காஷ்மீர் பிரச்சினை தோற்றமும், வளர்ச்சி போக்குகளும்!

-ச.அருணாசலம்

காஷ்மீர் பிரச்சினை உருவான வரலாறு –பாகம்-1

நாளும் குண்டுச் சத்தம் வெடித்த வண்ணம் உள்ளது காஷ்மீர். இந்தியாவின் ராணுவச் செலவில் பெரும் பகுதி காஷ்மீரை காப்பாற்றுவதில் செலவாகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு..? என முடிவுக்கு வருவதற்கு, இந்த பிரச்சினையை  ஆதியோடந்தமாகப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்;

2019 ஆகஸ்ட் 5ல் , காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதியை ரத்து செய்த மோடி, தில்லிக்கும் ஶ்ரீநகருக்கும் உள்ள தூரத்தை (Delhi ki doori) மட்டுமின்றி மனதிற்கும் காஷ்மீருக்கும் (dil ki doori) உள்ள தூரத்தையும் குறைத்து விட்டோம் என்றார். இந்த கூற்றில் உண்மை இருக்கிறதா அல்லது வெறும் பசப்பு வார்த்தைகளா?

மன்னர் ஹரி சிங்கின் ஆளுமையில் இருந்த ஜம்மு காஷ்மீர் பிரதேசம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு சமஸ்தானமாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பகுதி, லடாக் பகுதி மற்றும் மேற்கே கில்ஜிட் மற்றும் பல்டிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் வாழும் மக்களில் (லடாக் பகுதியை தவிர ஏனைய பகுதிகளில்)பெரும்பான்மையினர் முஸ்லீம் மக்களே. ஆனால் இவர்களை ஆளுகின்ற மன்னரோ இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தார்.

கொடுங்கோல் மன்னன்;

மிக சொற்பமாக இருந்த டோக்ரா வகுப்பை சார்ந்த இந்து மன்னர்களின் ஆட்சி கொடுங்கோலாட்சியாக, 1847 முதல் இஸ்லாமிய மக்களை வாட்டி வதைத்து நசுக்கும் மதவெறி ஆட்சியாக திகழ்ந்தது.

இவர்களது ஆட்சியில் இந்துக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினால் அவரது சொத்துக்கள் மன்னரால் பறி முதல் செய்யப்பட்டது. இஸ்லாமிய மக்களை தொழுகைக்கு அழைக்கும் “ஆசான்” தடை செய்யப்பட்டது.

தொழுகைக்கு இடையூறு செய்தல், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கிழித்தெறிந்து அவமதித்தல்,இவற்றை எதிர்ப்போரை கைது செய்து சிறையிலடைத்தல் போன்ற அநியாயங்கள் அன்றாட நிகழ்வாக இருந்தன. இவ்வாறு கைது செய்தவர்களின் மீது வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் கூடிய மக்களை குருவிகளை சுடுவது போல் சுட்டு வீழ்த்திய நாள்தான் ஜூலை13, ஆண்டு 1931.

வாக்கெடுப்பை மறுத்த முகமது அலி ஜின்னா;

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரு வேறு நாடுகளாக பிரித்த நேரத்தில் பிரிட்டனின் ஆட்சிக்குட்பட்ட பல சமஸ்தானங்களுக்கும் இந்தியா அல்லது பாக்கித்தானுடன் இணைய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் காஷ்மீர் இந்தியாவுடனோ அல்லது பாக்கித்தானுடனோ இணைவதை நேருவும் வல்லபாய் பட்டேலும் ஏற்றுக் கொண்டாலும், முகமது அலி ஜின்னா இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனநாயக முடிவு பற்றி அவருக்கு கவலையில்லை , இஸ்லாமியர் அதிகம் உள்ள பிரதேசம் என்பதால் இயற்கையாக காஷ்மீரம் இஸ்லாமியர்களுக்கான நாடான பாக்கித்தானுடன்தான் இணைய வேண்டும் என்பது ஜின்னாவின் எண்ணம்.

மவுண்ட் பேட்டன் ஜின்னாவிடம், காஷ்மீர், ஹைதராபாத் மற்றும் ஜுனாகாத் ஆகிய மூன்று பிரதேசங்களையும் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் என பரிந்துரைத்த போதும் ஜின்னா ஏற்றுக் கொள்ளவில்லை.

