விவேகமற்ற வெளியுறவு கொள்கைகள்! வெளுத்தது மோடி அரசின் முகம்!

-ச.அருணாசலம்

உலக தலைவர்களுக்கெல்லாம் தலைவர்! – உலக நாடுகள் அனைத்திற்கும் நண்பன் – விஸ்வ குரு, விஸ்வமித்திரன். மோடியின் நண்பர் தான் டிரம்ப் என்றெல்லாம் மோடி பக்தர்கள் பீற்றிக் கொண்டிருக்கையில், டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு மோடியின் இமேஜை அடித்து நொறுக்கியுள்ளது. ‘மோடியை வச்சு செஞ்சிருக்கார் டிரம்ப்’. ஏன், எதனால்?

இந்தியா மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மோடி பக்தர்களுக்கு இது ஏன் நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை.

இந்தச் சூழலில் இந்தியா, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்கும், என கதைத்து கொண்டிருந்தவர்களுக்கு டிரம்ப் இடியை இறக்கியுள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரியும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதற்கு தண்டனையாக 1% பெனால்ட்டி வரியும், டிரம்ப் ஜூலை 31 அன்று அறிவித்துள்ளார். இது ஆகஸ்டு 7 முதல் அமலுக்கு வரும்.

இந்த இடி பத்தாதென்று, பாக்கித்தானுக்கு 10% மும் வங்க தேசத்திற்கு 17% மும் வரியை குறைத்து டிரம்ப் தனது அடுத்த அடியை இந்தியாவிற்கு அளித்துள்ளார்.

கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த மோடியின் பாஜக அரசு தங்களது பொருளாதார கொள்கையை, அதன் நீட்சியான வெளியுறவு கொள்கையை சில அனுமானங்களின் அடிப்படையில் வகுத்து அதை கடைபிடித்து வருகின்றனர். இவர்களின் தெளிவற்ற கொள்கையை வரலாறு நெடுகிலும் நாம் காண முடியும்.

இரட்டை நாக்கு இந்துத்வாவினர்;

எதிர்கட்சியாக இருந்தால், சுதேசியக் கொள்கை, காந்திய சோசலிசம், வேளாண் பொருட்களுக்கு நியாயவிலை என்றெல்லாம் பேசி மக்களை ஈர்க்கும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் பரிவாரங்கள், ஆட்சியிலிருந்தாலோ அமெரிக்க சார்பு, தாராள மயம், கார்ப்பரேட் ஆதரவான வேளாண் சட்டங்கள் என்றெல்லாம் நடைமுறைபடுத்துவார்கள்!

விவேகமற்ற வெளியுறவு கொள்கை நிலைபாடுகள்;

ஆனால், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்ரேலுக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை எடுக்கும் இவர்களால் மாறி வரும் புவி அரசியல் சூழல்களை எதிர் கொள்ளத் தெரியவில்லை. இத்துடன் அரசின் அனைத்து செயல்பாடுகளும் தேர்தலை மையப்படுத்தியே மோடியால் எடுக்கப்பட்டன.

உலகம் அமெரிக்காவின் ஒற்றை ஆளுமை (unipolar) என்ற தளத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, பல ஆளுமைகளை (multi polar) கொண்ட களமாக ( அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா என மூன்று வல்லரசுகள்) மாறியதை புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கை சுதந்திரத்தை (strategic autonomy) வளர்த்தெடுக்க தவறியது மோடியின் தலைமையிலான பாஜ க அரசு. இதன் சூத்திரதாரிகள், மோடி, ஜெய்சங்கர், அஜீத் தோவல், மற்றும் அமீத் ஷா ஆகிய நால்வர் தான்.

‘சீனாவை எதிர் கொள்ள நாங்கள் இருக்கிறோம்’ என அமெரிக்காவிடம் சலுகைகள் பெற எத்தனிப்பதும், பிரிக்ஸ் மற்றும் ஷங்காய் கூட்டமைப்பில் (BRICS and SCO) அங்கம் வகிப்பதன் மூலம் இந்தியா அமெரிக்காவிடமிருந்து விலகி இருப்பது போல் போக்கு காட்டுவதும் , கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யாவின் நட்பாக இருப்பது போல் மோடி நடிப்பதும் உலக நாடுகளிடம் மரியாதை பெற்றுத் தராது.

டிரம்ப் ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று அறிவித்தவுடன் மோடி பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா இணைந்து எடுத்த முடிவுகளை கை கழுவ தயாராய் இருந்தார் என்பதை பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கவனிக்காமல் இல்லை.

டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் தமக்கு அழைப்பில்லை என்றவுடன், அதைப் பெற தலைகீழாக நின்றதும், டிரம்ப் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக டாலர் பயன்பாட்டை குறைப்பதிலிருந்து விலகல், அமெரிக்க இறக்குமதிக்கு வரியை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை மோடி எடுத்ததை நாம் மறக்கமுடியாது.

