39 குழந்தைகள், பெண்களை கற்பழித்து கொன்றவர்கள் விடுதலை!

-சாவித்திரி கண்ணன்

அக்யூஸ்டுகள் காட்டில் அடை மழை!

விடுதலை, விடுதலை, விடுதலை!

சித்தம் கலங்க வைத்து, ரத்தம் உறைய வைக்கும் வண்ணம் பிஞ்சு குழந்தைகளையும், இளம் பெண்களையும் கற்பழித்து கொன்றவர்கள் விடுதலை. சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் நினைத்தால், எப்படிப்பட்ட அக்யூஸ்ட்களையும் தப்ப வைக்க முடியும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.

தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரபிரதேசத்தின் நொய்டா அருகே உள்ள 31வது செக்டார் குடிசை பகுதிகளில் இருந்து சின்னஞ்சிறு பெண் குழந்தைகள், இளம் பெண்கள் தொடர்ந்து காணாமல் போன வண்ணம் இருந்தனர். இந்த ஏழைகள் சென்று காவல்துறையில் புகார் கொடுத்தால் உங்க பெண் யாரோடவாவது ஓடிப் போஉஇருக்கும் என்ற ஒரே பதிலை கீறல் விழுந்த ரெக்கார்ட் போலக் கூறியுள்ளனர்..! ஆக, என்ன நடக்கிறது? என்பது மக்களுக்கு புரியவில்லை.

டிசம்பர் 2006 இல், நொய்டாவில் உள்ள ஒரு பங்களா அருகே உள்ள வடிகாலில் பல எலும்புக் கூடுகள், குழந்தைகளின் நைந்து போன ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டன. போது, இந்த விவாகரங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. மக்கள் கொந்தளிப்பைத் தொடர்ந்து பங்களாவை சுற்றிலும் தோண்டப்பட்ட போது 19  பெண் குழந்தைகள், 10 இளம் பெண்களின் எலும்புக் கூடுகள் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.


இவ்வளவு அதிக கொலைகள் நடந்துள்ளதில் கொலையாளிகள் உள்ளூர் போலீசுக்கும், மாநில அரசு நிர்வாக மட்டத்திலும் செல்வாக்கு இல்லாமல் சாத்தியமில்லை என மக்கள் குமுறினர்.

இதைத் தொடர்ந்து சிபிஐ களத்தில் இறங்கியது. சிபிஐ நீதிமன்றம் ஒரே ஆண்டில் விசாரித்து அந்த பங்களாவின் உரிமையாளர், மொனிந்தர் சிங் பந்தேர் மற்றும் வேலைக்காரன் சுரேந்தர் கோலி ஆகியோரே இந்த குழந்தைகளையும், இளம் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளதோடு, நரமாமிசம் உண்டதையும் அவர்களே ஒத்துக் கொண்டனர். இவர்களுக்கு பிரைன் மேப்பிங் மற்றும் நார்கோட்டிங் உள்ளிட்ட நவீன விசாரணை உத்திகளை பயன்படுத்திதில் இவை அம்பலப்பட்டன. இதையடுத்து பிப்ரவரி 2009 ல் இவர்களுக்கு சி.பி.ஐ விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

நமது நாட்டில் செல்வாக்குள்ளவர்களை அவ்வளவு லேசில் தண்டிக்க முடியுமா என்ன? செப்டம்பர் 2009 லேயே  அலகாபாத் நீதிமன்றம் பணக்காரான மோனீந்தர் சிங் பாந்தேரை மரண தண்டனையில் இருந்து விடுவித்து வேலைக்காரனுக்கு மட்டும் மரண தண்டனை என்றது. அப்போது முதலே இந்த  ஆயுள் தண்டனை கைதியான செல்வந்தர் மோனீந்தர் சிங் பந்தேர் ஜாமீனில் வெளி வந்து விட்டார்.

