பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 அதிர்ச்சியளிக்கிறது. இத்தனை சொதப்பல்களா? இருக்கக் கூடாத அம்சங்கள் இத்தனையா? இது எப்படியெல்லாம் தேசிய கல்விக் கொள்கைக்கு பல விதங்களிலும் ஒத்திசைவாக உள்ளது என்பதை விவரிக்கிறார் கல்வியாளர் ஜவகர் நேசன்;
தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கை பள்ளிக் கல்வியை மட்டும் கணக்கில் கொண்டதாக வெளியாகியிருக்கிறது. அதுவும் முழுமையானதாக இல்லை. பகுதி பகுதியாக இருக்கிறது. உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் மிகக் குறைந்த தரத்தோடு ஒரு கொள்கை அறிக்கை வெளியாவது, இதுவே முதன் முறை.
பொதுக் கொள்கைக்குரிய அறிவியல் அடிப்படைகளையும், கொள்கைகளை வடிவமைப்பதில் வரலாற்றுரீதியாகப் பின்பற்றப்படும் உலகளாவிய மரபுகள், பாரம்பரியங்கள், நெறிமுறைகளை முழுமையாகப் புறக்கணித்திருக்கிற தனித்துவமான ‘முதல் ஆவணமாக இது வெளியாகியிருக்கிறது.
பொதுக் கொள்கை வடிவமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை மீறுகிறது!
உலகளாவிய மரபுகளின்படி, பொதுக் கொள்கை என்பது கல்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற – மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விச் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து வகையினரையும் இதில் பங்கேற்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெற வில்லை. மாறாக, பரவலான பொதுக் கருத்துக்கள் பெறப்படாமல், நேரடியாக இறுதியான கொள்கை ஆவணமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
அரசின் இத்தகைய அணுகுமுறையே அனைவரையும் இணைத்துப் பங்கேற்கச் செய்யும் பொதுக் கொள்கை உருவாக்கத்தின் அடிப்படை கோட்பாட்டை மீறுகிறது. முழுமை தரத்தக்க கொள்கையை வடிவமைப்பதில் தற்போதைய இந்த கல்விக் கொள்கை தோல்வியடைந்துள்ளது.
இது தமிழகத்துக்கான தனித்துவக் கல்விக் கொள்கை அல்ல
தமிழக அரசின் GO No. 98, 1 ஜூன் 2022-இல் குறிப்பிடப்பட்டுள்ள “வரலாற்றுப் பாரம்பரியம், தற்போதைய நிலை, எதிர்கால இலக்குகள்” ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கான தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குதல்” என்ற வரையறையை தற்போதைய இந்தக் கல்விக் கொள்கை நிறைவு செய்யவில்லை. வெளியிடப்பட்டிருக்கிற இந்த கொள்கை ஆவணத்தில், தமிழ்நாட்டின் தனித்துவ அம்சங்கள், பிரச்சினைகள், சூழ்நிலைகள், சவால்கள் ஆகியவற்றைப் பற்றிய புரிதல் இல்லை. அவற்றுக்கான தீர்வுகளை முன் வைப்பதில் முற்றிலும் பின்தங்கியுள்ளது.

கல்வி என்பது ஒரு சமூகப் பண்பாடு என்பதால், பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல், தேர்வு போன்ற தொழில்நுட்ப அம்சங்களால் மட்டுமே கல்விக் கொள்கையை கட்டுப்படுத்த முடியாது. சமூக அமைப்பு, பண்பாடு, உளவியல் பார்வைகள், மனித மேம்பாடு, மனித உறவுகள், உற்பத்தி, பொருளாதார முயற்சிகள், வாழ்வாதாரம், அரசியல் காரணிகள் போன்ற விரிவான கட்டமைப்புகளுடன் அது தொடர்புபட்டிருக்க வேண்டும். மாநிலத்தின் தனித்துவ அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலக் கல்வியை வடிவமைக்க இந்தக் கொள்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இருப்பதையும், நடந்து கொண்டிருப்பதையும் சொல்வது சாதனையல்ல
இரு மொழிக் கொள்கை, மாநில உரிமை குறித்த முழக்கங்கள், 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி, இலவச மற்றும் கட்டாயக் கல்வி , வழக்கமான 10+2 பள்ளிக் கல்வி முறை.. போன்றவவை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளவை. எனவே, இவற்றை குறிப்பிட்டு, புதிய மாநிலக் கல்வி கொள்கைக்கு பெருமை சேர்க்க முடியாது.
பிரச்சார முழக்கங்கள் புதிய கொள்கையல்ல;
எழுத்தறிவு மற்றும் எண் அறிவுத் திட்டங்கள், மணற்கேணி செயலி திறன்களுக்கான திட்டம், பள்ளிப் பார்வை , நம்ப பள்ளி, நம்ப ஊரு பள்ளி மகிழ் முற்றம் , நல்லிணக்க வட்டம் , மாதிரிப் பள்ளி , வெற்றிப் பள்ளிகள் போன்றவை. இத்தகைய திட்டங்களையே பெரிய இலக்குகளுக்கான முக்கியத் தீர்வுகள் என பரிந்துரைப்பது நகைப்புக்குரியது.

