ஒபிஎஸ் என்பவர் களிமண்ணால் பிடித்து வைப்பட்ட பிள்ளையார் பொம்மை. மூன்று முறை அந்த பொம்மை முதலமைச்சர் ஆசனத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்டுவிட்டது. இனி அது தேவையில்லை. புதிய நவீன பிள்ளையாரை உருவாக்கிக் கொள்ளலாம் என பாஜக தீர்மானித்து இருக்கலாமோ. என்னவோ..!
நேற்றும், இன்றும் ஒ.பி.எஸ்சுக்கு ஊடகங்கள் தந்துள்ள அதி முக்கியத்துவம் எனக்கு சிரிப்பைத் தான் வர வழைக்கிறது..
ஒபிஎஸ் இன்று முக்கிய அரசியல் முடிவு எடுக்கப் போகிறார்.
அந்தக் கட்சியோடு சேர்கிறார்.
இந்தக் கட்சியோடு போக வாய்ப்புண்டு..
என ஆளாளுக்கும் வியாக்கியானம் செய்கிறார்கள்!
இவர் ஏதோ பெரிய மக்கள் தலைவரைப் போலவும், இவர் எடுக்கும் முடிவால் தமிழக அரசியலே தலைகீழாகி விடும் என்பது போலவும் முக்கியத்துவம் தரப்பட்டன.
முதலில் ஒபிஎஸ் ஒரு தலைவரே அல்ல.
சந்தர்ப்ப வசத்தால் தான் மூன்று முறை முதல்வராகும் வாய்ப்பு பெற்றார். இவர் திறமைசாலி என்பதாலோ, அறிவாளி என்பதாலோ, மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்பதாலோ முதலமைச்சர் ஆக்கப்படவில்லை. உண்மையில் இது போன்ற தகுதிகள் எதுவும் இல்லை. இந்த நபர் வெறும் களிமண் என்பதாலேயே ஜெயலலிதாவால் இரு இக்கட்டான சூழல்களில் முதல்வராக்கப்பட்டார்.
மூன்றாவது முறை முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு பாஜக நெருக்கடியால் தரப்பட்டது. இவர் எப்போதும் எடுப்பார் கைபிள்ளை. தற்போது இவரை பாஜக கையில் எடுத்துக் கொண்டது என சுதாரித்துக் கொண்டு தான் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கி சிறை சென்றார்.

தான் உருவாகிய இடத்திற்கே துரோகம் செய்து, தன்நலத்திற்கு மட்டுமே ஒ.பிஎஸ் முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அப்போதே அதிமுகவில் முக்கியத்துவம் இழந்து விட்டார்.
குருமூர்த்தி சொல்லைக் கேட்டு, ஜெயலலிதா சமாதி முன்பு தர்மயுத்தம் என்ற பெயரில் போய் உட்கார்ந்த போதும், இவர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்திற்கு நியாயம் கேட்ட போதும் பாஜக பின்புலத்தில் மிகப் பெரிய மீடியா கவரேஜ் தரப்பட்டு, மக்கள் ஆதரவு அலைகடலென திரண்டது.
அப்போது சுதாரித்து இருந்தால் கூட, இவர் அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்து இருப்பார். அப்படி கிடைத்த ஆதரவை பேரம் பேசி துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் தனக்கு பதவிகள் பெற்றுக் கொண்டார்.
ஒரு கட்சியின் தலைவராக உருவெடுப்பதற்கு அயராத உழைப்பை தர வேண்டும். சுற்றிச் சுழன்று மாவட்டம் தோறும் பயணம் செய்ய வேண்டும். நிர்வாக ரீதியினான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் வேண்டும், எல்லாவற்றுக்கும் மேல் சம்பாதித்த பணத்தை கட்சி வளர்ச்சிக்கு கொஞ்சமேனும் செலவழிக்க வேண்டும்..!
இவை எதற்குமே எப்போதும் தயார் இல்லாதவர் தான் ஒ.பன்னீர் செல்வம். எந்த முயற்சியும் இல்லாமல் மூன்று முறை முதல்வரானது போல, தொர்ந்து பதவிக்கு ஆசைப்பட்டாரே அன்றி, அதற்காக தன்னை தகுதிபடுத்திக் கொண்டு பாடுபட கடுகளவும் முன்வரவில்லை. அதனால் தான் இவரை ஆதரித்து பின் சென்றவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் சுதாரித்து பின் வாங்கிவிட்டனர். இன்று போக்கிடம் இல்லாத சிலரே இவரை சூழ்ந்து கொண்டுள்ளனர்.
சொந்த மாவட்டத்திலேயே சுத்தமாக செல்வாக்கு இல்லாதவர் ஒபிஎஸ். இவர் வசிக்கும் பகுதியில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட இவரது ஆதரவாளர் யாரும் வர முடியாது என்பதல்ல, டெபாசிட் கூட பெற முடியாது. அந்த அளவுக்கு தனது உச்சபட்ச சுயநலத்தால் சொந்த ஊரிலேயே அந்நியப்பட்டு கிடப்பவர்.
சேர்த்து வைத்துள்ள சொத்து கொஞ்சம் நஞ்சமல்ல. பல இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி போட்டுள்ளார். மிகுந்த சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டார். மொத்தத்தில் உழைப்பதற்கு தயார் இல்லாதவர்.
ஆக, இவர் ஒரு ’வேஸ்ட் பீஸ்’ என்பதால் தான் பாஜக இவரை பகடை காயாகப் பயன்படுத்தி தூர எறிந்துள்ளது. இவரை வைத்து தான் அதிமுகவுக்கு இன்று வரை இரட்டை இலை கிடைக்காமல், பாஜக கேம் விளையாடியது. கடந்த மூன்றாண்டுகளாக அதிமுகவுக்கு பாஜகவால் தரப்பட்ட நெருக்கடிகள் அனைத்துமே பன்னீர் செல்வத்தால் தான். மத்தியில் பாஜக மாநிலத்தில் திமுக என இருதரப்பு ஆதரவோடும் அதிமுகவே அழிந்தாலும் பரவாயில்லை என இவர் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?
அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் ரவுடிகளோடு படை எடுத்துச் சென்று அதிமுக தலைமை கழகத்தின் பூட்டை உடைத்து நுழைந்து உள்ளே இருந்த டாக்குமெண்டுகளை அள்ளிச் சென்றார். டெல்லி தந்த நெருக்கடியால் தமிழக காவல்துறை பன்னீர் செல்வம் செய்த அட்டுழியங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு தந்தது.
அது மட்டுமின்றி, தன்னைத் தவிர மூன்றே எம்.எல்.ஏக்களின் ஆதரவை மட்டுமே பெற்று இருந்த பன்னீர் செல்வத்திற்கு சட்ட சபையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி தந்து அழகு பார்த்தார் சபாநாயகர் அப்பாவு. மிக நீண்ட, நெடிய போரட்டத்திற்கு பிறகே அதை அவரிடம் இருந்து பறித்து உதயகுமாருக்கு பெற முடிந்தது, அதிமுகவால்!
Also read
ஆனால், தற்போது திடீர் ஞானோதயம் பெற்றவராக இவர் பாஜக எதிர்ப்பு அரசியல் செய்வதை யாரும் நம்பப் போவதில்லை. எப்போது வேண்டுமானாலும் நிலை மாறக் கூடியவர். மீண்டும் ஒரு முறை தனக்கு முதலமைச்சர் பதவியை பாஜக தாரை வார்க்குமானால், அதற்காக தமிழ் நாட்டையே அடமானம் வைத்து கையெழுத்து போட்டுத் தரவும் தயங்க மாட்டார்.