இறுதி முடிவு, காஷ்மீர் மக்கள் தீர்ப்பே;

1947 அக்டோபர் இறுதி வாரத்தில் பாக். ஆதரவுடன் பக்தூன் பழங்குடியினரும், பூஞ்ச் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களும் காஷ்மீர் அரசு (ஹரி சிங் அரசு) மீது தாக்குதலை தொடுத்தனர். அதுவரை முடிவெடுப்பதில் ஊசலாடிக்கொண்டிருந்த மன்னர் ஹரி சிங் வேறு வழியின்றி இந்தியாவின் ராணுவஉதவியை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒத்து கொண்டார்.

இந்தியாவுடனான காஷ்மீர் இணைப்பு (accession) தற்காலிகமானது (provisional) என்றும் இறுதி முடிவை காஷ்மீர் மக்களே வாக்கெடுப்பு (Plebiscite) மூலம் எடுப்பர் என்பது முடிவானது.

பிறகு , மன்னரால் சிறையிடப்பட்ட சேக் அப்துல்லா, காந்தி நேரு ஆகியோரின் வற்புறுத்தலுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டார். அத்துடன், காஷ்மீரின் அவசரகால நிர்வாகத்தின் தலைவராகவும் சேக் அப்துல்லா நியமிக்கப்பட்டார். இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு காஷ்மீரின் பிரதிநிதியாக ஜூன் 16,1949 அன்று,சேக் அப்துல்லாவை, காஷ்மீர் மன்னர் ஹரி சிங் தேர்வு செய்து அனுப்பினார்.

இந்திய அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly of India) அக்டோபர் 17, 1949-ல் ஜம்மு காஷ்மீருக்கு மாநில சுயாட்சி மற்றும் தனித் தகுதியை உறுதி செய்யும் அரசியல் பிரிவு 370 ஐ உருவாக்கி அமைத்தது. இதன் மூலம் பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளி விவகாரம் என்ற மூன்று துறைகளில் மட்டும் இந்திய யூனியனின் அதிகாரத்திற்கு காஷ்மீர் உட்படும் என்பது அரசமைப்பு சட்டமானது.

காஷ்மீர் பகுதியில் இருந்த பல்வேறு அரசியல் சக்திகளிடையே( முஸ்லீம் மாநாடு கட்சியாக இருந்து தேசிய மாநாட்டு கட்சியாக மாறிய – வாக்கெடுப்பு வேண்டும் என்ற – சேக் அப்துல்லாவின் கட்சி ஒரு புறம்,

# முஸ்லீம் லீக் மறுபுறம்,

# தனி நாடு கேட்பவர்கள் (பிரிவினைவாதிகள்) ஒரு புறம்,

# பாக்கித்தானுடன் இணைய விரும்புபவர்கள்

என பல நீரோட்டங்கள் காஷ்மீர் சமூகத்தில் ஓடின.

இத்துடன் மன்னர் ஹரி சிங்கின் ஜாதியை சார்ந்த டோக்ரா வகுப்பினர் அடிப்படையில் ஆதிக்க வெறியும் , இஸ்லாமிய வெறுப்பும் இவர்களின் பிறவிக் குணமாக இருந்தது. 1947 அக்டோபர் 14ல் நடந்த ஜம்மு படுகொலையில் ஏராளமான முஸ்லீம்களை டோக்ரா ரெஜிமண்டார் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மற்றும் அகாலிகளுடன் சேர்ந்து கொன்று குவித்தனர்.

இவர்கள் – பால்ராஜ் மதோக், பண்டிட். பிரேம்நாத் டோக்ரா, ஹன்ஸ்ராஜ் பங்கோத்ரா மற்றும் ஹசீர் வஜீத் ஆகியோர் – 1947ல் ‘ஜம்மு பிரஜா பரிஷத்’ என்ற கட்சியை துவக்கி மன்னர் ஆட்சி நீடிக்கவும் , இந்தியாவுடன் முழுமையாக இணைவதையும் ஆதரித்து குரல் எழுப்பினர் . இவர்கள் சேக் அப்துல்லாவின் வாடையே ஆகாது என்கிற கூட்டம் என்பதை நினைவில் கொள்ளுவோம்.

பக்தூன் பழங்குடியினரும், கிளர்ச்சியாளர்களும் தொடுத்த ஆக்கிரமிப்பிற்கு பாக்கித்தான் ஆதரவு அளித்தது, மன்னர் ஹரி சிங் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் அவரை காப்பாற்ற இந்தியப்படை விரைந்தது.

