பணம் தருவதை தடுக்கத்  திரானியுண்டா, தேர்தல் ஆணையத்திற்கு?

-கரூர் தேவிகண்பத் 

 ‘2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியெப்படி எல்லாம் பணப்பட்டுவாடா செய்யலாம்’ என அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே திட்டமிடத் தொடங்கிவிட்டனர். பிரபல கட்சிகள் வாக்காளர்களின் போன் நம்பரை சேகரித்துள்ளன! இனி தேர்தலின் வெற்றி தோல்விகளை பணப்பட்டுவாடா தீர்மானிக்க உள்ள நிலையில் என்ன செய்யப் போகிறது தே.ஆணையம்?

ஒரிரு சதவிகிதத்தில் இருந்து ஐந்தாறு சதவிகித வாக்குகளில் வெற்றி வித்தியாசம் உள்ள தொகுதிகளில் வெற்றியின் விளிம்பைத் தொட ஒரே வழி, பணப்பட்டுவாடாவை கச்சிதமாகச் செய்து வெற்றிக் கனியை கொய்வதே என அரசியல் கட்சி நிர்வாகிகளிடையே பேச்சு ஓடுகிறது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, தவறுகள் எங்கு தொடங்குகிறதோ.., அதை அந்த இடத்திலேயே  தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது அழித்திட வேண்டும். அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் செய்யும் தில்லுமுல்லுகளை  வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்தினால் மட்டுமே,  நல்ல ஆட்சியாளர்கள் நாட்டை ஆளும் நிலை உருவாகும்.

ஒரு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சியின் வேட்பாளர் அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் தான் செலவு செய்ய வேண்டும் என தேர்தல் விதி கூறுகிறது. தேர்தல் நேரத்தில் எத்தனை கார்கள் பயன்படுத்த வேண்டும், எத்தனை நோட்டீஸ் அச்சடிக்க வேண்டும், கொடி மற்றும் பேனர்கள் பயன்படுத்த வேண்டும் என மிக தெளிவாக சட்டம் கூறுகிறது.

இந்த சட்டத்தை எந்த அரசியல் கட்சியினர் பின்பற்றி நடக்கின்றனர்?  வேட்பாளர்களை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் மற்றும்  செலவினப் பார்வையாளர் என தொகுதிக்கு மூன்று அதிகாரிகள் நியமித்து தேர்தல் நடத்துகின்றனர்  என்ன பயன்?  அரசியல்வாதிகள் பின்பற்றாத இந்த விதிமுறைகள் எதற்கு? கண்காணித்து நடவடிக்கை எடுக்காத தைரியமற்ற அதிகாரிகளும், இந்த தேர்தல் ஆணையமும் தேவைதானா?

ஒவ்வொரு தேர்தலிலும் சாதாரணமானவர்களையும், வியாபாரிகளையும் துன்புறுத்தி பணத்தை பறிமுதல் செய்து தன் வீரதீர பிரதாபத்தை காட்டும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உண்மையிலேயே அரசியல்வாதிகள் பணப்பட்டுவாடா செய்யும் போதும், அதற்காக  கோடிக்கணக்கில் பணத்தை கொண்டு செல்வதை தெரிந்தும், தெரியாதது போல பாவனை காட்டி அனுமதிப்பது நடக்கின்றன. இது தொடர்பாக எத்தனையோ புகார்கள் தரப்பெற்றும் தொடர்புடைய வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவது ஏன்?

படு மும்முரமாக பணப்பட்டுவாடா நடக்கின்ற தேர்தலில் பணப் பட்டுவாடா செய்த வழக்கில் இதுவரை எத்தனை வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ?

மக்களையும் மனசாட்சியையும் ஏமாற்றும் இந்த தேர்தல் ஆணைய சட்டங்கள் தேவை தானா? தேர்தல்  அதிகாரிகள் செய்யும் தவறால், ஜனநாயகத்திற்கு தகுதியில்லாத ஊழல் அரசியல்வாதிகள் கையில் ஆட்சி அமைய  தேர்தல் ஆணையம் துணை நிற்கிறது என்பது வேதனையானது.

கார்டூன் நன்றி தி ஹிந்து நாளிதழ்

ஒரு வாக்காளர்களுக்கு ரூ 500 முதல் 5000 வரை விலை பேசி பண பட்டுவாடா செய்யப்படுகிறது. மேலும், வாக்காளர்களை கவரும் வகையில் கட்டில், மெத்தை பீரோ, கொலுசு சேலை, வேஷ்டி மூக்குத்தி, குவாட்டர், பிரியாணி என இலவச பரிசு பொருட்கள் வீடு வீடாக விநியோகம் வைக்கப்படுகிறது.

ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் மக்களை மட்டுமல்ல அதிகாரிகளையும் முட்டாளாக்கும் வகையில் கடைசி நேரத்தில் பணத்திற்கு பதிலாக 20 ரூபாய் டோக்கன் விநியோகம் செய்து மக்களின் வாக்குகளை பறித்தனர். மட்டமான அரசியல்வாதியின் செயல் நாடு முழுதும் தெரிந்தது. இதை தேர்தல் ஆணையமும் வேடிக்கை தான் பார்த்தது. டோக்கன் கொடுத்த அரசியல்வாதிகள் மீது அந்த கட்சி மீது என்ன நடவடிக்கை எடுத்தது இந்த தேர்தல் ஆணையம்.

ஈரோடு சட்டப் பேரவை  இடைத் தேர்தலில் ஜனநாயகத்தை கேலி கூத்து செய்யும் வகையில் வாக்காளர்களை ஆடு, மாடு போல காலையில் இருந்து மாலை வரை பட்டி போட்டு அடைத்து வைத்து குவாட்டர், பிரியாணி, சினிமா திரையிட்டு பணப்பட்டுவாடா என கோடி… கோடி கோடியாக பணத்தை வாரி இரைத்தனர். அந்த அரசியல்வாதிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது இந்த தேர்தல் ஆணையம் ?

பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என கூறி தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. ஆனால்,  இடைத்தேர்தலில் மீண்டும் அதே வேட்பாளர்கள் அதே தொகுதியில் போட்டியிட்டனர்.  பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்கள் அந்த தேர்தலில் போட்டியிடாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் மற்ற அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாகவும்  இருந்திருக்கும்.  அதை விடுத்து மீண்டும் அந்த வேட்பாளருக்கே போட்டியிட வாய்ப்பு கொடுத்தால், தேர்தல் ஆணையத்தால் என்ன செய்து விட முடியும்? என்ற தைரீயம் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்தைக் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை கொண்ட  தேர்தல் ஆணையம், அரசியல்வாதிகளின் கை பாவைகளாக மாறி, தனது கடமை மற்றும் பொறுப்பை மறந்து செயல்பட்டு வருவது வேதனையாக உள்ளது. பல் பிடுங்கிய பாம்பாக இருக்கும் இந்த தேர்தல் ஆணையம் தேவைதானா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டுள்ளது.

நேர்மையான மக்களுக்கான ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், தனது வானலாவிய அதிகாரத்தின் பவர் என்ன என தெரியாமல் அரசியல்வாதிகளிடம் மண்டியிடுவதால், பணம் படைத்தவர்கள் கையில் பேரம் பேசி ஆட்சி விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

மக்களாட்சி என கூறிக் கொள்ளும்  நமது நாட்டில் ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறிவிட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் துணை போவது ஏற்புடையது அல்ல…

ஆணையத்தின் அலட்சியமான செயல்பாட்டால் தவறானவர்கள் கைக்கு ஆட்சி அதிகாரம் செல்ல தேர்தல் ஆணையமும் துணை நிற்கிறது என்பது வேதனையான ஒன்று.

தேர்தல் ஆணையத்தின் சட்டங்களும், தண்டனையும் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும். விலை மதிப்பற்ற வாக்குகளை மக்களின் அறியாமை, அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி விலை பேசி பறிக்கும் அரசியல் வாதிகளின் ஜனநாயக விரோத செயலை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கலாமா?

1967 மற்றும் 1977 ஆம் ஆண்டு தேர்தலை போல் வருகிற  2026 தேர்தல் நடத்தி காட்டுவோம் என தேர்தல் ஆணையம் உறுதிமொழி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தொகுதிக்கு ரூ 250 கோடி செலவு செய்தால் போதும் வெற்றி பெற்று விடலாம் என்ற தைரியத்தில் உள்ள அரசியல் வாதிகளின் கனவுகளை உடைத்தெறிய வேண்டும்.

தேர்தல் காலத்தில் பதியப்படும் வழக்குகள் அடுத்து 5 ஆண்டுகள் நடக்காமல் அதிரடியாக ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கி அந்த அரசியல்வாதி  தொடர்ந்து  மூன்று சட்டப்பேரவை  தேர்ததில் 15 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்க வேண்டும். மேல் முறையீடு என்ற வார்த்தை இல்லாமல் செய்யப்பட வேண்டும். ஜனநாயகத்தை ஏமாற்ற நினைக்கும் அரசியல் வாதிகளின் அரசியல் வாழ்வு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்த போது தான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன? என மக்களுக்கு தெரிய வந்தது. அதன் பிறகு சுட்டிக்காட்டும்  அளவிற்கு யாரும் இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.

எனவே, தேர்தல் ஆணையத்தின் மீது உள்ள அவப் பெயரை போக்க நடவடிக்கை எடுப்பதோடு, சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கட்டுரை; கரூர் தேவிகண்பத் 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time