பெரிய செல்வந்தர் மொனீந்தர் சின் பந்தேர் (2007ல்)

இதில் கொடுமை என்னவென்றால், இந்த மோனீந்தர் சிங் பாந்தேரின் லேப்டாப்பில் தான் பல பெண் குழந்தைகளை நிர்வணப்படுத்தி அவர்களோடு இவனும் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவன் வீட்டின் மிகப் பெரிய பிரிஜ்ஜில் குழந்தைகளின் சதைப் பகுதியை வெட்டி பாலீதீன் பைகளில் வைத்திருந்ததெல்லாம் அம்பலமானது.

இதற்கிடையில் மத்தியிலும், மாநிலமான உ.பியிலும் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. இவர்கள் கருணை மனுவுக்கு விண்ணப்பித்தனர்.

அதே சமயம் கருணை மனு மீது முடிவெடுத்தால் நாளும், பொழுதும் நீதி கேட்டு போராடும் குழந்தைகளை இழந்த குடும்பத்தார் மற்றும் மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என எட்டு வருடம் கிடப்பில் போட்டனர்.

இதையே சாக்கா வைத்து, குற்றவாளிகளின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதத்தின் காரணமாக, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜனவரி 2015 இல் தீர்ப்பளித்தது.

இதை ரத்து செய்து வேண்டும் என குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பிலும், மாநில அரசு தரப்பிலும் அதே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ’’அடடா என்ன சின்சியராக முயற்சி செய்துள்ளார்களே ’’ என்று தானே தோன்றுகிறது. ஆம், அந்த தோற்றத்தை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம்.

ஆனால், சி.பி.ஐ தரப்பிலும், அரசு வழக்கறிஞர் தரப்பிலும் எவ்வளவு சொதப்ப முடியுமோ சொதப்பினர். குற்றத்திற்கான போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைக்கவில்லை. ஆனால், குற்றவாளிகள் தரப்பில் பெரிய, பெரிய வழக்கறிஞர்களை வைத்து  நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டது. இதையடுத்து நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ’குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை. முக்கியமாக இந்த வழக்கின் விசாரணை மோசமாக நடத்தப்பட்டதாகவும், ஆதாரங்களை சேகரிப்பதற்கான அடிப்படை விதிமுறைகள் வெட்கமின்றி மீறப்பட்டதாகவும்’ உத்திரபிரதேசத்தின் அலகாபாத்  உயர்நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது இப்படியாக இந்தக் கொடூர குற்றவாளிகளை 2023-ல் விடுவித்தது.

தற்போதும் மக்கள் எதிர்ப்பு மற்றும் சென்சிட்டிவ் காரணமாக ஒரு பார்மாலிடிக்காக உச்ச நீதிமன்றத்தில் சி.பிஐ மேல்முறையீடு செய்தது. அங்கும் இதே சொதப்பல் தான்.

சாட்சியச் சட்டத்தின் பிரிவு 27-ஐப் பொறுத்தவரை, புலனாய்வு அமைப்பின் விசாரணையில் கடுமையான ஓட்டைகள் இருப்பதாக கண்டனத்தை பதிவு செய்து உச்ச நீதிமன்றம் இந்த அதிமோசமான குற்றவாளிகளை  விடுவித்துவிட்டது.

அரசு மற்றும் சி.பி.ஐயின் அணுகுமுறையை பொறுத்த அளவில் இவர்களை விடுவிப்பதைத் தவிர, நீதிமன்றத்திற்கு வேறு வழியே இல்லை…என்ற சூழலை  அருமையாக கட்டமைத்தனர் என்பது தான் இந்த வழக்கில் உள்ள சூட்சுமம் ஆகும். குற்றவாளிகளே இல்லாமல், 39 குழந்தைகளும், பெண்களின் எலும்புக் கூடுகள், உடல் சதை பாகங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டதற்கு விடை கிடைக்கவில்லை.

செல்வாக்கானவர்களுக்கு அரசு நிர்வாக இயந்திரங்களும், விசாரணை அமைப்புகளும் எப்படி நுட்பமாக சேவை செய்கின்றன என்பதை பார்க்கும் போது, நொய்டாவின் நிதாரி குற்றவாளிகளை விட பன் மடங்கு செல்வாக்கான கர்நாடகா மாநில தர்மசாலாவின் பார்ப்பனக் குடும்பத்தின் கொலைக் குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா? என்ற அச்சம் எழாமல் இல்லை.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time