பாக்கித்தானின் வெள்ளைக்கார தலைமை படைத் தளபதி (British Commander in Chief of Pak. Army) காஷ்மீர் யுத்தத்தில் பாக் படைகள் பங்கு பெறுவதை அங்கீகரித்தார். இந்த சூழலில் மவுண்ட்பேட்டனும் போரை முடிவுக்கு கொண்டுவர ,ஐ நா சபையை, நாட வேண்டுமென நேருவிடம் வற்புறுத்தினார்.

மூவர் கமிட்டியும், மூன்று கட்டத் தீர்வும்;

இதன் படி, டிசம்பர் 31,1947ல், இந்தியா ஐ நா சபையை நாடியது.

1948 ஜனவரியில் ஐ நா பாதுகாப்பு சபை காஷ்மீர் பிரச்சினை குறித்த புகாரை பரிசீலித்தது. இந்தியாவும், பாக்கித்தானும் தத்தமது நிலைபாட்டினை விளக்கி எடுத்துக் கூறிய பின்பு, ஐ நா பாதுகாப்பு சபை மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்து காஷ்மீர் பிரச்சினையை அலசியது.

இறுதியில் மார்ச் 21, 1948ல் ஐநா பாதுகாப்பு சபை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர 3 கட்டங்கள் கொண்ட தீர்வை சொன்னது:

# பாக்கித்தான் தமது நாட்டினரை காஷ்மீரிலிருந்து முதலில் விலக்க வேண்டும்.

# அடுத்து இந்தியா தனது படைகளை காஷ்மீரிலிருந்து வெகுவாக குறைக்க வேண்டும்.

# மூன்றாவதாக ஐ நா வின் கண் காணிப்பில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

என்ற தீர்மானம் எண் 47 நிறைவேற்றப்பட்டது.

இதை இந்தியா மற்றும் பாக்கித்தான் ஆகிய இரு நாடுகளுமே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், கமிஷனுடன் இணைந்து பணி புரிய இரு நாடுகளும் ஒத்துக் கொண்டன.

வாக்கெடுப்புக்கு வாய்ப்பை மறுத்தன, இரு நாடுகளும்;

1949-ல் ஐ நா கமிஷன் (UNCIP United Nations Commission for India , Pakistan) காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க ஐ நா தலைமையில் பாரபட்சமற்ற தேர்தலை (வாக்கெடுப்பு- plebiscite) நடத்த வேண்டும் என்றும், இதற்கு முதலில் பாக்கித்தான் ஊடுருவலர்கள் உட்பட தனது படைகளை விலக்கி கொள்ள வேண்டும்,

அடுத்து இந்தியா தனது படைகளை ( சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தேவையானவற்றைத் தவிர மற்ற படையினரை) விலக்கி கொண்டு, போர் நிறுத்தத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று முடிவானது.

இந்தியா பாக்., இடையேயான யுத்தம் 1/01/1949 அன்று முடிவுக்கு வந்தது . போர் நிறுத்த எல்லை அல்லது கட்டுப்பாட்டு கோடு (Ceasefire Line or Line of Control) அன்று உருவாகி, பலடிஸ்தான் மற்றும் கில்ஜிட் பகுதி, ஆசாத் காஷ்மீர் ஆகிய பகுதிகள் பாக்கித்தான் வசமும்,

காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் இந்தியா வசமும் வந்தன. காஷமீர் இரு கூராக பிரிந்தது!

படைக் குறைப்பு , படைகளை திருப்பி அனுப்புவது ஆகியவற்றில் பாக்கித்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்ததால் இன்றுவரை காஷ்மீர் மக்களிடையே வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப்படவில்லை!

ஆக , காஷ்மீர் மக்களின் உரிமைகளை தீர்மானிக்கும் பிரச்சினை என்பது இரு நாடுகளின் ஆளுமை மற்றும் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையாக புது வடிவெடுக்க ஆரம்பித்தது!

