசன், எஸ்.விமலா, எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் உயர்நீதிமன்ற அமர்வுக்கு தெரியப்படுத்தினர்.. வழக்கறிஞர்கள் சங்கங்களும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிடுமாறு  கொந்தளித்தன.அதுவும் குறிப்பாக நீதிபதி ஹரிபரந்தாமன் உடனே மதுரை சென்று பிரஸ் மீட் வைத்து தெளிவாக விளக்கினார்;

”நீதிபதி தொடர்பாக, புகார்களை ஒரு வழக்கறிஞர்  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு  அனுப்ப சட்டம் இடம் தருகிறது.  இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விசாரிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்பினால், உள் விசாரணைக் குழு (இன்ஹவுஸ் இன்கொயரி) அமைப்பார். உள் விசாரணைக்குழு விசாரணைக்கு பின் புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவரே எப்படி நீதிபதியாக அதை விசாரிக்க முற்படலாம்? சுவாமிநாதன் விசாரிக்கக் கூடாது’’ என்றனர்.

உடனே, சுதாரித்துக் கொண்ட சுவாமிநாதன் சட்டென்று ‘டிராக்’ மாறினார்.

வாஞ்சிநாதன் வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வாஞ்சிநாதனிடம் ‘’நாங்கள் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியது குறித்து விசாரிக்கவில்லை. உங்கள் மீது இதுவரை எந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கூறி, அவர் பல்வேறு காலகட்டங்களில் பேசிய வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன் எடுத்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு பல்கலைக் கழக வேந்தருக்கான அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நடத்திய விசாரணையை வாஞ்சிநாதன் விமர்சனம் செய்து பேசிய வீடியோவை கோர்ட்டில் ஒளிபரப்பிவிட்டு, ”இதில் நீதித் துறையை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துள்ளீர்கள். அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?’’ என வாஞ்சிநாதனிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்டுள்ளார்.

ஐயா, சுவாமிநாதன் அவர்களே, வாஞ்சி நாதன் பேசியதைத் தான் தமிழக மக்கள் வீடுகள் தோறும், வீதி முனையில் உள்ள தேனீர் கடைகளிலும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..?

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிய பிறகு, அந்த தீர்ப்பிற்கு உயர் நீதிமன்றம் தடை கொடுக்குமானால், நீதி பரிபாலன முறையின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய்விடாதா?

இன்றென்ன பேசியுள்ளார் சுவாமிநாதன்;

நீங்கள் என்னுடைய தீர்ப்பினை விமர்சிப்பதற்கு நூறு சதவீதம் உரிமை உள்ளது. அதற்கு நானே ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால், சாதி பாகு பாட்டுடன் தீர்ப்பளிப்பதாக குற்றம்சாட்டுவது என்பது வித்தியாசமானது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இதை உங்களுடன் இருக்கும் வழக்கறிஞர்களிடமும், ஓய்வு பெற்ற நீதிபதிகளிடமும் கூறுங்கள். எனது நீதித்துறை செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது…!

அதாவது, ‘அவருடைய தீர்ப்பை விமர்சிக்க உரிமை உள்ளது, அதற்கு தானே ஆதரவளிப்பேன்’ என்றெல்லாம் கூறிவிட்டு, தான் கூறியதில் தானே முரண்பட்டவராக’  ”வாஞ்சிநாதன் செயல்பாடுகள், பேச்சுக்கள் நீதிமன்ற அவமதிப்பு” என கருதுகிறோம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைக்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

இது வரை இவர் தன்னை, ‘சனாதன சுவாமிநாதன்’ என்றே மக்கள் மனதில் பதிய வைத்திருந்தார். ஆனால், இன்று முதல், ‘இரட்டை நாக்கு சுவாமிநாதன்’ என்ற புகழுக்கும் உரித்தாகிறார்.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time