இந்த வெற்று முழக்கங்களைத் தவிர, நம்பகமான கல்வித் தீர்வுகள் எதுவும் இல்லை.
மாணவர்களின் அனைத்தையும் தழுவிய முழுமையான வளர்ச்சி (holistic development) என்னும் கருத்தாக்கம் என்பது ஒற்றுமை வட்டங்கள், மகிழ் மன்றம் , மகிழ் முற்றம் , கலைத் திருவிழா, மாதிரிப் பள்ளிகள் ‘வெற்றிப் பள்ளிகள்’ போன்றவையா?
இவற்றைத் தவிர, ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், ‘காலைச் சத்துணவு’ விழுதுகள், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற நிதி உதவித் திட்டங்கள் ஆகியவை 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான கல்வி மாற்றங்களுக்கான தீர்வுகளா?.
மனித வாழ்க்கை, உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் சவால்களின் மாறும் பரிமாணங்களுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தும் கல்வித் தீர்வுகளை உலகம் உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால், மேம்போக்கான முழக்கங்களோடு, போதுமான புரிதல் இல்லாமல் அலட்சியமாக கல்வியை அணுகுகிறது, மாநிலக் கல்விக் கொள்கை.
ஆக, தமிழ்நாட்டுக்கான ஒரு தனித்துவமான கொள்கையை உருவாக்குவதில் இந்தக் கொள்கை தோல்வியடைந்துள்ளது.
21 ஆம் நூற்றாண்டுத் திறன்களான விமர்சன சிந்தனை உறுதியுணர்வு படைப்பாற்றல் , சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் மனப்பாங்கு, மனநிலை மற்றும் நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றில் கல்வியின் கவனம் குவிய வேண்டும்.
கற்றலும் , கற்பித்தல் முறையும் தனிப்பட்ட முறையில் முடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும், மாணவர்கள் தங்கள் பன்முக சமூக-மக்கள்தொகைப் பின்னணிகளிலிருந்து கொண்டு வரும் உளவியல்-சமூக நிலைமைகளை கணக்கில் எடுத்துக் கொண்டதாக அது இருக்க வேண்டும். மதிப்பீட்டு நடைமுறைகள் கற்றலை மேம்படுத்துவதை முதன்மையாக குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக உயர் வகுப்புகளில், ஒப்பீட்டு தர வரிசைப்படுத்தல் அல்லது சான்றிதழ்கள் மூலம் மாணவர்களுக்குத் தண்டனை வழங்கலாகாது.
செயலிகள் மூலம் தருவது கல்விச் செயல்பாடாகாது.
தேசியக் கல்வி கொள்கை (NEP 2020) போலவே, மாநில அரசின் இந்தக் கொள்கையும், மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டின் மூலமே உயர்ந்த இலக்குகளை அடைய முடியும் என்ற கருத்தின் கீழ் தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளையும் ஒருங்கிணைக்கிறது.
பற்பல செயலிகள் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறையை பின்பற்ற ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதன் மூலம், வகுப்பறைகளில் – கற்பித்தல் மற்றும் கற்றலை செயலிழக்கச் செய்துள்ளன. இந்த நிர்வாகப் பணிகளால் ஆசிரியர்கள் அவதியுறுகின்றனர்.
ஆளும் மாநில அரசும், சந்தை சக்திகளும் சமூக மேல்தட்டினரும் தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொண்ட முக்கோண ஒத்துழைப்பிற்கு இசைவான வாழ்க்கைக்கு மனித வளத்தை தயார்படுத்துவதாக இது தோன்றுகிறது.

