தங்களுக்கு ஒரு சதவிகித வாக்கு இருப்பதைக் கூட உறுதிபடுத்த இயலாத உதிரி கட்சிகள் தாங்கள் ஏதோ தமிழக அரசியலையே புரட்டி போட்டு விடக் கூடிய சக்தி போல தோற்றம் காட்டி, எந்தக் கூட்டணியில் சேருவது என்பதில் தெளிவில்லாமல், திமுகவிலும் ஒரு துண்டை போட்டு வைப்போமே… என்று ஸ்டாலினை பார்த்து வருகிறார்கள்! எச்சரிக்கை;
அதிமுக கலகலத்துக் கிடக்கிறது. பாஜக அதை சிறுகச் சிறுக தின்று செரித்துக் கொண்டுள்ளது.
திமுக கூட்டணியை பொறுத்த வரை அது வலுவாக உள்ளது. இன்னும் ஏதாவது புதிய கட்சி வந்து தான் அது பலம் பெற வேண்டும் என்ற கட்டாயம் திமுக கூட்டணிக்கு இல்லை.
பாரம்பரியமுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் வலுவாக கரம் கோர்த்துள்ளது.
அடுத்து விசிகவும் உறுதியாக கூட்டணியில் தொடர்கிறது.
மதிமுக திமுக கூட்டணியில் தான் இருக்கும் என்பதற்கு வைகோ உத்திரவாதம் தந்துள்ளார்.
கம்யூனிஸ்டுகள் கொள்கை சார்ந்து திமுகவுடன் தளராமல் பயணித்து வருகிறார்கள்.
தமிழக வாழ்வுரிமை கட்சியும், இஸ்லாமிய கட்சிகளும் திமுகவைத் தவிர வேறெங்கும் போகப் போவதில்லை.
கடந்த ஐந்தாண்டுகளாக திமுக அரசை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், இந்த கட்சிகள் பல அதிருப்திகளை விழுங்கிக் கொண்டு, கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தங்கள் விசுவாசத்தை காட்டி வருகின்றன.

இதனால் சென்ற முறை இந்த கூட்டணி கட்சிகளுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ, அதைவிட சற்று அதிகமாக வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்ற முறை தந்ததற்கு குறையாமலாவது இவர்களுக்கு தந்தாக வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு இருக்கிறது. ஏனெனில், ஐந்தாண்டுகளாக இவர்கள் திமுக ஆட்சிக்கு ஆதரவாக உறுதியாக நின்றுள்ளதை அலட்சியப்படுத்தி, தொகுதிகளைக் குறைத்து மன உளைச்சலை உருவாக்க முடியாது.
இப்படியான சூழலில் ‘கூடுதல் லக்கேஜாக’ கமலஹாசனின் மக்கள் நீதி மையம் வேறு வந்து சேர்ந்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு தர இருக்கும் இடங்களுக்காக கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கும் இடத்தை குறைக்க முடியுமா? அல்லது திமுக தன் தொகுதிகள் சிலவற்றைத் தியாகம் செய்யுமா? தெரியாது.
இந்த இக்கட்டான சூழலில் பாஜகவே ‘வேஸ்ட் லக்கேஜ்’ என கழற்றிவிட்டுள்ள ஒ.பிஎஸ் வந்து துண்டை போட்டு போயுள்ளார். ஒபிஎஸின் அரசியல் வாழ்க்கை என்பது ஆரம்ப காலம் தொடங்கி திமுக எதிர்ப்பு தான். மேலும், பாஜகவின் கொத்தடிமையாக அவர் செயல்பட்ட காலங்கள் அனைத்தும் மக்கள் கண் முன் நிற்கிறது.

