22 வது சர்வதேச குறும்பட  மற்றும் ஆவணப்பட விழா- டிசம்பர் 6-10

-  பீட்டர் துரைராஜ்

22 வது சர்வதேச குறும்பட  மற்றும் ஆவணப்பட விழா  ( 22nd Madurai International Documentary and Short film Festival 2020 )  நாளை முதல் (6 டிச  முதல்  10 டிசம்பர் வரை )  நடைபெற உள்ளது . இந்த விழாவில் பல படங்கள்  திரையிடப்படுகின்றன. இதற்கு ஆர்.பி.அமுதன் இயக்குநராக இருந்து செயல்பட்டுவருகிறார். இது ஒரு முன்னோடி திரைப்பட விழா .

1998 ஆம் ஆண்டு முதல் மதுரையில்   இந்த விழா நடந்து வருகிறது. கொரோனாவை முன்னிட்டு முதல் முறையாக இணையதளத்தில் நடைபெறுகிறது maduraifilmfest.blog.com என்ற இணையதளத்தில் ஆறாம் தேதி அதிகாலை முதல் படங்களைக் காணலாம். படங்களின் சுருக்கம், இயக்குநர்களின் விபரங்களை, வலைத்தளத்தில் காணலாம். ஒரு நாளைக்கு 26 படங்களைக் பார்க்கலாம். தினமும் ஜூம் செயலி வழியாக விவாதங்கள் நடைபெறும். மதுரை கலைடாஸ்கோப் அரங்கிலும் நேரடியான திரையிடல் நடைபெறுகிறது.

ஆர்.பி.அமுதன்  இப்போது சென்னையில் வசிக்கிறார். ஆவணப்படங்களை இயக்குவது, திரையிடுவது என்பதை ஒரு கடமையாகச் செய்து வருகிறார். இவர் இயக்கிய  ‘பீ’ (Shit) என்ற ஆவணப்படம், மதுரை மாநகராட்சியில் கழிப்பறையை சுத்தம் செய்யும் ஒரு துப்புரவுப் பெண்மணியைப் பற்றியது. இதுதான் இவர் இயக்கிய முதல் படம். இவருக்கு  ஆனந்த் பட்வர்தன், கே.பி.சசி, சலம் பென்னுர்கர் , தீபா தன்ராஜ் போன்ற ஆவணப்பட இயக்குநர்கள் ஆதர்சமானவர்கள். டாலர் சிட்டி, செருப்பு, என் சாதி உள்ளிட்ட 21  ஆவணப்படங்களை  இயக்கியுள்ளார். தன்  நண்பர்களோடு சேர்ந்து நடத்தத்  தொடங்கிய  திரைப்பட விழா இப்போது 22 ஆம் ஆண்டில் நுழைகிறது. அரசு ஆதரவு இன்றி,  பல்கலைக்கழகம் போன்ற  நிறுவனங்கள் ஆதரவின்றி தனி நபர்கள் நன்கொடை மூலமாகவே நடைபெறுகிறது என்பது ஒரு சாதனை. ஆர்.பி.அமுதன் பெரியார் விருது பெற்றவர்.

இந்த விழாவில் குறும்படங்களும், ஆவணப்படங்களும் திரையிடப்படுகின்றன. படங்களை maduraifilmfest.blog.com என்ற வலைத்தளத்தில் உள்ள சுட்டி மூலம் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும்  அந்தப் படங்களை இயக்கிய படைப்பாளர்கள், பல்வேறு ஆளுமைகள்  ஜூம் செயலி வழியாக பார்வையாளர்களோடு  உரையாடுவார்கள்.