கல்வி செயல் முறைகளை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த, அனைத்து அதிகாரத்தையும் பள்ளிக் கல்வித் துறைக்குள் மையப்படுத்துகிறது.
# ‘ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தும்’ எனும் கல்வி மாதிரியைக் கடைப்பிடிக்கும் கொள்கை – 21ஆம் நூற்றாண்டின் சிக்கல்களுக்கும் பன்முகத்தன்மைகளுக்கும் மாணவர்களைத் தயார்படுத்த உதவாது.
துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கொள்கை இதில் தோல்வியடைந்துள்ளது.
இந்த வகையில் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை எழுத்தளவிலும் அதன் உணர்ச்சியிலும் தேசிய கல்விக்கொள்கை 2020ஐ பிரதிபலிக்கிறது!
வேதிய மதிப்பு முறைமை (Vedic value system) ஒன்று தான் விதிவிலக்காக அமைவதைத் தவிர, தமிழ்நாடு அரசின் கொள்கை தே.க.கொ. 2020 உடன் நெருக்கமாக ஒத்துப் போகிறது.
புதுக் கொள்கையில் சமத்துவம், நிகர்நிலை, சுதந்திரம், பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் சமூக நீதி ஆகியவை ஆபத்தில் உள்ளன. இந்தக் கொள்கை பொது மக்களின் நன்மைக்கானதாக அல்லாது தனியாருக்கான நன்மைக்கானதாக உள்ளது.
சமத்துவம் ,நிகர்நிலை , சுதந்திரம் , பன்முகத் தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை இந்த அம்சங்கள் கல்வி வழங்கலில் நிறைவேற்றப்படாவிட்டால், கல்வி தற்போது இருப்பதைப் போலவே, தனியாருக்கு நன்மை தருவதாகவே இருக்கும். சமூக நீதி என்று கூறிக் கொள்பவர்களின் இலக்கு, கல்வியை சாமான்ய மக்களின் நன்மைக்கானதாக மாற்றுவதாக இருக்க வேண்டாமா?

ஆசிரியர்-மாணவர் விகிதம் (teacher-student ratios), அரசுப் பள்ளிகளின் அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்களை நியமித்தல் (teacher appointments), பள்ளி வளாக அடிப்படைத் தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு , போன்றவற்றில் இந்தக் கொள்கை விருப்பமின்மையை காட்டுவது தமிழ்நாடு மக்களுக்கு ஒரு துரதிர்ஷ்டமாகும். இக் கொள்கை ஆரம்ப குழந்தை வளர்ச்சியை (early childhood development) முற்றிலும் புறக்கணித்துள்ளது.
தனியார் மயமாக்கலையும், வணிகமயமாக்கலையும் ஊக்குவிக்கிறது
அனைவரையும் உள்ளடக்கிய தன்மை , பன்முகத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கோ அல்லது கல்வியின் வணிகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலின் பரவலைத் தடுப்பதற்கோ, கொள்கையில் எங்கும் ஒரு கட்டமைப்பான சமயோசிதத் திறமையுடன் கூடிய திட்டங்கள் அல்லது பரிந்துரைகள் காணப்படவில்லை. பொதுப் பள்ளிகளின் (neighbourhood public schools) விரிவாக்கத்திற்கான எந்த ஒரு கண்ணோட்டமும் இல்லை. அவசியயமாக கடைப் பிடிக்க வேண்டியதான, நிதி தொடர்பான உறுதிப்பாட்டை கொள்கை அறிவிக்கவில்லை.

