பகல்காம் தாக்குதல்; பாய்ந்த எதிர் கட்சிகள்! பம்மிய பாஜக அரசு!

-ச.அருணாசலம்

இன்னும் நாட்களை கடத்த முடியாது என பகல்காம் தாக்குதல் குறித்த விவாதங்கள் ஒரு வழியாக அனுமதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கே வராமல் மோடி ஓடி ஒளிந்து கொண்டார். தாக்குதல்  தீவிரவாதிகள் யார்?, இவ்வளவு கண்காணிப்பை மீறி அங்கு எவ்வாறு வந்தனர்?, இதற்கு யார் பொறுப்பு? டிரம்பின் பீத்தல்களுக்கு என்ன பதில்? இவை எவற்றுக்காவது விடை கிடைத்ததா?

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் நடந்த தீவிரவாத படுகொலைக்கு பிறகு நூறு நாட்கள் கழித்து,ஆபரேஷன் சிந்தூர் நடந்து முடிந்து 78 நாட்கள் கழித்து இது பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது ஜுலை -28ந்தேதி- நடந்தது. ஆனால், இதில் பிரதமர் நரேந்திர மோடிபங்கேற்கவில்லை. விரிந்த மார்புடைய மோடி தனது சகாகாக்களான ராஜ்நாத் சிங், அமீத் ஷா மற்றும் ஜெய்சங்கரை முன்னிறுத்தி சமாளித்துள்ளார்.

ஏப்ரல் 22 ல் நடந்த தீவிரவாத படுகொலைக்கு மே மாதம் 6 ந்தேதி இரவு பாக்கித்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் “பதிலடி” கொடுத்த போது, இந்தியா பல விமானங்களை, பாக். எதிர் தாக்குதலில் பலி கொடுத்தது, இதை தொடர்ந்து பரஸ்பர ட்ரோன் தாக்குதல்கள், ஏவுகணைகளை வீசுதல் போன்றவை எல்லைகளை தாண்டாமலே நடந்தன.

ராவல் பிண்டி பற்றி எரிகிறது, கராச்சியை இந்திய கடற்படை கைப்பற்றியது என கோடி மீடியா கதை விட்ட பொழுது, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா பாக்கித்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என முதலில் அறிவித்தார்.

பல மணி நேரம் கழித்து இதை உறுதி செய்த இந்திய அரசு , பாக்கித்தான் DGMO கேட்டு கொண்டதற்கிணங்கவே இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது என்று கூறியது.

அது வரை இந்தியாவின் முகமாக மோடியை காட்டிய இந்திய அரசு இப்பொழுது வெளியுறவு அதிகாரியான விக்ரம் மிஸ்ரியை போர் நிறுத்தம் செய்யும் இந்திய முகமாக காட்டியது. ‘இந்தியா பாக்கித்தானுக்கு எதிராக வெற்றிகளை குவிக்கும் பொழுது, கராச்சி நகரை கைப்பற்றிய பொழுது ஏன் போர் நிறுத்தம் செய்கிறது? அதை டிரம்ப் எப்படி அறிவிப்பார்? அதை எப்படி இந்தியா ஏற்றுக் கொள்ள முடியும் என “தேச பக்தர்கள்” கொதித்தனர்.

உலகெங்கும் உள்ள ஊடகங்கள் இந்திய விமானங்கள் பல பாக் ராணுவத்தால், இந்திய எல்லைக்குள்ளாகவே சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஆதாரங்களுடன் கூறிய போது, இந்திய ராணுவ தலைமையும் (அனில் சௌகான்) இதை பட்டும் படாமல் ஒத்துக் கொண்டதும் இந்திய மக்கள் மனதில் கலவரத்தை ஏற்படுத்தின. ஆனால், இந்திய பிரதமரோ, இந்திய அரசோ இதை பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத்தை கூட்டி வெளிப்படையான விவாதத்தை நடத்த எதிர்கட்சிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் செவி மடுக்காத மோடி அரசு வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலைபாட்டை எடுத்துக்கூற நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்களை அனுப்பியது!