இந்தச் சூழலில் எந்தக் கொள்கை கோட்பாடுமற்ற ஒபிஎஸை கூட்டணியில் சேர்த்தால் திமுக கூட்டணியின் மதச்சார்பற்ற ஓட்டுகள் ஒபிஎஸுக்கு மடைமாற்றம் ஆகாது. ஒபிஎஸ் ஆதரவு ஓட்டும் திமுகவிற்கு வராது. ஒபிஎஸுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், அவரது ஆதரவு ஓட்டுகள் அந்த தொகுதியில் நிற்கும் பாஜக அல்லது அதிமுகவுக்கு தான் போகும். ஆகவே, ஒபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருவது கூட பாஜகவின் சூழ்ச்சியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
அப்புறம் தேமுதிகவை பற்றிச் சொல்லவே முடியாது. 2021 தேர்தலில் அரை சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்ற அந்தக் கட்சிக்கோ, ஆசை கடலளவுக்கு உள்ளது. ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத அந்தக் கட்சி வெட்கமின்றி ராஜ்யசபா சீட்டை நிர்பந்திக்கிறது. அந்தக் கட்சியும் கடந்த காலங்களில் பாஜகவை தீவிரமாக ஆதரித்தது. பாஜகவின் மக்கள் விரோத கல்வி கொள்கை, தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிரான சட்டங்கள் அனைத்தையும் ஆதரித்தவர் பிரேமலதா. எந்தக் கூட்டணியாலும் விரும்பப்படாத நிலையில் அவரும் திமுகவில் துண்டு போட்டு வைக்கிறார். பேராசை கொண்ட – கடுகளவும் கொள்கை இல்லாத – இந்தக் கட்சியை யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லையானால், இந்த தேர்தலோடு இது அஸ்தமனமாகிவிடும்.

மற்றொரு பக்கம் பலவீனப்பட்டுள்ள பாமக இரண்டாகப் பிளந்து கிடக்கிறது. மகன் பாஜக கூட்டணி என்றால், அப்பா திமுக கூட்டணிக்கு தாவலாம் எனக் கணக்கிடுகிறார். கடந்த பல்லாண்டுகளாக பாஜகவிற்கு பல்லாக்கு தூக்கிவிட்டு, தற்போது குடும்ப சண்டையால் திமுக பக்கம் சாயலாம் என நினைக்கிறார் ராமதாஸ். ராமதாஸ் வந்தால் திருமாவளவனை இழக்க நேரிடும். தமிழக வாழ்வுரிமை கட்சி வேல் முருகனுக்கும் தர்மசங்கடமாகிவிடும். இவர் விஷயத்திலும் கவனமாக முடிவெடுக்க வேண்டும் திமுக.
Also read
தற்போதைய கூட்டணியை கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்றால், புதிய சேர்க்கைகள் – அதாவது போக்கிடமில்லாத வேஸ்ட் லக்கேஜ்களை – திமுக கூட்டணியில் சேர்க்கக் கூடாது. அப்படி சேர்த்தால், இருக்கும் கட்டுகோப்பு குலைந்து கலகலத்து விடும். தொகுதி பங்கீட்டில் அதிக கசப்புணர்வை சந்திக்க நேரும்.
2016 ஆம் ஆண்டு மிகுந்த தன்னம்பிக்கையுடன் – குட்டிக் கட்சிகளை எட்ட நிற்க வைத்து – ஜெயலலிதா தனித்து களம் கண்டு 40 சதவிகித ஓட்டுகளை வென்றார். அந்த தன்னம்பிக்கை தான் ஸ்டாலினுக்கு இன்றையத் தேவை. தற்போது இருப்பது கொள்கை கூட்டணி. மாறாக ஒபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் உள்ளே வருவார்களானால், இந்தக் கூட்டணியின் நம்பகத் தன்மை ஆட்டம் கண்டு விடும். திமுக கூட்டணியின் மீதுள்ள மரியாதை சிதைந்துவிடும்.
சாவித்திரி கண்ணன்















ஓபிஎஸ் ராமதாசு பிரேமலதா முதலானவர்கள் காணாமல் போனவர்கள். இவர்கள் தங்களையே தேடிக்கொண்டு உள்ளார்கள்.
Sensible analysid