ஜீவபாரதியின் ‘காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்’ புத்தகத்தில் வாழ்ந்து மறைந்த ( நல்லகண்ணு மட்டும் விதி விலக்கு ) நூறு தியாகிகளைப் பற்றிய வாழ்க்கை பதிவைக் கண்டேன். அவர்கள் செய்த தியாகங்களும், சாதனைகளும் பதிவாகி உள்ளதைப் போல, நிகழ்காலத்தில் உள்ள ஒருவரை ஏன் எழுதக் கூடாது? எனத் தோன்றியதன் விளைவே இந்தக் கட்டுரை;
இரண்டு பாகங்களில், நூறு கம்யூனிஸ்டுகளைப் பற்றி கே. ஜீவபாரதி தொகுத்துள்ளார். பத்து பாகங்கள் வரை இந்த தொகுப்பு வரும் என இரா.முத்தரசன் கூறினார். இந்தப் புத்தகத்தை தொடர்ந்து எழுதினால் யாரைப் பற்றி எழுதலாம் என யோசித்தேன். அதன் விளைவு தான் இந்தக் கட்டுரை. இதற்கு 101 வது தலைப்பு என்றும் பெயர் வைக்கலாம்.
சென்னைக்கு 1987 ல், கும்பகோணத்தில் இருந்து சென்னை வந்து சேர்ந்தேன். அப்போது ஒரு தேநீரின் விலை ரூ.40 காசு. அது முதல் எனக்கு இந்தக் கட்டுரையின் நாயகனை அணுக்கமாகத் தெரியும். பொது வாழ்க்கையில் அவரது பங்கு என்ன என்பது தான் இதன் பேசு பொருளாகும்.
நான் வந்த சமயத்தில் சோவியத் ஒன்றியம், கம்யூனிஸ்டுகளுக்கும் மூன்றாம் உலகநாடுகளுக்கும் ஆதர்சமாக இருந்த நேரம். சோவியத் ஒன்றியம் சென்று வருவதை ஒரு புனித யாத்திரையாக இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கருதிய சமயம். ‘எனக்கு சோவியத் யூனியன் போக வேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. ஓர் தொழிற்சங்க அமைப்பாளராக நான் அறியப்பட வேண்டும் என்பது தான் எனது ஆசை” என்று கே.இரவி சொன்னார். இது நடந்தது 1988 ஆம் வருடம். இன்றைய தேதியில், வெற்றி பெற்ற ஓர் அமைப்பாளர் என்பதற்கு வாழும் உதாரணமாக விளங்குகிறார்.

தோழர் ரவிக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தெக்கூர் என்ற சிறு கிராமம். அங்கு விவசாயிகள் மத்தியில் பணியாற்றி வந்த டாக்டர்.இளவழகன் இவரது ஞானகுரு. தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார். இரண்டு தங்கை, இரண்டு தம்பி உள்ள குடும்பத்தில் மூத்த மகனாக இருந்த இவர், சென்னை ஸ்டான்லியில் சுகாதார ஆய்வாளராகப் படித்து, பல்லாவரம் கண்டோன்மெண்ட் கழகம் என அழைக்கப்படும், மத்திய அரசின் உள்ளாட்சி நிர்வாகத்தில் 1973 ல் பணியில் சேர்ந்தார்.
அந்த நிர்வாகத்தில் திமுக உறுப்பினர்களின் கை மேலோங்கி இருந்த அந்த சமயத்தில், அங்கு பணியாற்றிய குரலற்றவர்களான துப்புரவு பணியாளர்களுக்கு ‘கண்டோன்மெண்ட் போர்டு தொழிலாளர்கள் சங்கத்தை’ உருவாக்கினார்.
மலம் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த எளிய தொழிலாளர்கள் துச்சமாக நடத்தப்படுவது கண்டு துடித்தார். இதனால், அவர்களின் கண்ணியத்தை வளர்த்தெடுப்பதில் பங்காற்றினார். ‘ராஜகோபால் வந்த பிறகு தான் இவனுங்களுக்கு இவ்வளவு திமிராகிவிட்டது’ என்று இவரைப் பற்றி ஆதிக்க சாதியினர் கோபமாக கூறுவதுண்டு. இது அந்த தொழிலாளர்களை அச்சத்தின் பிடியில் இருந்து இவர் மீட்டதற்கான சான்றிதழாகக் கொள்ளலாம்.

