அம்பானிக்காக அமெரிக்காவை பகைத்துக் கொண்ட பாஜக அரசு!

-சாவித்திரி கண்ணன்

ரஷ்யாவிடம் இருந்து கற்பனைக்கு எட்டாத அளவு மிகக் குறைந்த விலைக்கு லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்த 2022 முதல்!  இதன் மூலம் இந்திய நாடும், மக்களும் பெற்ற பலன் என்ன? இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாத மர்மம் என்ன?

இந்தியாவைப் பொருத்த வரை ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து தான் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது. ரஷ்யா- உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யயாவுக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதாரத் தடை விதித்தன. இதையடுத்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மிகப் பெரிய அளவில் தேக்கமடைந்தது. அதை குறைவான விலைக்கு இந்தியாவிற்கு தந்தது ரஷ்யா.

இந்த அற்புதமான வாய்ப்பு நமக்கு கிடைத்த வரப் பிரசாதமாகும்.அந்த வகையில் உக்ரைன் போருக்கு முன் ரஷ்யாவிடம் வெறும் 2 சதவீதத்தில் இருந்த இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

2022 தொடங்கி இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை மிக அதிக அளவில்  வாங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த இறக்குமதியில் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களைவிட  நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் அதிக பலன் அடைந்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 5,32,700 பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இருக்கிறது.

2025 மே மாதத்தில் மட்டும் இந்தியா ரஷ்யாவிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 19.6 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் வாங்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்து உலகம் முழுவதும்  பெட்ரோல், டீசலாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.  குறிப்பாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்த ஐரோப்பிய யூனியன் நாடுகளே இந்தியாவிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை அதிக விலை கொடுத்து வாங்குகின்றன. இது மட்டுமின்றி, இந்தியா இலங்கை, நேபாளம், பூடான் ஆப்கன் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதானியின் ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம்

இந்தியாவில் தினமும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 51 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இப்படி இந்த அளவுக்குகான இறக்குமதி இந்தியா மக்களின் தேவைக்கல்ல. இந்த கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் சுத்திகரிப்பை பொறுத்த வரை  மிகப் பெரிய பலன் அடைந்தவை ரிலையன்ஸ் நிறுவனமே.தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இயங்குகிறது. அம்பானியின் சிக்கா துறைமுகம் ரிலையன்ஸின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கையாளுகிறது. இது குறித்து ஜனவரி 2023 ஆம் ஆண்டே அறம் இதழில் நாம் கட்டுரை எழுதி அம்பலப்படுத்தி இருந்தோம்.

ரஷ்யா – உக்ரைன் போரில் அம்பானி அபார லாபம்!

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரியுடன் முடிந்த ஓராண்டில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் மூலம் சுமார் ரூ.6,850 கோடி லாபம் ஈட்டியுள்ளதை அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.

இவ்வளவு சவால்களை எதிர்கொண்டு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் இறக்குமதியாவதும் பிறகு ஏற்றுமதியாவதுமாக  நடைபெறுவதால்  இதில் அதானியும் பெரும் பலன் அடைகிறார்.

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மூலமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் மக்களுக்கு சரிபாதி விலைக்கும் குறைவாக தந்திருக்க முடியும். அதன் மூலம் இந்தியாவின் மக்கள் மட்டுமின்றி பலதரப்பட்ட வணிக நிறுவனங்களும் பலனடைந்து பல உற்பத்தி பொருட்களின் விலையும் குறைந்திருக்கும். பெட்ரோல், டீசல் விலை குறைவால் சுற்றுலா தொழிலும் வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை.

எல்லா பலன்களும் ஒரு தனி நபரான அம்பானிக்கே தரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அம்பானி நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல் மீதான கொள்ளை லாப வரியை நீக்கியும் சகாயம் செய்து தந்துள்ளது.

இதே போல் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.  இந்த இறக்குமதி மூலம் சீன மக்களும், அதன் பொருளாதாரமும் மிகப் பெரிய பலனை கண்டுள்ளன. ஆனால், இந்தியாவிலோ அம்பானி, அதானியைப் போன்ற தனி நபர்களைத் தவிர, மக்கள் பலனடையவில்லை. இதைவிட பெரிய ஊழலோ, முறைகேடோ இருக்க முடியாது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினை விவாதத்திற்கு வந்த போது அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் பெருத்த லாபம் அடையும் நாடுகளை நாம் எப்படியாவது தண்டித்தே ஆக வேண்டும் என கொந்தளித்தனர்.

குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை முன்மொழிந்தார். இதுதொடர்பாக செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம்,’ எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும், என்றார். அவரது  மசோதாவுக்கு  கணிசமான எம்.பி.களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

அம்பானிக்காக அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது இந்தியா. இதில் தற்போது பாதிக்கப்படப் போவது இந்திய மக்களே. இப்படி அம்பானி, அதானிகளின் நலன்களுக்ககவே ஒட்டு மொத்த தேசத்தின் நலன்களும் அடகு வைக்கப்படுகின்றன.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time