திறந்த வெளி சிறைச்சாலையாக்கப்பட்ட விவசாய குடும்பம்!

இப்படியும் நடக்குமா? கல்குவாரிகள் வைத்திருப்பவர்கள் தான் இங்கே அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கிறார்களா? கல்குவாரிக்கு நிலம் தர மறுத்த இந்த  விவசாயக் குடும்பமே சுற்றிலும் இரும்பு முள்வேலி அமைத்து சிறை வைக்கப்பட்டுள்ளது; அரசாங்கத்திற்கு அனுப்பட்ட எந்த புகாருக்கும் பலனில்லையாம்;
தமிழ்நாட்டில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கல் குவாரிகள் அமைக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து அனுமதித்து வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் இதில் அனைத்து சட்ட விதிமுறைகளையும் மீறி ஆர்வம் காட்டி வருகிறார்.
அப்படி அனுமதிக்கப் பட்டவர்கள் அங்கிருக்கும் மலைகளை மொட்டை அடித்து கிரஷர் அமைத்து பெரும் இயந்திரங்களைக் கொண்டு எம்.சாண்ட் உருவாக்குவதன் மூலம் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களை பாழ்படுத்திவிடுகிறார்கள். நீர் நிலைகளையும் சீரழித்துவிடுகிறார்கள். இந்த இயற்கை சூறையாடல் வரைமுறையின்றி அரங்கேறுகிறது.
பாரம்பரியமாக விவசாயத்தை மட்டுமே பிழைப்பாக கொண்டுள்ள சிறு விவசாயிகள் இது குறித்து எவ்வளவு புகார்களை தந்தாலும் அரசு நிர்வாகம் அசைந்து கொடுப்பதில்லை. மாவட்ட ஆட்சியர் மவுனித்து விடுகிறார். காவல்துறை கை கட்டிக் கொள்கிறது. இது எந்த அளவுக்கு கல் குவாரி முதலாளிகள் ஆட்சியாளர்களையும், அரசு நிர்வாக இயந்திரத்தையும் கரப்ஷன் பண்ணி வைத்திருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சியாகும்.
இந்த புகைப்படத்தில் உள்ள எளிய விவசாயக் குடும்பம் இருப்பது மரக்காணம் தாலுக்காவின் கீழ்சிவரி அஞ்சலில் உள்ள நல்முக்கால் கிராமம். இந்த நிலத்தில் செல்வம் என்ற விவசாயி ஏழு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார். இங்கு மூன்று தலைமுறைகளாக வாழும் குடும்பமாகும்.
இவர்களின் விவசாய நிலத்திற்கு அருகில் ஒருவர் கல்குவாரி மற்றும் கிரஷர் ஆரம்பித்த நிலையில், காலப் போக்கில் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் சீர்குலைகின்றன. சுற்றிலும் விவசாயம் செய்து வந்தவர்கள் விவசாயத்தை விட வேண்டிய நிலையில் அவர்களை நிர்பந்தித்து அனைத்து நிலங்களையும் கூடுதல் விலை கொடுத்து வாங்கிவிட்டார்.
ஆனால், இந்த விவசாயக் குடும்பமோ, ”எங்களுக்கு போக்கிடம் வேறில்லை. ஐயா எங்களை வாழவிடுங்கள்” எனச் சொல்லி வாழ்ந்து கொண்டுள்ளது. ஆனால், குவாரி, கிரஷர்களின் முதலாளி குண்டர்களை வைத்து மிரட்டியும் இவர்கள் ஒத்துவராததால், இவர்கள் நிலத்தை சுற்றி இந்த குடும்பம் வெளியேற முடியாதவாறு முள்கம்பி வேலி போட்டு விட்டார்.
இதனால் இவர்கள் இங்கிருந்து வெளியேற முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக் கூடம் செல்ல முடியவில்லை. பெரியவர்கள் கடைகளுக்கோ, மருத்துவமனைக்கோ செல்ல முடியாமல் அடைபட்டுள்ளனர்.
அதாவது தனக்கு தரப்படாத நிலத்தை திறந்தவெளிச் சிறைசாலையாக மாற்றி விட்டார், கல்குவாரி முதலாளி!
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக்கு அனுப்பிய புகார்கள் எதற்கும் பலனில்லை. ”அடேய், நான் பரமசிவம் கழுத்து பாம்புடா! என்னை எதுவும் செய்ய முடியாது’’ என கொக்கரிக்கிறார்.
இவர்களை போன்ற ஏழை விவசாயிகள் அரசிடம் எந்த சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் வாழும் உரிமையை அரசு அங்கீகரித்தாலே போதும் என எதிர்பார்க்கிறார்கள். அந்த வாழும் உரிமையை தட்டிப் பறித்து அச்சுறுத்த ஒரு சிலதனி நபர்களால் முடியும் என்றால், அதை தடுக்க அரசு நிர்வாகத்தால் இயலாது என்றால்.., என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
இந்தப் பதிவு இதயமுள்ள .ஆட்சியாளர், அதிகாரிகள் யார் கண்ணிலாவது பட்டு இந்த எளியோர்க்கு விடிவு கிடைக்குமா? பார்ப்போம்.

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time