இதில் 30 நிமிடம் வரை ஓடக்கூடிய குறும்படங்களும், 5 இசைக் காணொளிகளும்,10 அனிமேஷன் படங்களும், ஆவணப்படங்களும் திரையிடப்படுகின்றன. திருப்பூர் சுப்ரபாரதி மணியன் உள்ளிட்ட தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்படும். இந்த துறையில் வித்தகர்களாக இருந்த மூத்த கலைஞர்களின் படங்கள் திரையிடப்படும்; பேசப்படும். இதனை Retrospective என்று சொல்லுகிறார்கள். இதில்   நாற்பது ஆண்டுகளாக பல்வேறு படங்களை எடுத்த கேரளாவைச் சார்ந்த  சுமோ ஜாசன் (Sumo Josson),  கல்கத்தாவைச் சார்ந்த சஞ்சீவ் ஷா (Sanjiv Shah) ஆகியோரின் படங்கள் திரையிடப்படுகின்ன்றன.  பெங்களூரைச் சார்ந்த இயக்குநர் சந்தியா குமார் ஆகியோரின் படங்களும் பேசப்படும்.

” கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தொடர்பான விவாதம் உச்சத்தில் இருந்தபோது அமுதனுடைய  ஆவணப்படத்தை மதுரைக் கல்லூரியில்  பார்த்திருக்கிறேன். அவரோடு நேரடியான அறிமுகம் இல்லை.பேட்டி எடுத்ததை  தொகுப்பதே  ஆவணப்படம் என்று சொல்லுபவர்கள் மத்தியில், இவர் விவேகமாக  படம் எடுப்பவர்” என்றார் புகழ்பெற்ற  ஓவியரான ரவி பேலட் (Ravi Palette).

“மதுரையில் திரைப்பட விழா நடக்கும்போது நான் அங்கு இல்லாமல் இருப்பது இதுதான் முதல் முறை. படைப்பாளிகளும், செயற்பாட்டாளர்களும், பார்வையாளர்களும் ஒருவரோடு சந்திக்க, பேச  நடப்பவைதான் திரைப்பட விழாக்கள். ஜூமில் விவாதம் நடப்பதால் உலகம் முழுவதிலும் உள்ள கலைஞர்கள் இந்த ஆண்டு பங்குபெற வாய்ப்புள்ளது. இது ஒரு அறிவார்ந்த செயல்பாடு (Intellectual Exercise).இருபது நாடுகளில் இருந்து 120 படங்கள் திரையிடப்பட உள்ளன.படங்களை திரையிடுவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பாகவே படங்களைப்  பெறுவோம். கடந்த ஆண்டு திரைப்பட இயக்குநர்  அருண்மொழி, உலக சினிமா பாஸ்கரனோடு  இணைந்து படங்களை தேர்ந்தெடுத்தார்கள். இந்த ஆண்டு அருண்மொழி உயிரோடு இல்லை. கல்லூரி மாணவர்களின் 10 படங்கள் திரையிடப்பட உள்ளன. சாதி,மத  மறுப்புப் சான்று வாங்க பத்து ஆண்டுகள் போராடிய சிநேகா பார்த்திபராஜா கதையை சித்தரிக்கும் ‘I am Secularist’,  எளிய மக்களின் சேமிப்பை சரண்டும் ‘வங்கி’ போன்ற  ஆவணப்படங்கள் திரையிடப்படும். சுஜாதா சிறுகதையை மையப்படுத்தி எடுத்த ‘காரணம்’ குறும்படத்தையும் காணலாம்.”  என்றார் அமுதன்.

இடதுசாரி, திராவிடம், தலித்தியம் என எல்லா சித்தாந்தம் உள்ளவர்களோடும் இணைந்து படங்களை திரையிட்டு வருகிறார்; சுற்றுச்சூழல், ஓரின சேர்க்கை, மரண தண்டனை எதிர்ப்பு, மூன்றாம் பாலினம் என பல்துறை  செயற்பாட்டாளர்களோடு  நல்லுறவைப் பேணி வருபவர்,  அமுதன் ராமலிங்கம் புஷ்பம். திரைப்பட விழா வெற்றிபெற என் பங்காக ஆயிரம் ரூபாய் நன்கொடை தந்தேன்.”எந்தப் படங்களை பார்க்கப் பொகிறீர்கள் ? ”  என்று கேட்டார்.யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time