தமிழ்நாட்டில் இணை அரசாங்கம் நடத்தும் அதிகாரிகள்!

-சாவித்திரி கண்ணன்

முதலமைச்சர் ஒன்றை விரும்பி அறிவிக்கிறார். ஆனால், அதற்கு நேர் விரோதமாக அதிகாரிகள் ஒரு முடிவு எடுக்கிறார்கள்! இதனால் முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களே பாதிக்கப் படுகிறார்கள். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஆனாலும் முதல்வர் ஸ்டாலினால் எதையும் தடுக்க முடிவதில்லை. அதிகாரிகளின் ராஜ்ஜியம் குறித்த ஒரு அலசல்;

வைரமுத்துவும், மு.ராஜேந்திரனும் கலைஞருக்கு நெருக்கமானவர்கள்! தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கும் நெருக்கமானவர்களே. அடிக்கடி இவர்கள் முதல்வரை பார்த்து பேசும் வாய்ப்பை பெற்றவர்கள்.

அப்படி இருக்க, முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வைரமுத்துவிற்கு வீடு தரப்படுவதாக ஆணை வெளியிடப்பட்ட பிறகு, ”ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு இந்த வீடு தரப்படமாட்டாது” என புது ஆணை வெளியிட்டு, வீடு தராமல் நிறுத்தி வைக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இது மிகப் பெரிய நிர்வாகத் தவறு மட்டும் அல்ல, தமிழக அரசுக்கே அவமானமாகும்.

‘ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு வீடு தர வேண்டிய அவசியமில்லை’ என்றால், அதை விருதுக்கு முன்பே தீர்மானித்திருக்க வேண்டும். ஒன்றை தந்து விட்ட பிறகு, அது ஊடகங்களில் வெளியாகி அனைத்து மக்களின் கவனத்தையும் பெற்றுவிட்ட பிறகு, இதற்காக பலதரப்பினர் வாழ்த்துக்களையும் தமிழறிஞர்கள் பெற்ற பிறகு, அதை அதிரடியாகத் திருப்பி வாங்குவது என்பது சம்பந்தப்பட்ட படைப்பாளிகள் வைரமுத்து, மு.மேத்தா, திலகவதி, ராஜேந்திரன், மறைமலை இலக்குவனார் போன்றோருக்கு மன உளைச்சலை உருவாக்கும் என்பது மட்டுமல்ல, அரசின் நம்பகத் தன்மையையே கேள்விக்குள்ளாகும்.

இனி விருது தரப்போவோருவோருக்கு இந்த புதிய நிபந்தனையை செயல்படுத்தலாமே தவிர, தந்துவிட்ட பிறகு அதை அவர்களிடம் இருந்து பறிப்பது நாகரீகமல்ல.

இது எப்படி நடந்தது? வைரமுத்து விவகாரத்தில் தினமலர் இதழ் தான் தொடர்ந்து கேள்வி எழுப்பி வைரமுத்து போன்ற வசதியான எழுத்தாளருக்கு ஏன் வீடு தர வேண்டும்.. எனப் பிரச்சினையை துவக்கி வைத்தது. அவருக்கு எதிரான ஒரு ‘லாபி’ திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு வீடு கிடையாது என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

வைரமுத்துவிற்கு வீடு மறுக்கப்பட்ட பிறகு, நிச்சயமாக அவர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அது குறித்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தி, நிவாரணம் தேட முயலாமல் நீதிமன்றம் சென்று இருக்கமாட்டார். ..என்பதால், அவர் வட்டாரத்தில் விசாரித்த போது கவிஞர் வைரமுத்து முதல்வரிடம் பல முறை இதை கவனப்படுத்தியது உறுதியானது.

விவகாரம் வைரமுத்துவிற்கு வீடு தர வேண்டியது அவசியமா? இல்லையா? என்பதல்ல. அவருக்கு வீடு தருவதில் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். வைரமுத்து போன்ற கோடீஸ்வர படைப்பாளிகள் இந்த வீடு கிடைக்காவிட்டால் பரவாயில்லை என பெருந் தன்மையாக விட்டுக் கொடுத்து போயிருக்கலாம்  என்ற கருத்தில் கூட உடன்படுகிறேன். ஆனால், இங்கே சொல்ல வந்தது சில தனி நபர்களுக்கான வக்காலத்து அல்ல.

இது நம்மை ஆளும் ஆட்சியின் தலைமைக்குரியவரான முதலமைச்சரின் ஆளுமை சம்பந்ததப்பட்டது. ஒன்றை முதலமைச்சரே அறிவித்துவிட்ட பிறகு, அதை அதிகாரிகள் மாற்றி அமைக்கும் நிலையையே சுட்டிக் காண்பித்துள்ளேன். இந்த ஆணைக்கு காரணமானவர் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.

