அவல நிலையில், ஆபத்தான சூழலில் அரசுத் துறைகள்!

-சாவித்திரி கண்ணன்

கொள்கை பிரகடனங்கள், மேடைப் பேச்சுகள், ஊடக விளம்பரங்களால் திமுக அரசை மதிப்பிட முடியாது. அதன் செயல் திட்டங்கள் வழியாகவே மதிப்பிட வேண்டும். அந்த வகையில் திமுக அரசை துறைவாரியாகப் பார்த்தால், அரசுத் துறைகளில் ஒப்பந்தக் கூலி முறை, தனியார் மயம், பணிப் பாதுகாப்பின்மை குறித்த அச்சம்.. எப்படியெல்லாம் நிலவுகிறது என ஒரு அலசல்;

”திமுக ஆட்சிக்கு வந்தால் சமூக நீதியை நிலை நாட்டும்” என்று ஸ்டாலின் வாக்குறுதிகள் பலவற்றைத் தந்தார்! குறிப்பாக தற்போது அரசுத் துறைகள் பலவற்றில் குறிப்பாக பள்ளிக் கல்விதுறை, மருத்துவத் துறை, சுகாதரத் துறை, பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை.. போன்ற அனைத்திலும் ஒப்பந்தக் கூலிகளாக பல்லாண்டுகளாக வேலை  செய்வோர் அங்கீகரிக்கப்படுவார்கள். அத்துக் கூலி முறை ஒழிக்கப்பட்டு கண்ணியமான ஊதியம் வழங்க்கப்படும்” என்றார், திரு.ஸ்டாலின்.

சமூக நீதி என்றால் என்ன? உழைக்கின்ற ஊழியர்களுக்கு உழைப்புக்கான அங்கீகாரத்தை தருவது தான் சமூக நீதி. அதை தர மறுத்து என்றென்றும் அத்துக் கூலியாக அடிமையாக வைத்திருக்க சட்டங்கள் போட்டு, திட்டங்களை செயல்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

அரசு துறைகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஒரு அரசாணை  ( அரசாணை எண்115) பிறப்பித்தது திராவிட மாடல் ஆட்சி தான்!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்து ஒப்பந்தக் கூலி முறை தொடர்வதற்கு என்றே அரசாணை (அரசாணை எண்-152 மற்றும் 139) கொண்டு வந்ததும் ஐயா ஸ்டாலின் ஆட்சி தான்.

ஓரு வாரத்திற்கும் மேலாக சென்னை மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் சென்னையில் குப்பை அகற்றும் பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்கிறார்கள். ‘தனியார் மயமானால் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் குறைந்த பட்சக் கூலியையும் குறைத்து விடுவார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலை பாதுகாப்பு பறிபோய் விடும்’ என தவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போக்குவரத்துதுறையிலும் இது தான் நிலை.  பேருந்து ஓட்டுநர்கள் குறைந்த ஊதியத்திற்கு தினக் கூலியாக பல்லாண்டு பணியாற்றி வரும் நிலை உள்ளது.  தினசரி பேருந்து சேவை மக்களுக்கு அவசியம் தானே. ஏன் அவர்களை நிரந்தரப்படுத்தி கண்ணியமான ஊதியம் தர முடியவில்லை?ஒயுவு பெற்ற ஊழியர்கள்  தாங்கள் சேமிப்பு பணத்தை பெறுவதே சவாலாக உள்ளது. தற்போது போக்குவரத்து துறையையும் தனியார்மயமாக்கி வருகிறது திராவிட மாடல் அரசு.

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் போராட்டம். போட்டோ நன்றி; தினகரன் நாளிதழ்

பள்ளிக் கல்வித் துறையில் பல்லாண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களை வெறும் ரூ 12,500  தொகுப்பூதிய சம்பளத்திற்கும், உயர் கல்வித் துறையில் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 25,000 ரூபாய் தருவதும், அரசு ஐடிஐகளில் பயிற்றுனர்களை ரூ 28,000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வதும் கல்வித் துறையை கடைத்தேற்ற உதவாது. பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்து, நிரந்தரப்படுத்தி, பணி பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே கல்வித் துறை பாதுகாக்கப்படும்.

பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்கள் போராட்டம்

மருத்துவத்துறையில் மருத்துவர்களையே  தினக் கூலிகளாக்கி ரூ 2,000  ஊதியம் தரப்படுகிறது. செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக டெக்னிஷியன்கள், பன்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் அனைத்து தரைப்பையுமே அத்துக் கூலி முறையில், முறையே மாத ஊதியமாக 18,000, 15,000, 13,000, 8,500 ஆகிய ஊதியத்தில் ஆண்டுக் கணக்கில் சுரண்டிக் கொழுப்பது முறையா? இதற்காகவே நிரந்தரப் பணியிடங்களை சரண்டர் செய்து, ஒப்பந்தக் கூலி முறைக்காக அரசாணை (அரசாணை எண் 300) பிறப்பித்த ஆட்சி சமூக நீதி ஆட்சியா? ஸ்டாலின் அவர்களே?

மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்

இப்படியான ஒரு அரசால் எப்படி தரமான மருத்துவத்தை மக்களுக்கு தர முடியும்?

தேர்தல் வாக்குறுதிப்படி, சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், NHM ஊழியர்கள், ஆதிதிராவிட நலத்துறை துப்புரவு பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் புற ஆதார ஊழியர்கள் ஆகியோர் நிரந்தம் செய்யப்பட்டார்களா?  அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு  உத்திரவாதப்பட்டதா?

இத்தகைய அடி நிலைப் பணியாளர்களின் அயராத உழைப்பை சுரண்டிக் கொழுக்கும் காண்டிராக்டர்கள் காட்டில் தான் மழை பொழிகிறது. பணம் கொட்டுகிறது.

இவை போதாதென்று அமைச்சுப் பணியாளர்களையும் தொகுப்பூதிய முறைகளில் நியமனம் செய்யவிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இப்படி அரசுத் துறை அனைத்திலுமே தொகுப்பூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் என அத்துக் கூலி முறைகளை தொடர்ந்து அமுல்படுத்துவதும், படிப்படியாக தனியார்மயமாக்குவதும் ஒரு போதும் சமூக நீதியாக முடியாது.

நில அளவைத் துறையில் உரிமம் பெற்ற சர்வேயர்களை நிரந்தரமாக தற்காலிக பணியாளர்களாகவே வைக்க ஆண்டுக்காண்டு அரசாணைகள் (அரசாணை எண்கள்; 297, 707,420) கொண்டு வரும் அரசும் இது தான்!

இதனால் தான் அரசுத் துறைகளில்  சுமார் 6 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் மக்கள் பணி பாதிக்கப்பட்டு பல துறைகள் ஸ்தம்பித்துள்ளன.

”எல்லாவற்றிலும் தமிழ்நாடு தான் முதன்மையாக உள்ளது. முன்னேறிய மாநிலமாக உள்ளது” என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர், டெல்லி போன்ற மாநிலங்கள்  தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, நம்மைக் காட்டிலும் முற்போக்காக உள்ளதைக் கண்டும் உங்களுக்கு குற்றவுணர்வு வரவில்லையா?

இன்றைக்கு ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாவதற்கும், கண்ணியமாக வாழ்வதற்கும் குறைந்தபட்சம் ரூ 35,000 தேவைப்படுகிறது. இதை அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உத்திரவாதப்படுத்தாமல் வெறுமே, ‘சமூக நீதி’ என்று பேசிக் கொண்டிருப்பதெல்லாம் அநீதியல்லவா?

அதே போல பழைய ஓய்வூதிய திட்டத்தை இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்த முடியும் போது, தமிழக அரசால் ஏன் முடியவில்லை. திமுக அரசு ஓட்டுகளை அறுவடைக்கான பல சலுகைகளையும், மானியங்களையும் தந்து, அரசாங்க நிதியை துஷ் பிரயோகம் செய்து, சொந்த செல்வாக்கை வளர்க்கத் துடிக்கிறதே அன்றி, மக்கள் நலன் குறித்து சிந்திப்பதில்லை.

வேலை வாய்ப்புகள் குறையும் சமூகம், உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை மறுக்கும் சமூகம், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் பணி செய்வதை மறுக்கும் சமூகம் பிற்போக்கு சமூகமாகிவிடும்.

மேற்படி செயல்பாடுகள் அனைத்துமே மத்திய பாஜக ஆட்சியாளர்களின் கொள்கைகளாகும். அரசுத் துறைகளில் ஒப்பந்தக் கூலி முறை, அவுட் சோர்சிங், தனியார் மயம், பணிப் பாதுகாப்பின்மையோடு உழைக்கும் ஊழியர்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருப்பது.. ஆகியவை அனைத்துமே அக்மார்க் சங்கிகளின் மூளையில் உதித்த திட்டங்களே.  அவர்களின் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு திமுக அரசு எதற்கு?

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time