BRICS and SCO summit

‘குளோபல் சௌத்’ எனப்படும் ‘வளரும் நாடுகளின் தலைவன் இந்தியா’ என்று கூறிக் கொண்டு, தனது வர்த்தக உறவுகளில் ஏசியான் (ASEAN) மற்றும் விரிவான பிராந்திய கூட்டுறவு (RECP) ஆகியவற்றை புறக்கணிப்பதும், வளர்ந்த நாடுகளுடன் குளோபல் சௌத் நாடுகளுக்கு இந்தியா ஒரு பாலமாக செயல்படும் என்று கூறிக் கொண்டே பாலத்தீனம், ஈரான் பிரச்சினைகளில் ஜி7 நாடுகளுடன் இந்தியா நிற்பதையும் இந் நாடுகள் கவனித்தே வருகின்றன.

பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய் படம் காட்டி வரும் விஷ்வகுருவை எந்த நாடும் நண்பனாக பாவிக்கவில்லை என்பதே உண்மை.

அதிதீவிர அமெரிக்க ஆதரவு நிலை எடுத்துமே அவமானப்பட்ட மோடி:

இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நாடாக விளங்குவது சீனா தான் என்பதை மறந்து, மிகப் பெரிய முதலீட்டையும் அரிய தொழில்  நுட்பத்தையும் சீனம் அளிக்க தயாராய் உள்ளது என்பது தெரிந்தும் சீனாவை ஓரங்கட்ட, அமெரிக்காவுடன் ஸ்குவாட் ராணுவ கூட்டில் (QUAD) இணைவதையும் மோடி முன்னின்று நடத்தினார். இவ்வாறு இந்தியாவை அமெரிக்க நாட்டின் ஏவலாளாக சிறுமைபடுத்திய மோடி இந்தியாவின் கொள்கை சுதந்திரங்களை காவு கொடுத்து அமெரிக்க நட்பை வளர்த்தெடுத்தார்.

”இந்திய அமெரிக்க வர்த்தகத்தை இப்பொழுதிருக்கும் நிலையான 250 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு உயர்த்த தயார், அதற்காக ஆயுதங்களையும், எண்ணெயையும் அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்ய தயார்’’ என மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவில் அறிவித்தார்.

”மாகா (Make America Great Again) கோஷத்தோடு, ‘மேக் இந்தியா. கிரேட் எகெய்ன்’ (MIGA) இணைந்து MEGA கூட்டுறவு என்று கோஷம் போடுவோம்” என்று டிரம்ப் முன்பாக மோடி உளறியதை உலகம் பார்த்தது. இவ்வளவு தாசானு தாசனாய் வளைந்து கொடுத்தும் டிரம்ப் மோடியை எட்டி உதைப்பதேன்?

ஆபரேஷன் சிந்தூரை ஆதரிக்க மறுத்தன உலக நாடுகள்;

பெகல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது , இந்திய மக்கள் கவலை கொண்டனர். ஆனால், மோடியோ இதை எப்படி அரசியலாக்குவது என எண்ணத் தொடங்கினார். நால்வரும் (மோடி, தோவல்,ஜெய்சங்கர் அமீத் ஷா) இணைந்து, பாக்கித்தானை குற்றங் கூறி ஆபரேஷன் சிந்தூரை நடத்த திட்டமிட்டனர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மேலை நாடுகளுக்கு பயணித்து இதற்கான ஆதரவை வேண்டினார் , ஆனால், ஆதரவு ஏதும் கிட்டாத நிலையில் “ எங்களுக்கு கூட்டாளிகள் தேவை , போதகர்கள் அல்ல”( we need partners , not preachers) என்று வெறுப்பாக பேசினார்!

ஆன போதிலும், பாக்கித்தான் எதிர்ப்பில் உள்ள தேர்தல் ஆதாயம் மோடியின் கண்களில் விரியவே, மோடி ஆபரேஷன் சிந்தூருக்கு உத்தரவிட்டார். ஆனால், ஐந்துக்கும் மேற்பட்ட இந்திய விமானங்களை, இந்திய எல்லைக்குள்ளேயே சுட்டு வீழ்த்தி, மோடியின் கனவில் பாக்கித்தான் மண்ணை அள்ளி போட்டது!

டிரம்ப் தலையீட்டது உண்மையே;

மூக்குடைபட்ட மோடி அரசு தனது தாக்குதலை விரிவுபடுத்தியது, பாக்கித்தானும் பதிலடி கொடுத்தது. நிலைமை எல்லை மீறிப் போக வாய்ப்புகள் இருந்ததால், இதை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா தலையிட்டது. போர் நிறுத்தத்தை முதலில் டிரம்ப் தான் அறிவித்தார். ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூரை ஆதரிக்க மறுத்த நிலையில் டிரம்ப் தலையிட்டு போரை நிறுத்துங்கள் என கட்டளையிட்டதும் அதற்கு அடி பணிந்தார் மோடி.

