இது சனாதனத்திற்கும், சத்தியத்திற்கும் இடையிலான போராட்டம்!

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கும், நீதிபதி சுவாமிநாதனுக்கும் இடையே என்ன பிரச்சினை? உண்மையில் இது இரு தனி நபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. என்ன நடந்தது என்பதை ஆதியோடந்தமாக புரிந்து கொண்டால் நீதிபதி சுவாமிநாதன் ஏன் கடுமையான எதிர்ப்பை பெற்று வருகிறார் என்பது விளங்கும்; நீதிபதி ஹரி பரந்தாமன் அலசல்;

2016 ஆம் ஆண்டில் ஜி .ஆர்.சாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வழக்கறிஞராக இருந்த போது ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் தீவிர செயல்பாட்டாளராக இருந்தார்.

வாஞ்சிநாதன்  மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பொதுவுடமை இயக்கத்தில் தீவிர செயல்பாட்டாளராக இருந்தார். 2019 ஆம் ஆண்டில் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறினாலும், அவர்  மார்க்சிய,பெரியாரிய மற்றும் அம்பேத்கரிய செயல்பாட்டாளராக களத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, தமிழகத்தின் கல்வி உரிமையை காப்பாற்றுவது போன்ற போராட்டங்களில் முக்கிய பாத்திரத்தை வகித்தார் வாஞ்சிநாதன்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம்,

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டம்,

திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமான போராட்டம்

என்ற அனைத்திலும்  மதுரை பகுதியில் தலைமை பொறுப்பை வகித்தவர்.


மக்கள் போராட்டங்களில்  பங்கேற்றதை ஒட்டி சுமார் 25 கிரிமினல் வழக்குகள் அவர் பெயரில் பதிவாகி உள்ளன.

இந்த வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டும் தான் அவர் பெயரில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூரில் டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய மக்கள் திரளில் ஒரு பெண்ணை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய பாண்டியராஜன் கன்னத்தில்  பளார் என்று கடுமையாக அறைந்தது சம்பந்தமாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தார் என்பதற்காக போடப்பட்டதே அந்த கிரிமினல் வழக்கு.

அந்த வழக்கை திமுக அரசு தொடர்ந்து நடத்த எத்தனித்தது தான் கொடுமை. அந்த குற்றவியல்  வழக்கு நடைபெற உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார் வாஞ்சிநாதன்.

வழக்குரைஞர்களின் போராட்டங்கள் அனைத்திலும் முன் நின்று செயல்படுபவர் வாஞ்சிநாதன். உயர் நீதிமன்றத்தில் ஊழல் இருக்கிறது என்று போராடியதற்கும், வழக்குரைஞர்களின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பார் கவுன்சிலில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி 2015 -16ஆம் ஆண்டுகளில் அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிருஷ்ணன் கவுல் எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடியதற்கும் அவர் முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் வழக்குரைஞர் தொழில் செய்ய முடியாதபடி நிரந்தர நீக்கம் செய்யப்பட்டார். சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வழக்குரைஞராக பணிபுரிகிறார்.


மேலே சொன்ன விபரங்கள், அவர் களப்போராளி என்பதை தெளிவுபடுத்தும்.

2016 ஆம் ஆண்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்தே ஜி.ஆர். சாமிநாதன் அவர்கள் சர்ச்சைக்குரிய பல தீர்ப்புகளை வழங்கினார். அந்த தீர்ப்புகளை கடுமையாக விமர்சித்து youtube இல் நேர்காணல்கள் பல கொடுத்துள்ளார். வழக்குரைஞர் தொழில் செய்யும் ஒருவர் பணியில் இருக்கும் நீதிபதி வழங்கும் தீர்ப்புகளை விமர்சித்து பொதுவெளியில் பேசுவது மிக அபூர்வம். காரணம், அது வழக்குரைஞர் தொழில் செய்வதை பாதிக்கும்.

ஜி ஆர் சாமிநாதனின் மேற்சொன்ன சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வாஞ்சிநாதன் மட்டுமன்றி,இந்த கட்டுரையாளரான நானும், நீதிநாயகம் சந்துரு, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி,சுப .வீரபாண்டியன் போன்ற எண்ணற்றவர்கள் கடுமையாக விமர்சித்து  பேசியும், youtube இல் நேர்காணல் அளித்தும் உள்ளனர்.