எதிர் கட்சி உறுப்பினர்கள் சிலர் அடங்கிய இக்குழுக்கள் வெளிநாடுகளுக்கு சென்று சாதித்ததென்ன என்பதை விட , வெளி நாடுகளுக்கு இந்திய ஒற்றுமையை – எதிர்கட்சிகளும் இணைந்த ஒற்றுமையை – காட்ட விழைந்த மோடி உள்நாட்டில் எதிர்கட்சிகளை உதாசீனப்படுத்துவதும், ஓரங்கட்டுவதும் ஒற்றுமையையோ, ஜனநாயக நடைமுறையோ வெளிக் காட்டவில்லை என்பதை உலகம் அறியாமல் இல்லை!

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , இந்தியா போர் நிறுத்தம் செய்ததற்கு யாருடைய அழுத்தமும் காரணமல்ல, தீவிரவாதிகளின் முகாமை அழிப்பதென்ற இந்தியாவின் நோக்கம் நிறைவேறிவிட்டதால், பாக்கித்தான் கேட்டு கொண்டதற்கிணங்க இந்தியா போரை நிறுத்தியது’’ என்றார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை’’ என்றார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் , பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை ஜெய்சங்கர் ஏனோ மறந்துவிட்டார்!

காங்கிரஸை சார்ந்த எதிர்கட்சி துணைதலைவரான கவுரவ் கோகோய் , தீவிரவாத தாக்குதல் நடந்து நூறு நாட்களாகியும் தீவிவாதிகளை கண்டுபிடிக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது, பெகாசஸ் போன்ற ஒட்டு கேட்கும் கருவிகளை, ட்ரோன்களை, சி ஆர் பி எஃப், பி எஸ் எஃப், சி ஐ எஸ் எஃப் போன்ற ஏராளமான படைகளை காஷ்மீரில் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் யார் என்றோ, எங்கிருந்து வந்தனர் என்றோ, இப்போது அவர்கள் எங்கே என்றோ கண்டறிய முடியாத கையாலாகாத அரசாக, மோடி அரசு உள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.

இத்தகைய தோல்விக்கு யார் பொறுப்பு ? காஷ்மீரின் துணை நிலை ஆளுனரா? பழியை தன் மீது சமத்திக்கொண்டு அவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தாலும், இது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி, உள்துறை அமைச்சர் அமீத் ஷாவின் தோல்வி என்று கோகோய் இடித்துரைத்தார்.

சமாஜ்வாதி கட்சியை சார்ந்த ராமசல் ராஜ்பார், இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க தவறிய இந்திய அரசை சாடினார். போர் நிறுத்த முடிவை அவர் குறை கூறினார். நமக்கு தேவை ஆபரேஷன் சிந்தூர் அல்ல, ஆபரேஷன் தந்தூர் என்று முழங்கினார். நாம் எண்ணுவது போல் மோடி விஷ்வகுரு அல்ல, விஷ்வகுரு அமெரிக்காவில் இருக்கிறார் என்று பா ஜ க அரசை பரிகசித்தார் ராஜ்பார்.

தேசியவாத காங்., தலைவர் சுப்ரியா சுலே பேசுகையில், பகல்காம் தீவிரவாதிகளை பிடிக்கும் வரையில் நமக்கு கொண்டாட்டம் ஏதுமில்லை என்றார்.

ஓவைசி பேசுகையில், இந்திய அரசின் வெளியுறவு கொள்கையை கேள்வி கேட்டார். வெள்ளை மாளிகையில் உட்கார்ந்திருக்கும் ஒரு வெள்ளையர் போர் நிறுத்தத்தை அறிவிக்க முடியுமென்றால், ஆட்சியாளர்களின் தேசபற்று எங்கே போனது? என்று கேட்டார். பாக்., ராணுவதளபதி முனீரை அமெரிக்கா புகழ்ந்து வரவேற்பது இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துள்ளதை காட்டுகிறது என்று கூறினார்.

அநேகமாக அனைத்து எதிர்கட்சிகளும் டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பை கேள்வி கேட்டனர். அதை மறுத்து அறிக்கை விடாத, வாய் திறக்காத மோடியை கடுமையாக சாடினர்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ”ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை டிரம்ப் மோடியுடன் தொலைபேசியில் பேசவில்லை என்றார் . அடுத்து அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் வணிகத்திற்கும் போர் நிறுத்தத்திற்கும் முடிச்சை நாங்கள் ( இரு நாடுகளும்) போடவில்லை” என்று கூறினார்.