இந்திய பாக்கித்தான் இடையே 1971 தவிர்த்து, இது வரை நடந்த போர்களில் மூன்றாவது நாடு எப்பொழுதுமே தலையிட்டு தான் போரை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே உண்மை.

# 1947-1948  காஷ்மீர் மீட்பு போரில் ஐ.நா,தலையீடு.

# 1965  பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சோவியத் யூனியன் தலையீடு.

# 1998 கார்கில் போரில் அமெரிக்க அதிபர் கிளிண்டன் தலையீடு.

# 2001 ‘ஆபரேஷன் பராக்கிரம்’ அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தலையீடு

# 2025 ஆபரேஷன் சிந்தூர் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய தலையீட்டால் தான் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தன.

மோடியின் பொய்யும், டிரம்பின் கோபமும்;

இதை சாதரணமாக ஏற்றுக் கொள்ள, நன்றி சொல்லாவிட்டாலும் மறுக்காமல் இருப்பது தான் முறை. ஆனால் மோடி இதை ஒத்துக் கொண்டால், அவர் கட்டமைத்த வீராதி வீரன் என்ற பிம்பம்

உடைந்து நொறுங்கும் என்பதால் மோடி, ”இந்த போர் நிறுத்தம் பாக்கித்தான் மண்டியிட்டதால் ஏற்பட்டது” என பொய் கூறினார். இது டிரம்ப்பை கோபப்படுத்தியது.

நிறுத்தபடாத போர்களுக்கெல்லாம் (உக்ரைன் யுத்தம், காசா யுத்தம்) ‘நிறுத்தினேன்’ என்று பேர் கொண்டாடி வரும் டிரம்ப் இந்திய-பாக் போரை தான் உண்மையில் முடிவுக்கு கொண்டு வந்ததை மோடி மறுப்பதை எப்படி ஏற்றுக் கொள்ளுவார்?

அவர் மீண்டும், மீண்டும் பல சந்தர்ப்பங்களில்,பல உலகத் தலைவர்கள் முன் இந்த கூற்றை திரும்பத் திரும்ப கூறினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் விடாப்பிடியாக மோடியிடம் பதிலை கோரினர். இறுதியில் ஜூலை 30 -ல் பாராளுமன்றத்தில் மோடி, ’’உலகத் தலைவர்கள் யார் கூறியும் போரை இந்தியா நிறுத்தவில்லை” என்று கூறினார்.

மோடி டிரம்ப் பொறுத்தது போதும் என்று இந்தியா மீது 25% வரியும், 1 விழுக்காடு தண்டனையும் (penalty) விதித்து மொத்தம் 26% வரிகளை ஜூலை 31ல் அறிவித்து வச்சு செஞ்சுள்ளார். மோடியை வெறுப்பேத்துவதற்காகவே பாக்கித்தானுக்கும், வங்க தேசத்திற்கும் குறைந்த வரியை விதித்துள்ளார்.

மார்ச் முதல் ஐந்து முறை அமெரிக்காவிலும், இருமுறை இந்தியாவிலும் நடைபெற்ற வர்த்தக (tariff negotiations) இழுபறியிலேயே இருந்தன என்பதும், இந்திய நிலைபாட்டை அமெரிக்கா குறை கூறியதையும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“எல்லாம் நண்பேன்டா” என்றே மோடி அரசு சமிக்ஞைகளை காட்டியது. இறுதியில் டிரம்ப் இடியை இறக்கியள்ளார். இந்திய விவசாயத் துறைகளிலும், கூட்டுறவு துறைகளிலும் அமெரிக்க பொருட்களின் இறக்குமதியை அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது. இதை எதிர்க்க திராணியற்ற மோடி அரசு, தனது உண்மை முகத்தை இந்திய மக்களிடம் மறைத்து வருகிறது.

மோடி அரசின் நிதி ஆயோக் அமைப்புஅமெரிக்க அக்ரி பிசினெஸ் முதலாளிகளுக்கு சாதகமாக இந்திய விவசாய சந்தையை திறந்து விடுவது இந்திய நலன்களுக்கு எதிரானது அல்ல எனக்கூறும் கொள்கை விளக்க அறிக்கையை ஏற்கனவே அளித்திருந்தது. அவ்வறிக்கையை இப்பொழுது இணையத்தில் இருந்து (website) மோடி அரசு நீக்கி உள்ளதானது அனைவர் மத்தியிலும் ஓர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் உண்மை நிலை தான் என்ன? எனக் கேள்வி எழுப்பி உள்ளது.

தேர்தல் மற்றும் அரசியல் அதிகாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் மோடி அரசிற்கு தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது.

தெளிவான வெளியுறவு கொள்கை கிடையாது!

எவ்வளவு நாட்கள் இந்தியர்களை முட்டாளாக்க முடியும்?

கட்டுரை; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time