காஷ்மீரின் பிரதமராக பொறுப்பேற்ற சேக் அப்துல்லா , தனது மாநாட்டுகட்சி சார்பில் வெளியிட்ட ‘நயா காஷ்மீர் ‘அறிக்கையில் கூறப்பட்ட – உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற நிலச்சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்த விரும்பினார். சேக் அப்துல்லாவின் நில சீர்திருத்த சட்டங்களை நடைமுறை படுத்தவிடாமல் மன்னர் ஹரி சிங் முட்டுக்கட்டை போட்டதால் மன்னர் ஹரி சிங்கை ஓரங்கட்ட பிரதமர் நேருவை அப்துல்லா நிர்பந்தித்தார் . இறுதியில் அவரது இளவல் கரண்சிங்கை அப் பதவியில் அமர்த்திவிட்டு மன்னர் ஹரி சிங் மனைவி தாரா தேவியுடன் பம்பாயில் ஓய்வெடுக்க காஷ்மீரை விட்டு வெளியேறினார்

உழுபவனுக்கே நிலத்தை உரிமையாக்கிய சேக் அப்துல்லா;

மக்கள் கூட்டத்தில் பேசும் சேக் அப்துல்லா

அதன் பிறகு , Estate Abolition Actஐ 1950ல் காஷ்மீரில் சட்டம் இயற்றி நிலப்பிரபுத்துவ முறைக்கு சேக் அப்துல்லா முடிவு கட்டினார்.

இந்தியாவில் முதன் முதலில் நிலச் சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தது சேக் அப்துல்லா தான்! முதலில் நடைமுறைக்கு வந்தது ஜம்மு காஷ்மீரில் தான்!

இதனால் அதிக நிலங்களை கையில் வைத்துக் கொண்டு சுகபோகமாக வாழ்ந்து வந்த ‘இந்து’ நிலச்சுவான்தார்கள் பாதிப்படைந்தனர்.  இதனால் பயன் பெற்றவர்களோ, ஏழை முஸ்லீம் விவசாயிகளாவர்.

நிலச்சுவான்தார்களின் கோபம் பகையாக மாறியது. பயன் பெற்றவர்கள் ஏழை முகமதியர்களாக இருந்ததால் மத வெறுப்பும் மேலோங்கியது. நிலப்பிரபுக்களின் எதிர்ப்பு நேருவின் கவனத்தையும் ஈர்த்தது.

வாக்கெடுப்பை நேரு முடக்கினார்;

இந்த சூழலில் ஐ நா கமிஷன் தலைவர் ஓவன் டிக்சன் இந்தியா மற்றும் பாக். வருகை தந்து பொது நிருவாகத்தின் கீழ் வாக்கெடுப்பு நடத்தும் முயற்சியை முடுக்கி விட்டார் .

வாக்கெடுப்பு முயற்சியை விரும்பவில்லை பிரதமர் நேரு. அவர் தன் நண்பர் சேக் அப்துல்லாவை தூண்டிவிட்டதன் மூலம், தேசீய மாநாட்டு கட்சியின் பொதுக் குழு கூட்டத்தை (27, அக். 1950) கூட்டப்பட்டது. அதில்  காஷ்மீரின் தலை விதியை நிர்ணயிக்க காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அந்த நிர்ணய சபை காஷ்மீரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றை கொண்டு ஐ நா சபையின் வாக்கெடுப்பு முயற்சியை நேரு முடக்கினார்.

சேக் அப்துல்லாவிற்கு கிடைத்த மக்கள் அங்கீகாரம்;

ஜம்மு- காஷ்மீர் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் 1951 செப்டம்பரில் நடந்தது.. மொத்தம் 100 தொகுதிகளாக காஷ்மீரம் பிரிக்கப்பட்டது , 75 தொகுதிகள் இந்தியா வசம் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிக்கும் 25 தொகுதிகள் பாக் வசமுள்ள ஆசாத் காஷ்மீருக்கும் ஒதுக்கப்பட்டன!

ஜம்மு காஷ்மீர் முழுவதும் தேசீய மாநாட்டு கட்சி கொடி பறந்தன, உழுபவனுக்கே நிலம் சொந்தம், புதிய காஷ்மீரம் நீடு வாழ்க, இந்து முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக போன்ற கோஷங்கள் விண்ணை பிளந்தன! ஜம்மு பிரஜா பரிஷத் கட்சி இத் தேர்தலை புறக்கணித்தது!

இத்தேர்தலில் மாநாட்டு கட்சி 75 இடங்களில் போட்டியிட்டு 73 இடங்களில் போட்டியின்றி (unopposed) வென்றது!

