சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையமே மோசடிகளை முன்னின்று நடத்துவது என்பது வரலாறு அறியாத அதிர்ச்சியாகும். ஆக, இனி ஜனநாயக ரீதியான தேர்தலே கேள்விக் குறியான நிலையில், ‘பாராளுமன்றத்தில் பேசிப் பயனில்லை தெருவில் இறங்கி மக்களிடம் செல்வதே தீர்வு’ என எதிர்கட்சி எம்.பிக்கள் களம் கண்டனர்;
தேர்தல் ஆணைய மோசடிகளுக்கு எதிராக இன்று 25 கட்சிகளை சேர்ந்த 300 எம்.பி.க்கள் பங்கேற்ற எழுச்சிமிக்க பேரணி காலை 11.30 மணியளவில் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கியது. இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணி தேர்தல் கமிஷனை சென்றடைவதாக இருந்தது. ஆனால், வழியிலேயே எம்.பிக்கள் இரும்பு தடுப்புகள் கொண்டு காவல்துறையால் தடுக்கப்பட்டனர்.
நேற்று ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதளத்தில், ”வாக்கு திருட்டு என்பது ’ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்ற அடிப்படை நோக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். தெளிவான வாக்காளர் பட்டியல் என்பது தான், நேர்மையான சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யும். தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை எல்லாம் தெளிவானது. அது,தேர்தல் ஆணையம் வெளிப்படையாகச் செயல்பட வேண்டும் என்பதே.
மின்னணு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் அதை ஆய்வு செய்ய முடியும். எங்களுடைய இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சாரம் தொடங்குகிறோம். அதற்காக ‘http://votechori.in/ecdemand’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைக்கிறோம். இணையதளத்தில்பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறி, பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும்.
இத்துடன் 96500 03420 என்ற செல்போன் எண்ணையும் வெளியிடுகிறோம். செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்சாரத்தில் இணையலாம்..” என்று கூறியிருந்தார்.

நம்பகத்தன்மையற்ற வகையில் தேர்தல்கள் நடைபெறுவதாகக் சமீபகாலமாக வலுவான புகார்கள் அனைத்து தரப்பு மக்களாலும், எதிர்கட்சிகளாலும் சொல்லப்பட்டு வருகின்றன.
தேர்தல் தேதிகளை அறிவிக்கும் முறைமைகள், பல கட்ட வாக்குப் பதிவுகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்படும் தன்மை, வாக்கு எண்ணும் முறைமைகள், தேர்தல் ஆணையர்களின் நம்பகமற்ற செயல்பாடுகள், அரசியல் கட்சிகளின் அங்கீகார மறுப்பு, கட்சி பிளவுகளில் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் செயல்படும் முறை, ஓட்டுப் பதிவின் மொத்த எண்ணிக்கையை கூறுவதில் தடுமாற்றம், கடைசி ஒரு மணி நேரத்தில் விழுந்ததாக சொல்லப்படும் நம்ப முடியாத அதிக ஓட்டுகள்.. என தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி உள்ளன.
பீகாரில் 65 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு ஒரு பொது நல வழக்கை தொடுத்தது. அந்த வழக்கின் போது நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏன் பொது வெளியில் வைக்க கூடாது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
‘இவை எல்லாம் பொதுவெளியில் சொல்ல வேண்டியவையல்ல, அவசியமுமில்லை’ என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்ததானது நாட்டில் பேரதிர்ச்சியை உருவாக்கியது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் படு பயங்கர மோசடிகள் குறித்து மிக காத்திரமான ஆதாரங்களுடன் ராகுல் காந்தி மக்களிடையே பேசினார். இதையடுத்து ராகுல் காந்தியை மிரட்டும் வண்ணமாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆகவே, எதிர்கட்சியினர் ஒன்று சேர்ந்து விவாதித்தனர். அவர்கள் கலந்துரையாடியதன் அடிப்படையில், ‘வழக்கம் போல பாராளமன்ற வளாகத்தில் கையில் தட்டிகளை வைத்துக் கொண்டு கோஷம் போட்டுப் பயனில்லை. தெருவில் இறங்கி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக களம் காண்போம்’ என்று முடிவெடுத்தனர்.

இன்றைய பேரணியில் பேசிய ராகுல் காந்தி,“மத்திய பாஜக அரசும், தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டு குறித்து பேச முடியாது என்பது தான் உண்மை. ஆனால், உண்மை நாட்டின் முன் உள்ளது. இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்குக்கானது. எங்களுக்கு சுத்தமான, உண்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும். இந்த உரிமையை நாங்கள் என்ன விலை கொடுத்தாவது பாதுகாப்போம்.” எனத் தெரிவித்தார்.
பேரணியில் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கையை மிகவும் தெளிவாக முன்வைக்கிறோம். நாங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அமைதியான பேரணியை நடத்தி வருகிறோம். பிகார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பாணையை வழங்க விரும்புகிறோம். இப்போது தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு செல்வதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லை. நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால், ஜனநாயகம் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுகிறது” என்று கூறினார்.

இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அகிலேஷ் யாதவ், நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டும் வகையில் வாக்குரிமையை மறுப்பது, வாக்குப்பதிவில் முறைகேடு செய்வது உள்ளிட்டவற்றில், பாஜக ஈடுபடுகிறது. இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் இந்த சதியை நாம் அனுமதிக்க கூடாது. தேர்தல் ஆணைய அதிகாரிகளை தன்வசப்படுத்தி, தனக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலை பாஜக உருவாக்குகிறது, எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகிறது. அந்த வகையில் பாஜகவானது தேர்தல் முறைகேட்டின் பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது.
Also read
”அவர்கள் மக்களின் வாக்குகளை தடுக்கிறார்கள், மக்களின் வாக்களிக்கும் உரிமையைக் காப்பாற்ற நாங்கள் தடுப்புகளைத் தாண்டுகிறோம். பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி நீக்கப்பட்ட 18,000 வாக்குகளின் பட்டியலை நானே கொடுத்துள்ளேன். தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தைக் கேட்டது, நாங்கள் அதைக் கொடுத்தோம். ஆயினும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என பேரணியின் போது அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

பாஜக அரசு ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை வைப்பதாக இருந்தால் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய பழைய முறைக்கு திரும்பி நேர்மையான அதிகாரிகள் தேர்தல் ஆணைய பொறுப்பேற்பதை உறுதிபடுத்த வேண்டும். அதற்கு முன்னதாக மிகவும் தவறாக செயல்பட்டுக் கொண்டுள்ள தற்போதைய தேர்தல் ஆணையர் மூவரையுமே திரும்பப் பெற வேண்டும்.
சாவித்திரி கண்ணன்















இது மக்கள் பிரச்சனையாக பெரிதாக வெடிப்பதற்கு முன்னரே உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நேர்மையாக செயல்பட்டால் தான் இதற்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். இன்றைக்கு எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சி மிகவும் வலிமையாக உள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.