தற்போதைய அறிவிப்பு என்பது முற்றிலும் கட்டணம் வாங்காமல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களுக்கும், செம்மொழி விருதாளர்களுக்கும் தரப்படும் வீடாகும். இதிலென்ன குறிப்பாக வீட்டு வசதி வாரியத்தில் வீடு பெற்ற படைப்பாளிகளுக்கு மாத்திரம் வீடு தரப்படமாட்டாது என்பது. வீட்டுவசதி வாரியத்தில் உரிய முழுப்பணத்தையும் செலுத்தி தானே அவர்கள் வீடு பெற்றுள்ளனர். அதேசமயம் ஏற்கனவே சொந்தமான பங்களாக்கள் உள்ள கவிஞர் சிற்பி, பொற்கோ, தமிழன்பன், இ.சுந்தரமூர்த்தி, இமையம் போன்றவர்களுக்கு வீடு தந்துள்ளனர். ஆக, இதில் இரட்டை நிலைபாடு எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு முடிவுக்கான நியாயம் என்ன? என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

இதில் என்னக் கொடுமை என்றால், தமிழறிஞர் மறைமலை இலக்குவனாரும், எழுத்தாளர் திலகவதியும் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட்- 1, 2025 ஆம் தேதி நீதிமன்றம் இவர்களுக்கு ஆதரவாக வீடுதரச் சொல்லி தீர்ப்பு தந்த உடனேயே அரசு தரப்பில் அதற்கு ஸ்டே வாங்கப்பட்டுவிட்டது. இந்த அளவுக்கு அதிகாரிகள் படைப்பாளிகளுக்கு எதிராக மூர்க்கமாக செயல்படும் போது முதலமைச்சர் செயலற்று இருப்பது தான் கவலையளிக்கிறது.

ஆக, ‘முதல்வராலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்ற நிலையில் தான், நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார் கவிஞர்.

விவகாரத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்ட நீதிபதியவர்கள், ’’இவையெல்லாம் ஐஏஎஸ் அதிகாரிகள் செயல். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துர்அதிர்ஷ்டவசமானது. தமிழ் அறிஞர்களுக்கு வீடு ஒதுக்குவது உணர்வுபூர்வமானது. இதெல்லாம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் இதை ஒரு போதும் அனுமதித்து இருக்கமாட்டார்’’ என்றார்.

உண்மை தான்! அதிகாரிகள் இஷ்டப்படி ஆட கலைஞர் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார். அவர்கள் வலியுறுத்தினாலுமே கூட, தவறான முடிவை எடுக்க அனுமதிக்கமாட்டார்.

ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக தற்போது நீதிபதியவர்கள் கூறியது போல, அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்தி வருவது, சாம்சங் விவகாரத்திலும் உறுதியானது. சாம்சங் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை பதிவு செய்ய மறுத்த விவகாரத்தில் கூட நீதிமன்றம் சென்றே நிவாரணம் பெற முடிந்தது.

கணிசமான தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு தொழிற்சங்கத்தை நிறுவினால், அவர்கள் விண்ணப்பித்த 90 நாட்களில் அதை பதிவு செய்து தர வேண்டும் என்பது பதிவுத் துறை, தொழிலாளர் நலத் துறை சட்டத்திலேயே உள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. கூட்டணியின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் முதல்வரை சந்தித்து இதை தெளிவுபடுத்தியும், தீர்வு கிடைக்காமல் தான் நீதிமன்றம் சென்று சாதகமான தீர்ப்பு வாங்கினர். இது தொழிலாளர்கள் மத்தியில் அரசுக்கு கெட்ட பெயரை பெற்றுத் தந்தது.

அடுத்ததாக தற்போது தமிழக கல்விக் கொள்கை 2025 வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அது அதற்காக உருவாக்கப்பட்ட 14 கல்வியாளர்கள் உருவாக்கி தந்த 520 பக்க கல்வி கொள்கை வரைவு அல்ல. 83 பக்கத்திற்கு ஒரு அதிகாரி தன்னிச்சையாக ஒரு சில நபர்களைக் கொண்டு எழுதியதே தற்போது கல்விக் கொள்கையாக முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் கல்வியாளர்கள் பெயரும் அதில் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் மன வருத்தை அந்த கல்வியாளர்களும் வெளிப்படுத்தி உள்ளனர்.

முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி தேசிய கல்விக்கு மாற்றான மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கபடும் என்பது. அதன்படி குழு அமைக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேலாக பல விவாதங்கள் நடத்தி உருவாக்கப்பட்டு வந்த போதே நான் சொல்வதை தான் எழுத வேண்டும் என அந்த அதிகாரி தந்த நெருக்கடியால் தான் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் ஜவகர் நேசன் வெளியேறினார். அதற்கு பிறகும் கல்வியாளர்கள் கொடுத்த அனைத்து பரிந்துரைகளும் புறம் தள்ளப்பட்டு, தமிழ்நாட்டு கல்விக் கொள்கை 2025 என  ஒரு சிறு நூல் வெளியிடப்பட்டுள்ளதை ஊடகங்கள் மூலம் தான் சம்பந்தப்பட்ட கல்வியாளர்களே அறிந்து கொண்டனராம்.

நான் ஏற்கனவே பலமுறை தமிழகத்தில் அதிகாரிகள் ராஜ்ஜியம் தான் கொடிகட்டிப் பறக்கிறது என்பதை அறம் இணைய இதழில் பல கட்டுரைகளில் கவனப்படுத்தி உள்ளேன். தற்போது அது நீதிபதி வாயால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எல்லாமே அதிகாரிகள் நினைத்தபடி தான் நடக்கும் என்றால், பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? முதல்வர் எதற்கு?

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time