இதில் அமெரிக்க அதிபரின் சார்பாக துணை அதிபர் ஜே டி வான்ஸ் , பிரதமர் மோடியுடன் பேசியதை ஏனோ ஜெய்சங்கர் மறந்து விட்டார் .சண்டையின் போது (மே மாதம் 7-10 தேதிகளில்) பல நாடுகளிடமிருந்தும் போரை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கைகள் வந்த பொழுது, போர் நிறுத்தம் பாக்கித்தான் கேட்டால் தான் நட்க்கும், மத்தியஸ்தத்திற்கு இங்கு இடமில்லை என்று இந்தியா கூறியது என்று ஜெய்சங்கர் கூறினார். ஆக, போர்நி றுத்தம் ஏற்படுவதை இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கான கோரிக்கை பாக்கித்தானிடமிருந்து வர வேண்டும். அதற்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்பதே இந்தியாவின் தாமதமான அறிவிப்பிற்கு காரணம் என்பதை விவரமறிந்தோர் கூறுகின்றனர். பாக்கித்தான் போர் நிறுத்தத்தை விரும்பியது, அதற்கு அமெரிக்கா உதவியதையும் மறுக்கவில்லை , மாறாக டிரம்பிற்கு நன்றி கூறியது என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனால், அமீத் ஷா, ”எதிர்கட்சிகள், அமைச்சர் ஜெய்சங்கரின் பதிலை நம்பாமல் வெளிநாட்டினர் கூறுவதை ஏற்றுக் கொள்கின்றனர், இதனால் தான் எதிர்கட்சிகள் “எதிர் வரிசையில்” அமர்ந்துள்ளனர்” என்று தனது அரசியல் கணக்கை கூறினார், அந்த கணக்கு யாரை திருப்திபடுத்தியதென்று எமக்கு தெரியவில்லை!

ஆனால் இவர்கள் இவ்வாறு உரையாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்காட்லாந்தில் , பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருடன் நின்று கொண்டு மீண்டும்

(27வது முறையாக) தான் தலையிட்டு போரை நிறுத்தாமலிருந்திருந்தால் இந்தியா பாக்கித்தானுடன் இப்பொழுது சண்டையிட்டு கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்!

இந்தியாவிடமிருந்து காஷ்மீர் மக்கள் அன்னியபட்டு நிற்பதை முடிவுக்கு கொண்டு வர முரட்டு தேசீயவாதமே உதவும் என , சிறப்பு பிரிவு 370ஐ ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை துண்டாடி இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த ஆகஸ்டு 5 நடவடிக்கைகளுக்கு பிறகு காஷ்மீரில் மயான அமைதி நிலவியது. ஆம் , அரசியல் செயல்பாட்டாளர்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டனர், ராணுவம் குவிக்க பட்டது, இன்டெர்நெட் தடை செய்யபட்டது, தொழுகைகள் கூட மறுதலிக்க பட்டன! அடையாள அட்டையின்றி நடமாடும் மக்கள் கைது செய்ய பட்டனர். மாநிலமே திறந்த வெளிச் சிறைச் சாலையாக மாறியது.

தீவிரவாதம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது, மோடியால் முடியாததது ஏதுமில்லை, சுற்றுலா வளர்ச்சியே இதற்கான சாட்சி என்று நீட்டி முழக்கப்பட்டது. அந்த தருணத்தில் – பாக்கித்தானுக்கு பலுச்சிஸ்தான் மூலம் பதிலடி கொடுத்த அந்த தருணத்தில் – பஹல்காம் படுகொலை நடந்தது. சம்பவம் நடந்ததை கூட, ஒரு மணி நேரம் கழித்து அறிந்து கொண்ட காவல் படையினர், அடுத்த பத்தாவது நிமிடத்தில் இது பாக்கித்தான் தீவிரவாதிகளின் கைவரிசை எனக் கூறினர்.