தற்போது பாஜக தூக்கி எறிந்துவிட்டதால், என்றுமில்லாத வகையில் முதலமைச்சர் ஸ்டாலினை வீடு தேடிச் சென்று சந்திக்கிறார். அதிமுகவில் இருந்து திமுக போனவர்கள் எல்லாம் இன்று நல்ல அந்தஸ்த்தில் உள்ளனர்.. என நினைத்து, ஒரு நப்பாசை வந்திருக்குமோ என்னவோ! ஆனால் ஒன்று மிகவும் துடிப்போடு தளபதிகளாக செயல்படக் கூடிய செந்தில் பாலாஜி, சேகர் பாபு, எவ.வேலு போன்றவர்களைத் தான் ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்வாரே தவிர, ஒபிஎஸ் போன்ற உழைக்க தயார் இல்லாதவர்களை உடன் வைத்துக் கொள்ளமாட்டார்.
இன்று ஒபிஎஸ் அரசியல் அனாதையாக போனதற்கு அவர் மட்டுமே காரணம். தூர தூக்கி எறிந்துவிட்டு, மறந்து போய்விட வேண்டிய மனிதரே இவர். கொலுவில் வைக்கப்பட்ட பொம்மை அதன் சோபையை இழந்துவிட்ட பிறகு தூக்கி எறியப்படுவது இயல்பானதே!
நமத்துப் போன பட்டாஸான இவரை காட்டி, ஏதோ அரசியல் சரவெடி வெடிக்க உள்ளது என ஊடகங்கள் மக்களை முட்டாளாக்குவதிலும் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளது.
மக்களின் உண்மையான பிரச்சினைகளை பின் தள்ளி, இது போன்ற வெத்து நபர்களை பற்றிய பிம்மங்களை காலந்தோறும் கட்டமைத்து மக்களை மாயையிலேயே வைத்திருப்பது தான் அதிகார மையங்களின் அடியாளாக பழக்கப்பட்ட ஊடக அரசியலாகும்.
சாவித்திரி கண்ணன்
















இவரின் சொந்த ஊரான பெரியகுளத்தில் யாரும் மதிப்பதில்லை. குடிநீர் கிணறு அமைக்க நிலம் தர மறுத்து அந்த நிலத்தை விற்றுவிட்டு தப்பியவர். முதல்வராக இருந்த போது தமிழ் தெரியாதவர்களும் தநா. தேர்வாணையம் மூலம் தேர்வாகலாம் என்று தமிழ் இளைஞர்களுக்கு துரோகம் செய்தவர்.