மாநில அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கல்விச் செலவிற்காக கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, இது ‘நம்ம பள்ளி’ ,’நம்ம ஊர்ப் பள்ளி’ நிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) போன்ற திட்டங்கள் மூலம் தனியார் நிறுவனங்களிடம் கல்வி வளர்ச்சிக்கான திட்ட நிதியுதவியை ஒப்படைக்கிறது.
சவால் தருகின்ற சாதிப் பிரச்சினைகளுக்கு தீர்வுண்டா?
சாதியத்தையும், சமூக ஏற்றத் தாழ்வையும் இந்தக் கல்விக் கொள்கை சரி செய்யவில்லை – பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் உட்பட சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கல்வி குறித்து கவலை கொள்ளவில்லை.
ஆணவக் கொலைகள் அதிகரித்தல், சமூகத்தில் விரிவடையும் சாதிப் பிரிவினை, பள்ளி வளாகங்களில் சாதியம் மற்றும் சாதிவன்முறை ஆகிய அனைத்து அம்சங்களிலும் மாணவர்களை தற்காத்து ஒழுங்கமைக்க தவறிவிட்டது.
கல்வி அதன் பாடத்திட்டக் கட்டமைப்பு ,கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் பாடப்பொருள் மூலமாகவே சாதி ஏற்றத் தாழ்வையும், பாலின ஏற்றத் தாழ்வையும் மீண்டும் உருவாக்குகிறது .
மற்றொரு அதிர்ச்சியூட்டும் பிரச்சினை (alarming issue) என்னவென்றால், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவராலும் பள்ளிகளுக்குள் நிகழ்த்தப்படும் சாதியம் , பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றி இந்த கல்வி கொள்கை தீர்வு காணவில்லை.
” இந்தியாவில் சில தொழில்கள் இன்னும் அந்தத் தொழில்களை பரம்பரையாக செய்வோருக்குப் ‘பிறந்த’ நபர்களால் செய்யப்படுபவையாக உள்ளன, மேலும் சராசரி நபர் வேறு எந்தத் தொழிலையும் விட தனது பரம்பரைத் தொழிலில் நுழைய மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது” என்கிறது உலக வங்கியின் ஒரு அறிக்கை .இது போன்ற ஆழமாக வேரூன்றிய முறைகளைக் கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளை எதிர்காலத் தொழில்கள் மற்றும் வேலைகளுக்கு தயார்படுத்துவதற்கான எந்த சமயோசித திட்டங்களையேனும் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை உள்ளடக்கியிருக்கிறதா?
அரசியல் சாசனம் பாதுகாக்கிற சிறுபான்மையோர் கல்வியை இந்தக் கல்விக் கொள்கை உறுதிப்படுத்தவில்லை. இந்தக் கொள்கையில் மதச்சார்பற்ற கல்வி பற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. கல்வியில் மதச்சார்பற்ற தன்மை என்பது கற்பவர்கள் மத பன்முகத்தன்மையை புரிந்து கொள்ள உதவுவதாகும்.

தே.க.கொ. 2020 இந்தக் கொள்கைகளுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் போது, மதச்சார்பற்ற கல்வி குறித்து சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புகள் பற்றி மாநிலக் கொள்கை எதையும் கூறவில்லை.
முடிவுரை மற்றும் வேண்டுகோள் ;
தற்போதுள்ள நிலையில், ஒரு கல்விக் கொள்கைக்கான அடிப்படை அம்சங்களையும், சாராம்சத்தையும் இழந்துள்ளது, இந்த மாநிலக் கல்விக் கொள்கை. இது, தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார லட்சியங்களின் தனித்த அம்சங்களை அடையாளம் கண்டு இணைக்க தவறிவிட்டது. குறிப்பாக உள்ளூர் மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கல்வியோடு நவீனத்துவத்தை இணைக்கத் தவறிவிட்டது.
கல்விக் கொள்கையில் எவையெல்லாம் கட்டாயம் இருந்தாக வேண்டுமோ, அவையெல்லாம் இல்லை. நிர்ணயித்துக் கொண்டபடியான ஒரு உண்மையான, தனித்துவமான, பொருத்தமான கல்விக் கொள்கையாக இதனைக் கருத முடியாது.
அடிப்படையில், இந்த தமிழக கல்வி கொள்கையானது தேசிய கல்விக் கொள்கை -2020 இன் ஒரு மக்கள்-விரோத (anti-people) நகல் (replica) தவிர, வேறில்லை.
எனவே, தமிழ்நாடு அரசாங்கத்தை நான் கேட்டுக் கொள்வது: இந்தக் கொள்கையை திரும்பப் பெற்று அதற்குப் பதிலாக ஒரு புதிய கல்விக் கொள்கைக் குழுவை அமைக்க வேண்டும். அத்தகைய குழு அனைவருக்கும் நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய பொருத்தமான கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டும் .
பேராசிரியர் எல். ஜவஹர் நேசன்
கல்வியாளர், அறிவீட்டலும், அறிவூட்டலும் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.























Leave a Reply