இந்த மேற் சொன்ன நபர்களில் , வாஞ்சிநாதன் ஒருவரே வக்கீல் தொழில் செய்வதால் அவர் பெயரில் நீதிமன்ற அவமதிப்பு உட்பட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்பது சுலபம்.

குறிப்பாக, வாஞ்சிநாதன் அவர்கள் ஜுன்14, 2025 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் மற்றும் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் நீதி பரிபாலனம் குறித்த ஒரு நீண்ட  புகாரை ஆதாரங்களுடன் அனுப்பி உள்ளார்.அந்தப் புகாரில் 14 குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

அதாவது, ஜுலை-22, 2025 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர் சங்கம் ஒன்றின் வழக்குரைஞர்களின் whatsapp குரூப்பில் மேற் சொன்ன புகாரை ஒரு வழக்குரைஞர் பதிவேற்றம் செய்ததனால், அது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. பின்னர் அந்தப் புகார் மற்றும் பல வாட்ஸ் அப் குரூப் களில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரப்பப்பட்டது.

இந்தச் சூழலில் ஜுலை- 24, 2025 அன்று நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அவர்கள் அமர்வின் முன்னர் மதியம் 1.15 மணிக்கு  ரிட் அப்பில்  510/2023 -இல் வாஞ்சிநாதன் ஆஜராக வேண்டும் என்று அறிவிப்பு அளிக்கப்பட்டது.

24 .7. 2025 அன்று நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்கள் இரு நீதிபதிகள் அமர்வில் தலைமை ஏற்று இருந்தார். அந்த அமர்வின் மற்றொரு நீதிபதி ராஜசேகர் ஆவார். தலைமை நீதிபதி அந்த அமர்வுக்கு அளித்த நீதிமன்ற பணி ரிட் அப்பில்களை விசாரிப்பதாகும்.

மேற் சொன்ன ரிட் அப்பிலில் இருந்து வாஞ்சிநாதன் விலகி அவரது கட்சிக்காரர் வேறொரு மூத்த வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கு பட்டியலில் வாஞ்சிநாதனுக்கு பதிலாக வேறு வழக்குரைஞர் பெயர் வெளியான சூழலில் அந்த பட்டியலில் பெயர் இடம் பெறாத வாஞ்சிநாதன் ஜி.ஆர்.சாமிநாதனால் மதியம் 1. 15 மணிக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டார்.

வாஞ்சிநாதன் ஆஜராக வேண்டும் என்ற அறிவிப்பு அவர் உறுப்பினராக உள்ள வழக்குரைஞர் சங்கத்தின் மூலம் அவருக்கு சார்பு செய்யப்பட்டது.

எதற்காக ஆஜராக வேண்டும் என்ற விவரம் ஏதும் அந்த அறிவிப்பில் இல்லை.

இருப்பினும், நீதிமன்ற அறிவிப்பின் படி அவர் ஜுலை-24 , 2025 அன்று மதியம் நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அமர்வில் ஆஜரானார்.


அவர் ஆஜரானதும், “இந்த வழக்கில் நீங்கள் வழக்குரைஞராக தொடர்கிறீர்களா?” என்ற கேள்வியை கேட்டார் ஜி ஆர் சாமிநாதன் அவர்கள். அந்த வழக்கில் அவர் ஆஜராகவில்லை என்றும் கட்சிக்காரர் வேறொரு வழக்குறிஞரை அமர்த்தி உள்ளார் என்றும்  தெரிவித்தார் வாஞ்சிநாதன்.

உடனே நீதிபதி சாமிநாதன் அவர்கள்,” நான் சாதிய கண்ணோட்டத்துடன் பணி புரிவதாக நீங்கள் என் மீது குற்றச்சாட்டு  சுமத்துகிறீர்களா?”, என்ற கேள்வியை வாஞ்சிநாதனிடம் கேட்டார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத வாஞ்சிநாதன், ’’நீதிபதியின் கேள்வி புரியவில்லை’’ என்றார். நீதிபதி மீண்டும் உண்மையில் உங்களுக்கு புரியவில்லையா? என்று கேட்டார். ஆமாம் என்றும், இந்த கேள்வியை உரிய விபரங்களுடன் எழுத்து மூலமாக கொடுத்தால் தானும் எழுத்து மூலமாக பதில் தருவதாக கூறினார், வாஞ்சிநாதன்.

