ஒரு போராளி காணாமல் போய்விட்டார்.. மெளனிக்கப்பட்ட மருத்துவர்!

சாவித்திரி கண்ணன்

தமிழகத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக1980 களின் இறுதியில் பார்க்கப்பட்டவர் ராமதாஸ்!

அப்போது அவர் வெறும் சாதி தலைவராக மட்டும் பார்க்கப்படவில்லை!

இடதுசாரி சிந்தனையாளராக, பெரியாரிஸ்டாக, அம்பேத்காரை கொண்டாடுபவராக அவர் அறியப்பட்டிருந்த காலம் ஒன்றிருந்தது!

தனது கட்சியில் தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடைமுறையில் நிருபித்தவர் அவர்!

அவரது எளிமை,சமூக நோக்கு,சமத்துவ போக்கு ஆகியவற்றுக்காக அவர் மதிக்கப்பட்டார்! இதுவே அவரது அடையாளமாகவும் ஆரம்ப காலங்களில் இருந்தது!

மக்கள் பிரச்சினைகளுக்காக – சமூக அநீதிகளுக்கு எதிராக – எத்தனையெத்தனையோ போராட்டங்கள், முன்னெடுப்புகள், தெளிவான அறிக்கைகள்…என்று மக்களிடம் அறியப்பட்ட ராமதாஸ் தற்போது என்னவானார்…?

இந்தியா முழுக்க விவசாயிகள் வரலாறு காணாத பெரும் தீரத்தோடு போராடி வருகையில், இவரோ.. இடஒதுக்கீடு போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தார்..அதுவும் தேர்தல் நெருங்கும்  நேரம் பார்த்து இதை கையில் எடுக்க வேண்டிய பின்னணி என்ன? உள் நோக்கம் என்ன..?

இது வரையிலும் இந்தியா கண்டிராத மத நோக்கம் சார்ந்த ஒர் ஆட்சி,மக்கள் விரோத அணுகுமுறைகளை சட்டங்களின் வாயிலாகவும், திட்டங்களின் வாயிலாகவும் தொடர்ந்து அமல்படுத்தி வருகிற போது இன்னும் வேகம் பெற்று இருக்க வேண்டிய அந்த போராளியின் குரலை கேட்க முடியவில்லை!

# குடியுரிமை திருத்த மசோதா வந்தது!

இஸ்லாமிய சமூகம் மாத்திரமல்ல, இந்தியாவின் மதசார்பற்றச் சக்திகள் அனைத்துமே கொந்தளித்தன களம் கண்டன…மருத்துவர் ராமதாஸ் மெளனம் காத்தார்.

இது மட்டுமல்ல,

# பணமதிப்பிழப்பு என்ற படுமுட்டாள்தனமான நாடகம் அரங்கேறியது

# காஷ்மீரில் 370 விலக்கி கொள்ளப்பட்டது..

# முத்தலாக் தடை என்ற முற்போக்கான போர்வையில் மூர்க்கமாக முஸ்லீம்குடும்ப உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும் சட்டம் கொண்டு வந்தது..

# பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை அழித்து..அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருப்பது..

# ’உபா’ என்ற பெயரில் தடா,பொடாவைக் காட்டிலும் கொடூரமான சட்டத்தை கொண்டு வந்து மனித உரிமை ஆர்வலர்கள்,வழக்கறிஞர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள்.உள்ளிட்ட. 35,00 பேரை கேள்வியில்லாமல்,ஜாமீன் இல்லாமல் சிறையில் தள்ளியிருப்பது…

# 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்குவது…உள்ளிட்ட தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்தி இருப்பது…

இது போன்ற எண்ணற்ற விவகாரங்களில் அமைதிகாத்த நிலையில்,

இவற்றுக்கெல்லாம் உச்சமாக தற்போது நமக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களை வஞ்சித்து அவர்களின் நிலத்தின் மீதான உரிமையையும்,சந்தை அதிகாரத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு மடைமாற்றும் கறுப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்த நிலையில், இந்தியா முழுக்க அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்… நீங்கள் அதை பொருட்படுத்தாமல் விட்டதோடு…இந்த நேரம் பார்த்து வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பிரச்சினையை கையில் எடுத்து நான்கு நாட்களாக தலை நகர் சென்னையில் பாமகவினரை போராட வைத்துள்ளீர்கள்!

ஒட்டுமொத்த பிற்படுத்தபட்ட மக்களுக்கான கட்சி என்ற தன்மைக்கு மாறிவந்திருக்க வேண்டிய – வளர்ச்சி அடைந்திருக்க வேண்டிய -கட்சியை மீண்டும் வன்னியர்களுக்கானதாக சுருக்குகிறீர்கள்.

ஆனால்,அதிலும்  மாநில அரசிடம் 20% கேட்டு போராடும் நீங்கள் மத்திய அரசிடம் 2% கேட்டுவந்ததை மறந்து மெளனித்துவிட்டீரே! அது சரி, அந்த நான்கு நாட்களில் இரண்டு நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தியிருக்க கூடாதா? ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

நீங்களும் ஒரு விவசாயி தானே? வன்னிய பெருங்குடி மக்களில் பெருமளவினர் விவசாயிகள் தானே!

பழைய வன்முறை அடையாளம் மறைந்து மரம் நடுதல், சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் ஆர்வம், மது எதிர்ப்பு என்று ஆரோக்கியமாக அறியப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அந்த வன்முறை தோற்றத்திற்கு திரும்பியிருக்கத் தான் வேண்டுமா?

கொடுரமான தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்ப்பது ’பாட்டாளி’ என்ற பெயரிலான கட்சியின் கடமையல்லவா?

ஆக,எந்த நேரத்தில் உங்கள் குரல் வலுவாக ஒலித்திருக்க வேண்டுமோ,

எந்த கட்டத்தில் பாமக என்னும் சிங்க நிகர் தொண்டர்களின் படை களம் கண்டிருக்க வேண்டுமோ…

அந்த காலகட்டத்தின் வரலாற்றுக் கடமையில் இருந்து விலகிவிட்டீர்கள் மருத்துவர் அய்யா!

கூடாத நட்பால் உங்கள் இயல்பு நிலையிலிருந்து நீங்கள் முற்றிலும் தடம் பிறழ்ந்து விட்டீர்கள்!

பதவிகள் வரும்,போகும்…தோல்விகள் அரசியலில் சகஜம்..!

ஆனால், பல வருட உழைப்பின் உச்சமாக அறியப்பட்ட ’போராளி’ என்ற மகத்தான உங்கள் இமேஜ் இன்று வெகு தூரம் விலகி சென்றுவிட்டது மட்டுமல்ல, விரும்பத்தகாத வேறு சில இமேஜ் உருவாகிக் கொண்டிருப்பதைப் போன்ற மாபெரும் இழப்பு வேறில்லை..!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time