உண்மையில் அந்த தீவிரவாதிகள் யார்? , இவ்வளவு கண்காணிப்பை மீறி எவ்வாறு படுகொலை செய்தனர்?, இதற்கு யார் பொறுப்பு? என்பதை அறியாமல் இந்திய அரசு பதினேழு நாட்களை கடத்தியது. பாக்கித்தான் ஆதரவு தீவிரவாதிகளே இப்படுகொலைக்கு காரணம் என இந்தியா காக்கையாக கரைந்தாலும் ஒரு நாடு கூட பாக்கித்தானை குற்றம் கூறவில்லை. இந்தியா தனது கைமுறுக்கிய வேளையில், இந்தியாவின் நட்பு நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நிதானத்தை இந்தியா கடைபிடிக்க கோரினர். ஆனால் ‘உங்களது பிரசங்கம் எங்களுக்கு தேவையில்லை” என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார் .

மே மாதம் 6-ந்தேதி இரவு இந்திய விமானங்கள் பாக் இறையாண்மையை மீறி 9 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதை, ”பாக்கித்தான் மீதான தாக்குதல் அல்ல, தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல்” என இந்தியா கூறியது.

இத்துடன்“இந்த மோதலை நிறுத்தி கொள்வோம்” என்றது. இதை நிராகரித்த பாக்கித்தான் இந்திய எல்லைக்குள்ளேயே , ரஃபேல் உட்பட பல இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியது.

புல்வாமா போல் இதிலும் அரசியல் குளிர்காய நினைத்த மோடியின் ஆசையில் மண்ணை அள்ளி போட்டது பாக்கித்தான். மூக்குடைபட்ட மோடி அரசு சுதாரித்து கொண்டு, மீண்டும் பாக்கித்தான் புகுதிக்குள் ட்ரோன்களை ஏவியது, ஏவுகணைகளை வீசியது, பதிலுக்கு பாக்கித்தான் ஆபரேஷன் பன்யான்உன்மர்சூஸ் என்ற தாக்குதலை இந்தியாவின் ராணுவத் தளங்களின் மீது நடத்தியது. அமெரிக்கா, சவுதி அரேபியா, கட்டார் போன்ற நாடுகளின் தலையீட்டால் மே மாதம் 10 மாலையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

மோடி அரசின் காஷ்மீர் கொள்கையின் தோல்வியால் விளைந்ததே பெகல்காம் படுகொலை. இந்திய ராணுவத்தின் எதிர் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு கிடைத்த பரிசே இந்த படுகொலை ஆகும் ! இந்திய புலனாய்வு அமைப்பின் கையாலாகாத்தனத்திற்கு, இந்திய பாதுகாப்பு கட்டு மானத்தின் தலைமையின் (National Security Set up) தோல்விக்கான சாட்சியே பெகல்காம் படுகொலை ஆகும்.

மோடி அரசு இதற்கு பதில் கூறாமல், காஷ்மீர் மக்களின் சுயமரியதை உணர்வுகளை மதிக்காமல், கிழடு தட்டி போன தேசீய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலை இன்னும் பக்கத்தில் வைத்துக் கொண்டு எத்தனை நாள் இந்திய மக்களின் கண்களில் மண்ணை தூவ முடியும்.

இதை சரி செய்வதை விடுத்து பாக்கித்தான் மீது தாக்குதல் தொடுத்து மோடி அரசு திசை திருப்புவதை எதிர்கட்சிகள் சுட்டிக் காட்ட வேண்டும் . இதன் விளைவாகவே இந்திய அரசு, சர்வதேச அரங்கில் தனிமை பட்டு நிற்கிறது. இந்திய அரசின் வெளியுறவு கொள்கை சொல்லொன்று செயலொன்றாக வேறுபட்டு சீரழிந்த நிலையில், உலகினர் கண்களின் முன் காட்சி அளிக்கிறது. இதை எடுத்துரைக்க எதிர்கட்சிகள் முன்வர வேண்டும் .

இல்லையெனில் சசி தரூர், மனீஷ் திவாரி, கனிமொழி போன்ற “தன் வளர்ச்சி ஆர்வலர்கள்” இந்தியாவின் பிம்பத்திற்கும், மோடியின் பிம்பத்திற்கும் வேறுபாடு தெரியாமல் கூலிக்கு மாரடிக்க முன்வந்து கொண்டே இருப்பர்.

ச.அருணாசலம்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time