உடனே, நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனுக்கு கோபம் வந்தது. நீ ஒரு கோழை ( Coward ) என்று வாஞ்சிநாதனை ஏசினார். இதற்கு அமைதி காத்தார் வாஞ்சிநாதன்.

பின்னர் எழுத்து மூலமாக தருவதாக கூறிய நீதிபதி, மீண்டும் விசாரணை ஜுலை- 28, 25 அன்று மதியம் 1:15 மணிக்கு நடைபெறும் என்றும் அப்போது அவர் உரிய பதிலுடன் ஆஜராக வேண்டும் என்றும் கூறினார்.

இந் நிலையில் 25 7 2025 அன்று 8 பக்கங்கள் கொண்ட ஒரு உத்தரவு அவருக்கு சார்பு செய்யப்பட்டது .அதில் இரண்டு வரிகள் மட்டுமே அவர் சொன்ன குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது. மற்றவை எல்லாம் வாஞ்சிநாதன் நீதிமன்ற அவமதிப்பு செய்தார் என்றும் அதற்கான இரண்டு நீதிமன்ற தீர்ப்புகளும் ஆகும்.

இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞர் சங்கங்கள் கிட்டத்தட்ட அனைத்தும் இதனை கண்டித்து உரக்க குரல் எழுப்பின. சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இதனை கண்டித்து அறிக்கை விட்டனர். முன்னாள் நீதிபதிகள் 7 பேர் இதனை கண்டித்து பத்திரிகை செய்தி அளித்தனர்.ஜுலை- 26, 2025 அன்று மதுரையில் நடந்த கூட்டத்திலும், பத்திரிக்கையாளர்  சந்திப்பிலும் நான் பங்கேற்றேன்.


மேற்சொன்ன  அனைத்திலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வாஞ்சிநாதன் புகார் அனுப்பியதற்காக நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பெயரில் புகார் செய்ய வேண்டும் என்றால், தலைமை நீதிபதிக்கு மட்டுமே செய்ய வேண்டும் .அதைத் தான் செய்தார் வாஞ்சிநாதன். தலைமை நீதிபதி விசாரிப்பதற்கு முன்னர் இப்படி ஒரு நடவடிக்கையை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் எடுப்பது சரியல்ல என்பதை தமிழகம் முழுவதுமே சுட்டிக் காண்பித்தது.

இதையே ஜுலை-28 அன்று பதில் உரையாக போட்டார் வாஞ்சிநாதன். மேலும், அந்த பதில் உரையில், குற்றச்சாட்டு நீதிபதி ஜி .ஆர். சாமிநாதன் அவர்களின் பெயரில் இருப்பதால், அது சம்பந்தமான விசாரணையை அவரே செய்வது சட்டவிரோதமானது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டத்திற்கு எதிரானது என்றும் இயற்கை நீதி கோட்பாட்டுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த பதிலுரையை பெற்றுக் கொண்ட நீதிபதி ஜி ஆர் சாமிநாதன், வழக்கை அன்று மதியம் 2:15 மணிக்கு விசாரிப்பதாக கூறினார்.

மதியம்  உணவு இடைவேளைக்கு பின் 2.15 மணிக்கு வழக்கு நடைபெற்றது. அதில் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் நடந்து கொண்ட முறை மிகவும் ஆட்சேபனைக்குரியது. ஜுலை- 24 அன்று வாஞ்சிநாதனை தான் கோழை என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்கலாம் என்று இருந்தாராம், நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன். ஆனால், இந்த பதிலுரையைப் பார்த்ததும்  ‘வாஞ்சிநாதன் உண்மையில் கோழை தான்’ என்று உறுதியாகிவிட்டதாக கூறினார் நீதிபதி ஜி ஆர் சாமிநாதன்.

அதோடு மட்டுமன்றி, வாஞ்சிநாதனை பார்த்து, ”உன்னை எப்படி சமூகப் போராளி என்று கூறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. நீ ஒரு காமெடி பீஸ்” என்று நக்கலாக கூறி, மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டார். இப்படி எல்லாம் பேசுவது ஒரு நீதிபதிக்கு அழகல்ல.