ஐ.நா சபை இந்த தேர்தலை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.

1951 நவம்பரில் காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கூடியது, சேக் அப்துல்லா எழுச்சிமிகு உரையாற்றினார். ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சட்டத்தை எழுதுவது, காஷ்மீரின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, மன்னராட்சி முறையை ஒழிப்பது, நில சீர்திருத்த முறையில் நிலமிழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது ஆகிய கடமைகள் சபையின் முன்னால் உள்ளன என்று கூறினார்.

இந்தியாவோடு இணைய விரும்பிய சேக் அப்துல்லா;

காஷ்மீரின் எதிர்காலத்தை குறித்த சேக் அப்துல்லாவின் பார்வையில் மூன்று வழி முறைகளை குறிப்பிட்டுள்ளார்.

தனித்து இருப்பது, பாக்கித்தானுடன் இணைவது அல்லது இந்தியாவுடன் இணைவது என்பவை தான்.

இதில் தனி நாடாக இருந்தால் தனது எல்லைகளை காஷ்மீரால் பாதுகாக்க முடியாது. எனவே, தனியாக இருப்பதை சேக் அப்துல்லா நிராகரித்தார். பாக்கித்தானுடன் இணைவதென்பது ஒரே ஒரு காரணத்திற்காக – அது மத அடிப்படையிலான உணர்விற்காகவே நடக்க முடியும் . இத்தகைய உணர்வு பூர்வமான முடிவுகள் பிரச்சினைகளை தீர்க்க உதவாது. மற்றபடி காஷ்மீருக்கும் பாக்கித்தானுக்குமிடையே கருத்தொற்றுமையோ, வேறெந்த உயரிய குறிக்கோளோ இல்லை , எனவே, அதை சேக் அப்துல்லா நிராகரித்தார்.

எஞ்சியிருக்கும் வாய்ப்பு என்பது, இந்தியாவுடன் இணைவது தான் . மதச் சார்பற்ற ஜனநாயக முறையை, அதுவும் சமத்துவம், சுதந்திரம் மற்றும் சமநீதியின் அடிப்படையில் இயங்கும் மதசார்பற்ற ஜனநாயக முறை உள்ள இந்தியாவுடன் இணைவதே சாலச் சிறந்தது என சேக் அப்துல்லா எண்ணினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் காஷ்மீர் மக்களின் நலன்களை எப்போதும் பேணி வந்துள்ளது , காங்கிரஸ் தலைவர்கள் காந்தி மற்றும் நேரு போன்ற தலைவர்களை கொண்ட இயக்கத்தின் கீழ் மிளிரும் இந்தியாவுடன் இணைவதே பொருத்தமானது என நினைத்தார்.

அதை உறுதிபடுத்த மாநிலத்திற்கான தனி அரசமைப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்தார். அதில் மாநிலத்திற்கான தனி கொடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, மக்களால் தேர்வு செய்யப்படும் சத்ர் -இ-ரியாசத் (கவர்னர்) சுதந்திரமான நீதிதுறை, தனியான குடியுரிமை ஆகிய அம்சங்களை உள்ளடக்க வலியறுத்தினார்.

நேருவின் உண்மை முகம் வெளிப்பட்டது;

இம் முயற்சிகளை சட்ட வடிவமாக்க மிர்சா அப்சல் பெய்க் தலைமையில் பல வரைவு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பிரதமர் நேரு அடிக்கடி தலையிட்டு இக்குழு உறுப்பினர்களிடம் இந்திய அரசியல் சட்டத்திற்கு மாறுபாடாக எந்த சரத்தையும் காஷ்மீர் சட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று வற்புறுத்தினார. இத்தகைய குறுக்கீடு நேருவின் உண்மையான உள்ளக் கிடக்கையை- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்திய யூனியனுடன் தனித்தன்மை பாராட்டாமல் முற்றிலுமாக இணைவதை (total integration) விரும்புகிறார் என்பதை- வெளிக்காட்டியதாக கூறப்படுகிறது.