அந்த சங்கத்தில் பணியாற்றி, அதன் சம்மேளனத்தின் அகில இந்திய பொறுப்பிற்கும் வந்தார். பொது நலனுக்கான கலகக்காரனான இவர் பல்லாவரம் கண்டோன்மெண்ட் கழகத்தில் ஒரு முறை 17 மாத காலம், மறுமுறை 7 ஆண்டுகள் பணியில் இருந்து என இரண்டு முறை இடை நீக்கம் செய்யப்பட்டார்.
கே.ராஜகோபால் என்ற இயற்பெயரை கொண்ட இவருக்கு, ரவி எனப் பெயரிட்டவர், அ.சீனிவாசன். திமுக அனுதாபியான இவர், இராவணன் என்ற புனைப் பெயரில் கட்சி உறுப்பினராக இருந்தார். அவருக்கு திராவிட இயக்கச் சார்பு ஆரம்பத்தில் இருந்தது.
ஒரு முறை மூன்று மாத அரசியல் முகாமில் கலந்து கொள்ள பாட்னா செல்ல நேரிட்டது. அந்தச் சமயத்தில் ‘இராவணன் என்ற பெயரை வட இந்தியர்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்று சொல்லி, அ. சீனிவாசன் அவர்களாலே அப்போது சூட்டப்பட்ட பெயர் தான் இரவி. அது முதல் அவரது சான்றிதழ் பெயரான ராஜகோபால் என்பதை விட இரவி என்ற பெயர் தான் புழக்கத்தில் இருக்கிறது.
சென்னையில் விளிம்பு நிலையில் இருந்த மூட்டை ஏற்றுவோர், ரிக்ஷா ஓட்டுவோர் என அமைப்புச்சாரா தொழிலாளர்களை அணி திரட்டும் பணியில், தொழிற்சங்கத் தலைவரான சி.கெ.மாதவன் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக கட்டட தொழிலாளர்களை அணி திரட்ட முயற்சி செய்த போது, அவரோடு சேர்ந்து பணியாற்ற இரவி முன் வந்தார். ஆனால், தில்லிப் பேரணியில் கலந்து கொள்ள சென்ற போது அங்கேயே சி.கெ.மாதவன் மரணத்தை தழுவ, அந்தப் தொழிற்சங்க பொறுப்பையும் கே.இரவி ஏற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் அவர், சுகாதார கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
தமிழ்நாட்டில், உதிரியாக கட்டுமான சங்கங்களில் பணியாற்றி வந்தவர்களின் கூட்டம் திருச்சியில் 1991 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 11 ம் நாள் கூட்டப்பட்டது. அப்போது ஏஐடியுசி தொழிற்சங்கத் தலைவர்களாக ஏ.எம்கோபு, டி.ஆர்.எஸ்.மணி இருந்தனர். இதில் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று தான் கட்டட சங்கம் மாநில அளவில் உருவானது .
1994 ல் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் முதலில் சென்னை, மதுரை, கோயமுத்தூர் என மாநகராட்சிகளுக்கு மட்டும் தொடங்கப்பட்டது. தமிழ் நாடெங்கும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கே சென்று, கூட்டம் போட்டு அவர்களை வாரியத்தில் சேர்த்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட அமைப்புகளை உருவாக்கினார்.

தொடர்ந்து போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கான நலப் பலன்கள், ஓய்வூதியம் போன்றவைகள் வரக் காரணமாக இருந்தார். கட்டுமான தொழிலாளர்களின் வாரிய உறுப்பினராகவும் இருந்தார். கோவை.என். செல்வராஜ், சேலம் முனுசாமி, மதுரை முருகன், தூத்துக்குடி சேது போன்ற அடுத்தகட்ட தலைவர்கள், நமது கண் முன்னாலேயே உருவாகி இருக்கிறார்கள். பிறகு கட்டட தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் உயர்ந்தார்.
இப்போது தமிழ்நாடு ஏஐடியுசியின் உறுப்பினர் எண்ணிக்கையில் கணிசமான எண்ணிக்கையில் கட்டட தொழிலாளர்கள் உள்ளனர். கட்டடத் தொழிலாளர் வரலாற்றை இவரை விட்டு விட்டு எழுத முடியாது. அவரே சொன்னது போல தான் ஒரு தொழிற்சங்க அமைப்பாளர் என்பதை நிரூபித்து விட்டார்.
‘கம்யூனிஸ்ட் கட்சிக்கு என தனியான வேலை கிடையாது. எழுபதுகளில் விவசாயிகள் போராடிய போது தான் கட்சிக்கு மரியாதை வந்தது. மக்கள் பிரச்சினைகளை கையில் எடுப்பது தான் ஒரு கம்யூனிஸ்டின் வேலையாக இருக்க முடியும்’ என்று அடிக்கடி சொல்லுவார். ‘அரசின் அடக்கு முறை நம்மீது வரவில்லை; ஏனெனில் வலுவான போராட்டங்களை நாம் முன்னெடுக்கவில்லை’ என்பது அவரது அனுமானம்.