பத்திரிக்கை செய்தி அளித்த ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒருவர் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அவர்கள். அவர் வழக்கறிஞராக இருந்த போது அவருக்கு ஜூனியராக இருந்த நிரஞ்சன் என்ற வழக்கறிஞர் அப்போது நீதிமன்றத்தில் இருந்தார். அவரைப் பார்த்து நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன்,”உங்கள் சீனியர் கூட கையெழுத்து போட்டு இருக்கிறாரா ?” என்று நக்கலாக கேட்டார். ‘இப்படி எல்லாம் கேட்பது ஒரு நீதிபதிக்கு அழகல்ல’ என்பது மீண்டும் இங்கே சுட்டி காட்டப்படுகிறது.

பின்னர் , இந்த பிரச்சனையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாகவும் அவர் தகுந்த முடிவெடுப்பார் என்றும் கூறினார் நீதிபதி ஜி ஆர்.சாமிநாதன். அதற்கான விரிவான உத்தரவை பின்னர் பிறப்பிப்பதாக சொன்னார். இதன்படி 12 பக்க உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைவிடப்பட வேண்டும்’ என்பதே நமது கோரிக்கை. தலைமை நீதிபதி இதை செய்வார் என்று எதிர் பார்ப்போம்.

இந்த நேரத்தில் ஒன்றை கூறி இந்த கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். சாமிநாதன் எதிர் வாஞ்சிநாதன் விவகாரத்தில், தமிழகத்தை ஆளும் திமுக தான் வாஞ்சிநாதனை இயக்குகிறது என்று பொய்யான பிரச்சாரத்தை சங்கிகள் செய்கின்றனர்.

உண்மையில் வாஞ்சிநாதன் பேரில்  அதிமுக அரசால் போடப்பட்ட நியாயமற்ற கிரிமினல் வழக்கை தொடர்ந்து நடத்துகிறது திமுக அரசு.

திருப்பரங்குன்றம் பிரச்சனை வந்த போது, மத நல்லிணக்க மாநாடு நடத்துவதற்கு வாஞ்சிநாதன்  முயற்சித்த போது, அனுமதி மறுத்தது திமுக அரசு. நீதிமன்றத்தை அனுகிய போதும், அங்கேயும் எதிர்த்து நின்றது திமுக அரசு. எனவே, பொது மாநாடு நடத்துவதற்கு வாஞ்சிநாதனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டை ஒரு அரங்கத்தில் நடத்தினார் வாஞ்சிநாதன். இந்த மாநாட்டில் திமுக அரசை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் திமுக அரசு எவ்விதம் சங்கிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்பது பற்றியும் தீர்மானம் உள்ளது. ‘திமுக அரசின் காவல் துறையும், அறநிலையத்துறையும் இந்த பிரச்சனையில் சங்கிகளின் துறையாக செயல்பட்டது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியதை எதிர்த்த குரலும் வாஞ்சிநாதனின் குரலே. இதற்கு முன்னர் ஆட்சி செய்த ராஜாஜியோ, காமராசரோ, பக்தவச்சலமோ, அண்ணாவோ,  கலைஞரோ, எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ, எடப்பாடி பழனிச்சாமியோ இப்படி ஒரு மாநாட்டை நடத்தியது இல்லை என்று சுட்டிக் காண்பித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மேல் குற்ற வழக்கு பதிவு செய்து நடத்தும்படி நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தது. இருப்பினும் மேற்சொன்ன பரிந்துரையை நிராகரித்த திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்  வாஞ்சிநாதன். இந்த விபரங்கள் பொதுவெளியில் உள்ளன.

இந்த பிரச்சனை சாமிநாதன் எதிர் வாஞ்சிநாதன் அல்ல. இது சனாதனத்திற்கும், சத்தியத்திற்கும் இடையிலான போராட்டம்! இன்னும் தெளிவாக சொல்வதென்றால், சனாதான சித்தாந்தத்திற்கும், பெரியாரிய சித்தாந்தத்திற்கும் நடைபெறும் போராட்டத்தின் வெளிப்பாடு. பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், மார்க்சியவாதிகள் என அனைவரும் ஓரணியில் திரண்டு சனாதனத்தை வீழ்த்த வேண்டும்.

ஹரிபரந்தாமன்

மேனாள் நீதிபதி,

சென்னை உயர் நீதிமன்றம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time