சேக் அப்துல்லாவோ தில்லியின் தலையீட்டை – குறிப்பாக இந்திய அரசியல் சட்டங்களை காஷ்மீருக்குள் நுழைப்பதை – விரும்பவில்லை. குறிப்பாக குடியுரிமை, அடிப்படை உரிமைகள் (fundamental rights) உச்ச நீதி மன்றத்தின் ஆளுமையை காஷ்மீருக்கு திணித்தல், மத்திய அரசுடனான நிதி ஒருங்கிணைப்பு போன்றவற்றில் மத்திய அரசின் ஆளுமையையோ, குறுக்கீட்டையோ சேக் அப்துல்லா விரும்பவில்லை, அவற்றை ஏற்கவுமில்லை. நேருவின் நடவடிக்கைகளால் மிகவும் வருத்தமடைந்தார், சேக் அப்துல்லா.

இந்த நிலைப்பாடு, நில சீர்திருத்த்தில் ஏற்பட்ட சங்கடங்களை விட பெரிதாக வெடித்ததால் நேருவிற்கும், சேக் அப்துல்லாவிற்கும் இடையில் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று.

இதை சரி செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் 1952-ல் தில்லியில் காஷ்மீர் மற்றும் தில்லி இடையே அதிகாரங்கள் குறித்த உடன்பாடு ஏற்பட்டது.

தில்லி உடன்பாடு;

 இதன்படிகாஷ்மீர் மக்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்கப்படும், காஷ்மீரல்லாத இந்தியக் குடிமகன்கள் காஷ்மீர் மாநிலத்தில் சொத்து வாங்க முடியாது.

டோக்ரா மன்னர் மாநிலத் தலைவராக நீடிப்பது விலக்கப்படும் இத்துடன், காஷ்மீர் மாநிலத்தில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு நடந்தாலோ, உள்நாட்டில் குழப்பம் விளைந்தாலோ ,வெளிப்புற அச்சுறுத்தல் நேர்ந்தாலோ , இந்திய குடியரசு தலைவர், அம்மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்ய உரிமை உண்டு என்பதும் தில்லி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.

ஜனசங்கத்தின் எதிர்ப்பு போராட்டங்கள்;

காஷ்மீருக்கான அரசியல் சட்டத்தை இயற்றுவதில் காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை மும்முரமாக ஈடுபட்டிருக்கையில், இந்தியாவில் இந்து மகா சபையினரும், ஜன சங்கத்தினரும் காஷ்மீருக்கான சிறப்பு தகுதியையும், மாநிலம் சுயாட்சியுடன் இருப்பதையும் எதிர்த்து குரல் எழுப்பினர். ஒரே சின்னம், ஒரே சட்டம், ஒரே தலைவர் என முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டங்களை ஆங்காங்கே நடத்தி மக்களிடையே சங்கப் பரிவாரங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டன. இந்து மகா சபா தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மே மாதம் சட்ட விரோதமாக காஷ்மீர் செல்ல முனைந்தார் . இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையிலடைக்கப்பட்ட முகர்ஜி ஜூன் மாதம் எதிர்பாராவிதமாக மரணமடைந்தார் .

காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சியோ, சிறப்பு தகுதியோ கொடுக்க கூடாது, காஷ்மீரில் வாழும் முஸ்லீம்கள் அவ்வாறு விரும்பினால் அவர்கள் பாக்கித்தான் செல்லலாம, ஆனால், இந்தியாவிற்கு காஷ்மீர் நிலப்பரப்பு முக்கியம். அது எங்களது பாதுகாப்பிற்கு ‘அவசியமான நிலப்பரப்பு’ , அதை நாங்கள் விட்டுத்தர முடியாது என்று ஜனசங்கம் பிரச்சாரம் மேற்கொண்டது.

இத்தகைய சந்தர்ப்பவாத பிரச்சாரத்தை முறியடிக்க காங்கிரஸ் கட்சியும், நேருவும் எந்த முயற்சியும் செய்யாமல் இத்தகைய தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டதற்கு சேக் அப்துல்லாவின்

நடவடிக்கைகளே- தனி அரசமைப்பு சட்டம் இயற்றுதல், மாநில உரிமைகளை தூக்கிபிடித்தல், மத்திய அரசின் தலையீட்டை எதிர்த்தல் போன்றவைகளே காரணம் என கருத தொடங்கினர்.

நேருவின் இத்தகைய அந்தர் பல்டியை சேக் அப்துல்லா ரசிக்கவில்லை, இணைப்பு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட சரத்துகளுக்கும், எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பதை விடுத்து, நேரு பின் வாங்குவதை சேக் அப்துல்லாவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. ( தொடரும்)

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time