திருவள்ளூரில், பிர்லாவுக்குச் சொந்தமான, இந்துஸ்தான் மோட்டார் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை கிடைக்க எண்பதுகளின் மத்தியில் முக்கியமான போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு தலைவர் எம். கல்யாணசுந்தரம் வழி நடத்தலில் தளபதியாக கே.இரவி இருந்தார். உறுதியான போராட்டத்தின் பயனால் வேலை இழந்த 220 பேர் வேலையில் அமர்த்தப்பட்டனர். நிலம் கொடுத்தவர்களுக்கான போராட்டத்தில் இது ஒரு வரலாறு. படைத்த போராட்டமாயிற்று.
இத்தகையப் போராட்டங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பது ஒரு சோகமே. போராட்டங்களின் ஊடாக புதி இளம் தலைவர்கள் உருவாவார்கள். அந்த வகையில் மேல் நல்லாத்தூர் ஆறுமுகம் இந்தப் போராட்டத்தில் முகிழ்ந்த விவசாய சங்கத் தலைவர். பிறகு அந்த ஊராட்சியின் தலைவராகவும் ஆறுமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எழுத்தாளர் கே.ஜீவபாரதி, பத்திரிகையாளர் ரவீந்திரதாஸ் போன்றோருடன் இணைந்து பழைய செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பாக பல போட்டிகளை நடத்தினார். அந்த வகையில் இளம் மாணவர்,மாணவிகளுக்கு கலை, இலக்கியம் எனும் சாளரத்தை திறந்து காட்டி பல இளம் படைப்பாளிகள் உருவாக உரமிட்டார்.

அக்கம்பக்கத்தில் எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதை அலட்சியப்படுத்தி கடந்து செல்லமாட்டார். இவர் பொறுப்போடு தலையிட்டு தீர்வு காண்பார். சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குரியவர்களே இவரைத் தேடி வந்து உதவி கேட்பர்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல தொழிற்சாலைகளுக்கு இப்போதும் இவர் தொழிற் சங்கத் தலைவராக இருக்கிறார்.
அவரது சொந்தக் கிராமமான தெக்கூர் பள்ளியை தரம் உயர்த்துவது, கூட்டுறவு சங்கம் அமைப்பது போன்ற கிராமத்தின் பல்வேறு வளர்ச்சிகளில் இவரது பங்குண்டு. பல்லாவரத்தில் இளைஞர்களை பொது தளத்திற்கு கொண்டு வந்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு. பல்லாவரம் இளைஞர் பெருமன்றக் கிளையில் 400 பேர் வரை உறுப்பினர்களாக இருந்தது ஒரு சாதனை. இவருடைய முனைப்பினால், இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த பூபாலன் கண்டோன்மெண்ட் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Also read
ஒரு சமயம் பல்லாவரத்தில், இந்து முஸ்லிம் மோதல் நடைபெற இருந்த ஒரு பதட்டாமான சூழலை இவர் பக்குவமாக கையாண்டு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார். அரசுத் துறையில் பணிபுரிந்து கொண்டு இந்து நாடார் மற்றும் முஸ்லிம் வியாபாரிகளோடு இவர் வைத்திருந்த இணக்கமான நட்பு இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.
இத்தனை ஆண்டுகள் உழைத்திருக்கிறீர்களே இப்போது ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டதற்கு ‘ செய்ய வேண்டியதை அந்தந்த காலத்தில் செய்திருக்கிறேன. இப்போது வயதாகிவிட்டதால் முடியவில்லை அவ்வளவு தான்’ என்று சாதாரணமாகச் சொன்னார்.
எதிலும் தன்னை முன்னிலைப்படுத்த மாட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர்களாக இருந்தவர்கள் செய்த வேலைகளை விட, இவர் சாதித்தது அதிகம். 74 வயதாகும் இவர் உடல் நலிவுற்ற உயிர்ப்புடன் உரையாடுகிறார். தோழர் கே.இரவி போன்றோர்களால்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் உயிரோடு இருக்கிறது.
பீட்டர் துரைராஜ்















அருமையான பதிவு. தோழர் இரவி போன்றவர்களின் உழைப்பால் கம்யூனிஸ்ட் இயக்கம், வர்க்க உணர்வு உயிர்ப்போடு இருக்கிறது.
தோழரை நான் அறிவேன். சேலத்தில் ஒரு கருத்தரங்கில் ‘தொழிலாளர் நலச் சட்டங்கள் ‘ குறித்து வகுப்பெடுக்க என்னை அழைத்து அதில் கலந்து கொண்டேன். பண்பான தோழர்.